Govi Lenin japan travel story 20

உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!

சிறப்புக் கட்டுரை

கோவி.லெனின் Govi Lenin japan travel story 20

ஜப்பான் பயணப் பதிவுகள் 20

மாலை நேர கடல் அலைகள் மனதுக்கு இதமாக இருந்தன. காற்று சில்லென்று இருந்தது. பசிபிக் பெருங்கடலின் அந்தப் பகுதிக்குப் பெயர் டோக்கியோ வளைகுடா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் உயரமானக் கட்டடங்கள் அந்தக் கடற்கரைப் பகுதியிலிருந்து கண்களை ஈர்த்தன.

நண்பர்கள் குன்றாளன், கமலக்கண்ணன் ஆகியோருடன் காரிலிருந்து இறங்கி டோக்கியோ பே எனப்படும் அந்த வளைகுடாவின் கடலலைகளை ரசிக்கத் தொடங்கினேன். கடலை அருகில் சென்று பார்ப்பதற்கும், உயரத்தில் நின்று கவனிப்பதற்கும் ஏற்றவாறு அந்த இடம் கட்டமைக்கப்பட்டிருந்தது. உணவகங்கள், ஓய்விடங்கள் ஆகியவையும் உண்டு. ஜப்பானிய ஜோடிகள் மட்டுமின்றி, பிற நாட்டு ஜோடி மானுடப் பறவைகளும் மாலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்திட டோக்கியோ பே வசதியாக இருப்பதை உணர முடிந்தது. மணல் இல்லாத மெரினா போல அது என் பார்வைக்குத் தெரிந்தது.

சூரியன் மேற்கே சாயும் பொழுதில் நண்பர்களுடன் படங்களை எடுத்துக் கொண்டு, எக்ஸ்பிரஸ்ஸோ காபியுடன் சிலுசிலு காற்று வாங்கிக் கொண்டு டோக்கியோ பே-யில் சிறிது நேரம் பொழுது போக்கினோம். பசிபிக் பெருங்கடலின் ஈரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையின் நினைவுகள் நனைந்தன.

கார் மீண்டும் புறப்பட்டது. சற்று நேரத்தில் தலைக்கு மேலே கடல். ஆம்.. டோக்கியோ-பே பகுதியில் கடலுக்கு மேலே போடப்பட்டிருக்கும் அற்புதமான பாலம், அப்படியே கீழே இறங்கி, கடலடி சுரங்கப்பாதையாக மாறியிருந்தது. ஏறத்தாழ ஒன்பதரை கிலோ மீட்டர் நீளத்திற்கு கடலுக்கடியில் சாலைப் போக்குவரத்து என்பது புதிய அனுபவத்தைத் தந்தது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அற்புதங்களில் ஒன்று டோக்கியோ பே சுரங்கப்பாதை.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து நெருக்கடி இருந்தபோதும், வாகனங்கள் அதிக நெரிசலுக்குள்ளாகாமல் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தன. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன, முழம் என்ன என்று நம் ஊரில் சொல்வார்கள். ஜப்பானில் தலைக்கு மேலே கடல் போய்க் கொண்டிருந்தது. சுரங்கப்பாதை வழியே கார் விரைந்து கொண்டிருந்தது. ஒன்பதரை கிலோ மீட்டர் பயணித்து மேலே வந்தபோது மீண்டும் வழக்கமான சாலைப்பயணம். ஹனிடா விமான நிலையத்தின் ரன்வே சாலைக்கு மேலே சென்று கொண்டிருந்தது. கடலுக்குக் கீழே கார் போவதும், காருக்கு மேலே உள்ள சாலையில் விமானம் ஓடுவதும் பரவசம்தான்.

டோக்கியோ நகரின் கட்டடங்கள் அனைத்தும் மின் விளக்கொளியில் கார்த்திகைத் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தன. அதை ரசித்தபடி தொடர்ந்த கார் பயணத்தில், கண்களுக்கு அடுத்த விருந்தாக சுமிதா ஆற்றில் வானவில் தெரிந்தது. டோக்கியோவின் முக்கிய ஆறான சுமிதா, டோக்கியோ வளைகுடாவில்தான் கடலுடன் கலக்கிறது. அந்த ஆற்றின் குறுக்கே வெள்ளை நிறத்திலான பாலத்தைப் பகல் பொழுதுகளில் பார்க்க முடியும். அதே பாலம் இரவே நேரத்தில் வானவில்லின் ஏழு நிறத்திலான விளக்கொளியில் மின்னும். அந்த விளக்குகள் சுமிதா ஆற்றின் நீரில் எதிரொளிக்கும் காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். அதனால்தான் வெள்ளை நிறப் பாலம், ரெயின்போ பிரிட்ஜ் என்று அழைக்கப்படுகிறது. அதையும் ரசித்தபடி, டோக்கியோ நகரத்தன் பல பகுதிகளிலும் பயணித்த கார் போய் நின்ற இடத்தை, கழுத்து சுளுக்கும்படி அண்ணாந்து பார்க்க வேண்டியிருந்தது. அந்த இடம், டோக்கியோ டவர்.

Govi Lenin japan travel story 20

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் டவர் போன்ற வடிவமைப்பைக் கொண்ட செக்கச் சிவந்த உயர்ந்த கோபுரம்தான் டோக்கியோ டவர். அது இரண்டாம் உலகப் போரின் பெரும் பாதிப்புகளுக்குப் பிறகு நிமிர்ந்து நின்ற ஜப்பானின் அடையாளம். ஹிட்லர்-முசோலினி ஆகியோரின் கூட்டணி அமைத்து இரண்டாம் உலகப் போரைக் கண்ட நாடு ஜப்பான். இங்கிலாந்து-அமெரிக்கா-ரஷ்யா ஆகிய நாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் ஜப்பான் இருந்தது. அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா ஜப்பான் மீது குறி வைத்துப் பாய்ந்தது. அதன் உச்சகட்ட தாக்குதல்தான், ஜப்பானின் முக்கிய நகரங்களான ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அமெரிக்க விமானப் படைகள் நடத்திய அணுகுண்டு தாக்குதல். இருபதாம் நூற்றாண்டில் உலகின் மிக மோசமான மனிதப் படுகொலைகளாக அவை இருந்தன.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் நாடு ஜெர்மனியின் ஹிட்லருடன், இத்தாலியின் முசோலியுடனும் கொண்டிருந்த கூட்டணியே சாட்சியானது. அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, ஜப்பானியப் படைகள் அமெரிக்காவிடம் சரணடைந்தன. கடைசி சரணடைதல் நடந்த இடம், டோக்கியா வளைகுடா பகுதிதான். அணுகுண்டு தாக்குதலின் கதிர்வீச்சுகள், அரை நூற்றாண்டு கடந்தும் ஜப்பானியர்களின் தலைமுறைகளைப் பாதித்தன. ஆனாலும், கடும் உழைப்பாளிகளான ஜப்பானியர்கள் அதிலிருந்து மீண்டனர். அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ந்தனர். பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக ஜப்பானைக் கட்டமைத்தனர். அத்தகைய கட்டமைப்பின் ஒரு வடிவம்தான் 1093 அடி உயரம் கொண்ட டோக்கியோ டவர்.

Govi Lenin japan travel story 20

1958ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட டோக்கியோ டவர் ஜப்பான் நாட்டின் வானொலி, தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு கோபுரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

கிட்டத்தட்ட 819 அடி உயரம் வரை லிஃப்ட்டில் சென்று, அங்கிருந்து டோக்கியோ நகரத்தைப் பார்த்து ரசிக்க முடியும். இரவு நேரம் என்பதால் டோக்கியோ நகரம் மின்னியது. கோபுரத்திலிருந்து அப்படியே சுற்றி வரும்போது, நாம் எந்த இடத்திலிருந்து நகரத்தைப் பார்க்கிறோமோ அந்தப் பகுதி பகல் நேரத்தில் எப்படி இருக்கும், இரவு நேரத்தில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் படங்களும் உண்டு. குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவுப் பண்டங்கள் எனப் பொழுது போக்குகளும் உண்டு.

தளத்தில் நடந்து செல்லும்போது ஓரிடத்தில் சதுர வடிவிலான கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அதன் வழியே பார்த்தால் காலுக்கு கீழே ஆகாயத்தின் ஊடாக டோக்கியோ நகரம் தெரிகிறது. 800 அடிக்கு மேல் உயரம். தாங்கிப் பிடிக்க எதுவும் இல்லாத அந்தக் கண்ணாடி மீது நின்றபடி, நகரத்தைக் கண்களால் பார்ப்பதும், தலை குனிந்து 800 அடிக்கு கீழே உள்ள நகரத்தை ரசிப்பதும் த்ரில்தான்.

கண்ணாடி மீது அடி எடுத்து வைத்தபோது, பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மென்ட் வீக்கு என்ற வடிவேலு போல கால்கள் வெடவெடத்தன. அடுத்த சில நிமிடங்களில் இயல்பாகிவிட்டது. அங்கு வந்த மற்ற பயணிகளிடம், எப்படி நிற்க வேண்டும் என்று நான் விளக்கியதைப் பார்த்து, குன்றாளனும் கமலக்கண்ணனும் புன்னகைத்தார்கள்.

Govi Lenin japan travel story 20

டோக்கியோ டவர் என்பது ஆயிரம் அடிகளுக்கு மேலான உயரத்தைக் கொண்ட கோபுரம் மட்டுமல்ல, அது ஜப்பானியர்களின் தன்னம்பிக்கையின் உயரம். இயற்கைப் பேரிடர்களையும் போர்ச் சூழல்களையும் எதிர்கொண்ட அவர்களின் வலிமையின் உயரம். அவர்கள் நாடு கண்ட வளர்ச்சியின் உயரம். அந்த உயரத்திலிருந்து டோக்கியோவை ரசித்துவிட்டு, கீழே இறங்கினோம்.

உழைக்க சளைக்காத ஜப்பானியர்களுக்கு உல்லாசம் மட்டும் குறைவா என்ன? டோக்கியோவின் இரவு நேர உல்லாசபுரிக்குள் நுழைந்தது கார்.

(விரியும் வரும் ஞாயிறு அன்று)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு

Govi Lenin japan travel story 20 Sea above the head and Sky below the feet

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.

உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு 19!

உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது? = 18

உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!-17

உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15

உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14

உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13

உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12

உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11

உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10

சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9

உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8

உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7

உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6

கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5

‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4

உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1

Govi Lenin japan travel story 20

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *