கோவி.லெனின் Govi Lenin Japan Travel Story 19
ஜப்பான் பயணப் பதிவுகள் 19
டோக்கியோவில் தமிழர்கள் தாய்மொழியை மறக்காமலும், ஜப்பானியத் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடியும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குடும்பமாக மகிழ்ந்திருப்பதைக் காண முடிந்தது. ரஜினி படங்கள் ஜப்பானியர்களை ஈர்த்ததன் பின்னணியை ரசித்துக் கேட்டுவிட்டு, இரவு உணவகத்திற்கு நண்பர் கமலக்கண்ணனுடன் வந்தேன். எழுத்தாளர் சாருவும் நண்பர் செந்திலும் முன்பே வந்திருந்தார்கள். அவர்களுடன் ஜப்பானியர்கள் இருவர். ஒருவர் ஆண். மற்றவர் பெண்.
ஆண் பெயர் ஒஷிதா. மனித உரிமை ஆர்வலர். அறிவியல் கண்டுபிடிப்புகளை மனிதகுல வளர்ச்சிக்குப் பயன்படுத்தும்போது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும். அதை மீறி, சில நிகழ்வுகளில் மனித உரிமை மீறல்கள் ஏற்படுவதை உலகம் முழுவதும் காண்கிறோம். அத்தகைய உரிமை மீறல்களிலிருந்து மானுடத்தைக் காப்பதற்காக புவியெங்கும் ஒலிக்கும் குரல்களில் ஜப்பானியக் குரலாக ஒலிக்கிறது ஒஷிதாவின் குரல்.
அவருடன் வந்திருந்த அம்மையார் பெயர், இனோஉவே. மிகவும் கலகலப்பாக பேசிய அவரும் மானுட நலனில் அக்கறை கொண்டு செயல்படுபவர். அத்துடன், கலைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
“இவங்க திருவையாறில் சங்கீதம் கத்துக்கிட்டவங்க” என்று இனோஉவேவை அறிமுகப்படுத்தினார் செந்தில். “ஆமாம்..” என்பது போல புன்னகைத்தார் இனோஉவே.
என் பெயரை சொல்லி நான் அறிமுகப்படுத்திக்கொண்டதும், ரஷ்ய நாட்டுப் பெயர் இந்தியாவில் எப்படி என்பது போலக் கேட்டார். “எங்க முதலமைச்சர் பெயர் ஸ்டாலின்” என்றேன். அதற்கு அவர், “ஆமாம்.. ஆமாம்.. எனக்குத் தெரியும். ஸ்டாலின்… கருணாநிதியின் மகன்” என்று அவர் சொன்னபோது சிலிர்த்தது.
அவரிடம், “நானும் கலைஞர் கருணாநிதியின் ஊர்க்காரன்தான்.. திருவாரூர்” என்றேன். இப்போது அவர் சிலிர்த்தார். காரணம், அவர் எந்த திருவையாறில் சங்கீதம் கற்றாரோ, அந்த திருவையாறுக்குப் புகழ் சேர்க்கும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜர் பிறந்த ஊர் திருவாரூர். அவர் மட்டுமல்ல, முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மற்ற இரண்டு கர்நாடக சங்கீத மூர்த்திகள் பிறந்த ஊரும் திருவாரூர்தான்.
இனோஉவே அம்மையாருக்கு திருவாரூர் என்ற பெயரைச் சொன்னதும் சிலிர்ப்பு ஏற்பட்டதற்கு காரணம் அவருக்கு கர்நாடக சங்கீதத்தில் இருந்த ஈடுபாடுதான். எனக்கோ கலைஞரின் தமிழ் மீது எப்போதும் மாறாத காதல் உண்டு. தமிழும் இசையும் பிரிக்க முடியாததல்லவா? சங்கீத மூர்த்தியை அறிந்தது போலவே முத்தமிழறிஞரையும் அவரது மகனையும் அவர் அறிந்திருந்தார்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் காலத்திற்கு முற்பட்டவர்கள் தமிழிசை மூவர் எனப்படும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர். கர்நாடக சங்கீதத்துக்காரர்கள் திருவாரூர் மூவர் என்றால், தமிழிசை ஏந்தல்கள் சீர்காழி மூவர் என அழைக்கப்படுகின்றனர். தமிழர்களின் இசை ஜப்பானியப் பெண்மணியையும் ஈர்த்திருக்கிறது. அம்மையாரின் கணவர் மிருதங்க வித்வான் என்பதையும் தெரிந்து கொண்டேன். இனோஉவேவின் இசை ஆர்வம், அதற்கானப் பயிற்சி ஆகியவை பற்றி சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
ஒஷிதாவும் இனோஉவேவும் விடைபெற்றுச் சென்ற பிறகு நண்பர்களுடனான உணவும் பேச்சும் தொடர்ந்தது. இந்தியாவைப் போன்ற இறுக்கமான சாதிக்கட்டமைப்புகள் ஜப்பானில் இல்லாவிட்டாலும், ஒரு சில ஒடுக்குமுறைகள் ஆங்காங்கே நீடிக்கின்றன. ஜப்பானிய மொழியில் ‘புராக்கு’ (Buraku) என்றால் கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறிய குடியிருப்பு என்று அர்த்தம். அந்தச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு, தூய்மைப் பணியையும், இறைச்சிக்காக மாடுகளை வெட்டித் தோலுரிக்கும் வேலையையும், அது தொடர்பான இன்னும் சில பணிகளையும் மேற்கொள்பவர்களை ‘புராக்குமின்’ (Burakumin) என்று சொல்லி, அவர்களைப் பொதுச் சமுதாயத்திலிருந்து விலக்கிப் பார்க்கும் நிலைமை ஜப்பானில் நிலவுடைமையாளர்களின் ஆதிக்கம் இருந்த காலத்தில் அதிகமாக இருந்தது.
இன்று, எவரையும் புராக்குமின் என அடையாளமிட்டு, புறக்கணிக்கக்கூடாது என்றும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்றும் ஜப்பான் அரசு நடைமுறைப்படுத்தியிருந்தாலும், திருமண உறவு முறைகள் என்று வரும்போது ஜப்பானியக் குடும்பங்களில் புறக்கணிப்புகள் இருக்கவே செய்கின்றன என்பதால் இது குறித்த விழிப்புணர்வும், உரிமைக் குரலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவர்களின் உரிமைக்கும் விடுதலைக்குமான இயக்கங்களும் செயல்படுகின்றன.
அத்தகைய இயக்கங்கள் நடத்திய நிகழ்வு ஒன்றில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்து கொண்டு சமூக நீதிப் போராட்ட வரலாற்றினை எடுத்துரைத்து, ஜப்பானியர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருக்கிறார். ஒடுக்குமுறை என்பது எந்த வகையில் இருந்தாலும், எந்த மண்ணில் இருந்தாலும், ஒடுக்கப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதுதான் திராவிடம்.
அக்டோபர் 1, 2023 ஞாயிறன்று காலை உணவுக்குப் பிறகு, நண்பர்கள் குன்றாளன், கமலக்கண்ணன் ஆகியோருடன் புறப்பட்டேன். “இன்றைக்கு டோக்கியோவை ஒரு ரவுண்டு வரப்போகிறோம்” என்றனர். தமிழரங்கம் விழா, கலைஞர் நூற்றாண்டு நிகழ்வு பற்றிப் பேசிக் கொண்டே பயணம் தொடர்ந்தது. டோக்கியோ சாலைகள் பகலில் முழு அழகு. இரவில் தனி அழகு.
Costco என்கிற சூப்பர்மார்க்கெட்டிற்குள் நுழைந்தோம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல அடுக்கு கார் பார்க்கிங் நிறைந்திருந்தது. எங்கே நிறுத்துவதற்கு இடம் உள்ளதோ அந்த இடத்தை அடையாளமிட்டுக் காட்டும் தொழில்நுட்ப வசதிகள் இருந்ததால், காரை நிறுத்திவிட்டு, அங்காடிக்குள் நுழைந்தோம். ஜப்பானுக்குள் அமெரிக்கா நுழைந்திருந்ததைப் பார்த்தோம். Costco என்பது அமெரிக்க நிறுவனம். ஜப்பானியர்களின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் மொத்த விற்பனை செய்யும் அங்காடி அது.
ஜப்பானியர்கள் விரும்பிச் சாப்பிடும் பச்சை மீன் உணவான சுஷி பல வகைகளில் நிறைந்திருந்தது. பீஃப், போர்க் என இறைச்சி வகைகளும் உண்டு. அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், துணிகள், அலங்காரப் பொருட்கள், மதுவகைகள், சாக்லேட்டுகள், இதர தின்பண்டங்கள் உள்ளிட்ட எல்லாமும் கிடைக்கிறது.
மொத்தமாக வாங்கும்போது விலை குறைவு என்பதால் ஒரு மாதத்திற்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொள்ள டோக்கியோவாசிகள் குவிந்திருந்தனர். பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்குப் பொழுதுபோகும் வகையில் பொம்மைகள், கார்ட்டூன்-அனிமேஷன் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் ஆகியவையும் பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.
பொருட்களை வாங்கியபிறகு, அதே அங்காடியில் உள்ள உணவு வளாகத்தில் கூட்டம் மொய்க்கிறது. பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவு வகைகளை ஜப்பானின் இளைய தலைமுறை ரொம்பவே விரும்புவதைப் பார்க்க முடிந்தது. நாங்களும் ஒரு ஃபேமிலி பீட்சா+ஜூஸூடன் மதிய உணவை முடித்தோம்.
கார் பயணம் தொடர்ந்தது. நகரத்தை ஒட்டியுள்ள ஒரு சில கிராமப்பகுதிகளைக் கடந்து சென்றது. மீண்டும் நகரப் பகுதிகளுக்கு வந்தபோது டோக்கியோவின் உயரமான கட்டிடங்கள் ஈர்த்தன. அழகான-இதமான மாலை நேரம். கண்ணுக்கு முன்னே பரந்து கிடந்தது பசிபிக் கடல்.
வா.. வா.. என்று அழைத்தன அலைகள்.
(விரியும்)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது? = 18
உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!-17
உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1
Govi Lenin Japan Travel Story 19