ப.திருமாவேலன்
கொழுப்பெடுத்த கூமுட்டை ஒன்று, தான் பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பு ‘திராவிடம்’ பேசியதாகவும், பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார் என்றும் உளறித் திரிகிறது. அதைக் கேட்ட போது ‘ஆமைக் கறி’ நாற்றத்தை விடக் கேவலமாக இருந்தது. அவர்களே ‘திராவிட’ புலிகள் என்பது இந்த குணக்கேடனுக்குத் தெரியாது.
‘தமிழர்கள்'( திராவிடர்கள்)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் புலிகள் பங்கெடுத்தார்கள்.
11TH WORLD FESTIVAL YOUTH AND STUDENTS – IN CUBA – 1978 என்று அந்த மாநாட்டுக்குப் பெயர். We “LIBERATION TIGERS OF THAMIL EALAM” என்ற அறிமுகத்துடன் நான்கு பக்க அறிக்கையை அப்போது புலிகள் அங்கு தாக்கல் செய்தார்கள்.
அந்த அறிக்கையில் WHO ARE THAMILS ( DRAVIDIANS) என்ற தலைப்பில் இரண்டாவது பாரா உள்ளது. அதில், ”The Thamils have ancient culture and speak Thamil language which is one of the oldest languages of India that formed the Dravidian family spoken today in Thamil Nadu of india, Thamil Ealam of Ceylon, Singapore, Malaysia, Fiji Islands, South Africa and in other countries by more than 65 million people. In Ceylon Thamils are 3 million in number” – என்று குறிப்பிட்டுள்ளார்கள். ( அந்த அறிக்கையில் TAMILS என்பதில் ‘H’ இடம்பெற்றுள்ளது)
புலிச்சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

1976 ஆம் ஆண்டு புலிச்சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புலிச்சின்னம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் 1991 பங்குனி மாதம் வெளியாகி உள்ளது.
”புலிச்சின்னத்தை தமிழீழத்தின் தேசியச் சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும் தேசிய எழுச்சியையும் சித்தரிக்கும் ஒரு குறியீடு” ( பக்கம் 3) என்று அறிவிக்கப்பட்டது.
தனது போராட்டத்துக்கு அடித்தளம் தமிழார்வம் தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது. “அறிவுசார் மானிடத்தின் பொதுமூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோள்களின் படி தமிழார்வம் முகிழ்ந்துள்ளது. எமது விடுதலைப் போரும் தமிழார்வத்துக்கு இன்னுமோர் காரணமாகலாம்” ( விடுதலைப்புலிகள், 2007 பங்குனி சித்திரை) என்று அதிகாரப்பூர்வமான அமைப்பின் இதழ் எழுதியது.
திராவிடத் தமிழ் இராச்சியங்கள்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் அறிஞரான அன்ரன் பாலசிங்கம் அவர்கள், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் என்றே முந்தைய இலங்கையைக் குறிப்பிடுகிறார்.

”இலங்கைத் தீவானது தொன்மை வாய்ந்த இரு நாகரிகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பர்யங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகிறது. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம் வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது – தொன்மை வாய்ந்த திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள்.
இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில் நாகர், இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலைபெற்றிருந்ததாக சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன… இத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு( பக்கம் 14) என்று குறிப்பிடுகிறார் அன்ரன் பாலசிங்கம்.
பூர்வீகக் குடிகளான திராவிடத் தமிழர்களின் திராவிடத் தமிழ் இராச்சியங்களை சிங்களவர்களிடம் இருந்து மீட்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை எடுத்தார்கள். இவர்களை திராவிடத் தமிழர்கள் என்று தான் பாலசிங்கம் அழைக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முழு வரலாற்றுப் புத்தகத்திலேயே இது இருக்கிறது.
சின்னத்தில் ‘கருப்பு’ ஏன்?
விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் சின்னமாக மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகிய நிறங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமது வழிவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட மஞ்சளும், சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு புரட்சிகரப் போராட்டத்தின் நிறமாக சிவப்பும், மக்களின் மன உறுதியைக் குறிக்க கருப்பும் தேர்வு செய்ததாக தலைமை அறிவித்தது. ( விடுதலைப் புலிகள் 1990 வைகாசி)
சோசலிசப் பாதையே தனது அரசியல் பாதையாக பிரபாகரன் அறிவித்தார். ( 1986 இந்து இதழுக்கு அளித்த பேட்டி.) புரட்சிகரமான சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதை தமது விடுதலை இயக்கத்தின் இலட்சியமாகச் சொன்னார். வர்க்கம், சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிச தமிழீழம் திகழும்( விடுதலைப்புலிகள் 1986 நவம்பர்) என்று சொன்னார்.

மனுவை எதிர்த்த பிரபாகரன்
”பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது, வேதாந்தங்களையும் மத சித்தாந்தங்களையும் மனுநீதி சாஸ்திரங்களையும் அந்தக் காலங்கொண்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்கு முறையானது பெண்ணினத்தின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது” என்று உலக மகளிர் தினச் செய்தியாக பிரபாகரன் வெளியிட்டார்.( விடுதலைப்புலிகள் 1991 பங்குனி)
”பெண்ணடிமை வாதம் என்பது மூடநம்பிக்கைகளின் பிறப்பிடம். கருத்துலகம். பழமைவாதக் கருத்துகள் பெண்மையின் தன்மை பற்றிய பொய்மையை புனைந்து விட்டுள்ளது. தலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும் பழைமை என்றும் பண்பாட்டுக் கோலமென்று காலங்காலமாக மறைமுக இருளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்” ( விடுதலைப்புலிகள் 1992 பங்குனி) என்றும் பிரபாகரன் எழுதி இருக்கிறார்.
பிரபாகரன் தனது இறுதி மாவீரர் உரையில், ” சுதந்திரமும் சமத்துவமும் கூடிக் குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டு கொண்டான். சாதி,சமய, பேதங்கள் ஒழிந்த – அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற – சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய ஓர் உன்னத வாழ்வை கற்பிதம் செய்தான்” ( விடுதலைப்புலிகள் ஐப்பசி,கார்த்திகை) என்றே தனது கனவுகளை அறிவித்தார்.
மதச்சார்புக் கொள்கை
”தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கம் மதச்சார்பற்றது. தமிழ் இன ஒருமைப்பாட்டையும் தேசிய சுதந்திரத்தையும் லட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் மதச்சார்புடைய கொள்கையைக் கடைப்பிடிப்பது தவறானதாகும். இந்தக் குறுகிய மதவாதப் போக்கு தமிழ் இனஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். வழிபடுவதும் வழிபடாமல் விடுவதும் அவரவர்க்கே உரித்தான தனிமனித சுதந்திரமாகும். வழிபாட்டு உரிமையானது, மனிதனின் சிந்தனைச் சுதந்திரம் சார்ந்தது. இதை எமது இயக்கம் தடுக்காது” ( விடுதலைப்புலிகள் 1992 ஆடி,ஆவணி) என்று தமது இயக்கத்தின் கொள்கைத் திட்டமாக அறிவித்திருந்தார் பிரபாகரன்.
பிரபாகரன் கண்டித்த பார்ப்பனீயம்
1983 திம்பு பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு சொல்வதை பிரபாகரன் ஏற்க வேண்டும் என்று ரா உளவுப் பிரிவு அதிகாரியான சுந்தரம் கடுமையாக நிர்பந்தம் செய்தார். அதனை பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார். இந்த சுந்தரம், ஒரு பார்ப்பனர். இது தொடர்பாக கொளத்தூர் மணியிடம் பேசிய பிரபாகரன், ”திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்பை நமது முகாம்களில் சில புலிகள் கிண்டல் செய்வது உண்டு. திராவிட இயக்கத்தினர் பிராமணர்களை ஏன் இப்படி தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு இருந்தது. இந்த சுந்தரம் போன்றவர்களைப் பார்க்கும் போதுதான் எனக்குப் புரிகிறது. திராவிட இயக்கத்தவர்களின் பிராமண எதிர்ப்பில் நியாயம் புரிகிறது” ( பக்கம் 578, வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை) என்று சொல்லி இருக்கிறார்.
‘ஆரிய’ ஜெயவர்த்தனாவும் ‘திராவிட’ பிரபாகரனும்

ஈழத்தமிழர்களை 1980 களின் தொடக்கத்தில் படுகொலை செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தன்னை ஆரியராகவே சொல்லிக் கொண்டார். தமிழர்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தினார்.
1983 ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த அமிர்தபஜார் இதழில் நிருபர் அதிபர் ஜெயவர்த்தனாவை பேட்டி காணச் சென்றார். அவரிடம் ஜெயவர்த்தனா சொன்னார். ”நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியில் இருந்து வந்திருக்கிறீர்கள். எனவே சிங்களவர்களுக்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள சிறுபான்மையினர் (தமிழர்கள்) திராவிட இனத் தொடர்பு உள்ளவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்றார் ஜெயவர்த்தனா.
இதை குறிப்பிட்டு ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அன்றைய இந்தியத் தூதர் எஸ்.பார்த்தசாரதி, ”சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சிங்களவர் போராட்டத்தை ஆரிய – திராவிட போராட்டமாகவே கூறுகிறார்கள்” என்று எழுதினார். ( 31.8.1983 இந்து) இதற்கு பதிலளித்து ‘விடுதலை’ எழுதி தலையங்கம், ‘இது ஒரு ஆரிய திராவிடப் போர்’ என்று தலைப்பிட்டது.( விடுதலை 14.9.1983)
இதே கருத்தை மையமாக வைத்து புலிகளின் அதிகாரப்பூர்வமான ‘புலிகளின் குரல்’ வானொலியில் ‘இலங்கை மண்’ என்ற தொடரை கலை இலக்கியவாதியும் பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி தயாரித்து ஒலிபரப்பினார். இதற்கு எதிர்ப்பு வந்தபோது, இந்த நாடகத்தை இரண்டாவது முறையும் ஒலிபரப்பச் சொன்னார் பிரபாகரன். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பிரபாகரன் எழுதுகிறார்:
“மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்த்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது.
தான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கிவைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் என்று போதனை வேறு செய்தான்.
கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான். இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றி பெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது.
இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரியில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது” என்றார் பிரபாகரன்.
இவை எதுவும் இன்றைய கூமுட்டைகளுக்குத் தெரியாது.
திராவிடம் வளர்த்ததே ஈழம் தான்!
தந்தை பெரியார் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அவருக்கு இருபது வயது இருக்கும் போதே ஈழத்தில் ‘திராவிடக் குரல்’ எழுந்துவிட்டது. 1899 ஆம் ஆண்டு சபாபதி நாவலர் தனது மொழியியல் நூலுக்கு ‘ திராவிடப் பிரகாசிகை’ என்று பெயர் சூட்டினார். 1903 ஆம் ஆண்டு இலங்கைச் சரித்திர சூசனம் என்ற நூலை ஆ.முத்துத்தம்பி பிள்ளை எழுதினார். இலங்கையை திராவிட நாட்டார் (அதாவது தமிழ்நாட்டவர்) சிங்களத் தீவு என்று அழைத்ததாகத் தான் அந்தப் புத்தகத்தை தொடங்குகிறார். திராவிட மொழித் தொடர்புகள் குறித்து வி.கனகசபை ( 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்) விரிவாக எழுதி இருக்கிறார்.

இலங்கையின் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் கல்வெட்டில் பெருமகன், வேலு,மருமகன், ஆசிரியன், வணிகன், திராவிடன் ஆகிய சொற்கள் இருப்பதாக இலங்கை நான்காவது உலகத் தமிழ்மாநாட்டு மலர் (1970) கூறுகிறது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளர்ச்சிக் கழகத்தின் நான்காம் தமிழ் விழாவில் (1951) பேசிய தனிநாயகம் அடிகள், ‘இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என்று மொழிவதெல்லாம் திராவிடப் பண்பு, திராவிடநாகரிகம், திராவிட கலைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே’ என்று பேசினார். (உலகத்தமிழாய்வில் தனிநாயகம்) இந்த நோக்கத்துக்காகத் தான் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடக்கினார். இதுவே உலகத் தமிழ் மாநாடு நடத்தத் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ்மாநாட்டில் பச்சைப் படுகொலைகளை அரங்கேற்றியது சிங்களம். அதைப் பார்த்து கொந்தளித்தே புலிகள் உள்ளிட்ட போராளிகள் ஆயுதம் தூக்கத் தொடங்கினார்கள்.
குருமூர்த்தியால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இதனை அறிய மாட்டார்கள்.
நன்றி: முரசொலி
கட்டுரையாளர் குறிப்பு:

ப.திருமாவேலன் மூத்த பத்திரிகையாளர், கலைஞர் தொலைக்காட்சி’யின் ஆசிரியர். ‘