சிறப்புக் கட்டுரை: மோடி கூறும் ‘பெண் விடுதலை’யும் கொடுங்குற்றவாளிகளும்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

எஸ்.வி.ராஜதுரை

திட்டமிட்ட முன்தயாரிப்புகளுடன் 75ஆம் இந்திய சுதந்திர நாளை ’இந்து சுதந்திர நாளாக’க் கொண்டாடுவதற்கு கார்ப்பரேட்டுகளின் நைலான் நூலிழையால் உருவாக்கப்பட்டதும்,

இந்திய தேசியக் கொடியின் நீளம், அகலம் ஆகியவற்றுக்கு இந்திய அரசமைப்பு சட்டம் விதித்துள்ள  வரையறைகளை மீறும்வகையிலும்,  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மன்னிப்புக் கேட்டு விடுலையாகி, இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும்,

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்திருந்த தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பிளவுபடுத்தி அதை பலகீனப்படுத்துவதற்காகவும் இந்து மகாசபை என்ற அமைப்பை உருவாக்கி மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் அரசியல் குருநாதராக விளங்கிய

வி.டி.சாவர்க்கரை  முன்னிலைப்படுத்தி, ஜவஹர்லால் நேருவைப் பின்னுக்குத் தள்ளி, செங்கோட்டையில் ஹிட்லர், முஸோலினி பாணியில் கைகளை அசைத்தும் உயர்த்தியும் ஒவ்வொரு சொல்லுக்குப் பிறகும்  தலையை வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் திருப்பியும்

வழக்கமான பொய் மூட்டைகளை அவிழ்த்தும்  தனது சுதந்திர நாள் உரையில் பிரதமர் மோடி முழங்கினார்: 

gujarat govt releases 11 bilkis bano rape convicts

“ நமது நடத்தை முறை, பண்பாடு, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றில் பெண்களை இழிவுபடுத்தும் அவமானம் செய்யும் ஒவ்வொன்றையும் களைந்தெறிய  நாம் உறுதி பூண வேண்டாமா?”

குஜராத் மாடல்

‘பெண்களின் சக்தி’ பற்றி அவர் உரை நிகழ்த்திய அதே நாளில், அவரால் உருவாக்கப்பட்ட ’குஜராத் மாடலை’ப் பின்பற்றி அந்த மாநிலத்தில் ஆட்சி புரிந்துவரும் பாஜக அரசாங்கம் 2002இல் அந்த மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது

பில்கிஸ் பானு என்ற முஸ்லிம் பெண்மணியைக் கூட்டாக வன்புணர்ச்சி செய்ததுடன் , இஸ்லாம் மதத்தை சேர்ந்த 13 பேர்களையும் மூன்றுவயதுக் குழந்தையையும் படுகொலை செய்தவர்களை அவர்களின் ஆயுள் தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்தது.

gujarat govt releases 11 bilkis bano rape convicts

சிபிஐ நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பிறகு 2018இல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பதினோரு கொடிய குற்றவாளிகளை, அவர்களது  தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பே, அதாவது அவர்களின் நான்காண்டுக் கால சிறை வாசத்துக்குப் பிறகு விடுதலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்தவர்களும் அந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களோ அதன் ஆதரவாளர்களோதான்.

அரசியல், பண, ஆள் பலம் மிக்க பாஜகவையும் அதன்  அரசாங்கத்தையும் அதற்கு சார்பாகப் பணிபுரிந்து வந்த உயர் அதிகாரிகளையும் எதிர்கொண்டு இந்த வழக்கை  நடத்தியவர்களால், மேற்சொன்ன குற்றங்கள் நடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகே குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர முடிந்தது.

அதற்கு முக்கியக்காரணமாக இருந்தது பில்கிஸ் பானுவின் அஞ்சா நெஞ்சமும் நீதிக்கான அவரது வேட்கையும்தான்.

பில்கிஸ் பானுவுக்கு நடந்தது என்ன?

gujarat govt releases 11 bilkis bano rape convicts

2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த நிலையில், பில்கிஸ் பானுவும் அவரது கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அந்த மாநிலத்தின் தஹோட் மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கேடா கிராமத்திலிருந்து  தப்பித்துச் சென்றுகொண்டிருந்த போது 2002 மார்ச் 3ஆம் தேதி வன்முறைக் கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகினர்.

தேசிய மனித உரிமை ஆணையத்தை பில்கிஸ் பானு அணுகிய பிறகே  உச்ச நீதிமன்றம் இந்த  வழக்கில் தலையிட்டது.

பாஜக ஆட்சிபுரியும் குஜராத்தில் இந்த வழக்கை நடத்துவது சாத்தியமில்லை என்பதாலும்,  பில்கிஸ் பானுவுக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருந்ததாலும், அந்த வழக்கு விசாரணையை  மகாராஷ்டிராவிலுள்ள  சிபிஐ நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த நீதிமன்றம்  குற்றம் சாட்டப்பட்ட பதினோரு நபர்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

அத்தீர்ப்பை 2017, 2019ஆம் ஆண்டுகளில் பம்பாய் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. பில்கிஸ்  பானுவுக்கு ரூ50  இலட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

பில்கிஸ் பானு கொடுத்த புகாரை முறைப்படி புலன் விசாரணை செய்யாமல் குஜராத் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளை உச்சநீதிமன்றம் கண்டனம் செய்தது.

தன் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களே மேற்சொன்ன தாக்குதலையும் குற்றங்களையும் செய்தவர்களாக இருந்ததால், உயிருக்கு அஞ்சி  வாழ்ந்து வரும்  பில்கிஸ் பானுவால் இன்றுவரை தன்  சொந்த கிராமத்துக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை.

தண்டனைக் குறைப்பின் பின்னணி!

குற்றவியல் நடைமுறை சட்டத் தொகுப்பின்படி (CrCP)  தண்டனைக் குறைப்பைச் செய்ய  மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், மேற்சொன்ன சட்டத் தொகுப்பின்படி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்திருக்க வேண்டும்;

அவர்களின் நன்னடத்தை முதலியவற்றை ஆராய்ந்து தண்டனைக் காலம் முடிவதற்கு முன் அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையைச் செய்வதற்கு ஒரு வாரியம் (Board) அமைக்கப்பட வேண்டும்.

ஆனால், குஜராத் அரசாங்கத்தின் கீழ் உள்ள வாரியமும் அதே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதுதான்!.

குஜராத் அரசாங்கத்தின் முடிவு முன்னுவமை  இல்லாததும் அபாயகரமான பின்விளைவுகளை உருவாக்கக்கூடியதுமாகும்.

அதைப்போன்ற வேதனை மிக்க நிகழ்வு என்னவென்றால், முன்பு நேர்மையுடன் செயல்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இடத்தில் வேறு நீதிபதிகள் இருப்பதால், முன்பு பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தலையிட்டு அவர்களுக்கு நீதி வழங்கத் தலையிட்ட அதே உச்சநீதிமன்றம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் பதினோரு பேரில் ஒருவர் தனது தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரும் மனுவை கடந்த மே மாதம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுதான்.

அந்தப் பதினோரு குற்றவாளிகளை அவர்களது தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை செய்வதற்கு சிறை வாரியமொன்றை குஜராத் அரசாங்கம் உருவாக்கியதற்கு உச்சநீதிமன்றம்தான்  மேற்சொன்ன சமிக்ஞை அனுப்பியிருக்கிறது என்று கருதவேண்டியுள்ளது.

இதுதான் மோடி கூறிய பெண் சக்தி

பில்கிஸ் பானுவின் வழக்கை நடத்துவதற்காக எத்தனையோ மிரட்டல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் அஞ்சாது போராடி வந்த தீஸ்டா செதல்வாட் என்ற மனித உரிமைப் போராளி மீதும் அந்த  வழக்கு விசாரணையில் நேர்மையாக நடந்துகொண்டு குற்றவாளிக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்ததில் முக்கியப் பங்காற்றிய நேர்மையான காவல் துறை அதிகாரியான ஆர்.பி.ஸ்ரீகுமார் மீதும் பண மோசடி என்ற பொய்க்  குற்றத்தைச் சுமத்தி சில மாதங்களுக்கு முன் குஜராத் அரசாங்கம் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்துள்ளது.

gujarat govt releases 11 bilkis bano rape convicts

இதற்குக் காரணமும் உச்சநீதிமன்றம்தான். அதாவது,  அந்த இருவர்மீது குஜராத் அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ததன் மூலம், குஜராத் காவல் துறைக்கு பச்சைக் கொடி காட்டியது உச்ச நீதிமன்றம்.

இதுதான் பிரதமர் மோடி கூறிய ’பெண் சக்தி’; ’பெண் விடுதலை’; பெண்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதை.

உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்

gujarat govt releases 11 bilkis bano rape convicts

இந்திய சுதந்திரத்தின் பவளவிழாவை பெரும் ஆரவாரத்துடனும் ஆடம்பரத்துடனும் வரலாற்றுத் திரிபுகளுடனும் கொண்டாடிய மோடி தலைமையிலான  ஒன்றிய அரசாங்கம்,  மோடியின் சுதந்திர தின உரைக்கும் குஜராத் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குமுள்ள கொடூரமான முரண்பாட்டைப் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.

 இந்திய நாட்டில் இன்னும் நீதி, நியாயம் என்பவை இருக்கின்றன என்பதை இந்தியக் குடிமக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது என்றால், அது குஜராத் அரசாங்கத்தின் முடிவை இரத்து செய்தாக வேண்டும் என்று நீதியிலும் நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள், கட்சி, மத, சாதி வேறுபாடின்றி குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் தேசிய கீதம் பாடி புது முயற்சி!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

1 thought on “சிறப்புக் கட்டுரை: மோடி கூறும் ‘பெண் விடுதலை’யும் கொடுங்குற்றவாளிகளும்!

  1. உச்ச நீதி மன்றம் ஒன்றிய அரசின் கைபாவை…. தீங்கு செய்தவனுக்கும் அதற்க்கு துணையாக இருப்பவனுக்கும் அவன் கடவுலே தண்டனை கொடுக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *