காஸா : பாசிமணிகள், உயில், இனக்கொலை!

சிறப்புக் கட்டுரை

எஸ்.வி.ராஜதுரை

காஸாவின் வடபகுதி, இனி பாலஸ்தீன மக்கள் வாழக்கூடிய நிலமாக இருக்காது என்று, வட காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள இராணுவத் தளபதி இட்சிக் கோஹென் (Itzik Cohen) அறிவித்துள்ளதாக இஸ்ரேலிய செய்தியேடு  ‘ஹாரெட்ஸ்’ (Haaretz) கடந்த 8ஆம் தேதி இதழில் கூறியுள்ளது.

இஸ்ரேலின் மேலிடத்திலிருந்து தனக்கு வந்துள்ள கட்டளை – ‘தளபதிகளின் திட்டம்’ (General’s Plan) என்றழைக்கப்படும் இராணுவத் திட்டத்தின்படி – காஸாவின் வட பகுதிக்கு இனி எந்தப் பாலஸ்தீனர்களும் திரும்பிவர அனுமதிக்ககூடாது என்பதால் “ இந்தப் பகுதியை சுத்திகரிப்பதுதான் இனி என் வேலை” என்று கூறியுள்ளார் கோஹென்.

வட காஸாவிலுள்ள ஜபாலியா (Jabalia), பெய்த் ஹனுன் (Beit Hanoun), பெய்த் லாஹியா (Beit Lahiya) ஆகிய இடங்களிலிருந்து மக்கள் காஸாவின் தென் பகுதிக்குப் புலம் பெயர்ந்துவிட்ட நிலையில் ஜபாலியாவில் மட்டும் இன்னும் சில பாலஸ்தீனர்கள் இருப்பதாகவும் , அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றது என்றும், ஆனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு ஹமாஸ் அமைப்பு அவர்களுக்குக் கறாரான உத்தரவு போட்டு, தண்ணீரோ உணவோ அவர்களுக்குக் கிடைக்கச் செய்யாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்றும், அங்கிருந்து வெளியேற முயல்கின்ற பல பாலஸ்தீனர்களை அந்த அமைப்பு சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைத் தளபதிகள் கூறுவதாக ‘தி கார்டியனை’ மேற்கோள் காட்டி ‘ஹாரெட்ஸ்’ செய்தியேடு சொல்கிறது.

’போர்க் காலத்தில் முதலில் பலியாவது உண்மைதான் ‘என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது மிகச் சரியானது என்பதை காஸா நிகழ்வுகள் காட்டுகின்றன.

ஆனால், இஸ்ரேலியப் பாதுகாப்பு படை விமானக் குண்டு வீச்சுகள் மூலமும் ட்ரோன்கள் மூலமும் பாலஸ்தீனக் குழந்தைகளைக் குறிவைத்துக் கொன்று வருவதை அங்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய முயலும் அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. நமது இதயத்தைக் கனக்கச் செய்யும் வகையில் ஒரு நிகழ்வு இந்த மாதத் தொடக்கத்தில் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்களும் ட்ரோன்களும் குறிவைக்கும் குழந்தைகளிலொன்று – பத்து வயதுச் சிறுமி – தனக்கும் சாவு வந்துவிடும் என்று கருதி ஓர் ‘உயிலை’ எழுதி வைத்ததாக ‘ அல் ஜஸிரா’(Al-Jazeera) நாளேட்டில் சில வாரங்களுக்கு முன் வெளியான செய்தி கூறியது. தான் இறந்துவிட்டால் தன் விளையாட்டுப் பொம்மைகளும் பாசிமணிகள் உள்ள பையும் தன் சகோதர சகோதரிகளில் யார் யாருக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை அந்த உயிலில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது அக்குழந்தை.

அது எதிர்பார்த்தது போலவே, சில நாள்களுக்குப் பின் இஸ்ரேலிய விமானக் குண்டு வீச்சில் அந்தக் குழந்தையும் அதன் இளைய சகோதரனும் கொல்லப்பட்டுவிட்டனர். அந்த குழந்தையின் முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது என்றும், இருவரின் உடல்களைப் புதைக்கும்போதுதான் அந்த உயிலை அக்குழந்தையின் பெற்றோர்கள் கண்டறிந்தனர் என்றும் அச்செய்தி கூறியது.

ஐ.நா.வின் மனிதாபிமான உதவிக் குழுக்கள் மீதும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்திப் பலரைக் கொன்றுள்ளது. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் வட காஸாவில் அனுமதிக்கப்படாத நிலையில் 55,000 பாலஸ்தீனர்கள் ஏற்கெனவே காஸாவின் தென் பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு படையே ஒத்துக்கொள்கிறது.

வடகாஸாவில் இன்னும் இருக்கின்ற பாலஸ்தீனர்களோ அல்லது அங்கிருந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டவர்களோ இனி ஒரு காலத்திலும் திரும்பிவர அனுமதிக்கப்பட்டாலும் அங்கே அவர்களால் வாழ முடியாத நிலையை இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை உருவாக்கியுள்ளது. மக்களின் வசிப்பிடங்களாக இருந்த குடியிருப்புக் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன; சாகுபடி நிலங்கள் நச்சூட்டப்பட்டுள்ளன; நீர் ஆதாரங்கள், மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திருச்சபைகள், மசூதிகள் ஆகிய அனைத்தையும் இஸ்ரேலியப் பாதுகாப்பு படை அழித்து நாசமாக்கியுள்ளது.

கட்டடங்கள் முதலியவற்றை சீரமைப்பு செய்வதற்கு மிக நீண்டகாலம் பிடிக்கும். பல பில்லியன் டாலர்கள் தேவைப்படும். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டக்கூடிய அளவுக்கு செல்வம் படைத்த பணக்கார வளைகுடா நாடுகள் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போய்விட்டன. தென்னாப்பிரிக்கா, இந்த இன சுத்திகரிப்பை சர்வதேச நீதிமன்றத்திடம் எடுத்துச் சென்று வழக்காடியது.  இந்தக் குற்றத்தை இஸ்ரேல் செய்துள்ளது என்பதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டஅந்த நீதிமன்ற நீதிபதிகள் கூட வாய்மூடி மெளனம் காக்கிறார்கள்.

நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரழிவைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில்தான் உலக மக்கள் இருக்கின்றனர். அவர்களும் பல்வேறு நாடுகளில் பேரணிகளை அடுத்தடுத்து நிகழ்த்திவிட்டு சோர்வடைந்து விட்டனர்.

1948-ஆம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை, பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் இஸ்ரேலின் ஒடுக்குமுறைகளுக்குத் தாக்குப்பிடித்து நின்றது. அவர்களை உற்சாகப்படுத்த எத்தனையோ கவிஞர்கள் தோன்றினர். ஆனால், இன்று அந்தக் கவியுலகமும் கூட அழிந்து வருவதுபோல் தோன்றுகிறது.

அதற்குச் சான்றாக இருக்கிறது பின்வரும் கவிதை.

இதை எழுதிய அடுத்த நாளே ரஃபால் அல்-அரீர் (Refaat al-Areer) என்ற கவிஞரும்  இஸ்ரேலியக் குண்டுவீச்சுக்குப் பலியானார்.

நான் இறந்தாக வேண்டும்

நான் இறந்தாக வேண்டுமென்றால்

நீ வாழ்ந்தாக வேண்டும்

என் கதையைச் சொல்வதற்கு

என் பொருள்களை விற்பதற்கு

ஒரு துண்டுத் துணியையும்

சில மென்கயிறுகளையும் வாங்குவதற்கு

(அதை நீண்ட வாலும் வெண்ணிறமும் கொண்டதாகச் செய்))

 

அப்போது காஸாவின் ஏதோ ஓரிடத்தில்

கண்ணில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில்

எவரிடமும் விடை பெறாமல்

தன் தசையிடமிருந்தும்கூட

விடை பெறாமல் தன்னிடமிருந்தும்கூட

விடை பெறாமல்

பெருந்தீக்குள் சென்றுவிட்ட

தன் தந்தைக்காகக்

காத்துக் கொண்டிருக்கையில் 

பட்டம், நீ செய்த பட்டம்

மேலே பறந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கும்

 

அன்பைத் திருப்பிக் கொண்டு வருகின்ற

ஒரு தேவதூதன்

அங்கிருப்பதாக

ஒரு கணம் நினைத்துக் கொள்ளவும்

நான் இறந்தாக வேண்டும்

 

அது நம்பிக்கையைக்

கொண்டு வரட்டும்

அது ஒரு கதையாக இருக்கட்டும்.

 

கட்டுரையாளர் குறிப்பு:

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி இந்த மாநிலத்துக்காரரா?

இதுக்கு என்டே கிடையாதா? – மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *