இரண்டே பந்தில் இந்தியா வெற்றி! விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட தினேஷ் கார்த்திக்

Published On:

| By christopher

நாக்பூரில் நேற்று (செப்டம்பர் 23) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கிடையே நெருக்கடி மிகுந்த கடைசி ஓவரில் இறங்கி கூலாக ஆட்டத்தை முடித்து வைத்த தினேஷ் கார்த்திக்கிற்கு சமூகவலை தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

2007ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களுள் இன்றளவும் தொடர்ந்து விளையாடி வரும் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் மட்டுமே. இதில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித்துக்கு, மூத்த வீரர்களான ஷேவாக், சச்சின் ஆகியோர் ஓய்வு பெற்றதும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மனுமான தினேஷ் கார்த்திக்கிற்கு அப்படியொரு வாய்ப்பு அமையவில்லை. இந்திய அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என்று அசைக்கமுடியாத இடத்தில் தோனி இருந்ததால் தினேஷின் வாய்ப்பு கேள்விக்குறியாகவே அமைந்தது.

டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு!

ஆனால் சற்றும் தளராமல், ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தான் இன்னும் களத்தில் இருப்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வந்தார் தினேஷ் கார்த்திக். இதனையடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரால் இளம்வீரர்கள் நிரம்பி வழியும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் தேர்வு கேள்வியை எழுப்பியது. அதேவேளையில் சமீபகாலமாக டி20 போட்டிகளில் இளம் வீரரான ரிஷப் பண்ட்டின் தடுமாற்றமும், ஆக சிறந்த பார்மில் இருக்கும் தினேஷின் அதிரடி ஆட்டமும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரது இடத்தை உறுதி செய்தது.

எதிர்ப்பு தெரிவித்த கம்பீர்

இதற்கிடையே தினேஷ் கார்த்திக் தேர்வு தவறானது என்று கம்பீர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர், “இந்திய அணியில் ஒருவருக்கு தான் வாய்ப்பு என்றால், ரிஷப் பண்ட் க்கு தான் தர வேண்டும். வெறும் 10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்?

நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றி தேடி கொடுக்கும் வீரர் தான் அணிக்கு தேவை. அதன்படி ரிஷப் பண்டுக்கு தான் பிளேயிங் 11ல் இடம்பெறும் தகுதி உள்ளது” என்று கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

முதல் போட்டியில் குழப்பம்!

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார்.

மொகாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு 7வது பேட்ஸ்மேனாக இறங்கினார். அதில் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அக்சருக்கு பின்னால் இறக்குவது அபத்தம்!

இதனை தொடர்ந்து அக்சர் படேலுக்கு பிறகு பேட்டிங் செய்ய தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியது விமர்சிக்கப்பட்டது. இதுகுறித்து மூத்தவீரர் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று முத்திரை குத்தி அக்சர் படேலுக்கு பின்னால் எல்லாம் இறக்குவது அபத்தம் என்றும், அவரை 12-13 ஓவர்களிலேயே ஏன் இறக்க கூடாது? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

6 பேட்ஸ்மேன்களுடன் இறங்கிய இந்தியா!

இந்நிலையில் நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் வாழ்வா சாவா போராட்டத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. மழை குறுக்கிட்டதால் 8 ஓவர் போட்டியாக ஆட்டம் குறைக்கப்பட்டது.

டாஸில் வெற்றி பெற்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 8 ஓவர் போட்டி என்பதால் 6 பேட்ஸ்மேன்கள், 4 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே இந்திய அணி களம் கண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் என அடித்து வாணவேடிக்கை காட்டினாலும், மறுபக்கம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

வெற்றியைத் தேடி தந்த டி.கே!

இதனால் இந்திய அணி வெற்றிபெறுமா என்ற நிலை ஏற்பட்டது. கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் விக்கெட் கீப்பரும் அனுபவ வீரருமான தினேஷ் கார்த்திக் களம் புகுந்தார்.

ஆனால் எந்தவித பதட்டமும் இன்றி ஆஸ்திரெலின் டேனியல் சாம்ஸ் போட்ட கடைசி ஓவரை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். முதல் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டவர், இரண்டவது பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு அனுப்பி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

கம்பீருக்கு பதிலடி!

இதனையடுத்து கூலாக ஆட்டத்தை கையாண்ட தினேஷ் கார்த்திக்கை பாராட்டி பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தன் மீது கடும் விமர்சனம் முன்வைத்த கம்பீருக்கு, தினேஷ் கார்த்திக் கொடுத்த பதிலடியாகவே ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் 2007 டி20 உலகக்கோப்பையில் விளையாடிய அதே ரோகித்சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் தங்களது அனுபவத்தால் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர் என்றும் கூறி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

விளாசிய ரோகித்… பதிலடி கொடுத்த கார்த்திக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அதிமுக அலுவலகத்தில் உண்மையில் என்ன தான் நடந்தது? சிபிசிஐடி ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel