கோவி.லெனின் Govi Lenin japan travel story 23
ஜப்பான் பயணப் பதிவுகள் – 23
புத்தர் உட்கார்ந்திருக்க, அந்த பிரம்மாண்டமான சிலைக்கு முன்பாக நின்றபடி, “உன்னைப் பார்ப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை” என்றேன் ஒரு பித்தனைப் போல. கண்களை மூடியபடியே புத்தன் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.
ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற புத்தர் சிலைகளில் கமாகுராவின் கோத்தோக்கு-இன் கோவிலில் உள்ள இந்த புத்தர் சிலை முதன்மையானது. உட்கார்ந்திருக்கும் நிலையில் உள்ள புத்தர் சிலைகளில் இதுவே பிரமிப்பூட்டக் கூடிய வகையில் 13 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டதாக உள்ளது. வெண்கலத்தால் ஆன இந்த சிலையின் எடை 93 டன். தனித்தனிப் பகுதிகளாக உருவாக்கி இணைத்திருக்கிறார்கள்.
13ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த சிலை, பின்னர் 15ஆம் நூற்றாண்டில் எற்பட்ட சுனாமியால் கோத்தோக்கு-இன் கோயில் பாதிக்கப்பட்டதால், புத்தர் வெட்டவெளியில் அமர்ந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அழகான டாய்சான் மலைப்பகுதியின் பின்னணியில் அமைதியாக அமர்ந்திருக்கும் புத்தரை என் மழலைப் பருவத்தில் முதன்முறையாகத் திரையில் பார்த்திருக்கிறேன். தஞ்சாவூரில் தகரக் கொட்டகை போட்ட ஒரு தியேட்டருக்கு, பாட்டி தன் இடுப்பில் சுமந்து சென்று, அம்மாவின் மடியில் உட்கார்ந்து, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் பார்த்தபோது, அந்த பிரம்மாண்ட புத்தர் வசீகரித்தார். அத்தனை சிறிய வயதில் பார்த்த அந்தப் படத்தில், புத்தரைப் போல மனதில் பதிந்த உருவங்கள் மேலும் சில உண்டு.
எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, இரண்டு வேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்கு இப்போது 52 வயது கடந்துவிட்டது. அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தபோதே எம்.ஜி.ஆர் 55 வயதைக் கடந்த வாலிபனாகத்தான் இருந்தார். விறுவிறுப்பானத் திரைக்கதைக் கொண்ட அந்தப் படத்தில், விஞ்ஞானி முருகன் என்பது அண்ணன் எம்.ஜி.ஆர். கதாபாத்திரம்.
ஒரு விபத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நாயகனையும் அவருக்குத் துணையாக இருக்கும் கதாநாயகியையும் நாடு நாடாகப் பாதுகாத்து அழைத்து வரவேண்டிய சூழல் வில்லன் விஞ்ஞானி பைரவன் கதாபாத்திரத்தில் நடித்த அசோகனுக்கு. அந்த நாடுகளில் எல்லாம் பின்தொடர்ந்து வருவார்கள் உளவாளி ராஜூ கேரக்டரில் நடித்த எம்.ஜி.ஆரும் அவரது காதலி சந்திரகலாவும் உதவியாளர் லதாவும்.
(இருவருமே தம்பி எம்.ஜி.ஆரைக் காதலித்து கனவு காண்பார்கள். டூயட் பாடுவார்கள். அண்ணன் எம்.ஜி.ஆருக்கும் இரண்டு டூயட் உண்டு. (அத்துடன் தாய்லாந்து நடிகை மேட்டா ரூங் ரீட்டா என்பவர் தம்பி எம்.ஜி.ஆரை நினைத்து கனவு காணும், பச்சைக் கிளி முத்துச்சரம் பாடலும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து) இத்தனையுமா அத்தனை சின்ன வயதில் மனதில் பதிந்தது என்று கேட்கக்கூடாது.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை மழலைப் பருவத்தில் பார்த்தபோது பதிந்தது புத்தர் சிலை. அதன்பின் விடலைப் பருவத்தில் தொடங்கி இளமைப் பருவத்தைக் கடக்கும் வரை பல முறை திரையரங்கில் பார்த்ததில் மனதை விட்டு நீங்காதவை மேலே சொன்ன காட்சிகள்.
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கடந்து, க்ளைமாக்ஸூக்கு முன்பாக அந்தப் படம் வந்து சேரும் நாடுதான் ஜப்பான். அதில் விஞ்ஞானி எம்.ஜி.ஆர் முதன்முதலாக பார்ப்பதும் கமாகுரா புத்தரைத்தான். பிரம்மாண்டமான புத்தரைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு லேசாக தலைச்சுற்றலும் அதிர்ச்சியும் ஏற்படும். பேதலித்த அவரது மனதை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடும். இது திரைப்படத்தின் காட்சி.
அது அப்படியே மழலைப் பருவத்தில் மனதில் பதிந்து, 20 முறைக்கு மேல் திரையில் பார்த்த புத்தர் சிலையை நேரில் பார்க்கும்போது ஒரு பரவசம் ஏற்படுவது இயல்புதானே!
அங்கேயே நின்றேன். அண்ணாந்து பார்த்தேன். சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தைத் தொட்டேன். முன்புறம் இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். மீண்டும் எழுந்து புத்தரை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். குமரி முனையில் கலைஞர் நிறுவிய அய்யன் திருவள்ளுவர் சிலையைத்தான் இதற்கு முன் அதிக பரவசத்துடன் பார்த்திருக்கிறேன். புத்தனும் வள்ளுவனும் மானுடம் போற்றிய மேதைகளல்லவா!
கர்நாடக மாநிலம் சிரவனபெலகுளா என்ற இடத்தில் அமைந்துள்ள கோமதீஸ்வரர் (பாகுபலி) சிலையைப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வினை பேரறிஞர் அண்ணா தன் தம்பிகளுக்கு எழுத்தோவியமாகப் படைத்திருப்பார். அந்த அண்ணாவின் தம்பிகளின் தம்பியான எனக்கு கமாகுரா புத்தர் பரவசத்தைத் தந்தார்.
சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். புத்தர் சிலையின் பிரம்மாண்ட முதுகில் ஜன்னல் வைத்து, அதன் கதவுகள் திறந்திருந்தன. ஆச்சரியத்துடன் நண்பர் விஜய்யிடம் கேட்டேன். “வாங்க… உள்ளே போய் பார்க்கலாம்” என்று சொல்லி மேலும் ஆச்சரியப்படுத்தினார்.
சிலையின் பக்கவாட்டில், பீடத்தின் கீழே ஒரு பாதை உள்ளது. அதன் வழியே சிலையின் உட்பகுதிக்குள் செல்வதற்குப் படிக்கட்டு இருந்தது. அதன் வழியே மேலே ஏறி புத்தரின் உடலுக்குள் புகுந்தோம். இதயப் பகுதியில் வெப்பம் அதிகமாக இருந்தது. அதைப் பலரும் புனிதமாகக் கருதுகிறார்கள். உலோகத்தின் தன்மை வெப்பத்தை அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. முதுகுப்புற ஜன்னல் காற்றோட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியே எதிரில் உள்ள மலைப்பகுதி கண்களைக் கவர்ந்தது. சிலையமைப்பு, அதன் தன்மை குறித்த சில குறிப்புகளும் உட்புறத்தில் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, வெளியே வந்தபோது, வெயில் குளிர்ச்சியாகத் தெரிந்தது.
புத்தர் கோவிலின் மற்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்தோம். புத்தர் சிலையின் காலடிக்கேற்ப வடிவமைத்திருந்த செருப்பு, மாணவர்கள் அளித்திருந்த காணிக்கைப் பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுற்றுலாத் தலங்களில் கண்களைக் கவரும் மற்றொரு இடம், கலைப்பொருட்கள் விற்பனையகம். அங்கே சென்று, புத்தர் சிலை, கீ-செயின், ஜப்பானிய பொம்மைகள் உள்ளிட்டவற்றை வாங்கினேன்.
கோவிலை விட்டு வெளியே வந்து தெருவில் நடந்தோம். புத்தரின் கண்கள் என் முதுகின் மீது உட்கார்ந்திருப்பது போல இருந்தது.
நாங்கள் நடந்து சென்ற தெருவில், சாமுராய் வீரர்கள் அணியும் உடைகள், பாரம்பரிய போர்க்கருவிகள் போன்றவை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ரசித்துப் பார்த்தேன். ஜப்பானின் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி விஜய்யிடம் கேட்டறிந்தேன்.
கமாகுரா கடற்கரை அருகே வந்திருந்தோம். மலைப்பகுதியை ஒட்டிய மணல்வெளியுடன் கூடிய கடற்கரை. நீர் சறுக்கு விளையாட்டுகளில் மக்கள் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அலைகளையும் அதில் மிதக்கும் படகுகளின் அசைவுகளையும் ரசித்தபடி சிறிதுநேரம் நடந்தோம்.
நன்றாகப் பசியெடுத்தது. அதே பகுதியில் இருந்த ஓர் உணவகத்தில் ஜப்பான், கொரிய, சீனா நாட்டு உணவு வகைகள் கிடைத்தன. ஜப்பானிய அரிசிச் சோற்றுடனான சாப்பாடும் இருந்தது. ஜப்பானியர்கள் வெறும் சோற்றை சாப்பிடுவார்கள். சூப்பைக் குடித்துக் கொள்வார்கள். இரண்டும் உள்ளே மிக்ஸ் ஆகிவிடும் போல. நம் பக்குவத்திற்கு ஏற்ற வகையில் பரிமாறப்பட்டவற்றைக் கலந்து சாப்பிட்டேன். விஜய் ரசித்து சிரித்தார்.
“ஜப்பானை விட்டுப் புறப்படுவதற்குள் chopstickக்கால் எடுத்து சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்னு நினைச்சேன்“ என்றேன்.
“நினைச்சதை இன்றிரவு முடிக்கலாம்” என்றார் விஜய்.
அந்த இரவுதான் இந்த ஜப்பான் பயணத்தின் கடைசி இரவு.
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு : அவங்க தேர்தலை தெரிஞ்சுக்குவோமா? – 22
உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்! – 21
உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!-20
உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு 19!
உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது? = 18
உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!-17
உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1