நா.மணி
~~~~~~~~~~~~~~~~~~~~
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு மத்திய பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 21 & 22 தேதிகளில் நடந்து வரும் பன்னாட்டு மாநாட்டில், நேபாளத்தின் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பிஸ்னு பாதுல் அவர்களின் துவக்க உரை.
~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கள் நேபாள நாட்டின் திரிபுவன் பல்கலைக்கழகம் மிகவும் பழமையானது. எங்கள் நாட்டிலேயே அதிக மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம். நேபாளத்தின் தரமான மனித வளத்தை உருவாக்கி வருவதில் இப்பல்கலைக்கழகத்தின் மத்திய பொருளாதாரத் துறைக்கு முக்கிய பங்கு உண்டு. அத்தகைய துறை நடத்தும் பன்னாட்டு மாநாட்டில் எங்கள் நாட்டில் உள்ள நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் ஆகியோருடன் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள பன்னாட்டு பங்கேற்பாளர்கள் சிறப்புரையாளர் ஆகியோரை நேபாள அரசின் சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.
மாநாட்டுக் கருப்பொருளின் முக்கியத்துவம்:
நடைபெற்றுவரும் பன்னாட்டு மாநாட்டின் மையக் கருப்பொருளான “சுற்றுச்சூழல் நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு இடையே வளர்ச்சி” என்பது நேபாள நாட்டிற்கு மட்டும் முக்கியமாதனதல்ல. ஒட்டுமொத்த உலகத்திற்கே முக்கியமானது. இது ஏதோ புலம் சார்ந்த விழாவிற்கான கருப்பொருள் அல்ல. தேசிய சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போதைய சவால்கள்:
தற்போது நாம் சந்திக்கும் மிகப் பெரிய சவால்கள், பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் வளர்ச்சியையும் சமன் செய்வது. பருவநிலை மாற்றம், உயிரிப் பன்மயம் அழிந்து வருதல், காடுகள் அழிப்பு, மாசுபாடுகள், இயற்கை வளங்களை அதீதமாக பயன்படுத்தி வருதல் மட்டுமே சுற்றுச்சூழல் சவால்கள் அல்ல. இதன் எதிர்வினைகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் மீது பெரும் பங்காற்றுகிறது. அதனையும் இணைத்தே இப்பிரச்சினையை பரிசீலனை செய்ய வேண்டும்.
அதிகரித்து வரும் பருவகால நெருக்கடி நிகழ்வுகள்:
பருவகால மாற்றங்களின் விளைவாக வெள்ளம், அதீத மற்றும் பருவநிலை தவறிய மழை, பனிப்பாறைகள் உருகி வருதல், கடல் மட்டம் உயர்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. இவை தற்போது இயல்பான சவால்களாக மாறி வருகிறது. இவை ஏதோ தனித்தனி நிகழ்வுகளாக இல்லாமல் பொதுவான பெரிய பிரச்சனைகளாக உருவெடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாத எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் முழுமையானதாகவோ நிலைத்தன்மை உடையதாகவோ இருக்காது.
நேபாளத்தின் அமைவிடம்:
நேபாளம், இமயமலைக் கூட்டில் அமைந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. பனிப்பாறைகள் உருகுதல், பருவமழை தவறிச் செல்தல், வெள்ளப் பெருக்கு அதிகரிப்பு, நிலச்சரிவுகள் அதிகரிப்பு ஆகிய சவால்கள் நேபாளத்திற்கு அதிகமாக உள்ளது. வேளாண்மை, மின்சார உற்பத்தி, சுற்றுலா ஆகிய துறைகளில் அதிக சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக நேபாள நாட்டின் மிகச் சிறந்த வளமான உயிரிப் பன்மயம் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். நேபாளத்தின் முக்கியமான வனங்கள் சுத்தமான ஆறுகள் ஆகியவற்றுக்கும் இந்தப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இயற்கை வளங்களை சார்ந்து வாழ்ந்து வரும் வன உயிர்கள், பல இலட்சக்கணக்கான மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரமும் சவால்களை சந்தித்துக் கொண்டு உள்ளது. நேபாளத்தின் ஆறுகள், காடுகள், உயிரிப் பன்மயம் ஆகியவற்றில் தான் நேபாளத்தின் வரலாறு, பண்பாட்டு மற்றும் அதன் அடையாளம் அடங்கியிருக்கிறது.
சவால்களோடு வளர்ச்சி:
இத்தகைய சவால்களைச் சந்தித்துக் கொண்டே நேபாளம் தன் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடைய வேண்டும். 2030 ஆம் ஆண்டில் வளர்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியலிலிருந்து முன்னேறத் தொடங்கி, நடுத்தர வருவாய் நாடுகளின் பட்டியலில் இடம் பெறவும், குன்றாத வளர்ச்சி குறியீடுகளை எட்டவும் பாடுபட்டு வருகிறோம். 2043 ஆம் ஆண்டில் நடுத்தர வருவாய் நாடு என்ற நிலையை அடைந்துவிட வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்காக உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்மயம் மற்றும் நகர்மயத்தை முடுக்கி விட்டு உள்ளோம்.
பொருளாதார வளர்ச்சித் திட்டமிடலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொள்வோம். கடந்த காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விசயத்தில் தவறுகள் இழைத்து இருப்போம். மீண்டும் அதனை செய்ய மாட்டோம். அதற்கு பதிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குன்றாத வளர்ச்சி மற்றும் சமத்துவத்திற்கு அதிக முன்னுரிமை அளிப்போம்.
சவால்களின் தன்மையை உணர்ந்தே உள்ளோம்:
சவால்களின் தன்மையை முற்றிலும் உணர்ந்து உள்ளோம். ஆனால் சாதகமான தீர்வுகள் சாத்தியம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு கொள்கை முடிவுகள், திட்டங்கள் மற்றும் பல முயற்சிகளை நேபாள அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதனை மிகச் சிறந்த முறையில் அமலாக்கம் செய்வோம்.
நேபாளத்தின் பருவநிலை மாற்ற தடுப்புக் கொள்கைகள்:
நேபாளத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடலில், பருவநிலை மாற்றம் குறித்த தடுப்புச் செயல் திட்டங்களையும் ஒருங்கிணைத்து எங்கள் திட்டங்களை உருவாக்கி வருகிறோம். வளர்ச்சி என்பது பசுமையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். எரிசக்தி வளங்களை திறம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரும்பப் பெறத் தக்க எரிசக்தி வளங்களை அதிகரிக்க வேண்டும். குன்றாத வளர்ச்சிக்கான வனக் கொள்கையை உருவாக்க வேண்டும். பருவகால மாற்றத்தைத் தடுக்கத் தேவையான, நிதித் தேவைக்கு, உலகளாவிய பங்குதாரர்களை அடையாளம் கண்டு வருகிறோம்.
குன்றாத வளர்ச்சியுடன் கூடிய எரிசக்தி, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை நோக்கி நகர போதுமான வளங்களைத் தேடிச் சேர்த்தல் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. பருவகால மாற்றத்தைத் தடுப்பதற்கு தோதான, திரும்பப் பெறத் தக்க எரிசக்தி வளங்களில் முதலீடு செய்யவும், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வளர்ச்சி திட்டங்களில் முதலீடு செய்யவும், நிதி நிறுவனங்களை அடையாளம் கண்டு வருகிறோம்.
குன்றாத வளர்ச்சியுடன் இணைந்த சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டிற்கு, எங்கள் தனித்துவமான இயற்கையையும், பண்பாட்டையும், பாதிக்காத வழிகளை கண்டறிந்து வருகிறோம். குன்றாத வளர்ச்சியுடன் இணைந்த வேளாண்மை, எங்கள் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும். இதற்காக இயற்கை வேளாண்மை, காடுகள் வளர்ப்பு, வேளாண்மை உற்பத்தி திறன் மேம்பாடு, உயிரிப் பன்மய பாதுகாப்பு ஆகியவை எங்கள் திட்டமிடலில் இரண்டறக் கலந்து உள்ளது.
கல்வியாளர்களுக்கு வேண்டுகோள்:
இந்தப் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்றுள்ள கொள்கை வகுப்பாளர்களே, கல்வியாளர்களே, நீங்கள் இது விசயத்தில் ஆய்வு மேற்கொள்ளவும், புதுமைகள் படைக்கவும் சாத்தியம் இருக்கிறது. கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்கு பாலமாக விளங்க முடியும். பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இத்தகைய ஆய்வுக்கான அர்த்தமுள்ள உரையாடல்களை முன்னெடுக்க இயலும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மக்களை ஒன்று திரட்ட முடியும்.
இந்த மாநாட்டில் பங்கு பெற்றுள்ள ஆராய்ச்சியாளர்கள் பொருளாதாரத்தோடு இணைந்த பல்துறை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். சுற்றுச்சூழல் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகவியல் ஆகியவற்றை இணைத்து, ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை மதிப்பீடு செய்து தர வேண்டுகிறோம். அதேபோல், குன்றாத வளர்ச்சியின் பலன்களையும், மதிப்பீடு செய்து கொடுக்க வேண்டுகிறோம். பசுமை பொருளாதார வளர்ச்சி வழிமுறைகளைப் பகுத்து கொடுங்கள்.
வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் உள்ள தொடர்பை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்:
பொருளாதார வளர்ச்சியையும் சமத்துவத்தையும் இணைத்து ஆழமான ஆய்வுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏழை மக்களும், சமூகத்தில் உள்ள பலவீனமானவர்களும், அதிகமாகவும், அடிக்கடியும், சுற்றுச்சூழல் நெருக்கடிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பருவகால மாற்றம் என்பது வெறும் சுற்றுச்சூழல் நெருக்கடி சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல. அது ஒரு சமூக நீதி சார்ந்த பிரச்சினை. எனவே, பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், சமத்துவத்தையும், எல்லோரையும் உள்ளடக்கியதாகவும், இருக்க வேண்டும். வளர்ச்சிக்கான தீர்வுகளும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கான தீர்வுகளும் ஒன்றோடொன்று இணைந்தாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாத்துக் கொண்டே, நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் சாத்தியமே.
இன்று நாம் எடுக்கும் முடிவுகள் தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. நமக்கு உரத்த சிந்தனை தேவைப்படுகின்றது. மரபார்ந்த செயல்பாடுகளிலிருந்து வெளிவந்து சவால்களைச் சந்திக்க, யோசிக்க வேண்டும். தற்போதைய சவால்களை எதிர்கொள்ள, கல்விப் புலம் சார்ந்தவர்கள், குடிமைச் சமூகம், தனியார் நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சி, கூட்டு உழைப்பு, கூட்டு செயல்பாடு தேவைப்படுகிறது.
நேபாளம் பல இயற்கை பேரிடர்களை சந்தித்து மீண்டு வந்துள்ளது. பல கடினமான பொருளாதார சூழ்நிலைகளை எதிர்கொண்டு முன்னேறி வருகிறது.
பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்து முன்னேற்றம் அடைந்து வருகிறோம். அதுபோல், பருவநிலை மாற்ற நெருக்கடிகளையும் எதிர் கொள்வோம்.
தமிழில்: நா.மணி
பேராசிரியர். மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளம் தலைமுறையினர் சிகையலங்கார சிக்கல்கள்: தீர்வுகளை நோக்கிய முயற்சிகள்!
ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?
வாரியத் தேர்வு மதிப்பெண்கள் வாரி வழங்கப்படுகிறதா? விளைவுகள் என்ன? ஏன் அதன் மீது வினையாற்ற வேண்டும்?
இலங்கை அதிபர் தேர்தல்: ரணில் விக்ரமசிங்கே பின்னடைவு… அனுர குமார திசநாயக்க முன்னிலை!
மீனவர் பிரச்சினை… ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்! – எச்சரித்த கே.பாலகிருஷ்ணன்
தீவுத்திடலில் பட்டாசுக் கடை: டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!
பியூட்டி டிப்ஸ்: ஒருநாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுகிறீர்கள்?