கோவி.லெனின் Govi Lenin japan travel story 24
ஜப்பான் பயணப் பதிவுகள் 24
கமாகுராவின் அழகிய கடற்கரையை ஒட்டிய சாலையில் கார் பயணித்தது. அசதியிலும் சாப்பிட்ட களைப்பிலும் லேசாகக் கண்களை மூடினேன். ஒரு சில நிமிடங்கள் கடந்திருந்தபோது, டோக்கியோ நோக்கிய சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தார் நண்பர் விஜய். கமாகுராவில் கோட்டை ஒன்றைப் பார்க்கலாம் என அவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அது எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “நாம் அந்த வழியைத் தாண்டி வந்துவிட்டோம். நானும் மறந்துட்டேன்” என்றார்.
“பரவாயில்லை.. இன்றைய பகல் நேரப் பயணத்தில் நகரமும் கிராமமும், சின்னச் சின்ன மலைப்பாதையும், ஜப்பானின் பாரம்பரியமும் கண்களை நிறைத்துவிட்டன. கோட்டை கட்டி ஆள நமக்கு கொடுத்து வைக்கவில்லை” என்றேன்.
ஜப்பானின் ஒசாகா உள்ளிட்ட பகுதிகளில் கோட்டைகள் உண்டு. மன்னராட்சியில் ஜப்பான் பலப் போர்களை சந்தித்திருக்கிறது. அதன்பிறகும்கூட போர்ப்பசி நீடித்திருக்கிறது. பல நாடுகளுடன் வலுக்கட்டாயமாக சண்டை போட்டிருக்கிறது. சீனாவை சீண்டியிருக்கிறது. ரஷ்ய எல்லை வரை வாலாட்டியிருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் தீவுக் கண்டமான ஆஸ்திரேலியா, சின்னச் சின்னத் தீவுகள் என ஜப்பான் ஆளுகை செலுத்தியிருக்கிறது.
அண்மையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் சயாம் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவுக்கும் தாய்லாந்து(சயாம்)க்கும் இடையே ரயில்வே பாதையை அமைத்த ஜப்பான் அதற்காகத் தோட்டத் தொழிலாளர்களானத் தமிழர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்களை அடிமைகளைப் போலப் பயன்படுத்தியது. ஏறத்தாழ ஒரு இலட்சம் தமிழர்கள் இந்த ரயில்வே பாதை அமைக்கும் கடும்பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தனர். அதனால் இதனை சயாம் மரண ரயில்பாதை என்றே வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பான் நாட்டு உதவியை நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் இந்திய தேசியப் படை பெற்றிருந்ததால், பர்மா-மலேயா வாழ் தமிழர்கள் அந்தப் படையில் இடம்பெற்றிருந்தனர். அதனால் இந்திய எல்லை வரை ஜப்பான் படைகள் வந்து சென்றதுடன், நாகாலாந்து-மணிப்பூர் பகுதிகளில் ஜப்பான் படையினர், பிரிட்டிஷ் இந்தியப் படையினரை சரணடையச் சொல்லி, துண்டுப் பிரசுரங்களை விமானத்தின் மூலம் வீசினர். உங்கள் குடும்பத்தாருடன் வாழ வேண்டும் என்று நினைத்தால், உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு வெள்ளைக் கொடியுடன் சரணடைய வாருங்கள். அல்லது கைகளை மேலே உயர்த்தி வாருங்கள். ஆயுதங்களை தலைகீழாகத் தொங்கும்படி வரவேண்டும். இந்த பிட் நோட்டீஸையும் கொண்டுவரவேண்டும் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த துண்டறிக்கைகள் இந்திய எல்லையில் வீசப்பட்டிருந்தன.
தொடக்கத்தில் ஜெர்மனி-இத்தாலி-ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளின் கூட்டணிக்கு சாதகமாக இருந்த இரண்டாம் உலகப் போர் பின்னர் நேச நாடுகளின் பக்கம் சாதகமானது. பிரிட்டன்-பிரான்ஸ் நாடுகளின் கைகள் ஓங்கின. சோவியத் ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலின் வியூகத்தால் ஜெர்மனியின் ஹிட்லர் படை தோல்வியடைந்தது. ஜப்பானில் அணுகுண்டுகளை வீசி அமெரிக்கா குலைநடுங்க வைத்தது. இந்திய எல்லையும் காப்பாற்றப்பட்டது.
இந்த வரலாற்றை அசைபோட்டபடி, டோக்கியோ நகருக்குள் வந்தபோது மாலை மயங்கி, இரவு இனிக்கத் தொடங்கியிருந்தது. எங்கெங்கும் வண்ணமயமான விளக்குகள். நண்பர் கமல் தன் பணிகளை முடித்து ஒரு வணிக வளாகத்தில் காத்திருந்தார். அங்கு சென்றோம். நிறைய உணவகங்கள் இருந்தன. அதில் இந்திய உணவகமும் தென்பட்டது. ரொட்டி, நான், சமோசா, சோலாபூரி போன்றவை இருந்தன. தமிழ்நாட்டின் தோசை வகைகளையும் பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அந்த உணவகத்திற்கு ஜப்பானில் வாழும் இந்தியர்கள் மட்டுமின்றி, ஜப்பானியர்களும் பொழுதுபோக்காக வந்து ருசித்து சாப்பிட்டனர்.
ஜப்பான் நாட்டு உணவு வகைகள் பெரும்பாலும் உடம்பில் கொழுப்பு சேராத வகையில், உடல் பெருக்காத வகையில் உள்ளன. எண்ணெய்யில் முக்கி எடுத்த இந்திய உணவு வகைகள் மீதான ஆர்வம் எதிர்காலத்தில் அவர்களை என்ன பாடுபடுத்துமோ என யோசித்தேன். ஏற்கனவே மேற்கத்திய பர்கர், பீட்சா எல்லாம் நுழைந்திருப்பதால் இதையும் எதிர்கொள்வார்கள் என்று கமல் சொன்னார். நாங்கள் சமோசா சாப்பிட்டுவிட்டு, அந்த வணிக வளாகத்தை சுற்றிப் பார்த்துவிட்டு நிஷி கசாய் பகுதிக்கு வந்தோம். இரவு அடர்ந்திருந்தது.
Wine and Dine என ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். ஜப்பான் பயணத்தில் கடைசி இரவு. கடைசி உணவு. விருப்பமான ஜப்பானிய உணவுகளை நண்பர்கள் ஆர்டர் செய்து கொண்டிருந்தனர். Chopstickக்கில் உணவை எடுத்து சாப்பிட வேண்டும் என்ற இலட்சியம் இன்னும் நிறைவேறாமல் இருப்பது நினைவுக்கு வந்தது. நண்பர் விஜய்யும் கமலும் பயிற்சி அளித்தனர். இரண்டு குச்சிகளில் ஒன்றைக் கட்டைவிரலால் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னொரு குச்சி சற்று அசைவதுபோல பயன்படுத்துங்கள். உங்களால் ஏதேனும் ஒரு குச்சியை அழுத்தமாகவும், மற்றொன்றை தளர்வாகவும் வைத்துக்கொண்டாலும் பரவாயில்லை. சாப்பிட வேண்டியப் பொருளை லாவமாகக் குச்சிகளிடையே கவ்வுவது போல எடுத்து வாய்க்கு கொண்டு செல்லுங்கள் என்றனர்.
முயற்சி திருவினையானது. இறைச்சித் துண்டைக் குச்சியால் எடுத்து வாய்க்குள் போட்டேன். அடுத்தடுத்த துண்டுகளும் அப்படித்தான். பீர் போல மகிழ்ச்சிப் பொங்கியது. சாப்பிட்டு முடித்தபின், மன நிறைவுடன் நிஷி கசாய் தெருக்களில் நடந்தேன். ஒரு மாடிக்கட்டடத்தில் இருந்த பப்-புக்கு செல்லலாம் என்றனர் நண்பர்கள். சாப்பிட்டு முடித்துவிட்டோமே என்றேன். “இது நமக்குத் தெரிந்த ஆப்பிரிக்க நண்பர் நடத்துகிற பப். அங்கே போய் தமிழ்ப் பாட்டு போடச் சொல்லலாம்” என்றனர். உற்சாகம் கூடியிருந்ததால் உடனே அந்த பப்புக்குச் சென்றோம்.
வாடிக்கையாளர்கள் பெரியளவில் இல்லை. நாற்காலிகள் எங்களுக்காகக் காலியாக இருந்தன. ஆப்பிரிக்க நண்பரும் பப்பில் பரிமாறும் பெண்ணும் இருந்தனர். தமிழ்ப்பாட்டு போடச் சொன்னோம். “யூடியூப் மூலம் நீங்களே கனெக்ட் பண்ணிக்குங்க” என்று ஆப்பிரிக்க நண்பர் சொன்னார்.
“எங்க தமிழ்ப்பாட்டில் நம்ம ஜப்பானைப் பாருங்க” என்பதுபோல இளையராஜா இசையில் கமல் நடித்த ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மம்மமோவ்.. அப்பப்போவ்.. மாயாஜாலமா” என்ற பாடலை காணொளியாக இசைத்தோம். 1985 ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சியின் கொள்ளை அழகு அந்தப் பாடலில் இடம்பெற்றிருப்பதை ஆப்பிரிக்க நண்பரிடம் சுட்டிக்காட்டினார்கள். அவருக்கு மொழி புரியாவிட்டாலும், காட்சிகளைக் கவனித்தார். அந்தப் பாட்டு முடிந்ததும், 1972 எக்ஸ்போவில் எடுக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின், ‘உலகம்.. அழகுக் கலைகளின் சுரங்கம்’ பாடலை இசைக்கச் செய்தோம்.
50 ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானின் அழகை, தொழில்நுட்ப வளர்ச்சியை, மக்களின் பண்பாட்டை தமிழ்நாடு படம் பிடித்து திரையிட்டிருப்பது ஆப்பிரிக்க நண்பருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒசாகா நகரில்தான் எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்றிருந்தது. அப்போதே மோனோ ரயில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதையும் அந்தப் பாடல் காட்சியில் பார்த்து வியந்தார் ஆப்பிரிக்க நண்பர். எங்கள் உற்சாகத்துக்கு அவரது பப் ஊறுகாயாகப் பயன்பட்டதற்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
கீழே வந்தபோது, ஊருக்கு எடுத்துப் போவதற்காக, ஒரு வணிக அங்காடியில் சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகளை வாங்கித் தந்தார் நண்பர் கமல். அங்கே சில மருந்துவகைகளும் இருந்தன. ஜப்பானிய மொழியில் எழுதியிருந்த ஒரு பாட்டிலை எடுத்துக் காட்டினார். “இது கல்லீரலைப் பாதுகாக்கும் மருந்து. இரவு நேரப் பார்ட்டிகளுக்கு முன்பாக இந்த மருந்தை சாப்பிடுவார்கள்” என்றார். நான் அவரிடம், “ஊருக்குப் போனால் என்ன பாட்டில் வாங்கி வந்தேன்னு நண்பர்கள் கேட்பார்கள். இந்த பாட்டிலைத் தந்துவிடலாம்” என்றேன். கமலும் விஜய்யும் புன்னகைத்தார்கள்.
அந்தக் கடைசி இரவு அத்தனை மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருந்தது.
“சரி.. ரூமுக்குப் போய் கொஞ்சம் ஓய்வெடுங்கள். காலையில் ஏர்போர்ட் புறப்படணும்” என்றார்கள். “நீங்களும் வாங்க.. ஒரு சின்ன உதவி” என்றேன்.
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: புத்தருக்குள் புகுந்தேன்! – 23
உதயசூரியன் நாடு : அவங்க தேர்தலை தெரிஞ்சுக்குவோமா? – 22
உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்! – 21
உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!-20
உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு 19!
உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது? = 18
உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!-17
உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1