கடவுளின் கோபம் தான் இயற்கை சீற்றத்துக்குக் காரணமா?
சத்குரு
சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது மனித உயிர்களும் உடைமைகளும் பெரும் அழிவிற்கு உள்ளாகின்றன. இதற்கெல்லாம் கடவுளின் கோபமே காரணம் என ஒரு சாரார் சொல்கிறார்கள். இயற்கையின் கோரமுகம் என ஒருசிலர் வர்ணிக்கிறார்கள். ஆனால், சத்குருவின் பார்வையோ முற்றிலும் மாறுபட்டது; சிந்திக்க வைப்பது! இங்கே படித்தறியுங்கள்!
கேள்வி: “கடவுளின் கோபம் தான் இயற்கை சீற்றத்துக்குக் காரணமா?”
பூகம்பம் என்பது தினம் தோறும் பூமியில் எங்கோ நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நிலத்தில் பெரும்பாலான பகுதி தண்ணீருக்கு அடியில் இருப்பதால், நீங்கள் நேரடியாக அந்த பாதிப்பை அனுபவிப்பதில்லை அவ்வளவு தான்.
பூமி தன்னைத் தானே அவ்வப்போது சரி செய்து கொள்வதற்காக கைகால்களை நீட்டி சோம்பல் நெறிக்கிறது. பூமித்தாய் இப்படிச் செய்யாமல் நிறுத்தி விட்டால் வேறு பிளவுகள் நேர்ந்துவிடும்.
மனிதர்கள் நாம் பொறுப்பின்றி வதவதவென்று பெற்று நிரப்பிவிட்டோம். அது நம் தவறு. எந்த பூமியில் பிறந்தோமோ அந்த பூமியில் வாழ நாம் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அது தான் ஆபத்து. தினம் சூரியன் உதிப்பது இயல்பான ஒரு விஷயம். அதற்குத் தயாராக இல்லாமல் இருப்பவர்கள் சூரிய உதயமே வேண்டாம் என்று புலம்பினால், அது நியாயமா?
தமிழ்நாட்டில் சுனாமி தாக்கிய பகுதியில் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் நாங்கள் இருந்தோம். அங்கே நான் முதலில் கவனித்தது என்ன தெரியுமா? பசுக்களோ, கழுதைகளோ, மீன்களோ கூட அங்கே உயிரற்றுக் கிடக்கவில்லை. அந்த மிருகங்களுக்குக் கூட சுனாமி வருவது தெரிந்திருக்கிறது. மனிதனுக்குத் தெரியவில்லையென்றால், அது யார் தவறு?
சமுத்திரத்தின் மடியில் பூமி கொஞ்சம் புரண்டு படுக்கக் கூடாதா? கடலில் ஒரு பெரிய அலை வரக் கூடாதா?
கடல் அருகில் வாழ முடிவு செய்து விட்ட நாமல்லவா பெரிய அலைகளை எதிர்கொள்ளத் தயாராகியிருக்க வேண்டும்? அதை விடுத்து அதைக் கடவுளின் கோபம் என்று பேசுவது பொறுப்பற்றப் பேச்சு. உண்டியலில் காசு போட்டதற்காகவே கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார், போடாததற்காக இன்னொருவனை தண்டிக்கவும் மாட்டார்.
எதனால் எது நடக்கிறது என்று புரிந்து கொள்ளாமல், இது பண்ணினால் கடவுளுக்குக் கோபம் வருமா, அது பண்ணினால் சந்தோஷம் வருமா என்று உங்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் கடவுள் என்று சொல்பவர் தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும், படைப்புத் தொழிலை இதை விடச் சிறப்பாக செய்ய முடியாது என்கிற அளவுக்கு செய்து முடித்து விட்டாரல்லவா?
தேவையான புத்திசாலித்தனத்தையும் திறமையையும் உங்களுக்கு அளித்திருக்கிறார். அவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேன்மையாக்கிக் கொள்வது உங்கள் பொறுப்பல்லவா?
இயற்கையை வைத்து என்ன ஆதாயம் தேடலாம் என்பதை மட்டுமே பார்ப்பதை விடுத்து, அதன் எல்லா குணங்களையும் புரிந்து கொள்ள மனிதன் முயற்சி செய்யாத வரையில், பாதிப்புகள் இப்படித் தான் இருக்கும்.
சுனாமி, பூகம்பம் போன்றவை இயற்கையின் சீற்றமல்ல. இயற்கையின் மாற்றம். அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் கடவுளின் கோபமல்ல, மனிதனின் முட்டாள்தனம்.
கேள்வி: சுனாமி போன்ற பேரழிவுகள் ஏன் வருகின்றன?
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றுடனும் உங்களை முழுமையாகத் தொடர்பு கொண்டு பார்த்தீர்களென்றால், அதில் மிக, மிகச் சிறு பகுதியே எதிர்மறையான சக்தியாக இருப்பதை உணர்வீர்கள். மற்ற எல்லாமே அற்புதமான ஆக்கப்பூர்வமான சக்திதான்.
சுனாமியும் அப்படித்தான். 30 அடி உயரத்துக்கு அலை எழும்புவது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! சுனாமியால் தொட முடியாத தொலைவில் நீங்கள் இருந்து, ஒரு காலரியில் உட்கார்ந்து, அதை வேடிக்கை பார்க்கும் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்தால், அதை எவ்வளவு பிரமிப்புடன் பார்ப்பீர்கள்?
இயற்கை அவ்வப்போது இதுபோல் செய்து கொண்டுதான் இருக்கும். சுனாமி ஏன் எதிர்மறை ஆனது? குறுக்கில் சில மனித உயிர்கள் வந்ததால். பல மனிதர்களை இழக்க நேரிட்டதால்.
சுனாமி என்பது பேரழிவு அல்ல. அதன் பாதையில் இருந்த மனிதர்களும், அவர்களுடைய பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டதுதான் பேரழிவு.
சுனாமியைப் பேரழிவு என்று சொல்லி துக்கம் கொண்டாடுவதை விடுத்து, இயற்கை இப்படி தன் பலத்தைக் காட்டும்போதெல்லாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…..
சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7
“திமுக ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி”: ஆளுநருக்கு முதல்வர் பதில்!