ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (டிசம்பர் 5) டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஜி 20 மாநாடு ஏன்?
உலகில் வளர்ந்த பணக்கார நாடுகளுடன், வளரும் பணக்கார நாடுகள் இணைந்து தங்கள் நாடுகளுக்குள் இருக்கும் பொருளாதராப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதே ஜி 20 மாநாடு. மேலும், காலநிலை மாற்றம், நிலையான ஆற்றல், சர்வதேச கடன் தள்ளுபடி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் வழிகள் ஆகியவை குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.
இந்த உறுப்பினர் நாடுகள் உலகின் பொருளாதார உற்பத்தியில் 85 சதவீதமும் உலக வர்த்தகத்தில் 75 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. மேலும், மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன.
இதையடுத்தே ஜி 20 கூட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஜி 20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து வருகிறது.

ஜி 20 அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இதில் ஸ்பெயின் விருந்தினர் நாடாக அழைக்கப்படுகிறது. இது தவிர, அந்த ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு, அது விரும்பும் நாடுகளை விருந்தாளிகளாக அழைத்துக் கொள்ளலாம்.
முதல் ஜி 20 மாநாடு
1999ஆம் ஆண்டு கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, உலகம் முழுவதும் ஒரு சிறிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியது. அதுகுறித்து விவாதிப்பதற்காக அதே ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஜி 8 நாடுகள் பங்கேற்றன. அதன் தொடக்கமே இன்று ஜி 20 நாடுகளாக பரவி நிற்கிறது.
இந்த, ஜி 20 மாநாட்டில், தங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள் பற்றிப் பேசப்படுவதுடன், இதர உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பெரிய திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவும் அளிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் இந்த ஜி 20 மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள்தான் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஆனால் 2008ஆம் ஆண்டு பொருளாதார சரிவுக்குப் பின் ஜி 20 உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது தவிர, இரண்டு நாடுகளுக்கு இடையிலான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இதில், வெறும் 20 நாடுகளே இருப்பதால், முடிவுகள் கொஞ்சம் வேகமாக எடுக்கப்படுகிறது.

2008இல் பொருளாதார பிரச்சினை
2008, 2009ஆம் ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜி20 மாநாட்டில், பெரும் நிதி நெருக்கடியின்போது தலைவர்கள் உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மீட்பதற்கான பல நடவடிக்கைகளை ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டு நிறைவு விழாவில், ஜி-20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ஏற்றது. ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன் பிரச்சினை, கொரோனா தாக்கம் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண இருக்கிறது.
லட்சினை, கருத்துரு வெளியீடு
இதற்கான லட்சினை, கருத்துரு, இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெளியிட்டார். இந்திய தேசியக் கொடியில் உள்ள உற்சாகமூட்டும் வண்ணங்களான காவிநிறம், வெள்ளை, பச்சை, நீலம் ஆகியவற்றை வைத்து ஜி 20 லட்சினை வரையப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, “உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனை ஜி-20 இலச்சினை மூலம் பிரதிபலிக்கிறது. இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது. அத்வைத்தின் தத்துவம், அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
தத்துவம் இன்றைய மோதல்களைத் தீர்க்கும் ஊடகமாக இருக்கும். போரில் இருந்து விடுதலை பெற புத்தரின் போதனை, வன்முறையை எதிர்கொள்ள மகாத்மா காந்தியின் தீர்வுகள், ஜி-20 மூலம், இந்தியா அவர்களுக்கு ஒரு புதிய உயரத்தை அளிக்கிறது. ஜி-20 இலச்சினையில் உள்ள தாமரை இது போன்ற கடினமான காலங்களில் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது.

உலகம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், அதை சிறந்த இடமாக மாற்ற நாம் முன்னேற முடியும். அறிவு மற்றும் செழுமையின் இரு தெய்வங்களும் தாமரையின் மீது அமர்ந்திருக்கின்றன” என்றார். ஜி-20 இலச்சினையில் தாமரையின் மீது வைக்கப்பட்டுள்ள பூமியை சுட்டிக்காட்டிய பிரதமர், ”பகிரப்பட்ட அறிவு கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவுகிறது. அதே நேரத்தில் பகிரப்பட்ட செழிப்பு கடைசி மைலை அடைய உதவுகிறது.
தாமரையின் ஏழு இதழ்களின் முக்கியத்துவம் என்னவெனில், ஏழு கண்டங்களையும், ஏழு உலகளாவிய இசைக் குறிப்புகளையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏழு இசைக் குறிப்புகள் ஒன்றாக இணைந்தால், அவை சரியான இணக்கத்தை உருவாக்குகின்றன” என்றார்.
கருப்பொருள் குறித்து பேசிய அவர், உலகில் முதல் உலகமோ, மூன்றாம் உலகமோ இருக்கக்கூடாது. ஒரே உலகம் மட்டுமே இருக்க வேண்டும்” என்ற அவர், இந்தியாவின் தொலைநோக்கு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக முழு உலகையும் ஒன்றாகக் கொண்டு வருவதற்கான பொதுவான நோக்கத்தை பிரதமர், ஒரு சூரியன், ஒரே உலகம், ஒரே கட்டம் ஆகிய உதாரணங்கள் மூலம் விளக்கினார்.
”இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. உலகில் புரட்சிக்கான இந்தியாவின் தெளிவான அழைப்பாக இருந்தது. ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற உலகளாவிய சுகாதார பிரச்சாரம் இயக்கமாக அமையப்பட்டுள்ளது. ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்பதே ஜி 20யின் கருப்பொருள்” என்று கூறினார்.

காங்கிரஸ் விமர்சனம்
அதேநேரத்தில், பாஜகவின் தாமரைச் சின்னத்தை ஜி-20 லட்சினையில் வைக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி பாஜகவை விமர்சித்திருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ 70 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் கொடியை தேசியக் கொடியாக கொண்டுவர முன்மொழியப்பட்டபோது அதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நிராகரித்தார்.
இப்போது, ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைவராக வரும்போது, பாஜகவின் தேர்தல் சின்னம்தான், லட்சினையாக வருகிறது. அதிர்ச்சியாக இருக்கிறது. மோடியும் பாஜகவும் வெட்கமின்றி தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பாஜக பதிலடி கொடுத்திருந்தது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனாவல்லா, ”தாமரை என்பது நம்முடைய தேசிய மலர். மகாலட்சுமி அமரும் இடமாக தாமரை கருதப்படுகிறது. அப்படியென்றால் தேசிய மலருக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறதா? கமல்நாத் என்ற பெயரில் இருந்து கமல்(தாமரை) என்ற வார்த்தையை நீக்குவீர்களா? ராஜீவ் என்ற வார்த்தையும் தாமரையைத்தான் குறிக்கும். அந்தப் பெயரில் உள்நோக்கம் ஏதும் இல்லையா?” எனக் கேள்வி கேட்டு பதிவிட்டிருந்தார்.

முதல்வர் பங்கேற்பு
இந்நிலையில், ஜி-20 மாநாடு டெல்லியில் 2023 செப்டம்பரில் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாநிலங்களிலும் ஜி-20 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
அந்த வகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஜி-20 கூட்டத்தை சிறப்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும்மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ஜெ.பிரகாஷ்