குஜராத் தேர்தல்: பாஜகவுக்கு காத்திருக்கும் 10 சவால்கள்!

சிறப்புக் கட்டுரை

குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஆளும் பாஜக அரசு, 10 சவால்களைச் சந்திக்க இருக்கிறது.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த நவம்பர் 3ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து, குஜராத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, பாஜகவின் கோட்டையான குஜராத்தில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் கட்சிகளிடையே போட்டி நிலவி வந்தது. ஆனால், இந்த முறை அவ்விரு கட்சிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி களமிறங்கி வாக்கு வங்கியை உடைக்க இருக்கிறது. குஜராத்தில் பாஜக பிரசாரம் செய்வதற்கு முன்னரே, ஆம் ஆத்மி பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆதரவைத் திரட்டி வருகிறது.

குறிப்பாக அக்கட்சி, 300 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லாதவர்களுக்கு ரூ.3000 உதவித் தொகை, 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள், 18 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை, விவசாயக்கடன் தள்ளுபடி, இலவச கல்வி எனப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறது.

பாஜகவோ, ஆம் ஆத்மிக்குப் போட்டியாக பல திட்டங்களை அறிவித்துள்ளது. முக்கியமாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இனி ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்தது.

gujarat election The challenge for bjp

இப்படி, பாஜக பல திட்டங்களை குஜராத் மக்களுக்காக அறிவித்தாலும், அம்மாநிலத்தின் கோட்டையாக பாஜக விளங்கினாலும் இந்த முறை அக்கட்சிக்கு பல சவால்கள் நிறைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முதல் எதிரி காங்கிரஸ்

குஜராத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு காங்கிரஸ்தான் முதல் எதிரி. அதுபோல், காங்கிரஸ்க்கு பாஜகதான் எதிரி. ஆறு முறை பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்தபோதிலும் மாநிலத்தில் 40 சதவிகித வாக்குகளை பெற்று வருகிறது. அதிலும், பட்டியலினம், பழங்குடியினர் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் காங்கிரஸுக்கே கிடைத்து வருகின்றன.

இந்த முறை பாஜக அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் படேல் சமூகத்தினரின் ஆதரவைப் பெறவும் காங்கிரஸ் முயற்சி செய்துவருகிறது. அதுபோல், கிராமப்புறங்களில் காங்கிரஸிற்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. இதுதவிர காங்கிரஸும் போட்டிபோட்டு குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளது.

அதில், 300 யூனிட் இலவச மின்சாரமும் ஒன்று. அதுமட்டுமின்றி, காங்கிரஸின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்த தேர்தல் அவரது தலைமைக்கு பரிசோதனையாக அமைந்துள்ளது. அவர், வெற்றிக்காக என்ன வியூகத்தை இந்த தேர்தலில் வகுக்கப் போகிறார் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், பாஜக இந்த முறையும் காங்கிரஸுடன் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.

இந்துத்வா அரசியல்

பாஜகவைப் பொறுத்தவரை இந்துத்துவா அரசியலையே முன்னிலைப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதையே தன்னுடைய வெற்றியின் ஆயுதமாகவும் வைத்திருக்கிறது. இதனால், ஆம் ஆத்மியும் தற்போது அதே அரசியலை கையிலெடுத்துள்ளது.

அதற்கு சமீபத்திய உதாரணமாய் அரவிந்த் கெஜ்ரிவால், ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி உருவப்படங்களை அச்சிட வேண்டும் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அவர் சமீபகாலமாகவே இந்துத்வா கொள்கைகளைக் கையிலெடுத்து வருகிறார்.

மேலும் டெல்லி பள்ளிகளில் தேசபக்தி வகுப்புகள், ராம ராஜ்ஜியம் அமைக்க குறிக்கோள், அயோத்தியா ராமர் கோயிலுக்கு முதியவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு எனப் பல செயல்கள் மூலம் ஆம் ஆத்மிக்குள் இந்துத்வாவைப் புகுத்திவருகிறார். ஆம் ஆத்மியின் இந்த இந்துத்வாவின் கொள்கையே பாஜகவுக்கு முதற்கட்ட சவாலாக இருக்கிறது.

முஸ்லிம் வேட்பாளர்

அடுத்து மக்களின் விருப்பத்தின்படி, முஸ்லிம் வேட்பாளரை ஆம் ஆத்மி களமிறக்கியிருப்பது மற்றொரு சவாலாக உருவாகி இருக்கிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது கையாண்ட ’கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்’ என்ற மக்களிடம் கருத்துக் கேட்கும் அணுகுமுறையை குஜராத்திலும் தொடர்ந்த ஆம் ஆத்மி, அதன்படி மக்களால் நன்கறியப்பட்ட முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இசுதான் கத்வியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால் இஸ்லாம் சமுதாய ஓட்டுகள் அவருக்கு அதிகம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், பில்கிஸ் பானுவுக்கான வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட தாக்கமும் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்.

நிலம் கையகப்படுத்துதல்

அரசின் பல்வேறு திட்டங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவது அங்குள்ள விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. அகமதாபாத் – மும்பை இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டம், வதோதரா – மும்பை இடையேயான விரைவுச் சாலை திட்டம் ஆகியவற்றிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு கிளம்பியது. இதுவும் தற்போது பாஜகவுக்கு எதிராக வெடிக்க இருக்கிறது.

பில்கிஸ் பானுவுக்காக நீதி

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தின் தாக்கம், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களிடையே வெவ்வேறானதாக இருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் பில்கிஸ் பானுவுக்கு நீதி கோரி வருகின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு பாஜக வாஞ்சை செய்வதாக அச்சமூக மக்கள் நம்புவதுடன், அந்த எதிர்ப்பை இந்தத் தேர்தலில் அவர்கள் காட்ட இருக்கின்றனர். இந்த பிரச்சினை மூலம் பாஜக 4வது சவாலை எதிர்கொண்டுள்ளது.

வினாத்தாள் விவகாரம்

5வது சவாலாக, வினாத்தாள் விவகாரம் வேகம் பிடித்துள்ளது. குஜராத்தில் அரசுப் பணி தோ்வுகளின்போது வினாத்தாள் வெளியாகும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதனால் அடிக்கடி தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜகவினரே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயமும் பாஜகவுக்கு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது.

குஜராத்தில் பல மாவட்டங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. புதிய சாலைகளையும் அமைக்கவில்லை; பழைய சாலைகளையும் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அம்மாநில மக்கள் வைத்துள்ளனர். அதற்கு உதாரணமாய் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்ததுடன், அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்தப் படங்களை தற்போதைய பிரசாரத்தில் வைரலாக்கி வரும் ஆம் ஆத்மி, அதுமூலம் வாக்கு வங்கியைப் பலப்படுத்த முனைந்திருக்கிறது. ஆக, இந்த சாலைப் படங்களும் பாஜகவுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளன.

அதிக மின்கட்டணம்

7வது சவாலாக மின்கட்டண பிரச்சினை பாஜகவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. நாட்டில் மின்கட்டணம் அதிகமாக உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. அங்கு 100 யூனிட்க்கு ரூ.515 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் யூனிட்டுக்கு 4 ரூபாய் மட்டுமே செலுத்தும் நிலையில், குஜராத்தில் ரூ.7.50 வசூலிக்கப்படுகிறது.

மோசமான சாலைகள்

gujarat election The challenge for bjp

இதனால், மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அங்குள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் அடிக்கடி போராட்டம் நடத்திவருகின்றனர். எனவேதான் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் அறிவித்துள்ளன. அக்கட்சிகளின் இத்தகைய அறிவிப்பால் மின்கட்டண பிரச்சினையிலும் பாஜகவுக்கு சவால் ஏற்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

8வது சவாலாக, பாஜகவுக்கு காத்திருப்பது அடிப்படை வசதிகள். மாநிலத்தின் தொலைதூர கிராமப் பகுதிகளில் அடிப்படை கல்வி மற்றும் சுகாதார வசதிகள் இன்னும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. தொலைதூர கிராமப்புறங்களில் பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதேநேரத்தில், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலும் வகுப்பறைகள் இல்லாததால் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் கிராமப்புறங்களில் சுகாதாரச் சேவைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவேதான் ஆம் ஆத்மி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தரமான இலவசக்கல்வி அளிக்கப்படும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என கல்வியை மையப்படுத்தி வாக்குறுதியை அறிவித்திருந்தது. இலவச கல்வி குறித்த ஆம் ஆத்மியின் அறிவிப்பால், பாஜகவுக்கு இத்தகைய சவால் கவலை தருவதாகவே சொல்லப்படுகிறது.

விவசாயிகள் பிரச்னைகள்

9வது சவாலாக விவசாயிகள் பிரச்சினைகள் முன்னிறுத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர் இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்காததால், மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நெசவு தொழில்களில் ஏற்பட்ட பெரும் நஷ்டம், கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மீள முடியாத நிலை போன்றவை முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு அனைத்து மட்டத்திலும் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதைக் குறைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அம்மாநில அரசு மீது விழுந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியின்மையும், விலைவாசி உயர்வுமே இதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. குஜராத மாநில பாஜகவுக்கு இது முக்கியச் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

gujarat election The challenge for bjp

மோர்பி பாலம் விபத்து

பாஜகவுக்கு காத்திருக்கும் 10வது சவாலில் சமீபத்தில் நிகழ்ந்த மோர்பி பால விபத்து அடங்கியிருக்கிறது. அக்டோபர் 30ஆம் தேதி நிகழ்ந்த குஜராத் மாநில மோா்பி தொங்கு பால விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இதில், பலர் காயமுற்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால் அம்மக்கள் மாவட்ட நிா்வாகம் மற்றும் பாலத்தை பராமரிக்க பொறுப்பளிக்கப்பட்ட நிறுவனத்தின் மீது கோபத்தில் உள்ளனர். அதிலும் இந்த பால பராமரிப்புக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பது அம்மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாடல் ஆட்சி மூலம் அம்மண்ணின் மைந்தரான மோடி, இந்திய பிரதமரானார். அத்தகைய பிரதமர் மோடிக்கே சவால் விடும் வகையில், குஜராத்தில் டெல்லி மாடலைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மாடலோடு காங்கிரஸ் கட்சியின் வியூகத்தையும் பாஜக எதிர்கொள்வதுடன், மேற்கண்ட 10 சவால்களையும் சமாளித்து வெற்றிபெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெ.பிரகாஷ்

டெல்லி: மணிஷ் சிசோடியா உதவியாளர் கைது!

பொன்னியின்செல்வன் வெற்றி: கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நிதியுதவி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *