ஸ்ரீராம்சர்மா Dear Diwali – sri ram Sharma article
உழைக்கும் மக்கள் தளர்ந்து போய்விடாதபடி அவர்தம் வாழ்க்கையின் தோள்களை தட்டிக் கொடுத்தபடி நகரச் சொல்லப் படைக்கப்பட்டது தான் பண்டிகைகள்.
பாரதமெங்கிலும் பரந்து கொண்டாடப்படும் திருநாளாகிறது தீபாவளி !
சிறுவாடும் – சீட்டு ஃபண்டுமாக சிறுகச் சிறுகச் சேர்க்கும் தாய்மார்கள் – பழவண்டிதள்ளுவோர் – தெருவோரம் செருப்புதைப்பவர் என எவராக இருந்தாலும் தீபாவளி திருநாளினை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. நடைபாதை கடைகளிலாவது தன் குடும்பத்துக்கான புதுத்துணியினை எடுக்காமல் விடுவதில்லை.
ஆம், மானுடவியலில் கொண்டாட்டம் என்பது பெருங்கூறு.
ஏழை எளியோர் இல்லார் ஏதிலாரென எல்லோர்க்குமான கொண்டாட்டமாக நிறைந்திருந்தால் மட்டுமே அது மானுட கொண்டாட்டமாகும். ஒட்டு மொத்த சமூகமும் கூடிக்கொண்டாடினால் மட்டுமே அது தீபாவளியாகும்!
இந்த உயர்ந்த கருத்தினை தன்னகத்தே கொண்டவராய்..
தந்தைகளை இழந்து அன்னையரின் அரவணைப்பில் வாழும் எளிய பிள்ளைகளை ஒன்று கூட்டி – தீபாவளித் திருநாளை கொண்டாடிக் களித்த மாண்புமிகு வானதி ஸ்ரீனிவாசனின் வீடியோ ஒன்றினைக் கண்டேன். மனம் கசிந்தேன் !
திடுமென கொரானா நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் வேலுநாச்சியின் வீரக்குதிரைபோல் வெடுக்கென எழுந்து நின்றவர் ‘வீறு,வீறு’ என சமூகம் சார்ந்து செயலாற்றும் வேகம் கண்டு மனம் நெகிழ்ந்து நிறைந்து போனேன்!
‘மோடி மகள்’ எனும் தலைப்பினை தாங்கிய அந்த வீடியோ அரசியல் சாயம் பூசியதுதான். எனினும், அதன் நியாயத்தை எத்துனை வாழ்த்தினாலும் தகும் என்பேன். காரணம் உண்டு.
அக்டோபர் 6, 2022 ல் மின்னம்பலத்தில் வெளியாகிய எனதொரு கட்டுரையின் நீட்சியாகிறது வானதியம்மையின் அந்த நெகிழ்ச்சியான செயல்பாடு.
அந்த மின்னம்பலக் கட்டுரையின் ஓர் பகுதி கீழ் வருமாறு…
*****
“சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய மண்ணில் தொழிலதிபர் ஒருவரை சந்தித்தேன். பெட்டாலிங் ஜெயாவில் மிகப்பிரசித்தமான இஸ்லாமியர் அவர்.
கலைகளின்பால் ஈடுபாடு கொண்ட அவர் அன்றைய நாளில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக ஃபைனான்ஸ் செய்து வந்தவர் .
இறைவசமான ஓர் நாளில் சூஃபி துறவி ஒருவரை சந்தித்தார். அந்த நாள் முதல் வட்டிக்கு விடுவதை சட்டென நிறுத்திக் கொண்டவர் அன்று முதல் பெருங்காரியம் ஒன்றை மனமுவந்து செய்யத் துவங்கினார்.
தன்னிடமிருந்த முன்னூற்றுசொச்சம் தொழிலாளிகளில் முப்பதுபேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பகுதிநேர வேலை ஒன்றைக் கொடுத்தார்.
அதன்படி, தமிழகத்தில் பின்தங்கிய முப்பது கிராமங்களை அடையாளம் கண்டு ஒவ்வொன்றிலும் முப்பது ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தகுடும்பத்து சிறுவர் – சிறுமியரின் பட்டியலையும், அவர்களது உடை அளவுகளையும் எடுக்கச்செய்து, நகரத்தின் சிறந்த டைலர்களைக் கொண்டு அவர்களுக்கான உடைகளை தைக்கச்சொல்லி, அவைகளை இனிப்பு வகைகளோடு தனித்தனியே வண்ண அட்டைப் பெட்டியில் அடைத்து,
ரம்ஜானுக்கு முந்தைய நாளில் – அன்பும் அரவணைப்புமாக வீடுதேடிச் சென்று கொடுக்கச் செய்தார்.
அந்தத் தருணம்–விடியலை நோக்கிக் காத்திருக்கும் அந்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் “யாஅல்லாஹ்” என எழுப்பும் அந்தக் கொண்டாட்ட கூச்சல்களின் ஊடே தன் வாழ்க்கை அர்த்தப்பட்டுவிட்டதாகக் கொண்டு நிறைந்தார். இன்று வரை அதனைத் தொடர்கிறார்”.
*******
கவனியுங்கள்…
தனிப்பட்ட ஒருவரின் செயல், இந்த உலகமானது பேரன்பின் வழிபட்டது எனும் உன்னத நம்பிக்கையை ஆயிரம் குழந்தைகளின் அடிமனதில் ஆழ விதைக்க முடியும் எனில்,
தமிழ்நாட்டை கட்டியாளும் பெருங்கட்சிகள் தங்கள் மாவட்ட செயலர் தொடங்கி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் வரையிலான முக்கியஸ்தர்களுக்கு அறிவுரை சொல்லி மானுடம் போற்ற முன்வந்தால்…
“இந்த உலகமானது பேரன்பின் வழிபட்டது“ எனும் குதூகல நம்பிக்கையை பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் உள்ளங்களில் ஊன்றி விதைத்து விடலாம் அல்லவா!
ஒவ்வொரு ஊராட்சியிலும் வசதிப்பட்ட இருவர் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் மனம்வைத்து முனைந்தால் குறைந்தது பத்து குழந்தைகளின் கொண்டாட்டக்கனவையேனும் நிறைவேற்றிவிட முடியும் அல்லவா !
அதற்குத்தேவை மானுடம் சுமந்த மனம் !அந்த மானுட மனதை உசுப்பவல்லதொரு அரசியல் தலைமை !
வல்லதொரு கட்சியினால் நாடு தழுவிய போராட்டம் ஒன்றை அறிவித்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும் எனில், மானுடம் தழுவிய இந்த நல்லகாரியத்தையும் செய்துவிட முடியும் தானே !
ஒரு போராட்டம் என்றால் மேடை, ஒலிபெருக்கி, ஃப்ளக்ஸ்பேனர்கள், கொடிகள் என குறைந்தது இருபது ஆயிரமாவது செலவாகுமே. அந்தப் பணத்தைக் கொண்டு குறைந்தது பதினைந்து குழந்தைகளின் வண்ணக்கனவுகளை வழிமொழிந்துவிடலாமே !
அதன்மூலம் நாட்டு மக்களிடம் அன்பு போர்த்திய ஒன்றிணைவை உண்டாக்கி விட முடியுமே! கட்டமைப்புமிக்க அரசியலாளர்கள் முயன்றால் முடியாதது உண்டா?
அன்போடுஇயைந்தவழக்கென்பஆருயிர்க்கு
என்போடுஇயைந்ததொடர்பு.
என்பார் திருவள்ளுவப் பேராசான்.
அன்புடன் செய்யப்படும் எந்தச்செயலும் உடலுடன் உயிர்கொள்ளும் தொடர்புக்கு இணையானதாகும்.
மீண்டும், மீண்டும். சொல்கிறேன் இங்கே ஆயிரம் மதங்கள் இருக்கலாம். அதற்கு ஆயிரமாயிரம் தலைமைகள் இருக்கலாம். மக்களுக்கான பொது மதம் அன்பு ஒன்று தான்! அதன் கோட்பாடு கொண்டாட்டம் மட்டுமே தான் !
குறித்துக் கொள்ளுங்கள். கொண்டாட்ட நாளை சுகப்படுத்தி வைக்கும் எவரையும் இந்த சமூகம் என்றென்றும் நன்றியொடு வரித்துக்கொள்ளும். கொண்டாடும் !
ஸ்ரீராம் சர்மா – Oct 6, 2022
அன்று எழுதப்பட்டவைகள் எல்லாம் எளியதோர் எழுத்தாளனின் ஆவலாதிதான்.
அதில் நியாயம் என்று ஒன்றிருந்தால் அதனை ஈடேற்றி வைக்கவேண்டிய கடமையின்பாற்பட்டிருப்பவர்கள் யாவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ’அதிகாரம்’ எனும் அந்தஸ்தை கொண்டவர்கள் தான்.
அவர்கள் முதலில் மின்னம்பலத்தை படிக்க வேண்டும். பிறகு அதில் நியாயம் உண்டெனில் அதனை செயல்படுத்தும் உள்ளம் படைத்தவர்களாய் இருக்க வேண்டும்.
இவ்விரண்டுகுணங்களையும் கொண்ட வானதி அம்மையை எத்துனை போற்றினாலும் தகும். மாண்புமிகு வானதி அவர்களால் தத்தெடுக்கப்பட்ட தோழமைகள் உள்ளிட்டமற்ற அனைவருக்கும் எனது நெஞ்சம் நெகிழ்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
அதிகாலை பட்டாசு வெடிக்கட்டுமே !
புதுப்புதுக் கதவுகள் திறக்கட்டுமே !
கட்டுரையாளர் குறிப்பு:
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். Dear Diwali – sri ram Sharma article
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இஸ்ரேலை தொடர்ந்து… ஒரு லட்சம் இந்தியர்களை கேட்கும் தைவான்!
தீபாவளிக்கு மழை இருக்கா?: வானிலை நிலவரம்!