கணேஷ் தேவி
ஒருவரின் தாய் மொழி, தனது தாயை போன்றே ஒருவருக்கு நெருக்கமானது. தாய் மொழி திறன்களை, தனது தாயிடமிருந்தே குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். எந்த ஒரு தாயும் பிறந்த குழந்தைக்கு மொழி இலக்கணத்தை கற்றுக் கொடுப்பதில்லை. மொழியின் கடினமான இலக்கணத்தையும் அதன் விதிகளையும், உதட்டின் அசைவுகள், சைகைகள் மூலமும் தாயிடமிருந்து குழந்தை கற்றுக் கொள்கிறது. குழந்தைகள் மொழியை பள்ளியில் கற்றுக் கொள்கின்றன என்ற தப்பான அபிப்ராயம் இருக்கிறது. அது, தாய் மொழி அல்லாத இதர மொழிகளுக்கு பொருந்தும்.
ஒருவர் இலக்கணம் மூலம் தாய் மொழி தவிர்த்த இதர மொழிகளை கற்றுக் கொள்ளலாம். ஆனால், மனித மூளை மூன்று வருடங்களுக்கு உள்ளேயே தாய் மொழியில் உள்ள சிக்கல்களை கற்று தெரிந்து கொள்கிறது. எழுதுதல் என்பது வேறு விஷயம். பல மில்லியன் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஹோமோ சேப்பியன்கள், 7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒரு விசயத்தை எடுத்து கூறவும் தொடர்பு கொள்ளவும், மொழியை ஒரு கருவியாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மொழி என்பது அடிப்படையில் பேசுவதற்குத் தான். எழுத்தின் சிறப்பு இயல்பு, தொலை தூரத்தில் இருப்போரை தொடர்பு கொள்ளவும் தலைமுறை தலைமுறையாக செய்திகளை கடத்தவும் அது பயன்படுகிறது
கிராமப் புற பின்னணியைக் கொண்ட எனது குழந்தை பருவத்தில், எனது தாய் மொழி தவிர்த்த பல மொழிகளை, பல சமூக மக்கள் வாரச் சந்தைக்கு வரும் போது பேசுவதை கேட்டிருக்கிறேன். வானொலிப் பெட்டி எங்கள் கிராமத்திற்கு புது வரவு. எங்கள் வீட்டிற்கு வானொலிப் பெட்டி வந்தவுடன் மிகுந்த ஆவலோடு அதனை திருப்புவேன். நான் வாரச் சந்தையில் கேட்காத பல மொழிகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுபோல் இன்னும் எத்தனை மொழிகள் உலகில் இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவலை உருவாக்கியது.
1970 களில், பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த போது, இந்திய மொழிகள் பற்றிய, மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை காண நேர்ந்தது.அதில், 109 மொழிகள் பற்றிய பட்டியல் இருந்தது. 1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை பார்வையிட்டேன். அது என்னை பிரமிக்க வைத்தது. அதில் தெள்ளத் தெளிவாக இந்தியாவில் பேசப்படும் தாய் மொழிகள் 1652 என இருந்தது. 1961 மற்றும் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒப்பிட்டுப் பார்த்தால், பத்தாண்டுகளில் இந்தியா 1544 தாய் மொழிகளை இழந்துள்ளது என்ற முடிவுக்கு வர முடியும். அப்படி ஒரு முடிவுக்கு வந்தால் அது அவசரப்பட்டு எடுத்த முடிவாகிவிடும்.
மொழிகள் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்ற புள்ளிவிவரங்களை போன்ற கணக்கீடுகளை கொண்டதல்ல. எளிதாக தொகுக்க இயலாது. தேர்ந்த மொழியியல் வல்லுநர் மூலமாக ஆழமாக ஆராயப்பட வேண்டும். ஒரு மொழியை, தாய் மொழி என உரிமை கோருவதை அடிப்படையாகக் கொண்டு அதனை தாய் மொழி என்று தீர்மானிக்க மாட்டார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் மொழிகளுக்கான பதிவாளர் தாய் மொழி என உரிமை கோரப்படும் மொழியை, ஏற்கனவே தங்கள் ஆவணங்களில் உள்ள மொழிகள் மற்றும் செம்மையான இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பரிசீலனை செய்வர். இது, நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் பணி. அதனால் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொழிகள் பற்றிய அறிக்கை வெளியாக மிகவும் காலதாமதமாகிறது.
1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மொழிகள் பற்றிய புள்ளிவிபரங்களை வெளியிடும் முன்பாக, வங்கதேசப் போர் மூண்டு விட்டது. கிழக்கு பாகிஸ்தான், மொழி அடிப்படையிலேயே மேற்கு பாகிஸ்தானிடமிருந்து, பிரிந்து செல்ல காரணத்தை முன் வைத்தது. எனவே, இந்திய அரசு, மொழிப் பன்முகத்தை ஒருவித கவலையோடு அணுகுவதும் மொழிகளை குறைக்க வழிகளை தேடுவதும் இயல்பாக நடந்தது.
அவ்வாறு செய்வதற்கு ஒரு வழிமுறையை இந்திய அரசு கண்டறிந்தது. ஒரு மொழியை பேசுபவர்கள் பத்தாயிரம் பேர் இருந்தால் தான் அதனை ‘மொழி’ என ஏற்றுக் கொள்வது என்று ஒரு கட் ஆஃப் நிர்ணயம் செய்தது. இதற்கு எந்த ஓர் அறிவியல் பின்னணியும் கிடையாது. ஒரு மொழி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள, இருவர் ஒரு மொழியை பேசிக் கொண்டாலே போதும். 10,000 என்பது ஓர் அதிகார வர்க்கம் நிர்ணயிப்பு.ஆனால், இந்த ‘10,000’ என்ற எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தவிர்த்து, அதற்கு முன் பல பத்தாண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சிக்கிக் கொண்டது. 1970ல் எப்படி 1544 மொழிகள் உடனடியாக அமைதியாகிப் போனது? கண்டிப்பாக சாத்தியமில்லை. பத்தாயிரம் பேருக்கு உட்பட்டவர்கள் பேசும் மொழி தங்கள் சொந்த சிறு நிலப் பரப்பில் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
“பத்தாயிரம் பேர் பேசுவதே மொழி” என்ற அரசின் உத்தரவால் எத்தனை மொழிகள் காணாமல் போயின என அறிந்து கொள்ள, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரத்தையும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியவரும். 2011 ஆம் ஆண்டில், ஒரு மொழியை, மக்கள் எப்படி தாய் மொழி என்று உரிமை கோருகின்றனரோ அதே அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாய் மொழி கணக்கீடு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் 1369 தாய் மொழிகள் இந்தியாவில் பேசப்பட்டு வருகிறது என்பது தெரியவந்தது. இந்த இரண்டு கணக்கெடுப்புகளின் புள்ளிவிவரங்களையும் (1961-1652 & 2011-1369) ஒப்பீட்டுப் பார்க்கும் போது, 283 தாய் மொழிகள் இறந்து போய்விட்டன என்பது தெரியவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு அல்லது ஐந்து தாய் மொழிகள் செத்துவிட்டன எனத் தெரிந்து கொள்ள முடிகிறது. வேறுவிதமாக கூறினால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு மொழி விடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.
இறந்துவிட்ட இந்த மொழிகள் இதற்கு முன்னர் பல இலட்சம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டு இருந்தவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். மொழிகளின் இறப்பு விகிதம் அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம், வரையறை செய்யும் ‘தாய் மொழி’ என்ற பதம் சிறு குறு மொழிகளுக்கு மட்டுமல்ல, பெரிய மொழிகளையும் உள்ளடக்கியதே.
1961 ஆம் ஆண்டில், தசாப்தங்களாக கணக்கீடு செய்யப்பட்டு வரும் இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் விகிதாச்சாரம், வங்காளி மொழி 8.17%.. கடந்த 50 ஆண்டுகளில் இது 8.03 விழுக்காடாக குறைந்துவிட்டது. மராத்தி 7.62 விழுகாட்டிலிருந்து 6.86 ஆக குறைந்துள்ளது. தெலுங்கு 8.16 விழுகாட்டிலிருந்து 6.70 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. மிகவும் கவலை அளிக்கக் கூடியது தமிழ் மொழி பேசுவோர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி. தமிழ் மொழி பேசுவோர் 6.88 விழுக்காட்டிலிருந்து 5.70 என குறைந்துள்ளது.
இந்தி தவிர, அதிகமாக பேசப்படும் எட்டு மொழிகளான வங்காளி, மராத்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது,கன்னடம், மற்றும் ஒடியா ஆகிய மொழிகளைப் பேசுவோர் எண்ணிக்கை மட்டுமே 42.37 விழுக்காடு. அதேசமயம், இந்தி பேசும் மக்கள் தொகை மட்டும் 43.63 விழுக்காடு.
இந்தி பேசும் மக்கள் தொகையின் அளவு தொடர்ச்சியாக வேகமாக அதிகரித்து வருகிறது.1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 36.99 விழுக்காடாக இருந்த இந்தி பேசுவோர் எண்ணிக்கை, முதல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை 43.63 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வேறு வகையில் கூறினால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறும் உண்மை, இந்தி, சமஸ்கிருதம் மற்றும் குஜராத்தி தவிர இதர இந்திய மொழிகள் அனைத்தும் அருகி வருகிறது என்பதே. 1961 ஆம் ஆண்டு 2212 பேர் பேசும் மொழியாக இருந்த சமஸ்கிருதம், 2011 ல் 24 821 பேர் பேசும் மொழியாக அதிகரித்துள்ளது.1961 ஆம் ஆண்டுக்கும் 2011 க்கும் இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளில் , 11 மடங்கிற்கு மேல் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் 2018 ஆண்டில் தான் தெரிய வந்திருக்கிறது.
வாழும் மொழிகளில் மிகவும் தொன்மையானது தமிழ். கன்னடமும் மராத்தியும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. மலையாளம், வங்காளி, ஒடியா ஆகியவை ஆயிரத்தாண்டு பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்படும் மொழியாக இருந்தது.
இவற்றுக்கெல்லாம் மாறாக, 17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலம் இன்று (2011) 2,59,878 பேர் பேசும் மொழியாக உள்ளது. இந்தியாவில் உள்ள ஏழு இலட்சம் கிராமங்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அதில் வலம் வரும் ஆங்கில நாளிதழ்கள், ஆங்கில தொலைக்காட்சி சேனல்களின் அதன் டிஆர்பி விகிதங்கள் ஆகியவை ஆங்கில மொழி,பேச்சு மொழியாக இருப்பதற்கான சாட்சியமாக விளங்குகிறது. அவ்வாறு சமஸ்கிருதம் பேசுவோர் அதிகரித்தமைக்கான சான்றுகள் இங்கு இல்லை.
இதன் வழியாக தெரியவரும் வருத்தமான முடிவு என்னவென்றால், இந்துத்துவம் விரும்புகிற மொழிகள் தவிர்த்து, மற்ற அனைத்து சிறிய பெரிய மொழிகளும் இருத்தலியல் சிக்கல்களை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன என்பதே. “பல மொழிகளைக் கொண்டது இந்திய ஒன்றியம்” என்ற அரசியல் சாசனத்தில் வரையறைக்கு இது நல்ல செய்தி அல்ல.
கட்டுரையாளர்
கணேஷ் தேவி, Obaid Siddiqui இருக்கை பேராசிரியர், உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம், டாட்டா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையம், பெங்களூரு,
தமிழில்: நா.மணி
கிச்சன் கீர்த்தனா: கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச்
இந்திய அரசின் சட்டங்களை மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை: எலான் மஸ்க்
நன்றி
நன்றி