சத்குரு
குழந்தை பெற்றுக் கொள்வது அனைத்து பெற்றோருக்கும் சந்தோஷம்தான் என்றாலும், அக்குழந்தையை வளர்த்தல் என்று வரும்போது, “ஏன்தான் குழந்தை பெற்றுக்கொண்டோமோ?” என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு வந்துவிடுகிறது. “குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்க வேண்டும்” என்கிற எதிர்பார்ப்பும்கூட இதற்கு காரணம் என்கிறார் சத்குரு.
குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அனைத்தையும் கேள்வி கேட்கப் பழக வேண்டும். சந்தேகக் கண்ணோடு இல்லாமல், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான ஆர்வத்தோடு அவர்கள் கேள்வி கேட்கவேண்டும்.
உங்கள் குழந்தையின் மனதில் அவன் எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற எண்ணம் வந்துவிட்டால், உங்களையும், நீங்கள் நடக்கும் வழிகளையும் நல்லவிதமாக கேள்வி கேட்பதற்கு நீங்கள் அவனை அனுமதித்தால், உங்கள் குழந்தை தன்னுடைய புத்திசாலித்தனத்தை தொடர்ந்து பெருக்கிக் கொள்ளமுடியும்.
அவனுடைய உடலை உறுதி செய்வதற்குத் தேவையான வழிமுறைகளையும், துடிப்பான புத்திசாலித்தனத்தையும், உங்களால் கொடுக்க முடிந்த அளவுக்கு தரமான கல்வியையும் அவனுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இல்லாமல், மிகுந்த அன்புடன், மிகவும் வெளிப்படையான சூழ்நிலையில் இருந்தால், ஒரு குழந்தை இயல்பாகவே நன்றாகத்தான் வளரும். அதோடு அவனுக்கென்று எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் இருந்தால்,அவனுடைய புத்திசாலித்தனத்தை எதனோடும் அடையாளப்படுத்தாமல் இருந்தால், அவன் அனைத்தையுமே ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருப்பான். தன்னுடைய வாழ்க்கையில் சிறந்ததையே அடைவான்.
குழந்தைகள் சொல் பேச்சுக் கேட்க வேண்டுமா?
சொல் பேச்சுக் கேளாமை கூட குழந்தைகளுக்கு அழகுதான்! இருந்தாலும், நீங்கள் சொல்லும்படி உங்கள் குழந்தைகள் கேட்க வேண்டும் என நினைத்தால், எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். என் பெற்றோர் சொன்னாலுமே எதற்கு என்று தெரியாமல் நான் கூட எதுவும் செய்ததில்லை. புரிய வைத்துவிட்டால், பிறகு அவர்களே செய்து விடுவார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அதைப் புரிய வைக்காமல் வெறுமனே நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என நினைத்தால் இருவருக்குமே உயிர் போகும். திணிப்பதில் உங்கள் உயிர் போகும், ஏமாற்றுவதில் அவர்கள் உயிர் போகும்.
முத்திரை குத்தலாமா?
குறைபாடுள்ள குழந்தைகள் என்று யாரும் இல்லை. அவர்கள் மாற்றுத் திறனாளிகள். இங்கு பல்வேறு விதமான உடல்களும், மனங்களும் இருக்கின்றன. அவற்றை முத்திரைக் குத்தத் தேவையில்லை. குழந்தைகள் வெவ்வேறு விதங்களில் பிறக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனும் ஒருவிதமான வாய்ப்புடன் பிறந்திருக்கிறான். அவனால் என்ன சாதிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் நமது தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், அரசியல்துறை, போன்ற அனைத்திலும் நாம் உற்பத்தி கெடுவை நிர்ணயித்துவிட்டதால், அதற்கேற்ற மனிதர்கள்தான் நமக்குத் தேவை. அதனால் சில மனிதர்களை நாம் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்து விடுகிறோம்.
இப்படி குழந்தைகளை முத்திரை குத்துவது கொடூரமான குற்றம். இதே குழந்தைகள் பழங்குடி இனத்தில் பிறந்திருந்தால், அந்த இனத்தின் மூத்தவர்கள் “இந்தக் குழந்தையால் இதை மட்டும்தான் செய்ய முடியும்,” என்று புத்திசாலித்தனமாக யோசித்திருப்பார்கள். அந்தக் குழந்தையை அந்த மாதிரியான வேலையில் ஈடுபடுத்தியிருப்பார்கள். அவர்களை கடினமான வேலைகளில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தியிருக்க மாட்டார்கள்.
எனவே ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு செயலைச் செய்யும் அளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நிர்ணயிக்கிறீர்கள். அதை அவரால் செய்ய முடியாமல் போகும் போது, அவர்களை நீங்கள் முத்திரை குத்துகிறீர்கள், என்றால் குறைபாடுள்ளது அந்தக் குழந்தையல்ல, இந்த சமுதாயம்தான். அந்தக் குழந்தைகளுக்கு முத்திரை குத்தத் தேவையில்லை. முத்திரை குத்துவதன் குறிக்கோள் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான கவனமும், அக்கறையும் கொடுப்பதாக இருக்கலாம். இருந்தாலும், அந்த முத்திரை அவர்களுக்கு நன்மை செய்வதை விட இன்னும் அதிகமான சேதத்தைத் தான் விளைவிக்கிறது.
கற்றுக் கொள்வதற்கான நேரம், கற்றுக் கொடுப்பதற்கான நேரம் அல்ல!
பிழைப்புக்கான சில தந்திரங்களைத்தான் உங்களால் குழந்தைக்குக் கற்றுத் தர முடியும். உங்களையும் குழந்தையையும் ஒப்பிட்டுப் பார்த்து, யார் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதற்குத் தகுதியானவர், நீங்களா அல்லது உங்கள் குழந்தையா என்று பாருங்கள். உங்களை விட அவன் அதிக மகிழ்ச்சியோடு இருந்தால், வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று ஆலோசனை சொல்வதற்கு யாருக்கு தகுதி அதிகம், உங்களுக்கா அல்லது அவனுக்கா? எனவே, ஒரு குழந்தை வரும்போது, அது கற்றுக் கொள்வதற்கான நேரம், கற்றுக் கொடுப்பதற்கான நேரம் அல்ல.
உங்கள் குழந்தை வளர்வதற்கு அவசரப்படாதீர்கள்…
ஒரு குழந்தை, குழந்தையாகவே இருப்பது மிக முக்கியமானது. அவனை ஒரு இளைஞனாக்குவதற்கு எந்த அவசரமும் இல்லை, ஏனென்றால், அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. அவன் குழந்தையாக இருக்கும்போது, குழந்தையைப் போல நடந்து கொண்டால், அது அற்புதமானது. அவன் இளைஞனான பிறகும், குழந்தையைப் போல நடந்து கொண்டால், அது அற்பமானது, அது வளர்ச்சி குன்றிய ஒரு வாழ்க்கை. அதனால், ஒரு குழந்தை இளைஞனாவதற்கு எந்த அவசரமும் இல்லை.
கேட்டதெல்லாம் வாங்கித்தந்தால்…
குழந்தையை அன்பாக வளர்ப்பது என்றால் அவன் கேட்பதையெல்லாம் வாங்கித் தருவது என்று பெற்றோர் நினைத்துக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், அவன் கேட்பது எல்லாவற்றையும் வாங்கித் தருவது என்பது முழு முட்டாள்தனம் என்பது புரியும். இதற்கு நீங்கள் ‘அன்பு’ என்று பெயர் சூட்டுகிறீர்கள். பிறகு எப்படித்தான் குழந்தையை வளர்ப்பது? எந்த சூழ்நிலையில் தள்ளப்பட்டாலும், அவன் ஆனந்தமாக வாழவேண்டும். அந்த மாதிரி அவனை வளர்க்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று உங்களுக்கே தெரியாது. தினந்தோறும் உங்கள் வீட்டில், பதற்றம், கோபம், பயம், ஆற்றாமை, பொறாமை போன்றவை அரங்கேறிக் கொண்டிருந்தால், அவனும் இதைத்தான் கற்றுக் கொள்வான். உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நினைப்பு இருந்தால், நீங்கள் இப்போது இருக்கும் வழியை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள முடியாவிட்டால், உங்கள் குழந்தையை வளர்ப்பதைப் பற்றி என்ன செய்யமுடியும்?
உங்களை உண்மையில் விரும்பத்தக்க அளவுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்
குழந்தைகள் எப்போதும் தொலைக்காட்சி, அண்டை அயலார்கள், ஆசிரியர்கள், பள்ளி, வீதி, மற்றும் பல தாக்கங்களுக்கு உள்ளாகிறான். யாரை அவன் மிகவும் வசீகரமானவர் எனக் கருதுகிறானோ, அவன் அவர்கள் வழியில்தான் செல்வான். எனவே, உங்களை அவன் விரும்பத்தக்க அளவுக்கு மாற்றிக் கொண்டு, பெற்றோருடன் இருப்பதற்கு அவன் ஆசைப்படும்படி செய்யுங்கள். உங்களை நீங்கள் ஒரு மகிழ்ச்சியான புத்திசாலியான, அற்புதமான மனிதராக வெளிப்படுத்தினால், அவன் வேறெங்கும் சென்று துணை தேட மாட்டான். எதுவாக இருந்தாலும், அவன் உங்களிடம்தான் வந்து கேட்பான்.
தினந்தோறும் பயத்தையும், பதட்டத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது, அல்லவா? அவர்களும் அதையேதான் கற்றுக் கொள்வார்கள். உங்களை ஒரு அமைதியான, அன்பான மனிதராக மாற்றிக் கொண்டு, அவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு சூழலை உருவாக்குவதுதான் உங்களால் செய்ய முடிந்த சிறந்த செயலாக இருக்கும்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முழுமையான நிறைவான வாழ்க்கை என்றால் என்ன?
கிச்சன் கீர்த்தனா: மோர் ஆப்பம்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: ராகுல்காந்தி வேதனை!
சென்னை உயர் நீதிமன்றம் : 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!
வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!