–டி.ரவிக்குமார்
மதுக் கடைகளை தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. அதை வலியுறுத்தும் பலர் மதுக் கடைகள் திறக்கப்பட்டதற்கு திமுக மீதே குற்றம் சாட்டுவதைப் பார்க்கிறோம். கலைஞர் ஆட்சியில் மூடப்பட்ட மது கடைகளை மீண்டும் திறந்தது எம்.ஜி.ஆர்தான் என்பதைப் பலரும் பேசுவதில்லை.
திரு எல்.இளையபெருமாள் (1924-2005) தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது ( 1980-1984) எம்.ஜி.ஆர் தலைமையிலான அன்றைய அதிமுக அரசால் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது கொண்டுவரப்பட்ட இரண்டு சட்டத் திருத்த மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கேற்று அவர் பேசிய கருத்துகள் ‘மது ஒழிப்புப் போராளி’ என்ற அவரது பரிமாணத்தை நமக்குக் காட்டுகின்றன.
1981 இல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு மதுக்கடைகள் திறப்பதற்கான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய இளையபெருமாள், “1971 ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோது அதை எதிர்க்கின்ற நேரத்தில், இன்றைய முதல்வர் அவர்கள் அதனை எதிர்த்து அப்போது போர்க்கொடி உயர்த்தினார். மதுவிலக்கு ரத்து செய்வதை எதிர்க்கும் இயக்கத்திற்கு அன்று அவர் தலைமை தாங்கினார். ஆனால், இன்றைக்கு அதேபோல காரியத்தை இந்த அரசு செய்திருக்கிறதே என்றுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என எம்.ஜி.ஆரை இடித்துரைத்தார்.
“அன்று வெள்ளைக்காரர் ஆட்சியின் போது சேலம் ஜில்லாவிலே ஒரு வெள்ளைக்காரர் கலெக்டராக இருந்தார். மூதறிஞர் இராஜாஜி அவர்கள் அங்கு சேர்மனாக இருந்தார். அன்று அவர் தன்னுடைய ஜில்லாவுக்கு மதுவிலக்கை அமுல்படுத்தினார். கலெக்டர் அவரைக் கூப்பிட்டு நீர் என்னுடைய சேர்மன். நான் சொல்வதைக் கேட்க வேண்டும். நான் உன்னுடைய உயர் அதிகாரி. கள்ளுக்கடையை உடனடியாக திறக்க வேண்டும், என்று கேட்டபோது, நீங்கள் டிஸ்டிரிக்ட் சீஃப்பாக இருக்கலாம். நான் இந்த நகரத்தினுடைய சீஃப்பாக இருக்கிறேன். வேண்டுமானால் என்னை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று சொன்னார்கள்” என காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கு எப்படி கடைபிடிக்கப்பட்டது என்ற வரலாற்றையும் எடுத்துக்கூறினார்.
“விபச்சார விடுதி நடத்துவதாலே அதிகப் பணம் வருகிறது என்பதற்காக நாம் விபச்சார விடுதியை நடத்துவதற்கு ஒத்துக் கொள்ள முடியுமா ? அதை யாரோ செய்கிறார்கள் என்பதற்காக அந்தக் குற்றத்தை நாம் செய்ய முடியுமா? காங்கிரஸ் கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி அல்லது வேறு கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி, அது சரியல்ல. பம்பாய் நகரத்திலே. ரெட் லைட் ஏரியா வைத்திருக்கிறார்கள். அதற்காக சென்னை நகரத்திலே அதேபோல் ‘ரெட் லைட் ஏரியா வைத்தால் கோடிக்கணக்கிலே பணம் கிடைக்கும் என்பதற்காக, இதை ஒத்துக் கொள்ள முடியுமா ? அது இந்திரா ஆட்சியாக அல்லது அண்ணா ஆட்சியாக அல்லது யாருடைய ஆட்சியாக இருந்தாலும், அது மனிதாபிமானம் அற்ற செயலாகும்” என அவர் பேசியதில் வெளிப்பட்ட அறச் சீற்றம் நம்மை வியந்து நோக்க வைக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உறுப்பினர்கள் சிலர் காங்கிரஸை விமர்சிக்கும் நோக்கில் காந்தி பிறந்த குஜராத்தில்கூட குடிக்கிறவர்கள் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக “குஜராத்தில் 70 சதவீத தொழிலாளர்கள் குடிக்கிறார்கள் என்று சொன்னார்கள். நான் கேட்கிறேன் உத்தமர் காந்தி பிறந்த இடத்திலே மதவெறியர்களும், இனவெறியர்களும் இன்று அரசியல் சட்டத்திலே கொடுக்கப்பட்ட சட்டத்தைமீறி ஷெட்யூல்டு வருப்பினருக்கு புரமோஷன் கொடுக்கக் கூடாது; ரிசர்வேஷன் கொடுக்கக்கூடாது; ரெக்ரூட்மெண்ட் கொடுக்கக் கூடாது என்று செய்கிறார்களே அதே கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ? அந்த உதாரணத்தைப் பின்பற்றுவோம் என்று எங்களை அச்சுறுத்துகிறீர்களா? என்று கேட்கிறேன்” எனக் கோபமாக இளையபெருமாள் கேட்டார்.
”நம்முடைய முதல்வர் (எம்.ஜி.ஆர்) அவர்கள் இந்தியா பூராவும் கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். கள் இருப்பது தென்நாட்டில் தான், வடமாநிலங்களில் தென்னை மரங்கள் கிடையாது. இரண்டாவது சாராயம் கொண்டு வந்தார்கள் என்றார்கள்; சாராயம் கொண்டு வந்தது உண்மைதான்; யார் கொண்டு வந்தாலும், குற்றம் தான்.
அன்னை இந்திரா காந்தி ஏன் மதுவிலக்கைக் கொண்டு வரவில்லை; ஏன் நமக்குப் பணம் தரவில்லை என்று கேட்கிறார்கள். கேட்பதற்கு உரிமை உண்டு. கொடுக்கவேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் காங்கிரஸ் கட்சி அன்றைக்கே அதை ஆட்சேபித்து இருக்கிறது. அதற்கு மற்ற மாநிலங்கள் உடந்தையாக வரவேண்டும். வராவிட்டால் குற்றம் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
நாங்கள் 1952 முதல் 1967 வரையிலும் பல புதுத் திட்டங்களைக் கொடுத்தோம். இலவசமாக உணவு கொடுத்தோம், சீருடை கொடுத்தோம், கள்ளுக்கடைகளை மூடுவதிலே முழுவெற்றியை நாங்கள் பெற்றுவிட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால் வெற்றிபெற்றோம், மக்களுக்கு மதுவின் அச்சத்தை விளைவித்தோம், மக்கள் பயந்திருந்தார்கள்” என இளையபெருமாள் குறிப்பிட்டார்.
1983 இல் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு மீண்டும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. அந்த சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய இளையபெருமாள், “ஓட்டு என்ற பாவமான சுமையில் நாம் சிக்கிக் கொண்டதற்காகவே இந்த சட்டத்தை நாம் திருத்தச் சட்டமாக கொண்டு வந்து மதுவிலக்கை அமல்படுத்த பயப்படுவது நியாயமானது அல்ல, நேர்மையானது அல்ல, ஏழைகள் அவதிப்படுகிறார்கள். ஏழைகள் மட்டுமல்ல இளைஞர்கள்; பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் கூட கெட்டிருக்கின்றார்கள்.
சட்டத்திலே நாம் சொன்னோம் இத்தனை வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சாராயம் கொடுக்கப்பட மாட்டாது, அவர்கள் குடிக்காமல் இருப்பதற்கு அரசு வழி செய்திருக்கிறது என்று சட்டத்தில் சொன்னோம். ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன? அதுமட்டுமல்ல, இந்தக் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகள் முன்பிருந்த பொழுது கூட கிராமத்தில் ஒதுக்குப்புறமாக, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத முறையில் இருந்தன என்பது அமைச்சர் அவர்களுக்குத் தெரியும்.
அதுதான் உண்மையான நிலைமையும் கூட. ஆனால், இன்றைக்கு இருக்கிற நிலையிலே எல்லா இடங்களிலும் கடைகளுக்கு லைசன்ஸ் கொடுக்கப்படுவது மட்டுமல்ல, கடைகளுக்கு உள்ளே ப்ராஞ்ச் (கிளை) கடைகள் என்று வைத்துக்கொண்டு தெருத்தெருவாக மோர் விற்பதைப் போல, பதநீர் விற்பதைப் போல கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் விற்கப்படுகின்ற இந்த பாவமான காரியம் நடப்பது அரசாங்கத்திற்குத் தெரிகிறதா?” என அவர் கேள்வி எழுப்பினார். இந்த பாவச்சுமையை எத்தனை நாட்களுக்கு நீங்கள் சுமக்கப் போகிறீர்கள்?’ என ஆட்சியாளர்களைப் பார்த்து இளையபெருமாள் கேட்டார்.
“ஏழைகளைக் காப்பாற்றுவதற்காக இந்த சர்க்கார் வந்திருக்கிறது; பெண்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக இந்த சர்க்கார் வந்திருக்கிறது; குழந்தைகளுக்கு சத்துணவு போடுவதற்காக இந்த சர்க்கார் வந்திருக்கிறது – என்றெல்லாம் சொன்னீர்கள். அவன் தாயையும் தகப்பனையும் குடிகாரர்களாக ஆக்கிவிட்டு அவர்களை வீட்டிலே பட்டினி போட்டுவிட்டு அந்த குழந்தைக்கு சத்துணவு என்ற பெயரால் கொடுத்து அந்தக் குழந்தையையும் குடிகாரனாக ஆக்கக்கூடிய இந்த மதுக் கடைகளைக் கொண்டு வருவதில் பெரும் பாவம் இருக்கிறது.
அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்ற தெய்வத்தின் பேரால் சொல்லுகிறேன், வேதனையோடு சொல்லுகிறேன், ஏழைகள் வீதியிலே வாழ்ந்த மரியாதை கூட இல்லை. அவர்களிடமிருந்த வெண்கலப் பாத்திரம், பித்தளை பாத்திரம், எவர்சில்வர் பாத்திரம் – இன்னும் அவர்கள் ஆடைகள் அத்தனையையும் விற்றுக் குடிகாரர்களாக மாறுகிறார்கள் “ எனக் கடுமையாக இளைய பெருமாள் எம்.ஜி.ஆர் அரசை விமர்சித்தார்.
பீகாரில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதுவிலக்குக்குப் பிறகு பெண்கள்மீதான வன்முறை பெருமளவு குறைந்திருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது.2016 க்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் கைவிடப்பட்ட மதுவிலக்குப் பிரச்சாரத்தை இப்போது முன்னெடுக்க வேண்டிய தேவை அதிகம் உள்ளது. விஷச் சாராயம் அருந்தி மரக்காணத்தில் 22 பேரும், கள்ளக்குறிச்சியில் 69 பேரும் உயிரிழந்த நிகழ்வுகள் தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெருகிவரும் போதைப் பொருள் புழக்கத்தை ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உணர்த்துகின்றன. மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகள் இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதை உணர்ந்துதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது – போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை அக்டோபர் 02 ஆம் நாள் நடத்தவிருக்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ அரசு பல விதங்களில் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருப்பது உண்மைதான். ஆனால், மது ஒழிப்புக்கு நாம் பின்பற்ற வேண்டியது திராவிட மாடல் அல்ல, ‘பீகார் மாடல்’
( செப்டம்பர் 8: ஐயா எல். இளையபெருமாள் நினைவு நாள் )
கட்டுரையாளர் குறிப்பு:
டி.ரவிக்குமார் -விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஜோடிக்கு குழந்தை பிறந்தது!
42 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி – கமல்