கோவி.லெனின் Govi Lenin japan travel story 21
ஜப்பான் பயணப் பதிவுகள் – 21
இரவின் மாயாஜாலத்தை அந்தப் பகுதி முழுவதும் காண முடிந்தது. மின்னி மின்னி அழைத்தன விளம்பரப் பலகைகள். எந்தத் தெருப் பக்கம் சென்றாலும் , “இந்த வழியா போனால் ரொம்ப டிராஃபிக்கா இருக்குமே?” என்றார் குன்றாளன். அவர் சொன்னது போல வாகனங்கள் நெருக்கடியடித்து நகர்ந்தன. மனிதர்கள் இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருப்பது போலத் தெரிந்தது. முழுக்க முழுக்க இரவு நேரப் பொழுது போக்குகளுக்காகவே இருக்கிறது ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஷின்ஜூக்குப் பகுதியின் கபுக்கிச்சோ தெரு.
குன்றாளன் தனக்கு இரவுப் பணி இருப்பதால் விடைப்பெற்றுக் கொண்டார். கமலுடன் நான் அந்தத் தெருவை அளந்தேன். ஏராளமான பப்கள், கோப்பையில் நுரைக்கும் பீர், அதிர வைக்கும் இசை, ஆடத் துடிக்கும் கால்கள், அதற்குத் தோதாக ஆணும் பெண்ணும் ஜோடி ஜோடியாக உள்ளே வந்தபடியே இருக்கிறார்கள்.
கொஞ்ச நேரம் ஆட்டம், கொஞ்சம் கொஞ்சமாக போதை, அரவணைப்புகள், ஆரத்தழுவல்கள், ஒரு சில முத்தங்கள் என பப்கள் அத்தனையும் நிரம்பித் ததும்பின.
ஷின்ஜூக்கு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடல் அலை போல மக்கள் வந்து கொண்டே இருந்தனர். கபுக்கிச்சோ தெருவில் எல்லா இரவுகளிலும் மதுரை சித்திரைத் திருவிழாக் கூட்டம்தான்.
இரவு நேர ஜப்பானின் உல்லாசத்தை சொட்டு விடாமல் விடியும் வரை பருகினாலும் தாகம் தீராது.
என் கண்களின் தாகத்தைத் தணிப்பதற்காக கபுக்கிச்சோ தெருவில் காத்திருந்தார் குறிஞ்சிசெல்வன். ஜப்பான் வாழ் தமிழர். ஹோட்டல் தொழிலில் கொடிக்கட்டிப் பறப்பவர். அரசியல் தலைவர்கள், சினிமாக்காரர்கள், தொழிலதிபர்கள் உள்பட தமிழ்நாட்டிலிருந்து ஜப்பானுக்கு வரும் பிரபலங்களுக்குத் இந்திய உணவு வகைகளை ருசி மாறாமல் தரக் கூடியவர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றபோது அவருக்கும் அவரது மனைவிக்கும் சுடச்சுட இட்லி, சாம்பார், சோறு, ரசம் எனப் பரிமாறியவர் குறிஞ்சிசெல்வன்தான். அவரை அறிந்தவர்கள் எல்லாரும் அவரை ‘குறிஞ்சி’ என்கிறார்கள். கமலக்கண்ணனும் அவரும் நல்ல நண்பர்கள். கபுக்கிச்சோ தெருவில் எங்களுக்காக அந்த இரவு நேரத்தில் குறிஞ்சி பூத்திருந்தது.
“இங்கே இருக்கிறதிலேயே ரொம்ப நல்ல நைட் க்ளப் ஒண்ணுல சொல்லி வச்சிருக்கேன். அங்கே போலாமா?” என்று கேட்டார் குறிஞ்சி. அதற்கு கமல், “இல்லை.. அவர் அப்படி சத்தமா இரைச்சலா இருக்கிற இடம் வேண்டாம்ங்குறாரு. இப்படியே ரோடு சைடு ரெஸ்டாராண்ட்டில் உட்கார்ந்து அழகை ரசிக்கலாம்னு சொல்றாரு” என்றதும் ஆச்சரியமாக விரிந்தது குறிஞ்சி.
“நைட் கிளப் போயிட்டு, அப்படியே நம்ம ரெஸ்டாரண்ட்டில் நல்லா சாப்பிடலாம்னு நினைச்சேன்” என்றார். “ஒன்லி ஜப்பான் ஃபுட்னு முடிவெடுத்துதான் அவர் வந்திருக்கிறார்” என்றார் கமல். குறிஞ்சி புன்னகைத்தார். “இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்றார்.
பரபரப்பாக மனிதர்கள் நடந்துபோய்க்கொண்டிருந்த நடைபாதையை ஒட்டி இருந்த ஒரு ரெஸ்டாரண்ட்டின் வெளிப்பகுதியில் எங்களுக்கான டைனிங் டேபிள் இருந்தது. குறிஞ்சியின் நண்பரான தமிழர் ஒருவரும் உடனிருந்தார். எங்கள் முன் ஓர் அடுப்பும் அதன்மீது சின்னதாக ஒரு தோசைக்கல்லும் வைக்கப்பட்டிருந்தது. குறிஞ்சியின் ஏற்பாடுதான் அது.
சுஷியில் தொடங்கி ஒவ்வொரு வகையான ஜப்பான் உணவையும் ருசிக்கத் தொடங்கினோம். ஜப்பான் வந்ததிலிருந்து சாப்பிட்டு வந்த சில உணவு வகைகளை கொஞ்சம் இந்தியன் டேஸ்ட்டுக்கு ஏற்றபடி அந்த தோசைக்கல்லில் சூடாக்கி, சில மசாலாக்களை சேர்த்து சுவையாகத் தந்தார் குறிஞ்சி. அவரும் ஹோட்டல் தொழிலில் இருப்பதால், அந்த ரெஸ்ட்டாரண்ட்காரர் ஸ்பெஷலான ஏற்பாட்டுக்கு அனுமதித்திருந்தார்.
குறிஞ்சியின் ஆப்பிரிக்க நண்பர் ஒருவர் வந்து ‘ஹாய்’ சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். உணவும் உற்சாகமுமாக பேசிக் கொண்டிருந்தோம்.
“இது என்ன தெரியுமா?” என்று எங்கள் முன் தட்டில் இருந்ததைக் காட்டிக் கேட்டார் குறிஞ்சி. வாயில் போட்டுப் பார்த்துவிட்டு, “சிக்கன்” என்றேன். சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்பதில் பெருமை வேறு.
“எப்படி இருக்கு?” என்றார். நல்ல சுவையாக இருந்ததைச் சொன்னேன்.
“சிக்கனில் இது எந்தப் பகுதி?” என்று அவர் கேட்டார். என்னால் சட்டென சொல்ல முடியவில்லை.
“நம்ம ஊரில் சிக்கன் பீஸ் போடும்போது, கடைக்காரர் எந்தப் பகுதியை முதலில் கழித்து கீழே தள்ளுகிறாரோ அதுதான் இது” என்றார் குறிஞ்சி.
கோழியை உரித்து, குடலை நீக்கிவிட்டு, கம்பியில் தொங்க விட்டபின், வாடிக்கையாளர் கேட்டதும் அதை எடுத்து, கடைக்காரர் முதலில் கழிப்பது, கோழியின் பின்பக்கத்தைத்தான்.
அதன்பிறகே கழுத்து, விங்ஸ் இதெல்லாம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப கடைக்காரர் கழிப்பார். கேட்காமலே, கழிக்கப்படுவது கோழியின் பின்பக்கம்தான்.
அந்தப் பகுதிதான் ரொம்பவும் சுவையாக எங்கள் முன் பரிமாறப்பட்டிருந்தது. “ஜப்பானில் எந்த ஹோட்டலில் கேட்டாலும் இது கிடைக்கும். நல்லா இருக்கும்” என்றார் குறிஞ்சி.
சிக்கனைத் தொடர்ந்து பீஃப், போர்க் என ஒவ்வொரு ஐட்டத்தையும் நல்ல டேஸ்ட்டில் கொடுத்தார். ஷின்ஜூக்குவின் பரபரப்பான அழகை ரசித்தபடியே உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தோம். ரெஸ்டாரண்ட்டில் வேலை செய்பவர்கள் ஆளுக்கொரு பீர் கோப்பையுடன் ஒவ்வொருவராக வந்து, ‘கம்ப்பாய்.. கம்ப்பாய்..’ என்று கோப்பையை உயர்த்திக் காட்டி சொல்லிவிட்டுப் போனார்கள். ‘சியர்ஸ்’ என்பதற்கான ஜப்பானியச் சொல் அது.
அவர்களின் கைகளிலிருந்து இருந்த கோப்பையில் நிறைந்திருந்த பீர், குறிஞ்சியின் அன்புப் பரிசு. எங்களுக்கு ஸ்பெஷலாக டைனிங் டேபிள் போட்டு கவனித்த ஹோட்டல் ஊழியர்களுக்கு அவர் தந்த சின்னப் பரிசு.
கொரோனா நேரத்தில் அத்தனை ரெஸ்டாரண்ட்டுகளும் மூடப்பட்டிருந்த நிலையில், ஹோட்டல் ஊழியர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் மாதந்தோறும் நல்ல அளவில் உதவித் தொகை வழங்கியதையும், கொரோனா காலத்திற்குப்பிறகு ஹோட்டல் தொழில் எப்படி இருக்கிறது என்பதையும் பேசிக் கொண்டிருந்தோம்.
தோளில் கிடாருடன் ஜப்பானிய இளைஞர் ஒருவர் வந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். தன்னிடமிருந்த ஒரு பேப்பரைக் காட்டி, இதில் நீங்கள் ஏதாவது ஒரு பாடலைச் சொன்னால் பாடுகிறேன் என்றார். எல்லாமே பிரபலமான ஆங்கிலப் பாட்டுகள்.
நான் அந்த இளைஞரிடம், “உங்களுக்குப் பிடித்த உங்கள் மொழியில் ஒரு பாட்டுப் பாடுங்க” என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அவருக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. “என்ன பாட்டு பாடுவது?” என்று தயங்கினார். “உங்களோட காதல் பற்றி, உங்க மேலே அன்பு காட்டுறவங்க பற்றி.. உங்க உணர்வோடு கலந்த பாட்டா இருக்கட்டும்” என்றேன்.
கிடாரிலிருந்து மெல்ல இசை கசிந்தது. அப்படியே சுருதி சேர்ந்தது. ஜப்பானிய மொழியில் பாடத் தொடங்கினார் கல்லூரி இளைஞர். ஒன்று, இரண்டு, மூன்று எனப் பாடல்களின் எண்ணிக்கை தொடர்ந்தது. நடைபாதையோரம் ஒரு மகிழ்வான இரவுப் பொழுதை உருவாக்கித் தந்த குறிஞ்சியிடம் கைக்குலுக்கி விடைபெற்றோம். விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது.
ஷின்ஜூக்கு கபுக்கிச்சோ தெருவில் உள்ள பப்களில் அதிரடி இசை முழங்கிக் கொண்டிருந்த அந்த இரவில், கல்லூரி இளைஞனின் காதல் குரல், கிடார் இசையுடன் இணைந்து பரபரப்பான அந்தத் தெருவெங்கும் காற்றில் கலந்து கொண்டிருந்தது. Govi Lenin japan travel story 21
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!-20
உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு 19!
உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது? = 18
உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!-17
உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1