சத்குரு
உலகெங்கும் அமைதியை உருவாக்குவது பற்றி பேச்சு நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அமைதியை யாரும் உருவாக்க முடியாது. மோதல்கள்தான் மனிதர்களின் உருவாக்கம். மோதல்களை உருவாக்காமல்விட்டாலே, அமைதி தானாக நிகழும்.
உலகில் பலவகையான மோதல்கள் நிகழ்கின்றன. தனிமனிதன் தனக்குள்ளேயே சில மோதல்களை உணர்கிறான். அது வெளியிலும் நீள்கிறது. குடும்பத்தோடு, பக்கத்து வீட்டோடு நிகழும் மோதல்களே, சமூகங்களுக்கிடையிலும், தேசங்களுக்கிடையிலும், மதங்களுக்கு நடுவிலும்கூட நிகழ்கின்றன.
அதிக மோதல்களுக்குக் காரணம் மதங்களே!இந்த உலகுக்கு மோதல்கள் புதிதல்ல. மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு மோதல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சண்டைகளை அவ்வப்போது சரிசெய்யத்தான் பார்த்திருக்கிறார்களே தவிர, நிரந்தரமான தீர்வுக்கு யாரும் முயற்சித்ததில்லை. சண்டை வருகிறபோது, சமாதானம் ஏற்படுத்துகிறார்கள். சிறிதுகாலத்துக்குப் பிறகு, அது மீண்டும் வெடிக்கிறது. அமைதியின் உறைவிடங்களாய் கருதப்படும் மதங்களின் பேரிலேயே அதிக அளவு மோதல்கள் உலகெங்கும் ஏற்படுகின்றன.
எனவே, அவ்வப்போது சண்டைகளைச் சரிசெய்வது பற்றி மட்டும் சிந்திக்காமல், நிரந்தரமான தீர்வை நோக்கி நகர வேண்டும். அமைதியை ஒரு கலாசாரமாக உருவாக்க வேண்டும் என்று கருதினால், முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரே இரவில் கலாசாரத்தை உருவாக்கிவிட முடியாது. தீர்மானம் இயற்றுவதாலோ, சட்டம் நிறைவேற்றுவதாலோ, கலாசாரங்கள் உருவாவதில்லை. ஒரு முழுத் தலைமுறை அமைதியில் வாழுமேயானால், அடுத்த தலைமுறையில் அந்த அமைதியே ஒரு கலாசாரமாக மலர வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒரு சிக்கலுக்கு உடனடித் தீர்வு எது என்று எதையோ செய்ய யோசிப்பதைவிட, நிரந்தரத் தீர்வு என்ன என்று சிந்திப்பதே நல்லது.
நஷ்டம், பிறகு பதட்டம், பிறகு மோதல்!மனிதர்களைப் பொறுத்தவரை எது நிகழ்ந்தாலும் அது ஒருவருக்கு ஆதாயம் தருவதாகவும், இன்னொருவருக்கு நஷ்டம் தருவதாகவும்தான் அமையும். காலங்காலமாகவே உலகெங்கும் இந்தக் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. குடும்பங்கள் மத்தியில் என்றாலும், தேசங்களுக்கு மத்தியில் என்றாலும், நஷ்டம் ஏற்படுகிறபோது கோபமும் பதட்டமும் ஏற்படுமேயானால், அங்கே அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை.
எல்லா மனிதர்களுக்குமே வாழ்வின் சில தருணங்களில், சில பாதகங்களும் அநீதிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அப்போதெல்லாம் மனிதர்கள் பதட்டமடைகிறபோது மோதல்கள் எழுவது இயற்கை!
அமைதியான மனிதர்கள் உருவாகும்வரை அமைதியான உலகம் என்பது நிறைவேறாத கனவாகத்தான் இருக்கும். இன்று அமைதி குறித்துப் பேசுகிற உலக நாடுகள்கூட தங்களுக்குச் சூழ்நிலை பாதகமாக இருந்தால், அமைதி குறித்துப் பேசுவார்கள். சூழ்நிலை சாதகமாக இருந்தால், போர் குறித்துப் பேசுவார்கள்.
இல்லாததைப் பகிர்ந்துகொள்வோம்
சோவியத் யூனியனில் கம்யூனிஸம் சிறந்து விளங்கியபோது, அது குறித்துக் கேள்விப்பட்ட மார்க் ட்வெயின், அந்தக் கொள்கை பற்றி அறிந்துகொள்ள சோவியத் நாட்டுக்குச் சென்றார். இருப்பதைப் பகிர்ந்து உண்பது என்கிற கோட்பாடு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. சோவியத் நாட்டின் கிராமப்புறத்து வீதி ஒன்றில் கைகளில் இரண்டு கோழிகளோடு சென்றுகொண்டு இருந்த ஒரு விவசாயி அவர் கண்களில் பட்டார். அவரிடம் சென்று, “தோழரே! உங்களிடம் இரண்டு வீடுகள் இருந்தால், என்னிடம் ஒன்றைக் கொடுத்து விடுவீர்களல்லவா?” என்றார் மார்க் ட்வெயின். அவர் ஆமோதித்தார்.
“தோழரே! உங்களிடம் இரண்டு வாகனங்கள் இருந்தால், என்னிடம் ஒன்றைக் கொடுத்து விடுவீர்களல்லவா?” என்றார். அந்த விவசாயி “ஆம்“ என்றார். மார்க் ட்வெயின் மிக உற்சாகமாகி, ‘‘அப்படியானால், உங்களிடம் இருக்கிற இரண்டு கோழிகளில் ஒன்றை என்னிடம் கொடுத்து விடுவீர்கள்தானே?” என்றதும், அந்த மனிதர் அதிர்ந்துபோய், “என்ன உளறுகிறீர்கள்! என்னிடம் இருப்பவை இரண்டே கோழிகள்” என்றாராம்.
இந்தக் கதை, மனிதர்களின் மனஇயல்பைக் காட்டுகிறது. தங்களிடம் இல்லாததைப் பகிர்ந்துகொள்ள மனிதர்கள் தயாராக இருக்கிறார்களே தவிர, இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். அது மட்டுமல்ல, இல்லாதவர்கள்தான் சமரசம் பற்றியும் சமாதானம் பற்றியும் பேசுகிறார்கள். இருப்பவர்கள், தங்களுக்கு வேண்டியதைப் பெறுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இன்றைய உலகின் 90% வளங்கள் 5% மனிதர்களின் கைகளில் இருக்கின்றன. இப்படி இருக்கும்போது அமைதி என்பதே மிகவும் சிரமமான விஷயம்.
கோபத்தில் எடுக்கும் முடிவு அபத்தமாகவே இருக்கும்!அமைதியை ஒரு கலாச்சாரமாக உருவாக்குவது என்று சொன்னால், நிகழ்கால உலகின் நிதர்சனங்களை வைத்து நாம் மதிப்பிட முடியாது. அடுத்து வருகிற 50 அல்லது 100 ஆண்டுகளில் நிகழப்போவதைப் பற்றியே நாம் பேசுகிறோம். இது நிகழவேண்டுமானால், ஒரு மனிதன் அமைதி நிறைந்த உயிராய் ஆவது எப்படி என்று பார்க்க வேண்டும். இப்படிச் சொன்னால், மிக மெதுவாகவும் நிதானமாகவும் மனிதர்கள் இயங்க வேண்டும் என்று பொருள் அல்ல. இன்றைய இளைஞர்கள் இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். செயல்படுவது என்றால் அதிரடியாக இயங்குவது, வன்முறையாக இயங்குவது என்று பலரும் நினைக்கிறார்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படும்விதமாகச் செயல்பட வேண்டுமென்றால், முதலில் உங்களுக்குள் அமைதி இருப்பது அவசியம். நீங்கள் கோபமாக இருக்கிறபோதுதான் மிக அபத்தமான முடிவுகளை எடுக்கிறீர்கள்.
கோபத்தின்போது உங்களுக்குள் என்ன உணர்கிறீர்கள்? அசௌகரியத்தைத்தான் உணர்கிறீர்கள். தனக்குத்தானே அசௌகரியத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடியவரை அறிவாளி என்றா அழைக்க முடியும். உள்தன்மையில் அமைதி நிலவினால், மிகக் கடுமையான சூழ்நிலைகளைக்கூட உங்களால் திறம்படக் கையாள முடியும். உங்களுக்குள் அமைதியை ஏற்படுத்த முடியாதபோது, உலகத்துக்குள் அமைதியை எப்படி உருவாக்க முடியும்?
சிறு குடும்பப் பிரச்னைகூட உங்களை 20 வருடங்கள் கோபத்தில் வைத்திருக்கிறது!
உலக அமைதி பற்றி பேசுபவர்கள் ஒரு விநாடிகூட தங்களுக்குள் அமைதியாக இருக்க முடிவதில்லை என்றால், அது மிகப் பெரிய வேடிக்கையாகத்தான் இருக்க முடியும். ‘நம்மைச் சுற்றி அநீதியும் அநியாயங்களும் நடைபெறுகிறபோது, அமைதியாய் இருப்பது எப்படி?’ என்று சிலர் கேட்பார்கள். உங்களைச் சுற்றி அநியாயங்கள் நடைபெறுகிறபோதுதான் இன்னும் அமைதியாய் இருக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பதட்டமான சூழலில் அமைதி இழப்பது சூழ்நிலையை மேலும் சீர்குலைக்குமே தவிர, சரிசெய்யாது!அப்படியானால், அமைதியாய் இருப்பது எப்படி? இதனை விஞ்ஞானப்பூர்வமாக பலரும் அணுகுவதே இல்லை. சூழ்நிலையை எப்படியாவது சமாளிக்கவே பலரும் நினைக்கிறார்கள். தங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தும் சரியாக இருந்தால், அமைதியாக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு வல்லமை வாய்ந்தவராக இருந்தாலும், வெளிச்சூழல் என்பது முழுமையாக உங்கள் கையில் இல்லை. யார் மீதாவது எதற்காவது கோபப்பட, எல்லோரிடமும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் கோபப்பட வேண்டுமென்றால், அதற்கு பெரிய யுத்தம் நிகழ வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்னைகூட 20 வருடங்களுக்கு உங்களை கோபமாகவே வைத்திருக்கும்
வெளிச்சூழ்நிலையால் உங்கள் அமைதியையும் அமைதியின்மையையும் தீர்மானிக்க முடியுமென்றால், நீங்கள் யாருக்கோ அடிமையாக இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். எனவே, உங்களுக்குள் என்ன நிகழ வேண்டுமென்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. இன்று நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெளியே இருக்கிற உஷ்ணத்தைக் கூட்டவோ குறைக்கவோ உங்களால் முடியும். அதுபோல் உள்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு வழிசெய்யும் தொழில்நுட்பம்தான் யோகா.
தனிமனிதர் முதலில் அமைதியை தங்கள் இயல்பாக்கிக்கொள்ள வேண்டும்!உள்நிலை அமைதி என்பது ஒரு வகை ரசாயனம். ஒரு மனிதர் மனத்தளவில் பதட்டமாகிறார் என்றால், அவருக்கு சில மருந்துகளைக் கொடுக்கிறார்கள். அதாவது, மருந்தின் வழியாக ஒருவித ரசாயனம் அவருக்குள் செலுத்தப்படுகிறது. மகிழ்ச்சி, சோகம், பதட்டம், ஏக்கம் என எல்லாமே ஒரு வகையான ரசாயனம்தான். ஒரு மனிதன் தனக்குள் சரியான ரசாயனத் தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், அதற்கென்று ஒரு நாளில் சில நிமிடங்களை ஒதுக்கினால் போதும். அமைதியும் ஆனந்தமும் உங்களுக்குள் இயல்பாகவே தோன்றும். தனிமனிதர்கள் அமைதியானவர்களாக உருவாகாதவரையில், கலாச்சாரத்தில் அமைதி இருக்காது. உலகத்தில் அமைதி இருக்காது. தங்களை மாற்றிக்கொள்ளத் தனிமனிதர்கள் தயாராகிறபோது, அவர்கள் தொடர்புகொள்கிற வெளியுலகிலும் அதே அமைதியை உருவாக்க முடிகிறது.
யோகப் பயிற்சியின் மூலம் உலக நாடுகளில் யுத்தங்களைத் தடுத்து அமைதியை ஏற்படுத்த முடியுமா என்று சிலர் கருதலாம். இந்த உலகின் வலிமை மிகுந்த நாடுகளையெல்லாம் தலைமை தாங்கி வழிநடத்துபவர்கள் தனிமனிதர்கள்தானே. அவர்களில் பலர், மனிதத் தன்மையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், சமூகத்துடனோ, சமயத்துடனோ, தேசத்துடனோ அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனிதத் தன்மையோடு அடையாளப்படுத்திக்கொள்ள வாய்ப்பளித்தால், எந்தச் சிக்கலையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். உள்நிலையில் அமைதியில்லாதபோதுதான், எல்லாச் சின்ன விஷயங்களும் பிரமாண்டமான மோதல்களாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. இந்த உலகில் பொறுப்புள்ள இடங்களில் இருப்பவர்களை அமைதி நிறைந்த மனிதர்களாக மலரச் செய்தால், அமைதியை ஒரு கலாசாரமாக உருவாக்குவது காலப்போக்கில் சாத்தியமே.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐடி சோதனை!
வேலைவாய்ப்பு: TANUVAS- ல் பணி!
Jakki Vasudav a fraudster. Occupy forest area illegally and disturb elephant movement.