இந்துத்துவமயமாகிவரும் நகர்ப்புறங்கள்!

Published On:

| By Minnambalam Desk

தேசியத் திட்டங்களும் முக்கிய நிகழ்வுகளும் சிறுபான்மையினரை நகரங்களை விட்டு விலக்கிவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அரவிந்த் உண்ணி

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் சமூக – அரசியல் சொல்லாடல்கள் வலதுசாரிப் பக்கமாக நகர்ந்துள்ளன. முத்தலாக் தடை, அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேடு (CAA-NRC) சட்டம், ராம ஜன்மபூமி திட்டம் போன்ற நடவடிக்கைகள் இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. நிறுவனங்கள், ஊடகங்கள், நீதித்துறை, பொதுமக்களிடையே புழங்கும் கதையாடல்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதன் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதைச் சார்ந்த இந்துத்துவ அமைப்புகளும் தமக்கென்று சமூக – அரசியல் – கலாச்சார சித்தாந்தத்தைக் கொண்டுள்ளன. இந்து மதத்தைச் சேராதவர்களை விலக்கிவைப்பது என்னும் அணுகுமுறையையும் தமது கொள்கையின் முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கின்றன.

இந்துத்துவத்தின் புதிய கட்டம் சித்தாந்தத்தை நிரூபிக்கும் தளமாக நகரங்களையும் நகர்ப்புற வாழ்க்கைச் சூழலையும் வடிவமைக்கிறது. சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், இட ரீதியாகவும் இதைச் செய்கிறது. முஸ்லிம்களின் வீடுகளைக் குறிவைத்து இடிப்பது, சம்பல் மசூதி உள்ளிட்ட அண்மைக்கால வன்முறை நிகழ்வுகள், இஸ்லாமிய அடையாளங்களை அகற்றுவது ஆகியவை இந்துத்துவச் சித்தாந்தத்தின் வளர்ந்துவரும் நகர்ப்புற வெளிப்பாட்டின் அம்சங்கள் மட்டுமே.

எனவே, நகர்ப்புற நடைமுறைகளையும் கொள்கைகளையும் ஆராய்வதும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கான வீட்டுவசதி, வாழ்வாதாரம் ஆகிய பிரச்சினைகளை அலசுவதும் முக்கியமானவையாகின்றன.

நகர்ப்புறத்தைத் தனது பார்வைக்கேற்ப வடிவமைக்க இந்துத்துவச் சித்தாந்தம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் விவரிக்க வேண்டும். இந்த மாற்றம் அரசியல் சொல்லாடல்கள், ஊடகம், இசை, சினிமா, கல்வி, பொதுத்துறை போன்ற இந்திய வாழ்க்கையின் பிற அம்சங்களை இந்துத்துவமயமாக்கும் செயல்முறைகளுடன் இணையாக நிகழ்கிறது.

மாறிவரும் நகரங்கள்: விலக்கலும் ஒதுக்கலும்!

இந்திய நகரங்கள் வரலாற்று ரீதியாகவே சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவினையின் வடிவங்களைக் கொண்டுள்ளன. இப்போது அவை மத அடிப்படையில் அதிகமாகக் காணப்படுகின்றன. முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளைக் குறிக்க “மினி-பாகிஸ்தான்” என்னும் சொல்லை இந்துத்துவ சக்திகள் பயன்படுத்துகின்றன. இந்தப் பகுதிகளில் அத்தியாவசியச் சேவைகள், கல்வி, பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை குறைந்துவருகின்றன.

மேலும், இந்தப் பகுதிகளில் அதிகாரப்பூர்வமான அங்கீகாரம், போதிய சட்டப் பாதுகாப்புகள் ஆகியவை இல்லை. இதனால் இங்கே குடியிருப்பவர்கள் ஸ்திரமற்ற சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

முஸ்லிம்களை இத்தகைய வசதியற்ற பகுதிகளுக்குள் தள்ளும் முயற்சி கடந்த பத்தாண்டுகளாக நடந்துவருகிறது. ஒற்றைப்படைத்தன்மை கொண்ட இந்து அடையாளத்துடன் நகரங்களை மறுவடிவமைப்பு செய்யும் முயற்சியும் தீவிரமாக நடைபெறுகிறது. நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் இப்போது மத – கலாச்சார ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. நகரங்களில் இந்துத்துவ நகர்ப்புறத்தின் பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன: அழித்தல், வாழ்வாதாரங்களைச் சீர்குலைத்தல், நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டங்களில் குறிப்பிட்ட பிரிவினரைக் குறிவைத்து விலக்குதல், உள்ளூர்மயமாக்கப்பட்ட அணிதிரட்டல்கள்.

இந்திய நகரங்கள் வரலாற்று ரீதியாக, பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள் ஆகியவை இணைந்து வாழ்வதன் அடையாளங்களாக இருந்துவருகின்றன. வீதிகள், நினைவுச் சின்னங்கள், பொது இடங்கள் ஆகியவை அவற்றை வடிவமைத்த பல்வேறு சமூகங்களின் பெயர்களையும் நிகழ்வுகளையும் பிரதிபலிக்கின்றன.

தற்போதைய ஆட்சி, பொதுவான பாரம்பரியத்தின் இந்த அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்துவருகிறது. இந்த அடையாளங்களை ‘அன்னிய’ அல்லது ‘ஆக்கிரமிக்கும்’ கலாச்சாரங்களின் அடையாளங்களாகவும் ‘ஆயிரம் ஆண்டுக்கால’ அடிமைத்தனத்தின் அடையாளங்களாகவும் சித்தரிக்கிறது.

1990களில் தொடங்கி மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இந்த மாற்றம் காலனித்துவ நீக்க முயற்சியாக இருந்தது. இது இப்போது இஸ்லாமிய அடையாளங்களை மறுப்பதாக ஆகிவிட்டது.

இந்த அடையாள அழித்தொழிப்பு நுட்பமாகத் தொடங்கியது. புது தில்லியில் உள்ள தெருவின் பெயர் ஔரங்கசீப். கொடூரமான முகலாய வெறியராகச் சித்தரிக்கப்படும் ஔரங்கசீப்பின் பெயரை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற பெயரை (இவர் மிகவும் தகுதியான இந்திய முஸ்லிம்) பாஜக அரசு வைத்தது.

அப்போதிருந்து, சாலைகள், ரயில் நிலையங்கள், நகரங்களின் பெயர்களை மாற்றும் வழக்கத்தில் இஸ்லாமிய அடையாளங்களை நீக்கும் போக்கு காணப்படுகிறது. முகல் சராய், தீன்தயாள் உபாத்யாய் நகராக மாற்றப்பட்டது. அலகாபாத் பிரயாக்ராஜ் என ஆனது. இது வெறும் பெயர்களுடன் மட்டும் நிற்கவில்லை. வெவ்வேறு நகரங்களில் உள்ள தர்காக்கள், மசூதிகள், ஈத்காக்கள் போன்ற முஸ்லிம் தன்மையின் இருப்பை அந்த நகரங்களிலிருந்து அகற்றுவதாக நீட்சி அடைந்தது. இவற்றில் பல இடங்கள் வரலாற்று மதிப்பைக் கொண்டவை. விதிமுறைகளை மீறுதல் அல்லது போக்குவரத்து நெரிசல் போன்ற அற்பமான காரணங்களின் போர்வையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தில்லியில் சமீபத்தில் தர்காக்களையும் மசூதிகளையும் அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவற்றில் சில பழமையானவை. காலனித்துவவாதிகள்கூட அவற்றைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தனர். இந்த மாற்றம் பெயர்களைக் குறியீட்டு ரீதியாக அழிப்பதிலிருந்து நேரடியாக இடங்களை அகற்றுவதற்கு நகர்வதைக் குறிக்கிறது. நகர்ப்புற இடங்களிலிருந்து ‘முஸ்லிம் – தன்மையை’த் திட்டமிட்ட ரீதியில் அகற்றும் செயல் இது.

இந்திய நகரங்களில் இடிப்புகள் புதியவையல்ல. ‘சட்ட விரோதம்’ என்ற போர்வையில் நகர்ப்புற ஏழைகளுக்கு எதிரான கருவியாக இவை பயன்படுத்தப்படுகின்றன. அண்மைக்கால நிகழ்வுகள் கவலை தரும் போக்கை வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம்களுக்குப் ‘பாடம்’ கற்பிக்கும் நோக்கத்துடன் அவர்களுடைய வீடுகள், குடும்பங்கள், இருப்பிடங்கள் தகர்க்கப்படுகின்றன. “புல்டோசர் நீதி” என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை, சர்வாதிகார அரசு அதிகாரத்தின் சக்திவாய்ந்த, அச்சத்தைத் தூண்டும் அடையாளமாக மாறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்தச் செயல் இப்போது இந்தியா முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான நடைமுறையாக மாறியுள்ளது. புல்டோசர் நீதி முறையான நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் செயல்படுவதால் அதிகாரிகள் நியாயமான விசாரணைகள் அல்லது சட்டத்தின் துணை இல்லாமல் வீடுகளை இடிக்க அனுமதிக்கின்றனர்.

இந்த இடிப்புகள் சமூகங்களின் தங்குமிட உரிமையையும் பறிக்கின்றன. இந்துப் பெரும்பான்மை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு உரிமையுள்ள இடம் இல்லை என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது. பல நேரங்களில் நிர்வாகத்தின் அனுமதி அல்லது நீதித்துறை உத்தரவுகளின் ஒப்பந்தத்துடன், மாநில நிர்வாகத்தின் ஆதரவுடன் இது நடக்கிறது. ஊடகங்களும் பொதுச்சமூகமும் இதை ஆதரிக்கின்றன.

பொருளாதாரத் தாக்கம்

அடுத்தபடியாக, நகர்ப்புறங்களில் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரப் பங்கேற்பிலும் ஏற்படும் தாக்கம். இந்தியாவில் சமூக அளவிலும் பொருளாதார ரீதியாகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களில் முஸ்லிம் சமூகமும் ஒன்று.

முஸ்லிம்கள் பெரும்பாலும் உணவு, கைவினைப் பொருள்கள் உற்பத்தி, இறைச்சி, தோல் தொழில்கள் போன்ற குறைந்த ஊதியம் பெறும் முறைசாராத் துறைகளில் வேலை செய்கிறார்கள். கோவிட் தொற்றுநோய்ப் பரவலையடுத்து, முஸ்லிம் தெருவோர வியாபாரிகள் சுகாதாரமற்றவர்களாகவும் வைரஸைப் பரப்புபவர்களாகவும் திட்டமிட்டுக் குறிவைக்கப்பட்டார்கள்.

மரபார்ந்த ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் நடக்கும் நன்கு திட்டமிடப்பட்ட  பிரச்சாரத்தின் மூலம் சமீபத்திய காலங்களில் உணவு, உணவகத் தொழில் போன்ற பிற தொழில்களிலும் முஸ்லிம்கள் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகள் பரவிவருகின்றன.

பல்வேறு வகையான முஸ்லிம் நிறுவனங்கள் பொருளாதாரப் புறக்கணிப்பையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்கின்றன. பல நகரங்களும் மாநிலங்களும் பெரும்பாலும் தன்னிச்சையான கொள்கைகளை முன்னெடுக்கின்றன.

விற்பனையாளர்களும் உணவக உரிமையாளர்களும் தங்கள் பெயர்களைக் காட்ட வேண்டும், சில இந்து பண்டிகைகள் அல்லது தேசிய விடுமுறை நாட்களில் இறைச்சி விற்பனையை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பாதிக்கும் பிற ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் உள்ளன.

மத உணர்வுகளைப் புண்படுத்துகின்றன என்றும், சுகாதார நடவடிக்கை என்ற பெயராலும் சில மாநிலங்களில் சில சமயங்களில் ‘இறைச்சிக்கான தடை’ விதிக்கப்படுகிறது. அகமதாபாத், தில்லி போன்ற நகரங்களில் அசைவ உணவு விற்பனை மீதான கட்டுப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தத் தொழில்களைச் சார்ந்திருக்கும் முஸ்லிம்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை இவை கட்டுப்படுத்துகின்றன. வாழ்வாதார இழப்பைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், முழுப் பகுதிகளையும் ‘தீர்த் க்ஷேத்திரங்கள் (புனித இடங்கள்)’ என்றும், நகரங்களை சைவ உணவு உண்ணும் இடங்கள் என்றும் அறிவிப்பது அதிகரித்து வருகிறது.

முளைக்கும் புதிய சர்ச்சைகள்

இந்தப் புதிய நகர்ப்புறமயமாக்கல் அழிவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இது இந்து அடையாளத்தை வலுப்படுத்தக்கூடிய நகர்ப்புற மறுகட்டமைப்பு பற்றிய கதையாடல்களையும் உள்ளடக்குகிறது. அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயில் போன்றவை அத்தகைய போக்கின் அடையாளம்.

அயோத்தி சர்ச்சையில் இந்து அமைப்புகள் பெற்ற வெற்றிக்குப் பிறகு, இப்போது சர்ச்சைக்குரிய ஏராளமான இடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன, இஸ்லாமியச் சமயத்தோடு தொடர்புடைய இடங்களுக்கு உரிமை கோருவதற்கான நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சம்பல் மசூதியை ஒட்டி நிகழ்ந்த தகராறு அதன் அண்மைக்கால எடுத்துக்காட்டு.

சம்பல் மசூதியைத் தகர்க்கும் முயற்சியை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்திருக்கிறது என்றாலும் உள்ளூரில் இந்துக்களை அணிதிரட்டும் வேலைகளும் திருவிழா ஊர்வலங்களும் மசூதிகளைத் தாக்கும் நாசவேலைகளை அப்படித் தடுத்துவிட முடியாது. ஒரு சில நகரங்களில் பாரம்பரிய வளர்ச்சியை இலக்காகக் கொண்ட பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் விரிவாக்கம் (HRIDAY), ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் (SCM) போன்ற திட்டங்கள் நுட்பமாக இந்துச் சின்னங்களை முன்னிறுத்தி, மற்ற அடையாளங்களை நீக்குகின்றன.

அடையாளங்களை மாற்றுதல்

கோயில்கள், மலைத்தொடர்கள், கோட்டைகள் மற்றும் பிற ‘வளர்ச்சி’களைச் சுற்றியுள்ள நகர்ப்புறத் திட்டங்கள் இந்து சின்னங்களை முன்னிறுத்துவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இந்த மறுவடிவமைப்பு முறையை வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் தாழ்வாரம் போன்ற பிற திட்டங்களிலும் காணலாம்.

இது கலாச்சார மறுசீரமைப்புத் திட்டமாகத் தெரிகிறது. இந்தத் திட்டம் சிறிய கோயில்களை இடம்பெயர்த்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்கிறது. SCMஇன் கீழ் உள்ள திட்டங்கள் நகர்ப்புறங்களை அழகுபடுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் உள்ளூர்த் தேவைகளையும் சமூகங்களையும் ஒதுக்கிவைத்து, தேசியவாத அடையாளங்களுடன் நவீனமயமாக்கல் என்ற போர்வையில் சிறுபான்மையினரை விலக்கும் செயல்முறையை வலுப்படுத்துகின்றன.

நகர்ப்புறங்களில் சிறுபான்மையினரை விலக்கிவைக்கும் செயல்முறை அரசு கொள்கைகளின் உதவியோடு நடக்கிறது. உள்ளூரில் இருக்கும் அடிமட்டத் தொண்டர்கள் மூலமாகவும் இந்து அடையாளத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ராமர் கோயிலைத் திறப்பதற்கான பூஜை நடைபெற்ற ஜனவரி 22, 2024 அன்று, நாடு முழுவதும் பொது இடங்களிலும் தனியார் இடங்களிலும் ராமர் கோயில் உருவம் பொறித்த காவிக் கொடிகள் ஏற்றப்பட்டன. இந்துத்துவ அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை விரிவாக மேற்கொண்டன.

சிறுபான்மையினருக்கு எதிராக அன்றாடம் நடைபெறும் துன்புறுத்தல், அவ்வப்போது நடைபெறும் கொலைகள் முதலான வன்செயல்கள் ஆகியவற்றைப் போலவே, சிறுபான்மை நிறுவனங்கள், முஸ்லிம் தெரு வியாபாரிகள், முஸ்லிம்களின் ஊர்வலப் பாதைகள் ஆகியவற்றைக் குலைக்கும் நடவடிக்கைகள், மிரட்டும் செயல்கள் ஆகியவை அதிகரித்துவருகின்றன.

முஸ்லிம்களை நகர்ப்பகுதிகளிலிருந்து விலக்குவதற்கான புதிய கண்டுபிடிப்புகள் வெளிப்படுகின்றன. சில இடங்களை ‘தேவ்-பூமி’ (கடவுள்களின் நிலம்) என்றும் ‘சைவ உணவு மண்டலங்கள்’, என்றும் ‘கவத் யாத்திரைக்கான பாதைகள்’ எனவும் உள்ளூர்வாசிகள் வகைப்படுத்துகிறார்கள்.

இவை இந்துத் தூய்மைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாக மாற்றப்பட்டு, முஸ்லிம்கள் அங்கு இருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்கள் குடிசைவாசிகள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நிகழ்வுகளால் பல இடங்களில் அன்றாடம் வன்முறையும் முஸ்லிம்களை விலக்குவதும் நிகழ்கின்றன.

இந்துத்துவம் கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய நகரங்களை மறுவடிவமைத்து, நகர்ப்புற இடங்களை மேலும் பிளவுபட்ட நிலப்பரப்புகளாக மாற்றிவருகிறது. SCM போன்ற தேசியத் திட்டங்கள், G20 உச்சி மாநாடு போன்ற நிகழ்வுகளால் நகர்ப்புறத்து விளிம்பு நிலைக் குடிமக்களைப் புறநகர்ப் பகுதிகளுக்குக் கட்டாயமாக இடமாற்றம் செய்வதில் மதக் கண்ணோட்டம் இல்லை என்று கருதப்படலாம்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான பகுதியினர் சிறுபான்மையினரும் தலித்துகளும்தான் என்பதை மறுக்க முடியாது. நகர்ப்புறத் திட்டமிடல் மூலமாகவும் இதர திட்டங்கள் மூலமாகவும் நகர்ப்புற ஏழைகளுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் வீடுகளைத் தகர்க்கும் நடைமுறைகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்களின் வாழ்வாதாரமும் பொது இருப்பும் இப்போது கேள்விக்குள்ளாகின்றன.

வரவிருக்கும் பெரிய அபாயம்

இன்று இந்துத்துவ இயக்கங்கள் பெரிய அளவிலான கலவரங்களையோ வெகுஜன இயக்கங்களையோ உருவாக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, பரந்த அளவில் மக்களை அணிதிரட்டியும், அரசின் ஆதரவுடனும் இப்போது மேற்கொண்டுவரும் இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அன்றாட வாழ்வில் இந்துத்துவச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கிவிட முடியும். இந்த நடவடிக்கைகளைப் பரவலான அளவில் மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்துவிட்டால் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த பெரிய நடவடிக்கைகள் அரங்கேறலாம்.

இந்த அணுகுமுறை காலனித்துவம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இன ஒதுக்கலைப் பிரதிபலிக்கிறது. சமகாலத்தில் மேற்குக் கரையில் பாலஸ்தீனிய வீடுகளை இடிப்பதையும் இந்த நடவடிக்கைகள் நினைவுபடுத்துகின்றன. திட்டமிடல் நடைமுறைகள் மூலம் திட்டமிட்ட ஒடுக்குமுறையைச் செயல்படுத்த நகர்ப்புறத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை இந்தப் போக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்துத்துவ நகர்ப்புறவாதம் மாறிவரும் சமூக – அரசியல் சூழலின் விளைவாகும். மேலிருந்து கீழே இறங்கும் அரசியல் சித்தாந்தத்தைவிடவும் இதற்கு வலிமை அதிகம். நகர்ப்புறக் கட்டுமானங்களை இடித்தல், மறுகட்டமைப்பு செய்தல் ஆகியவை இந்திய நகரங்களின் பன்மைத்துவத்தை அரித்துவிடும் அபாயம் உள்ளது.

நகரங்களை இடம் சார்ந்து மறுவடிவமைப்பு செய்தல், நகர்ப்புறத் திட்டங்களைப் பயன்படுத்துதல், பொருளாதார ரீதியாகச் சிலரை ஓரங்கட்டுதல் கலாச்சார ரீதியாக அழித்தல் ஆகியவை இந்தியச் சமூகத்தில் நிரந்தரமான பிளவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

சம்பல் மசூதி தகராறும் அதன் விளைவாக ஏற்பட்ட வன்முறையும் இந்த அபாயத்தின் ஒரு அம்சம் மட்டுமே. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கு, முற்போக்கான புதிய வழிகளில் இந்திய நகரங்களுடன் உறவாடுவதற்கும், இந்துத்துவத்திற்கு மாற்றாகப் புதிய சித்தாந்த நிலைப்பாடுகளை உருவாக்குவதற்கும், நகரங்களில் இணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவதற்குமான உறுதிப்பாடு தேவைப்படுகிறது.

அரவிந்த் உண்ணி

நகர்ப்புறம் சார்ந்த ஆராய்ச்சியாளர். நகர்ப்புறத் திட்டமிடலிலும் நகரங்களிலும் பல தரப்பினரையும் இணைப்பது தொடர்பாக முறைசாராத் தொழிலாளர்களுடனும் நகர்ப்புறச் சமூகங்களுடனும் பணியாற்றிவருகிறார்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தேவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share