2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநிலங்களில் நடைபெற இருக்கும் எல்லா சட்டப்பேரவைத் தேர்தல்களுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதிலும் இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் தேர்தல்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க மாநில அளவிலான செல்வாக்கு என்பது மிகவும் அவசியமாகிறது.
இதனை கருத்தில் கொண்டுதான் தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை அனைத்தும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இன்னும் சொல்ல வேண்டுமானால், இவ்விரு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சியில் உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி, பாஜகவை மத்தியில் இருந்து அகற்றுவதே மற்ற மாநிலக் கட்சிகளின் விருப்பமாக இருக்கிறது. மொத்தத்தில் பாஜகவை எதிர்க்க பல மாநிலக் கட்சிகளும் கைகோர்த்து வருகின்றன.
இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்
இந்த நிலையில்தான் இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் இமாச்சல் பிரதேசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற்று, டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஆனால், குஜராத் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், இமாச்சலில் தேர்தல் பிரச்சாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
இமயத்தைக் குடிகொண்ட இமாச்சல்!
இமாச்சல் பிரதேசம் சாதாரண மாநிலம் அல்ல. சரித்திர புகழ்கொண்டது. 1971இல் உருவாக்கப்பட்ட இந்த வடஇந்திய மாநிலம், ஆங்கிலேயர்கள் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இம்மாநிலத்தில்தான் இமயமலை அமைந்துள்ளது.
அது தவிர, இந்தியாவின் புகழ்பெற்ற மலைவாழிடங்களாகிய சிம்லா, மணாலி, குலு, தர்மசாலா போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இங்குள்ள சிம்லா, ஆங்கிலேயர்களாலேயே ’குன்றுகளின் ராணி’ எனப் புகழப்பட்டது.
இங்குள்ள அழகிய கட்டடங்கள் இன்றும் சிம்லாவிற்கு பெருமையை அள்ளித் தருகின்றன. அடுத்து, இங்குள்ள குலு பகுதியானது, ’கடவுளின் பூமி’ என அழைக்கப்படுகிறது. இப்பகுதி பற்றி, ராமாயணம், மஹாபாரத புராணங்களிலேயே குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இப்படி, புகழ்மிக்க… அதிலும் இமயம் முதல் குமரி வரை என்று எல்லோராலும் சொல்லக்கூடிய இந்த இமாச்சல பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்ய எந்தக் கட்சிக்குத்தான் ஆசை வராது.
அந்த மாநிலத்தில், காங்கிரஸும், பாஜகவும் மாறிமாறி ஆட்சிக் கட்டிலில் ஏறிவரும் நிலையில் தற்போது அந்த இரண்டு கட்சிகளுக்கு போட்டியாக ஆம் ஆத்மியும் களமிறங்கியுள்ளது. இதனால் மும்முனைப் போட்டி நிலவியுள்ளது.
பாஜகவின் பலமான நம்பிக்கை!
இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 55.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 35. இது, மிகவும் எளிதான இடங்கள்தான் என்றாலும், இதைக் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜக 44 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் வென்றிருந்தது.
இந்தச் சூழலில் நேற்று (அக்டோபர் 14) தேர்தல் கமிஷன் இமாச்சலில் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாகவே அம்மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இமாச்சலுக்கும் டெல்லிக்கும் இடையே நாட்டின் 4வது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
அதுமட்டுமின்றி, எய்ம்ஸ் மருத்துவமனையையும் திறந்துவைத்தார். மேலும், நீர்மின் திட்டங்கள், சாலை வசதிகள், கல்வி நிலையங்கள் எனப் பலவற்றையும் திறந்துவைத்து இமாச்சலுக்கு பெருமை சேர்த்தார், மோடி. இதுகுறித்து பேசிய மோடி, “இமாச்சல பிரதேசத்திற்கு தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்டது” என்று சொல்லி அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இப்படி, பல திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியதை வைத்து மீண்டும் ஜெயித்துவிடலாம் என்பது பாஜகவின் பலமான நம்பிக்கை.
காங்கிரஸின் கனவு!
ஆனால், ”பாஜக ஆட்சியில் இமாச்சலில் எதுவும் நடைபெறவில்லை” என்பதுதான் காங்கிரஸின் அடிப்படை வாதமாக இருக்கிறது. அங்கு அக்டோபர் 14ம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 1 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்கு ஒப்புதல் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்” உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளார். இதனால், மீண்டும் தாம் ஆட்சியில் அமரலாம் என்பது காங்கிரஸின் கனவாக இருக்கிறது.
இதற்கிடையே தேசிய அளவில் கவனம் பெற்று வரும் ஆம் ஆத்மி கட்சி, டெல்லி, பஞ்சாப்பைத் தொடர்ந்து இமாச்சலிலும் களம்காண உள்ளது. இமாச்சல் மட்டுமல்ல, குஜராத்தையும் ஆம் ஆத்மி குறிவைத்திருக்கிறது. அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் உரையாற்றிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு தரமான, இலவசக் கல்வி வழங்கப்படும். அனைத்துப் பள்ளிகளும் டெல்லியைப் போல் சிறந்ததாக மாற்றப்படும்.
அறுவடையில் இறங்கிய ஆம் ஆத்மி!
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது. தற்காலிக ஆசிரியர்கள் முறைப்படுத்தப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும், மேலும் அவர்களுக்கு ஆசிரியர் அல்லாத இதர பணிகள் வழங்கப்படாது” என்ற 6 உத்தரவாதங்களை அப்போதே அளித்து, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பினார்.
இப்படி, இமாச்சலத்தில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுவதால், வாக்கு வங்கி சிதற வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
என்றாலும், ஆம் ஆத்மி அவ்வளவு எளிதில் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கருத்துக்கணிப்புகள் நிலவி வருகின்றன. காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் மட்டுமே மீண்டும் கடுமையான மோதல் இருக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், அவ்விரு கட்சிகளின் வாக்குகளை ஆம் ஆத்மி இந்த முறை ஓரளவு அறுவடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பாஜகவைவிட காங்கிரஸ்தான் அந்த மாநிலத்தில் அதிகமாகப் போராட வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் நிலை மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது. இதனால், பல மாநில தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துவருகிறது. அதைப் போக்கும் வகையில்தான் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அது, எந்த அளவுக்கு பயன் தரும் என்பது அடுத்துவரும் தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.
அதேநேரத்தில் இமாச்சல் பிரதேசத்தை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பாஜகமீது அதிருப்தி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த அதிருப்தியைப் போக்கவும் பாஜக கடுமையாகப் போராடும். இமாச்சல் மற்றும் குஜராத் ஆகிய மாநில தேர்தல்களின் வெற்றியே பாஜகவின் பெரும் பலமாக இருக்கிறது.
ஆகையால், அதை, பாஜக அவ்வளவு எளிதில் விட்டுத் தராது என்றே எண்ணலாம். அதேநேரத்தில், இம்மாத தொடக்கத்தில் ABP நியூஸ் – சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், மீண்டும் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. கருத்துக்கணிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் மக்களின் கைவிரல்களே ஆட்சியை உட்கார வைக்கும் சக்தி படைத்தவை. ஆகையால், இமாச்சலில் எது ஜெயிக்கும் என்பதை டிசம்பர் 8 தெரிந்துகொள்வோம்.
ஜெ.பிரகாஷ்
ஆய்வை துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறது பாஜக: கே.பி. முனுசாமி குற்றச்சாட்டு
இது டெல்லியில் நடக்க வேண்டிய போராட்டம்தான்: உதயநிதி பேச்சு பின்னணி!