நா.மணி
கணிதம், புள்ளியியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று பாடங்களில் முதுகலைப் பட்டம் பெறுகிறார் ஒருவர். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம். தாய் மண்ணுக்கு திரும்பி சிறிது காலம் பணியாற்றி வருகிறார்.
1960 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையேயான கொழும்பு திட்டத்தின் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் மத்திய பொருளாதார துறைக்கு பணியாற்ற வருகிறார். நேபாள மாணவர்களுக்கான பணி அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.
இந்தியா திரும்பி, தான் பிறந்த மண்ணான மேற்கு வங்காளத்தில் தனது பணி தொடர்பான விஷயங்களை நேர் செய்து கொண்டு மீண்டும் திருபுவன் மத்திய பல்கலைக்கழகம் திரும்புகிறார். பின்னர் எப்போதாவது வங்கம் வருவார். சில நாட்களில் மீண்டும் திருபுவன் மத்திய பல்கலைக்கழகம் திரும்பி விடுவார்.
அங்கிருந்த ஆசிரியர் குடியிருப்பில் சிறிதாக ஒன்றைத் தேர்வு செய்து அதில் தங்கிக் கொண்டார். தானே சமைத்து சாப்பிட்டுக் கொள்வார். தானே துணிகளை துவைத்துக் கொள்வார். தூங்கும் நேரம் தவிர இதர நேரம் முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக நலனுக்காக பாடுபட்டுக் கொண்டே இருந்தார்.
தனது ஊதியத்தில் ஒரு குறைந்த பட்ச தொகையை எடுத்துக் கொண்டு மீதமிருந்த ஊதியம் முழுவதையும் அந்த துறையின் வளர்ச்சிக்கு செலவிட்டார். துறையின் கணக்கிலேயே சேர்த்து வைத்தார். இன்று அது பெரும் தொகையாக இருக்கிறது. அவரது பெயரில், ஆசிரியர்களின் ஆராய்ச்சி நிதியாக அது செலவிடப்படுகிறது. உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அவரது பணி நிறைவு அடைந்த பின்னும் அதேபோல் பாடுபட்டார். அங்கேயே தங்கிக் கொண்டார். அதேபோல் ஓய்வூதியத்தில் மீதமிருந்த பணம் முழுவதையும் துறைக்கு அர்ப்பணித்தார். தனது 76 வயது நிறைவடையும் வரையில் இப்படியே இயங்கி வந்தார். வயது முதிர்வு துடைக்கவும், உணவு சமைக்கவும் இயலாமல் செய்தது. அப்போது தான் முதல்முறையாக அவருக்கு ஓர் உதவியாளர் தேவைப்பட்டார். தனது நினைவு தப்பிப் போகும் வரை, தனது கைக்கு பேனா பிடிக்கும் சக்தி இருக்கும் வரை, தன் கண்களால் படிக்கவும் எழுதவும் முடியும் வரை, திருபுவன் மத்திய பல்கலைக்கழகத்திற்கு உழைத்தார். உழைத்தார் உழைத்துக் கொண்டே இருந்தார். 93 வயதில் அவர் இயற்கை எய்தும் வரை ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக் கொண்டே இருந்தார்.
அவரது இறுதி மூச்சு நின்ற மருத்துவமனையில் அலை மோதத் தொடங்கிய ஆசிரியர் மாணவர்கள் கூட்டம், தலைநகர் காத்மாண்டு முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தது. திருமணம் செய்து கொள்ளாமல் திருபுவன் மத்திய பல்கலைக்கழகத்திற்காக வாழ்ந்து மடிந்த, அம்மாமனிதரின் பெயர் பேராசிரியர் ‘தாரபட் சௌத்ரி’.
காத்மாண்டுவில் உள்ள திருபுவன் பல்கலைக்கழகத்தின் மத்திய பொருளாதாரத் துறையில், முதுகலை பொருளாதாரம் 1959 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நேபாளத்தின் சிறந்த பொருளியல் துறையாக அதனை மாற்றியதிலும், இன்றுவரை தரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதிலும், அதிக மாணவர்களை கொண்டு இயங்கி வருவதிலும் பேராசிரியர் தாராபட் சௌத்திரிக்கு பெரும் பங்கு இருக்கிறது.
2022 ஆம் ஆண்டு முதல், இத்துறை பன்னாட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது. தொடக்க விழா முடிந்தவுடன் பேராசிரியர் தாராபட் சௌத்திரி நினைவுச் சொற்பொழிவு தொடங்கி நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு நினைவு சொற்பொழிவு, அவரோடு கால் நூற்றாண்டு காலம் பணியாற்றிய பேராசிரியர் பிஸ்வாம்பர் போக்கிரியாலால் நிகழ்த்தப்பட்டது.
குத்துவிளக்கிற்கு பதிலாக மரக் கன்றுக்கு நீர் வார்த்தல்
“சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு இடையே வளர்ச்சி” என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், நம் நாட்டில், நம் நாட்டு மாநிலங்களில் நடப்பது போன்றுதான் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல், சிறப்பு அமர்வுகள் உரைகள் இடம் பெற்றது.
முன்னதாக நடந்த மாநாட்டின் துவக்க விழாவில், நாம் பின்பற்றத்தக்க மிகச் சிறந்த நடைமுறை ஒன்று கையாளப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இந்த சிறந்த நடைமுறையை பின்பற்றலாம். எந்தவொரு மாநாட்டையும் நிகழ்வையும் துவக்கி வைக்கும் போது, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறோம். அதற்கு பதிலாக, ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றி, துவக்கி வைத்தார் சிறப்பு விருந்தினர்.
பின்னர் அந்த மரக் கன்று, கல்வி நிறுவன வளாகத்தில் கொண்டு வைக்கப்படும் என்றார்கள். குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைப்பதைக் காட்டிலும் சிறப்பாகப் படுகிறது. இதனை மதத்தோடு முடிச்சு போட்டு பார்க்க வேண்டியதில்லை. நேபாள நாட்டில் இருக்கும் மக்களும் 85 விழுக்காடு இந்துக்களே. தீவிர பத்தர்களாகவும் காணப்படுகின்றனர்.
இந்த மாநாட்டின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்
இந்த இரண்டு நாள் மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவில்லை. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. உலகவங்கி, நேபாள நாட்டின் ரிசர்வ் வங்கி, நேபாளத்தின் பல்கலைக்கழக மானியக் குழு, ஆகியவை மாநாட்டிற்கு நிதி உதவி அளித்திருந்தது.
மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்
முதல் நாள் மிகச் சரியாக 9.30 மணிக்கு தொடங்கி, மறுநாள் இரவு 8.00 வரை நடைபெற்றது. மாநாட்டின் மொத்த செலவு எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால், தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களில் நடக்கும் மாநாடுகளின் மொத்த செலவுக்கு இணையாக ஒரு வேளை சாப்பாடு செலவு இருக்கும் என்பது பொதுவான கணிப்பு.
இந்தியா, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தேர்வு செய்யப்பட்ட 48 கட்டுரைகள் மட்டுமே சமர்ப்பனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இணை அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு அமர்விலும் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளுக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை.
ஒவ்வொரு பேராளருக்கு குறைந்த பட்சம் 15 நிமிடங்கள், தங்கள் ஆய்வை சமர்ப்பிக்க நேரம் வழங்கப்பட்டது. அந்த ஒவ்வொரு ஐந்து பேருக்கும் இரண்டு நிபுணத்துவம் பெற்றவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முன் கூட்டியே ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. அவர்கள் முன்பே நன்கு படித்து பார்த்து, அந்த ஆய்வுக் கட்டுரையின் பலம் என்ன? பலவீனம் என்ன? எவற்றை செழுமைப்படுத்த வேண்டும்? எவற்றை தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து எடுத்துக் கூறினர்.
இறுதியாக பங்கேற்பாளர்கள் கேள்வி பதிலுக்கு இடமளிக்கப்பட்டது. ஓர் சிறந்த கருத்தரங்கம்/ மாநாட்டின் தன்மை இதுதான். அவை வெகுவாக மாறிப் போயிருக்கிறது. கருத்தரங்கில் பங்கேற்கும் ஆய்வாளர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோர் தங்கள் நிறை குறைகளை அறிந்து கொள்ள, தங்களை வளர்த்துக் கொள்ள இது சிறந்த இடமாக இருந்தது.
இத்தகைய கருத்தரங்குகள் பொதுவாக இப்படித் தான் அமைந்திருந்தது. அதன் தன்மை நம் நாட்டில் பல இடங்களில் வெகுவாக நீர்த்துப் போய் விட்டது. பேராசிரியர் தாராபட் வளர்த்தெடுத்த கருத்தரங்க மாண்பை அப்படியே காப்பாற்றி வருகிறது என்பதை பார்க்க பெருமிதமாக இருந்தது.
மாணவர்கள் ஆசிரியர்கள் ஈடுபாட்டோடு பங்கேற்பு
பொது அமர்வாக இருந்தாலும், இணை அமர்வாக இருந்தாலும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் எங்கும் நகராமல், கருத்தரங்கில் அமர்ந்து இருந்தது, நன்கு கவனித்தது கூட இன்றைய நிலையில் கவனித்தக்கவையே. ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க அல்லாமல் பங்கேற்பாளர்களாக வருவது வெகுவாக நம் நாட்டில் குறைந்து விட்டது.
வெறும் பார்வையாளராக செல்வதற்கு அலுவல் பணி அனுமதி இல்லை என்றாலும், பேராசிரியராக கருத்தரங்கில் பார்வையாளர்களாக வருவது, முழு அமர்வுகளையும் கேட்பது என்பது குறைந்துவிட்டது. இத்தகைய கருத்தரங்குகளை நடத்தும் போது, அந்த துறைசார்ந்த மாணவர்களை முழுமையாக பங்கேற்க வைப்பது, அரங்கினுள் வந்த பிறகு, அமைதியாக இருப்பது, இருக்க வைப்பது பெரும் சவால் நிறைந்த பணியாக பல நேரங்களில் இருக்கிறது. அதற்கு மாறாக இந்த மாணவர்கள் முழுப் பங்கேற்பு செய்தனர்.
இறுதிவரை பங்களிப்பு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அடுத்து எல்லா நிகழ்வுகளையும் எல்லா நேரங்களிலும் காலை பத்து மணி முதல் நான்கு மணி வரை இருக்க மட்டுமே நம் மாணவர்கள் பண்பட்டு இருக்கிறார்கள். ஐந்து மணி வரை இருக்கச் செய்வதே ஆசிரியர்களுக்கு சவால் நிறைந்த பணியாக மாறிவிடும். இங்கு நான் கண்ட மாணவர்கள் எந்த சலனமும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் மாலை ஏழு மணிக்கு பின்பும் இருந்தார்கள். மாணவர்கள் ஆசிரியர்கள் உறவும், மிக அணுக்கமாக இருந்ததை அறிய முடிந்தது.
நம் ஊரில் மாணவர்கள் நன்கு படிக்கிறார்களோ இல்லையோ, துறையில் ஓர் சிறப்பு நிகழ்ச்சி எனில் அதில் தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்படும் மாணவர்கள் கடினமான வேலைகளைக் கூட முழு ஈடுபாட்டுடன் செய்வதை பார்க்க முடியும். விருந்தினராக வரும் சிறப்பு அழைப்பாளர்களை கவனித்து கொள்ள சிலரை நியமித்தால், மாய்ந்து மாய்ந்து கவனித்து அந்த விருந்தினரை நெகிழ்ச்சி அடைய செய்து விடுவார்கள்.
அதுபோல் எனக்கு உதவியாக நியமிக்கப்பட்ட சசாங் ஜோசி என்ற மாணவர், விமான நிலையத்தில் வந்து அழைத்து சென்றது முதல் மீண்டும் ஊர் திரும்பும் வரை அன்போடும் வாஞ்சையோடும் கவனித்துக் கொண்டார். துறையில் ஒரு வேலையை கொடுத்தால் ஓடி ஓடி உழைக்கும் இந்த பண்பு நம் மாணவர்களுக்கும் நேபாளத்திலும் ஒரேமாதிரி இருப்பதை காண முடிந்தது.
நா.மணி
பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுற்றுச்சூழல் நெருக்கடி Vs பருவநிலை மாற்றம்… சவால்களும் தீர்வுகளும்
இளம் தலைமுறையினர் சிகையலங்கார சிக்கல்கள்: தீர்வுகளை நோக்கிய முயற்சிகள்!
ஹெச்.டி.எப்.சி வங்கியில் சேரில் இருந்து விழுந்து பெண் ஊழியர் பலி… வேலை அழுத்தம் காரணமா?
தென் தமிழகத்தில் மழை பெய்யுமா? வெயில் வாட்டுமா?
மகாத்மாவுக்கு ஸ்டாம்ப் வெளியிட்ட முதல் நாடு எது தெரியுமா?
மும்பை சித்திவிநாயகர் கோவில் பிரசாதத்தில் எலிகள்?: நிர்வாகம் மறுப்பு!