நா.மணி, வே. சிவசங்கர்
தமிழ்நாட்டின் உயர் கல்வியில், ‘பொதுப் பாடத்திட்டம்’ என்ற நிகழ்வு, பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அநேகமாக, அனைத்து ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், கல்வி செயல்பாட்டாளர்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், என அனைவரும் இதனை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
2 /8/ 23 அன்று, உயர் கல்வித்துறை அமைச்சர் நடத்திய கல்லூரி முதல்வர்களின் கூட்டத்தில், சில ஆதரவு குரல்கள் எழுந்தன. அவற்றில் எத்தனை இயல்பானது, எத்தனை வலிந்து அளிக்கப்பட்ட வாக்குமூலம் என கண்டறிவது கடினம்.
உயர் கல்வியில் பொது பாடத்திட்ட முரண்கள், சச்சரவுகள், விவாதங்கள், விமர்சனங்கள் வழியே, குடிமைச் சமூகம் இரண்டு அவதானிப்புகளுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.
ஒன்று, உயர்கல்வி விசயத்தில், தற்போதைய அரசு ஏதோ வேண்டாததை செய்கிறது என்றாவதாக அபிப்ராயம் உருவாகலாம்.இரண்டு, பொது பாடத்திட்ட கல்வி என்பது உயர் கல்வி தரத்தைக் குறைக்கும். மூன்றாவதாக , திமுக அரசு தேசிய கல்விக் கொள்கையை அடியொட்டி நகரத் தொடங்கியிருக்கிறது எனக் கருத இடமளிக்கும்.
உயர் கல்வியில், பொதுப் பாடத்திட்ட அமலாக்கத்தின் நோக்கம் என்ன? எதிர்ப்பின் அடிப்படை என்ன? இவற்றின் உண்மைகளும் எதார்த்தங்களும் என்ன? என்பதை விரிவாக அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
பொது பாடத்திட்டத்தின் நோக்கம்
உயர் கல்வியின் வளர்ச்சிப் போக்கில் உருவான எண்ணற்ற பாடப்பிரிவுகள், அதன் அடிப்படையில் எண்ணற்ற பட்டப் படிப்புகள் வந்துவிட்டது. மத்திய தேர்வாணையம், பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகள்,தமிழ்நாடு தேர்வாணையம் வழியாகவும்,தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாகவும் , அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு, பட்டப் படிப்பில் இணைத்தன்மை சான்றுகள் பெற வேண்டும்.
பட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், இணைத் தன்மை கேட்டு விண்ணப்பிப்போரும் , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில், இணைத்தன்மை கோரி,1247 மனுக்கள், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 982 மனுக்களின் மீது முடிவெடுக்க, 20 முறை இணைத்தன்மை வழங்கும் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களில் 560 மனுதாரர்களின் பட்டம் இணைத்தன்மை உடையவை என்றும், 422 மனுதாரர்களின் பட்டங்கள் இணைத்தன்மை அற்றவை என்றும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த 422 பேரின் எதிர்காலம் என்ன? அவர்கள் வாழ்வு வழி மறிக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு?
பட்டங்களின் வகை, தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்க, அதிகரிக்க, இணைத்தன்மை கோரும் பட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். சில பட்டப் படிப்புகள், 16 விழுக்காடு கூட இணைத்தன்மை இல்லை என்கிறது தமிழ்நாடு உயர் கல்வி மன்றம்.
அதேபோல், பி.காம், பட்டப் பிரிவில் மட்டும், 39 பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு இடையே இணைத்தன்மை கொடுப்பது எப்படி சாத்தியம்? பி.காம், ஜிஎஸ்டி என்றொரு பட்டம். இதனை, பொது வணிகவியல் பட்டத்திற்கு இணையானது என்று எப்படி கூற இயலும்? எனவே, உயர் கல்வியில் பொது பாடத்திட்டம் என்பது , உயர் கல்வி சந்திக்கும் சிக்கல்களில் ஒன்று. அதுவே, சட்ட மன்றம் வழியே பொது பாடத்திட்டமாக ஆக்கம் பெற்றுள்ளது. அரசு தீர்வு காண வேண்டிய முக்கிய சிக்கல்களில் ஒன்று.
உயர் கல்வியில் இடைவிலகல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் மட்டுமல்ல, பெருவாரியான கட்டணக் கல்லூரிகளில் படிப்பது உழைக்கும் மக்களின் குழந்தைகள். தொழில், வேலை வருமானம் ஆகியவற்றின் தேவை கருதி, இடம்பெயரும் தன்மை கொண்டவர்கள் பலர்.
முதலாம் ஆண்டு சேர்ந்தது முதல் இவர்களது இடைநிற்றல் தொடங்கி விடுகிறது. இந்தச் சூழலில், தங்கள் பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அல்லது, விடுதியில் விட்டுச் செல்ல வேண்டும் .
இதற்கு மாதம் ஐந்தாயிரம் முதல் 7000 வரை பணம் வேண்டும். அரசுக் கல்லூரி மாணவர் விடுதிகளில் சொற்ப இடங்களே உள்ளன. அவையும், ஆண்டின் துவக்கத்திலேயே நிரப்பப்பட்டு விடும். அதிலும் பெண் குழந்தைகளின் நிலைமை இன்னமும் சிக்கல். சுருங்கக் கூறின் , சேர்ந்த கல்லூரியில் பட்டப் படிப்பை தொடர முடியாத போது, படிப்பை இடை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இத்தகைய கட்டாய இடை விலகலை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. இதைத் தாண்டி, வேறுபல காரணங்களுக்காக ஓரிடம் விட்டு ஓரிடம் செல்வோருக்கு சிரமம் இன்றி படிப்பைத் தொடர வழிவகை வேண்டும். இதற்காக பொதுப் பாடத்திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது என்ற அரசின் கூற்றில் பொருள் இருக்கிறது
பொது பாடத்திட்ட எதிர்ப்பின் அடிப்படைகள்
1)பல்கலைக்கழகங்கள் அதிலும் குறிப்பாக, தன்னாட்சி கல்லூரிகளின் அடிப்படை அம்சமே, அவை தனக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம். இந்த சுதந்திரம், பொருளற்றுப் போகிறது. அங்கு உருவாக்கப்பட்ட பாடத்திட்ட குழுக்கள், கல்விக் குழுக்கள் பயனற்று போகிறது.
2)பொது பாடத்திட்டம் என்ற கறார் தன்மையால், மாணவர்களின் திறன் குறைகிறது.
3)வேலையின்மை அதிகரிக்கிறது.
4)கல்வி நிறுவனங்களோடும் ஆசிரியர் சங்கங்களோடும் ஆசிரியர்களோடு எந்த விவாதமும் இதுகுறித்து நடக்கவில்லை.
5) ஒரே பாடத்திட்டம் என்பது, கல்வி நிறுவனங்களுக்கு வெளியே பதிப்பு சந்தையில், ஒரு சிலர் மட்டுமே கோலோச்சி லாபமீட்டும் சூழல் ஏற்படும்.
6) பொது பாட திட்டம் வடிவம் மிக மோசமாக உள்ளது.
7) உலக அளவில் ஏற்படும் வளர்ச்சியை உட்படுத்திக் கொள்ள வழிவகை இல்லை.
8)இப்பாடத்திட்டத்தை அமுல்படுத்த போதுமான கால அவகாசம் இல்லை.
9)ஒரே நாடு, ஒரே பாட திட்டம் என்ற மத்தியில் ஆளும், அரசின் கொள்கையை நிலைநாட்டும் கருவியாக அமைந்துள்ளது.
கேள்வியும் பதிலும்
இந்தக் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் விதமாக, 2 /8 /23 அன்று, உயர் கல்வித்துறை அமைச்சர் தன்னாட்சி கல்லூரி முதல்வர்களின் கூட்டத்தை கூட்டினார்.அந்த கூட்டத்திலும் அதற்கு முந்தைய சுற்றறிக்கை வாயிலாகவும், உயர் கல்வித் துறை அமைச்சர் சில விசயங்களை தெளிவுபடுத்தி உள்ளார்.
அவை, 1)பொது பாடத்திட்டம் 5 பகுதிகளை கொண்டது. அதில் தமிழ், ஆங்கிலம், ஆகிய மொழிப்பாடங்கள். 2) முக்கிய மற்றும் விருப்பப் பாடங்கள். 3) திறன் மேம்பாட்டு பாடங்கள். 4) மதிப்பு கூட்டல் கல்வி. இவற்றில், முக்கிய பாடத்திட்டத்தில் 75 விழுக்காடு ஒரே மாதிரி பொதுத்தன்மை பேணப்பட்டால் போதும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படாது. ஆசிரியர்களின் பணிநிலை, பணி சுமை, பாதுகாப்பு ஆகியவற்றில் எந்தப் பாதிப்பும் இருக்காது. தன்னாட்சி கல்லூரிகளில் மதிப்பீட்டு முறைகளை பின்பற்றிக் கொள்ளலாம் என, அரசு உறுதி அளித்துள்ளது.
பொது பாடத்திட்ட எதிர்ப்பை ஒட்டி எழும் கேள்விகள்
தன்னாட்சி என்னும் சிக்கல்
‘பொதுப்பாடத் திட்டம்’ என்ற பேச்சு தொடங்கியதும், தன்னாட்சி கல்லூரிகள் பாடதிட்டம் வடிவமைக்கும் சுதந்திரம் பறி போய்விட்டது எனப் பதறுகிறது. இனி பாடதிட்ட குழுக்களின் பணி என்ன? கல்வி குழுவிற்கு கல்லூரியில் என்ன வேலை? என்ற கேள்விகள் சரமாரியாக ஒலிக்கிறது.
தமிழ்நாட்டில்,ஒரே ஒரு சென்னை பல்கலைக்கழகம் இருந்த போது, பாடத்திட்ட குழு, கல்வி குழு, தனித்துவம் என்ற விஷயங்களுக்கு பொருள் இருந்தது. வட தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம். தென்தமிழ் நாட்டிற்கு ‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்’ என வந்தபோது, அப்போதும் மேற்படி குழுக்களுக்கு பொருள் இருந்தது. மண்டலத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் என்று விரிவடைந்தது.
அப்பொழுதும் கூட தன்னாட்சி என்ற சொல்லுக்கு பொருள் இருந்தது. தன்னாட்சி கல்லூரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தபோது, தனித்துவம் தனி பாடத்திட்டம் என்ற பொருள் இருந்தது. இன்று, ஒரே நகரத்தில், பல பல்கலைக்கழகங்கள், பல தன்னாட்சி கல்லூரிகள் என உருவான பிறகு, தன்னாட்சியை பயன்படுத்தி தனித்துவமான பாடத்திட்டம் வரையறை செய்வதற்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது.
அப்படியே தனித்துவத்துடன் இயங்கி வேண்டியுள்ளது என்றாலும், 25 முதல் 30 விழுக்காட்டிற்கு மேலான பாடதிட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் சுதந்திரம் தாண்டிய கூடுதல் சுதந்திரத்திற்கு தேவையென்ன? எங்கோ ஒரு பல்கலைக்கழகம் என்றிருந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் நிச்சயமாக வேறுபாடு இருக்கிறது. ஒரே நகரில் 10 தன்னாட்சி கல்லூரிகள், 5 பல்கலைக்கழங்கள். அனைத்துக்கும் தனித்துவமான பாடதிட்டம். ஆனால் ஒரே பட்டம், என்ற தன்மைக்கு பொருள் இருக்கிறதா என ஆழமாக சிந்திக்க வேண்டும்.
தனித்துவம் பெருகியதால் பட்டங்கள் பெருகியதா, பணத்தை பெருக்க பட்டங்கள் பெருகியதா?
காலத்தின் வளர்ச்சிப் போக்கில், கல்வி வளர்ச்சியால், பட்டங்கள் பெருக்கமடைந்ததா, அல்லது, வணிக மையத்தால் பட்டங்கள் பெருகியதா ?என்று கேள்வியை உரக்க கேட்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில்,மொத்தம் 1581 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில், 80 விழுக்காடு கல்லூரிகள் அதாவது, 1249 கட்டணக் கல்லூரிகள் அல்லது, சுயநிதி கல்லூரிகள். 170 அரசுக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள், இவை இரண்டும், மொத்த கலை அறிவியல் கல்லூரிகளில் 20 விழுக்காடு .சுயநிதி கல்லூரிகள் வருகைக்குப் பிறகுதான் ஒரே வகையான இருந்த பி.காம் பட்டப்படிப்பு 39 வகையான பிகாம் பட்டப்படிப்புகளாக அவதாரம் எடுத்துள்ளது .
வணிகவியல் பாடம் விரிவடைந்திருக்கலாம். ஆனால்,39 வகையான பட்ட வகுப்புகளாக வளரும் அளவுக்கு வணிகவியல் விரிவடைந்துள்ளதா ? என்ற கேள்விக்கு நிச்சயம் பதில் இல்லை.
எப்படி இந்த 39 வகையான பட்டப்படிப்புகள் உருவாயின? 12 ஆம் வகுப்பில், வணிகவியலோடு கூடிய கலை புலத் தேர்வு செய்யும் ஒருவருக்கு, பட்டப்படிப்பில் முதன்மை தேர்வு பி காம் பாடமாக அமைகிறது. ஆனால், ஒவ்வொரு கல்லூரியிலும் பி.காம் பட்டத்திற்கு 60 இடங்களே உள்ளன.
இதனைத் தாண்டிய தேவை, சந்தை மதிப்பு வணிகவியல் பாடத்திற்கு இருக்கிறது. பி.காம் பட்ட வகுப்பில் கூடுதலாக மேலும் ஒரு வகுப்பிற்கு, அதாவது 60 மாணவர்களை சேர்த்துக் கொள்ள முதலில் அனுமதி பெற்றனர். அதுவும் போதவில்லை என்று நிலை வந்தது. பி.காம் கேட்டு அலைமோதும் கூட்டத்தில், தங்கள் கல்லூரியை நாடி வரும் மாணவர்களை தாங்களே தக்கவைத்துக் கொள்ள திட்டம் தீட்டினர்.புதிய புதிய பி.காம் பட்டங்கள் உருவாயின. நுட்பமான இந்த வணிகமயத்திற்கு
பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் வழங்கி துணை போனது. அதனையும் தாண்டி தேவை அதே பி.காம் பாடத்திற்கு இருக்கிறது. எனவே, புதிய புதிய பி.காம் பட்டப் படிப்புகளை கட்டமைப்பதில் கல்லூரி நிர்வாகங்கள் கவனம் செலுத்தின. எம்பிஏ என்ற ஒரு முதுகலைப் பட்டம் தேவை காலத்தின் தேவை. ஆனால் அப்படியான ஒரு பட்டத்திற்கான தேவை, அதன் பயன்பாடு, இளங்கலை பட்டப்படிப்பில் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி. இளம் வணிக மேலாண்மை என்பது சந்தையின் தேவை. பாடத்தின் தேவை அல்ல. பி. காம் கேட்டு வரும் மாணவர்களின் சந்தையை ஆற்றுப்படுத்திக் கொள்ள பி பி ஏ என்ற பட்டத்தை உருவாக்கினர். இப்படி,தேடி வரும் மாணவர்களை திருப்பி அனுப்பாமல் பணத்தை கறக்க பட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.
இப்படி, வணிகவியல் பட்டங்கள், வளர்ந்து, வளர்ந்து, இன்றைக்கு 39 வகையான பட்டங்களாக உருவெடுத்து நிற்கிறது. இணைத்தன்மை தருவது பெரும் சவாலாக மாறி இருக்கிறது. கணினி அறிவியல் பாடமும் இது போன்ற தன்மை உடையது. தேவை, கவர்ச்சி, சந்தை மதிப்பு ஆகியவற்றின் காரணமாக, பல, பல, புதிய பட்ட படிப்புகளை கணினி அறிவியல் உருவாக்கி மாணவர்களை சேர்த்து காசு பார்த்து வருகின்றனர்.
தனக்கு ஒரு பட்டம் வேண்டும். அது வேலைவாய்ப்பு சார்ந்ததாக, இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, கவர்ச்சி போர்த்தப்பட்ட சந்தையில், இந்த பாடங்கள் உற்பத்தியாகிறது. படிப்பு முடிந்து, தன்னிடம் கற்பிதம் செய்து கூறியது போல, தனது பட்டத்திற்கு மதிப்பில்லை என்று தெரியவருகிறது.
நிரந்தர வேலை ஒன்றை தேடிக் கொள்ள, கடின உழைப்பில், போட்டி தேர்வுகளை எழுதி,வெற்றி பெற்று வேலை கையில் கிடைக்கும் சூழலில், இணைத்தன்மை தேவையாகிறது .
இணைத்தன்மை இல்லாத பாடங்களை படித்தவர்கள், இனித் தங்கள் கனவு முற்றிலும் களைந்து, வாழ்க்கை வீணாகிறது என்று தெரியும் போது அவர்களின் நிலை என்னவாக இருக்கும்? பொதுத்தன்மை கூடி தனித்தன்மை குறைந்தால் உயர் கல்வியை சந்தைப்படுத்த முடியாது என்ற அச்சமும் இதற்கு முக்கிய காரணம்.
தொடர்ச்சி நாளை
கட்டுரையாளர்கள் குறிப்பு
நா.மணி,
பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
வே. சிவசங்கர்,
இணைப்பேராசியர் பொருளியல் துறை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் புதுச்சேரி