22வது பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் உள்ளன.
நேற்றுடன் உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் லீக் சுற்றின் முதல் போட்டியை சந்தித்து முடித்துள்ளன.
இதில் பெரிய அணிகளின் அபாரமான வெற்றிகளும், கத்துக்குட்டி அணிகளிடம் மரண அடிவாங்கிய தோல்விகளும் என பல்வேறு எதிர்பாரா சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
முதல் ஆட்டத்தில் சரிந்த ஜாம்பவான்கள்!
அதிலும் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் மனுவேல் நியூயரின் ஜெர்மனி அணிகளின் தோல்வி பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இந்த இரு ஜாம்பவான் அணிகளின் தோல்வி மற்ற அணிகளுக்கு பெரும் படிப்பினையாக அமைந்துள்ளது. அதேவேளையில் கத்துக்குட்டி என்று கருதப்படும் அணிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன.
இந்நிலையில் உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ள அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி அணியின் தோல்விக்கான காரணம் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து காண்போம்.
கடந்த 22ம் தேதி கத்தாரின் மிகப்பெரிய கால்பந்து மைதானமான லுசைல் அரங்கில் குரூப் சி-ல் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதின.
உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணி 53வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை வீழ்த்திவிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மெஸ்ஸி சாதனை!
நினைத்தது போலவே ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கேப்டன் மெஸ்ஸி அபாரமாக கோல் அடிக்க, அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
இதன்மூலம் 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
அடுத்தடுத்து 2 கோல்கள்!
முதல் பாதியில் மெஸ்ஸி அடித்த ஒரு கோலுடன் அர்ஜென்டினா முன்னிலை வகிக்க, 2வது பாதியில் சவுதி அரேபியா வீரர்கள் சலேஹ் அல்ஷெரி 48வது நிமிடத்திலும், அல்தாவ்சரி 53வது நிமிடத்திலும் அமர்க்களமாக கோல் அடித்து அசத்தினர்.
இதனால் சவுதி 2-1 என முன்னிலை பெற, அந்நாட்டு ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. இதைத் தொடர்ந்து, பதில் கோல் அடிக்க அர்ஜென் டினா வீரர்கள் கடுமையாக முயற்சித்தும், சவுதி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தி அதை முறியடித்தனர்.
கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களிலும் போட்டியை டிரா செய்ய அர்ஜென் டினா போராடினாலும், அதற்கு சற்றும் வாய்ப்புக் கொடுக்காத சவுதி அரேபியா 1-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஒருபுறம் 6வது முறையாக உலக கோப்பையில் விளையாடி லீக் சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது சவுதி அரேபியா. மறுபுறம் 2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா நடப்பு உலகக்கோப்பையின் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

சவுதியிடம் பலம் வாய்ந்த அர்ஜென்டினா கண்ட அதிர்ச்சி தோல்விக்கு 5 காரணங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
1.வீணான தாக்குதல்கள்
அர்ஜென்டினாவின் தோல்விக்கு சவுதியின் உச்சபட்ச தற்காப்பு ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அப்போட்டியில் 15 ஷாட்கள் கோலை நோக்கி அடிக்கப்பட்டன. அதில் 14 ஷாட்களை அபாரமாக தடுத்தது சவுதி.
2.ஆஃப்-சைட் கோல்கள்
10 வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த பெனால்டி கோலைத் தொடர்ந்து, முதல் பாதியில் மெஸ்ஸி அடித்த ஒரு கோல் மற்றும் மார்டினஸ் அடித்த 2 கோல்கள் ‘ஆஃப் சைடு’ என நிராகரிக்கப்பட்டது.

3.மீட்பராக மாறிய சவூதி கோல்கீப்பர்
அர்ஜென்டினாவின் வெற்றியை பறித்ததில் சவுதி அணியின் 31 வயதான கோல்கீப்பர் முகமது அல் ஓவைஸின் பங்கு முக்கியமானது. ஏனெனில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவின் தாக்குதல்களை அவர் அபாரமாக தடுத்தார். அதிலும், சிறுத்தை வேக பாய்ச்சலில் அர்ஜென்டினாவின் 5 கோல் வாய்ப்புகளை தடுத்தது வெற்றியின் சிறப்பான அம்சமாகும்.
4.படுகுழி தள்ளிய தற்காப்பு
அர்ஜென்டினா அணியில் பலம் அதன் முன்கள வீரர்கள் என்றால், சவுதி ஆட்டத்தில் சொதப்பியது பின்கள தற்காப்பு வீரர்கள். முதல் பாதியில் அடித்த கோலுடன், 2வது பாதியில் அர்ஜென்டினா அணியின் தற்காப்பு அரண் சற்று சோம்பலாக செயல்பட்டது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சவூதி 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு வெற்றியை தனதாக்கியது.
5.திடீரென மாறிய ஃபார்மேஷன்
முதல் பாதியில் 4-3-3 என்ற கணக்கில் இருந்து இரண்டாவது பாதியில் 4-2-3-1 என திடீரென தனது ஆட்ட வடிவமைப்பை மாற்றியது அர்ஜென்டினா. மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா மற்றும் மார்டினெஸ் ஆகியோர் என முன்களம் சிறப்பாக செயல்பட்ட போதிலும், தற்காப்புக்கு வீரர்களை குறைத்தது அணிக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

மெக்சிகோவுடன் மோதும் அர்ஜென்டினா
இந்த படுதோல்வியின் மூலம் அடுத்த லீக் ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்து அணிகளுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் அர்ஜென்டினா அணி சிக்கியுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக 36 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்த அந்த அணி, சவுதியுடன் தோல்வியை சந்தித்த நிலையில் இத்தாலி அணியின் சாதனையை (37 வெற்றி) சமன் செய்யும் வாய்ப்பையும் நழுவவிட்டது.
அர்ஜெண்டினா அணி வரும் 27ம் தேதி அடுத்த லீக் ஆட்டத்தில் மெக்சிகோவை முதல் போட்டியில் களம் கண்ட அதே லுசைல் மைதானத்தில் சந்திக்க உள்ளது.
ஜெர்மனி தோல்விக்கான காரணம் குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்.
கிறிஸ்டோபர் ஜெமா
மிஸ் செய்த வில்லியம்சன்.. சதம் கண்ட லதாம் : இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து