காதல், அன்பு, பக்தி… வித்தியாசம் என்ன?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

காதலின் அழகே உங்களுக்கு என்ன கிடைத்தது, உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதில் இல்லை. நீங்கள் தனியாக அமர்ந்து, ஒருவர் மீதான உங்களின் ஆழமான அன்பை, அவருக்கு உயிரையும் கொடுக்க துணிந்ததை நினைத்தால் அது மிகவும் அழகான தருணமாகிறது. அவர்கள் அளித்த பெரும்பரிசோ வைர மோதிரமோ உங்களுக்கு பொருட்டில்லை.

நிபந்தனையில்லாத அன்பு என்கிற பெயரில் தங்களை சிலர் மிதியடிபோல் பயன்படுத்துகிறார்கள், நிபந்தனையில்லாத அன்பு சாத்தியமா என்று ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். இன்று பெரும்பாலும் அன்பு என அறியப்படுவது பரஸ்பர சகாயத் திட்டம் போலத்தான் செயல்படுகிறது.

“எனக்கு நீ இதைக்கொடு, உனக்கு நான் இதைக் கொடுக்கிறேன். எனக்கு நீ இதைத் தராவிட்டால் உனக்கு நான் இதைத்தர மாட்டேன்.” இதை வெளிப்படையாகச் சொல்வதில்லையே தவிர, மனிதர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

மனிதர்களுக்குப் பலவிதமான தேவைகள் உள்ளன. உடல் சார்ந்து, மனம் சார்ந்து, உணர்வுகள் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, சமூகம் சார்ந்து எவ்வளவோ தேவைகள். அந்தத் தேவைகளை பண்டமாற்று வியாபாரம் போல் செய்வதற்குக் கூச்சமாக இருப்பதால், அதற்கு அழகும் இனிமையும் சேர்க்கும் விதத்தில் அன்பு, காதல் போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

அவரவர் தேவைகளை அழகியல் கலந்து நிறைவேற்றிக்கொள்ளும் சாமர்த்தியமான வழிகள் இவை. இது சரியென்றோ தவறென்றோ நான் சொல்லவில்லை. வாழ்வில் காணப்படும் நிதர்சனமான உண்மைகள் இவை. சராசரியாக ஓர் ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்தி, தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு, குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்க, சாதாரண நிலையிலான அன்பு போதும். இரண்டு உயிர்களை ஒன்றாக்கி உச்சக்கட்ட ஒருமையை உருவாக்கும் துணிவோ தகுதியோ பலருக்கும் இல்லை.

Difference between Love Affection and Devotion

நிபந்தனையில்லாத அன்புக்கு ஒருவர் தயாராக இருந்து இன்னொருவர் தயாராக இல்லையென்றால், தான் மிதியடிபோல் பயன்படுத்தப்படுவதாக ஒருவர் எண்ணக் கூடும். ஆனால், உச்சக்கட்ட ஒருமைக்கு வழி காதல் என்று நம்புகிறவர்கள் தாங்கள் ஒரு மிதியடி போல் பயன்படுத்தப்படுவதைக்கூடப் பொருட்படுத்த மாட்டார்கள்.

பாரத நாட்டின் கலாச்சாரத்தில் உள்ள பழக்கம் என்னவென்றால், பலரும் தங்கள் பெயர்களை அடிமை என்று வைத்துக் கொள்ளும் துணிவு. துளசிதாஸ், கிருஷ்ணதாஸ் என்று பல தாசர்கள். இவர்களுக்கு தங்களை மிதியடியாகப் பயன்படுத்துவார்களோ என்கிற அச்சம் கிடையாது. இது உச்சபட்ச ஒருமைக்கான அன்பே தவிர உலகியல் தேவைகளுக்கான அன்பல்ல.

அன்பு ஓர் எல்லையைக் கடக்குமானால் வெறுமனே நீங்கள் காதல் வயப்பட்டால்கூட மற்றொருவரின் ஆளுகைக்கு உட்படுகிறீர்கள். ஆங்கிலத்தில் இதனை காதலில் விழுவது என்கிறார்கள். நீங்கள் விழுகிறபோது பிறர் உங்களைவிட மேலெழுவார்கள். மிதித்தும் செல்வார்கள். காதலில் விழுவது என்ற சொல் அழகானது மட்டுமல்ல, அர்த்தமுள்ளதும் கூட.

காதலில் எழுவது பற்றியோ, மேலெழுதல் பற்றியோ, பறத்தல் பற்றியோ அவர்கள் சொல்லவில்லை. ஏனெனில் உங்களுக்குள் அன்பை நீங்கள் ஆழமாக உணரத் தொடங்கும்போது “நான்” என்னும் முனைப்பு விழுந்து விடுகிறது. காதலின் அழகே உங்களுக்கு என்ன கிடைத்தது, உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதில் இல்லை.

நீங்கள் தனியாக அமர்ந்து, ஒருவர் மீதான உங்களின் ஆழமான அன்பை, அவருக்கு உயிரையும் கொடுக்க துணிந்ததை நினைத்தால் அது மிகவும் அழகான தருணமாகிறது. அவர்கள் அளித்த பெரும்பரிசோ வைர மோதிரமோ உங்களுக்கு பொருட்டில்லை. அப்படி இருக்கையில் நீங்கள் மிதியடியாக மட்டுமல்ல, அவர்களின் பாதத் துகளாக இருக்கவும் சம்மதிப்பீர்கள்.

நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. இப்படித்தான் அன்பு பக்தியாக முதிர்கிறது. காதலில் கூட நீங்கள் மீள்வதற்கென்று சில வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், ஒரு பக்தராகி விட்டால் மீளமுடியாது. பக்தரென்றால் குறிப்பிட்ட மதத்திற்கோ நம்பிக்கைக்கோ அல்ல. பக்தரென்றால் இன்னாரின் பக்தர் என்றில்லை. அது ஒரு தன்மை. ஒன்றின் மேல் முழு கவனக்குவிப்புடன் இருக்கிறீர்கள் என்று பொருள். ஒருவர் பக்திமயமாக ஆகிவிட்டால் அவருடைய எண்ணங்கள், உணர்வுகள் என அனைத்தும் ஒரே திசையில் குவிகின்றன.

அவருக்கு கருணை தானாக நிகழ்கிறது. அவர் ஏற்கும் தன்மையில் இருக்கிறார். பக்தர் என்றால் அவர் எதன் மீது பக்தியுடன் இருக்கிறாரோ அதில் கரைந்து போக விரும்புகிறார் என்று பொருள். ஒரு பக்தர் என்ற முறையில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று நீங்கள் பார்ப்பதில்லை. நீங்கள் யாருக்காவது மிதியடியாக இருக்கிறீர்களா அல்லது யார் தலையிலாவது மகுடமாக இருக்கிறீர்களா என்று கவலைப்படுவதில்லை. இது முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் நிகழும் தன்மை.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

பாஜக செயற்குழு: திமுக அரசுக்கு எதிராக தீர்மானம்!

சாம் கரன்,ஷாருக் அதிரடி:ராஜஸ்தான் அணிக்கு வலுவான இலக்கு!

வாடகை அறை முதல் உச்ச நீதிமன்றம் வரை… யார் இந்த கே.வி.விஸ்வநாதன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.