நா.மணி, வே. சிவசங்கர்
பாடத்திட்ட சுதந்திரமும் தன்னாட்சியும்
தன்னாட்சியின் மையப் பொருளே, பாடத்திட்டத்தை வடிவமைத்து கொள்ளும் சுதந்திரத்தில் தான் இருக்கிறது. இதனை முதன்மைப் படுத்தி, அவை தன்னாட்சியை பெற்றனவா, என்று வலுவான சந்தேகத்தை உருவாக்கும் வண்ணம் பல கல்லூரிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தன்னாட்சி அந்தஸ்தை பெற்றால், பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து கூடுதல் நிதி பெறலாம். தேர்வு கட்டண உபரியை மடைமாற்றம் செய்து கொள்ளலாம். நேர்முக மறைமுக கட்டணங்களை அதிகரிக்கலாம்.
தனித்துவம் என விளம்பரம் செய்து மாணவர் எண்ணிக்கையை கூட்டலாம். அக,புற மதிப்பெண் வழங்குவதை அதிகரிப்பது. தேர்ச்சியை எளிதாக்குவது. இந்த பிம்பத்தை காட்டி மேலும் மாணவர்களை தன்பால் இழுப்பது. கல்லூரியிலேயே விடைத்தாள் திருத்தம், அகமதிப்பீடு ஆகியவற்றை முன் வைத்து கல்லூரி வளாகத்தில் ஜனநாயக போராட்டங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது போன்றவற்றுக்கும் தன்னாட்சி அந்தஸ்து பயன்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அரசு “தன்னாட்சி கல்லூரிகள், தங்களுக்கு தேவையான கட்டணங்களை தாங்களே தீர்மானித்து கொள்ளலாம்” என்று படித்தவர்கள், மேல்தட்டு மக்கள், அரசு ஊழியர்கள், கல்வித் துறையை சார்ந்தவர்கள் எனப் பலரும் நம்புகின்றனர். அதேசமயம் தனித்துவம் பேணும், தன்னாட்சியை பயன்படுத்தி மாணவர்கள் தரத்தையும் திறனையும் மேம்படுத்தும் கல்லூரிகள் இருக்கவே செய்கின்றன. அவை எண்ணிக்கையில் சிலவாக உள்ளன.
மிகச் சுருக்கமாக, தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். தங்கள் நோக்கங்களுக்கு தன்னாட்சியை பயன்படுத்திக் கொள்ளும் கல்லூரிகள். தன்னாட்சியின் விழுமியங்களை மலினமாக்கி வரும் கல்லூரிகள். தன்னாட்சியை கருவியாக பயன்படுத்தி சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவையை வழங்கி வரும் கல்லூரிகள். இதில் நாம் கடைசியாக வரையறுக்கும் கல்லூரிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவு என்பது சொல்லாமலே விளங்கும்.
உலகமயமாக்கல் பார்வையில் தன்னாட்சி
உயர் கல்வியின் தரத்தை உயர்த்த அல்லது பாடத்திட்ட சுதந்திரத்தை கல்லூரிகளுக்கு வழங்கவே மைய அரசு தன்னாட்சி அந்தஸ்தை அதிக எண்ணிக்கையில் வழங்கியதா ? அரசின் உண்மையான நோக்கம் என்ன? என்பதும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
உலகமயமாக்கலில் கல்வி ஒரு பண்டமாக மாற்றப்பட்ட பிறகு, அதனை மக்கள் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளவும், உயர்கல்வி வழங்கும் பொறுப்பை குறைத்துக் கொள்ளவுமே தன்னாட்சி அந்தஸ்தை ஊக்கம் ஊட்டியது. முதல் கட்டமாக தன்னாட்சி அந்தஸ்தை வழங்குதல் அடுத்த கட்டமாக அவற்றை தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றுதல். இறுதியாக பல்கலைக்கழங்கள் தங்களுக்கான நிதியை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தனது நிதிப் பொறுப்பிலிருந்து கழட்டி விடுதல்.
தற்போதைய புதிய தேசிய கல்விக் கொள்கை அதன் அடுத்த கட்ட நீட்சியாக எல்லாக் கல்லூரிகளையும் பட்டம் வழங்கும் தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறது. தன்னாட்சி கல்லூரிகளுக்கான பெருவாரியான நிதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியின் இன்றைய சிக்கல்களுக்கு பொது பாடத்திட்டம் தீர்வாகுமா?
வணிக நோக்கும், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களின் பாடப் பிரிவுகளிடையே இணைத் தன்மையின் (Equivalency ) தேவையை உந்தித் தள்ளுகிறது. அத்தகைய இணைத் தன்மையை உருவாக்க தமிழ் நாடு உயர் கல்வி மன்றம் வழியாக மாநிலம் முழுவதும் பொது பாடத்திட்டத்தை நிறுவுதல் மட்டுமே தீர்வா? என்பதை பரிசீலனை செய்வோம்.
உயர் கல்வியில் பல்கலைக்கழகம் என்ற அமைப்புக்கு மேலான ஓர் அமைப்பை அல்லது அதிகாரம் படைத்த அமைப்பை உருவாக்க முனைந்தால், முதலில் ‘பல்கலைக்கழகம்’ என்பதன் பொருளே திரிந்து விடும். அதன் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். தன்னாட்சி அந்தஸ்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழகங்கள் வழியாகவே தீர்வுகள் தேட வேண்டும். “தன்னாட்சி கல்லூரிகள் தவறிழைத்து வருகிறது. தன்னாட்சி அந்தஸ்தை சரியாக பயன்படுத்தவில்லை.
ஒரு பாடத்தில் 16 விழுக்காடு கூட இணைத்தன்மை இல்லை” என்ற காரணங்களை முன்வைத்து தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி அந்தஸ்தை குறைப்பது, அந்தப் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு எந்தப் பங்கும் இன்றி மொத்த அதிகாரத்தையும் உயர் கல்வி மன்றம் போன்ற ஒற்றை அமைப்பிடம் மையப்படுத்துவது, உயர் கல்வியின் நலனுக்கு உகந்தது அல்ல. உயர் கல்வியில் மட்டுமல்ல, எந்த வகை செயல்பாட்டிலும் மையப்படுத்தல் தீர்வல்ல.
எந்த இரண்டு பிரச்சினைகளை முன் வைத்து, பொது பாடத்திட்டம் என்ற ஒன்றை பல்கலைக்கழகங்களுக்கு வெளியே ஓர் அமைப்பின் மூலம் அரசு உந்தித் தள்ள முயல்கிறதோ அந்த முயற்சியை முதலில் கைவிட வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் “பாடத்திட்ட வளர்ச்சி குழு” என்று ஒரு குழு இருக்கிறது. அப்படி ஓர் அமைப்பு இருக்கிறது என்பதே தெரியாது இருக்கும் நிலையை மாற்றி, அதற்கு உயிரூட்ட வேண்டும். ஒவ்வொரு பாட வகுப்பிற்கும் ஏற்ற பாடங்களை அவை வரையறுக்க வேண்டும். அவற்றிலிருந்து, ஒரு பட்டப் படிப்புக்கான பாடங்களை தேர்வு செய்யும் உரிமையை அந்தந்த தன்னாட்சி கல்லூரிகளுக்கே விட்டு விடலாம்.
உதாரணமாக, பி.ஏ பொருளாதாரம் என்று எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு பல்கலைக்கழகமும், தனது பாடத்திட்ட வளர்ச்சி குழு இணையதளத்தில், குறைந்த பட்சம், என்னென்ன பாடங்களை படித்திருந்தால் அவருக்கு பி.ஏ பட்டம் வழங்கலாம் என்ற பரிந்துரையை முன் வைக்கலாம். அதில் பல கோணங்களில், பல பரிமாணங்களில் பாடங்களை பட்டியல் இடலாம். அதற்கு மேற்பட்ட புதிய உத்திகள் ஒரு கல்லூரிக்கு இருக்கும் எனில் அதற்கும் இடமளிக்கலாம். இதற்காக பல்கலைக்கழக பாடத்திட்ட குழுவில் அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது இதர பல்கலைக்கழகங்களில் நிபுணர்களையும் இணைக்கலாம். மாநிலம் தாண்டியும் இணைய வழி பரிந்துரைகள் பெற்று இணைக்கலாம்.
ஒவ்வொரு தன்னாட்சி கல்லூரியின் பாடத்திட்டமும் சரியானதா என்று பரிசோதனை செய்து கொள்ள, அக்கல்லூரியின் பாடத்திட்ட குழு கூட்டம் முடிந்த பிறகு, அவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சிக் குழுவின் பார்வைக்கு அனுப்பலாம். பரிந்துரைகளை பெறலாம்.
பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சிக் குழு பரிந்துரை செய்யும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கும் பாடங்களின் மீது கருத்துக் கூற எல்லோருக்கும் உரிமை இருக்க வேண்டும். பல ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பாடம் தொடர்பாக அறிந்தோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தனக்கு கிடைக்கும் பின்னூட்டம் அனைத்தையும் பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சிக் குழு தொகுத்துக் கொண்டே வர வேண்டும். ஆண்டு இறுதியில் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதனை மாற்றி அமைக்க வேண்டும்.
இது அதே பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பாடத்திட்ட குழுக்கள், தன்னாட்சி கல்லூரிகளில் இயங்கி வரும் பாடத்திட்ட குழுக்கள் என எல்லாவற்றுக்கும் கையேடாக இருக்கும். இணைத் தன்மை வேண்டுவோருக்கு, எந்தப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்தாரோ அந்த பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சிக் குழு கையேட்டில் சரிபார்ப்பு செய்து கொடுத்து விடலாம். இந்த நடைமுறையில் யார் இணைத் தன்மை கோருகிறார்களோ அவர்களே தங்கள் பட்டத்துக்கு உரிய பாடத்திட்டத்தின் இணைத் தன்மையை பரிசீலனை செய்து கொள்ள முடியும். பன்மைத் துவத்தில் இணைத் தன்மை பேணிக் கொள்ள முடியும். ஒவ்வொரு தன்னாட்சி கல்வி நிறுவனத்தின் படைப்பூக்கம் தனித்துவம் பாதுகாத்து கொண்டே இதனை மேற்கொள்ள இயலும்.
பொது பாடத்திட்டம் இன்றி கல்லூரியை விட்டு கல்லூரி இடம் பெயர்தல் எங்கனம்?:
பட்டப் படிப்பில் சேருவார் எண்ணிக்கை 50 விழுக்காட்டை கடக்கும் நிலையில், உயர் கல்வி இடைநிற்றலும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இடைநிற்றலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்து செல்வோருக்கும் வேறோர் இடத்தில் சென்று படிக்க விரும்புவோருக்கும் நிச்சயமாக தீர்வு வேண்டும். தமிழ் நாடு திறந்த வெளி பல்கலைக்கழகம் இதற்கு தீர்வை முன் வைக்கும் போது, முறைசார் கல்லூரிகள் இதுபற்றி கண்டு கொள்ளாமல் இருந்தது கவலைக்குரியது. ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஒரு தன்னாட்சி கல்லூரிக்கு மாறிச் செல்ல விரும்புவோர் என்னென்ன பாடங்களை அதுவரை படிக்கவில்லையோ அதனைப் படிக்க ஓர் வாய்ப்பை கொடுத்து அதன் பின்னர் தக்க வகுப்பில் அமர்த்திக் கொள்வது எளிய தீர்வு.
உயர் கல்வியில் நடக்கக் கூடாதது நடந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை விதைக்க எது காரணம்?
அரசின் அவசரம் தான் அடிப்படைக் காரணம். அடுத்து இந்தப் பிரச்சினையை அணுகிய விதம் . இது அவசரப்பட்டு ஒரே நாளில் ஓரிரு மாதங்களில் முடிக்கும் பணி அல்ல. முடிக்கவும் முடியாது. அதற்கான தேவையும் இல்லை.
அவசரப்பட்டு இந்தக் கல்வியாண்டில் நடைமுறைப் படுத்தியே தீர வேண்டும் என்ற தீவிரம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. மிக முக்கியமான அணுகுமுறை பிரச்சினைகளை மேலிருந்து அணுகுவது.
இந்தப் பிரச்சினை, கலை அறிவியல் கல்லூரிகளின் பிரச்சினை. பிரச்சினைகளோடு தொடர்புடைய தன்னாட்சி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் சங்கங்கள் என அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அரசின் முன் மொழிவுகள் அதன் மீதான சம்பந்தப்பட்டவர்கள் ஆலோசனைகளை பெற்று தீர்வை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும். உதவிக்கு அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி பேராசிரியர்கள் என அழைக்கலாம். எந்தத் துறையில், யார் வேலை செய்கிறார்களோ அவர்களை நிராகரித்து, ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் என்று பொது வெளியில் கூறும் போது அதற்கு ஒரு படடோபத் தன்மை இருக்கலாம்.
உண்மையான பிரச்சினைக்கு தீர்வு தராது அந்த அணுகுமுறை. தொடர்புடையவர்கள் மத்தியிலிருந்து வர வேண்டும். அதனை செழுமைப்படுத்த வேண்டும். ஐஐடி பேராசிரியர்கள் அவர்கள் துறையில் வல்லவர்கள். கலை அறிவியல் துறையில் அதற்கேற்ப வல்லவர்கள் உள்ளனர் என்பதில் நம்பிக்கை வேண்டும். சில பாடத்திட்ட வடிவமைப்பு மிகவும் மோசம் என்ற கடும் விமர்சனங்கள் எழுகிறது. முக்கியப் பாடத்திட்டத்தில் இருந்து ஒரே ஒரு பாடம் இல்லை என்று கூறுகின்றனர்.
இணைப்பாடங்கள் ( Allied subject ) என்று இருந்ததை விருப்பப் பாடங்கள் ( Elective subjects) என்று மாற்றியுள்ளனர். இரண்டும் என்ன வேறுபாடு? ஏன் மாற்ற வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடையில்லை. நிரந்தர தீர்வு. எளிய தீர்வு. ஆனால் சற்று காலம் பிடிக்கும் தீர்வு . நிச்சயமாக மையப் படுத்தலில் இல்லை. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை உயர்த்தி பிடிப்பதிலேயே இருக்கிறது. கல்லூரிகளுக்கு இடையே இடம் பெயர தமிழ் நாடு திறந்த வெளி பல்கலைக்கழகமே முன் மாதிரி.
மொழியில் பொதுமை ஏன்?
பொது பாடத்திட்டம் என்று ஒன்று அமலாக்கம் செய்யப்படால் அதில் முதன்மை பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் போதும். மொழிப்பாடங்கள் ஏன் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமலே, மொழிப்பாடங்கள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திணிப்பதன் நோக்கம் என்ன? அப்படியான திணிப்பு சாத்தியம் இல்லை என்று மொழிப் பாடங்களில் வல்லுநர்கள் பல கோணங்களில் நிரூபிக்கின்றனர். மொழி வளர்ச்சிக்கு வளத்திற்கு நல்லதில்லை என்கின்றனர். அத்தகைய பயன்பாடற்ற பொதுமை பாடத்தின் தேவை என்ன என்பதற்கான காத்திரமான பதில்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு பொதுமைப் படுத்த வேண்டிய விஷயங்கள் உயர் கல்வியில் உண்டு. அவற்றை தனித்துக் காண்போம்.
கட்டுரையாளர்கள்
நா.மணி
பொருளாதாரத் துறை தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி,
வே. சிவசங்கர்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையின் இணைப் பேராசிரியர். இளம் பொருளியல் நிபுணர் விருது பெற்றவர். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உழைப்பு பொருளியலில் காத்திரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
உயர் கல்வியில் பொதுப் பாடத்திட்டம்: அகமும் புறமும்!
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை எப்போது தொடங்கும்?
கணவனை ‘கருப்பன்’ என அழைப்பது கொடுமையானது : நீதிமன்றம்!
The author explained very clearly
Nowadays no fund is given for autonomous colleges from UGC
Many subjects don’t have core subjects is common syllabus
Mobility of the student from one university to another university or college is available now if vacancy exists
Those students should study or write the papers only which are not covered earlier but no rank will be given for such students
All the whole the Govt rushed into the matter now coming back