புனிதப் பாண்டியன்
மொழியை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் நெடுங்காலமாக இந்நாட்டை ஆட்கொண்டிருக்கிறது. மொழிவழி மாநிலங்களாக இந்திய மக்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒரே மொழி பேசும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களும், இந்தி பேசும் சில மாநிலங்களும் நிர்வாகக் காரணங்களுக்காகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
தவிர, தமிழர்கள் மீது மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாலும்; அண்டை மாநில அரசுகள் தம்முடன் பொதுவளங்களைப் பகிர்ந்துகொள்ள மறுக்கின்றன என்பதாலும் தமிழ்நாட்டின் அரசியல் பெரும்பாலும் தமிழ் மொழியை முன்னிறுத்தியே இயங்குகிறது.
தற்போது அரசியல் அரங்கில், தமிழியமும் திராவிடமும் வெவ்வேறானவை என்று சிலரால் முன்வைக்கப்படும் விமர்சனத்தை, மானுடவியலாளரும் ஒன்பது மொழிகளைக் கற்றறிந்தவரும் பாலி மொழிக்கு அகராதியை உருவாக்கியவருமான அம்பேத்கர் மறுக்கிறார். ‘திராவிடர் என்ற சொல் மூலச் சொல் அல்ல; தமிழ் என்ற சொல்லின் சம்ஸ்கிருத வடிவமே இச்சொல்.
தமிழ் எனும் மூலச் சொல் முதன்முதலில் சம்ஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது ‘தமிதா’ என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் ‘தமில்லா’ என்றாகி முடிவில் ‘திராவிடா’ எனத் திரிந்தது. ‘திராவிடா’ என்ற சொல், ஒரு மக்களுடைய மொழிப் பெயரேயன்றி, அது அம்மக்களுடைய இனத்தைக் குறிக்கவில்லை’ (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 7; பக்.299).
அதுமட்டுமல்ல, ஆரியர்கள் வருவதற்கு முன்னர் நாகர்களால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்த மொழியாகவும் தமிழ் திகழ்ந்தது என்கிறார் அம்பேத்கர். தவிர, வட இந்தியாவில் இருந்த நாகர்கள் தங்களுடைய தாய்மொழியான தமிழைக் கைவிட்டு, அதற்குப் பதில் சம்ஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடும் அம்பேத்கர், இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் திராவிடர் என்ற பெயர் தென்னிந்திய மக்களை மட்டுமே குறிக்க ஏன் பயன்படுத்தும்படி நேரிட்டது என்று புரிந்துகொள்ளலாம் என்கிறார்.
தென்னிந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரை, திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டதால் தங்களைத் திராவிடர் என்று அழைத்துக்கொள்ளும் முழுத் தகுதியை அவர்கள் பெற்றிருந்தனர் என்றும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
ஒரு காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் ஒரே மொழியைப் பேசும் மக்களாக நாகர்கள் இருந்தனர் என்பதும், அவர்கள் சம்ஸ்கிருதமயமாக்கத்தால் பல்வேறு மொழி பேசுகிறவர்களாகப் பிரிந்தனர் என்பதும், ஒரே இனத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆரியப் பண்பாட்டினால் பல்வேறு சாதிகளாகப் படிநிலைப்படுத்தப்பட்டனர் என்பதும் புலப்படுகிறது.
இந்திய மக்கள் தொன்றுதொட்டு மொழியுணர்வோடு இருப்பதாலேயே அயல்மொழி பேசும் மக்களைத் தங்களுடைய முதன்மை முரணாகக் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இது உண்மை எனில், ஒவ்வொரு மாநிலத்திலும் – ஒரே மொழியைப் பேசும் மக்கள் – எவ்வித ஒட்டுறவும் ஓர்மையுமின்றி ஏன் சாதி அடிப்படையில் பல நூறு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளனர்? அதுமட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் உள்ள வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் – தாங்கள் ஒரே வகை சாதியினர் – என்று எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்? மொழியைக் கடந்து சாதிய முரணே இங்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதே கசப்பான உண்மை.
தமிழியம், திராவிடம் என எந்த அரசியல் அடையாளமாக இருந்தாலும் அது அம்மக்களிடையே சமூக ஓர்மையை (Social conscious) உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு முதல் நிபந்தனை, நாம் ஒரே சமூகமாக மாற வேண்டும். ‘நெடுந்தொலைவில் இருப்பதால் ஒருவர் தன் சமூகத்தின் உறுப்பினராக இல்லாமல் போவதும் இல்லை; பல மனிதர்கள் நெருக்கமாக வாழ்வதாலேயே அவர்கள் ஒரே சமூகமாக ஆகிவிடுவதும் இல்லை…
மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவான அம்சங்களைப் பெறுகின்றனர். அதாவது, ஒரு சமூகமானது மனிதர்கள் கலந்துறவாடுவதால் மட்டுமே சமூகமாக இருக்கிறது’ என்கிறார் அம்பேத்கர் (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 1; பக். 51). ஆனால், தமிழர்கள் ஒரே சமூகமாக இல்லை; அவர்கள் ஒரே மொழியைப் பேசும் பல சமூகங்களாக (சாதிகளாக) இருக்கின்றனர்.
இந்நிலையை மாற்றத் தமிழ்கூறும் நல்லுலகம் முன்வராததால்தான் தமிழகத்தில் உள்ள 16 ஆயிரம் கிராமங்களில் பெரும்பாலானவை ‘ஊர்’ என்றும் ‘சேரி’ என்றும் பிரிந்திருப்பதோடு, அவை வெவ்வேறு சாதிக்கென தனித்தனி சுடுகாடு / இடுகாடுகளையும் கொண்டதாகவே அமைந்திருக்கின்றன. தவிர, பல்வேறு சாதிகளைக் கொண்ட ஊரிலும் சாதிகளைக் கடந்த (திருமணம், கலந்துண்ணல், பண்பாட்டு நிகழ்வுகள்) கலந்துறவாடல் என்பது இல்லை.
உலகின் எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் தமிழனுக்குப் பாதிப்பு என்றால் பீறிட்டெழும் மொழியுணர்வு, தாய்நாட்டில் இரு சாதிகளுக்கு இடையில் நடைபெறும் முரணாகும்போது, தான் சார்ந்திருக்கும் ஏதோ ஒரு சாதியின் சார்பு நிலையாகத்தான் நிலைபெறுகிறது. இதன் பொருள், தமிழ் – தமிழர் என்கிற அரசியல் ஓர்மை, ஒரு சமூக ஓர்மையாக மாறவில்லை என்பதுதான்.
எட்டரைக் கோடி தமிழர்களில் பெரும்பான்மையினருடைய பெயர்கள் தமிழில் இல்லை; தமிழ்வழிக் கல்வி பெயரளவிலேயே உள்ளது; வணிகக் கடைகளின் பெயர்ப் பலகைகளைத் தமிழ் அலங்கரிக்கவில்லை; கோயில் அர்ச்சனைகளில் தமிழுக்குப் பாரபட்சம்; தமிழர்களின் மரபுவழிக் கடவுளான முருகனைக் காட்டிலும் பிள்ளையாரையே தமிழர்கள் வணங்குகின்றனர்; தமிழனைக் கொன்ற நாளையே தமிழரின் தலையாய திருநாளாகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர் என்றெல்லாம் ஆதங்கப்படும் தமிழ் உணர்வாளர்கள், தமிழர்தம் பண்பாட்டு நிகழ்வான ஏறு தழுவுதலில் வெளிப்படும் சாதிப் பாகுபாடு குறித்தோ, தமிழர்களிடையே தீவிரமாகப் பின்பற்றப்படும் சாதி அகமண முறை குறித்தோ, கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழர்களிடையே அதிகரித்துவரும் ஆணவப் படுகொலை குறித்தோ, தென்னிந்திய நதிகளின் இணைப்பைவிட முதன்மையான ஊரையும் சேரியையும் இணைப்பது குறித்தோ கவலைப்படுவதில்லை.
இதன் உச்சமாக, பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் பிறவி இழிவை முற்றாக ஒழிப்பது குறித்து வலியுறுத்தியதை, தமிழ்த் தேசியவாதிகள் குறைந்தபட்சம் விவாதிக்கக்கூட முன்வருவதில்லை.
மொழியை முதன்மை முரணாகக் கொண்டால், அது அயல்மொழி பேசுவோரைப் பகை முரணாக்கும். அத்தகைய மொழித் தூய்மைவாதத்தின் ஆபத்தைத் தமிழகம் அண்மையில் உணர்ந்தது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களான அருந்ததியர்களுக்குக் கூடுதலாக ஒரு மொழி தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக, அவர்களை வந்தேறிகள் என அது அடையாளப்படுத்தியது. ஆனால், சாதியத்தை முதன்மை முரணாகக் கொண்டால், அது சாதியை ஒழித்து சமூக நீதிக்கும் சகோதரத்துவத்துக்கும் வழிவகுக்கும். அதைத்தான் திராவிடம் வலியுறுத்துகிறது; ஆண்ட பெருமைகளை அல்ல.
இந்நிலையில், இந்தியா முழுவதும் பேசப்பட்ட தமிழ், சம்ஸ்கிருதமயமானதற்குத் திராவிடத்தை எப்படி எதிர்க்க முடியும்? பெரியார் முன்னிறுத்திய திராவிடம் என்கிற கோட்பாடு மட்டும்தான் தமிழர்களின் தொன்மங்களை நேர்மறையாக விமர்சித்து, தமிழை அறிவியல் மொழியாக்க விழைந்ததோடு, பல்வேறு மொழிச் சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்தியது.
பிறவி இழிவான சாதியை ஒழிப்பதையே தம் இறுதி இலக்காகக் கொண்டு இடையறாது பரப்புரை செய்ததோடு, அதற்கான கருத்தியல் ஆதாரங்களையும் செயல்திட்டங்களையும் வகுத்தது. ஆட்சியைக் கைப்பற்றுவது அதன் நோக்கமல்ல என்பதிலிருந்தே அதன் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
தமிழர்களிடையே நீக்கமற நிறைந்திருக்கும் முதன்மை முரணான சாதியை ஒழிக்காமல் தமிழன் ஓர்மை பெற முடியாது. தமிழ்த் தேசிய உணர்வும் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்கிற முழக்கமும் நாம் தமிழர் என்ற உணர்வுமே சாதியை ஒழித்துவிடும் எனில், திருவள்ளுவர் காலத்தின் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அறம் என்றோ தமிழர்களின் வாழ்க்கை முறையாக மாறியிருக்கும். ஆனால், அது இன்றளவும் அகமணத் திருமண அழைப்பிதழ்களின் அலங்காரமாகவே இருக்கிறது. அக்குறளின் அறவுரை அயல்மொழியினருக்கானது அன்று.
‘சாதி தேசத்துக்கு எதிரானது’ என்றார் அம்பேத்கர். சாதியை ஒழிக்காமல் நாம் எப்படி ஒரு தேசமாகப் பரிணமிக்க முடியும்? சாதி ஒழிப்பே நம்மைச் சாதியற்ற தமிழ்ச் சமூகமாக மாற்றும். தமிழர்களின் சிந்துசமவெளியும் கீழடியும் இறந்தகாலப் பெருமிதமாக இல்லாமல், நிகழ்கால அனுபவமாகத் திகழ வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு :
புனிதப் பாண்டியன்
தலித் முரசு இதழின் ஆசிரியராக உள்ளார்.
தொடர்புக்கு: dalitmurasu@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை எதிரொலி : இன்று எந்நெந்த மாவட்டங்களில் விடுமுறை தெரியுமா?
பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள்: என்ன காரணம்?
கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
டாப் 10 நியூஸ் : ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல் முதல் பன்னீர் தம்பி வழக்கில் தீர்ப்பு வரை!
ஹெல்த் டிப்ஸ்: காலை உணவுக்கு ‘டீ’யும் ‘பன்’னும் போதுமா?
பியூட்டி டிப்ஸ்: ரோஜாப்பூக் கன்னங்களுக்கான ரோஸ் வாட்டர்… நீங்களே செய்யலாம்!