அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!

சிறப்புக் கட்டுரை

அப்பாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சட்டப் போராட்டத்தில் ஜெயித்துக் காட்டியிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுமி.

பெரும்பாலான வீடுகளில் அம்மாவுக்கு மகன்களும், அப்பாவுக்கு மகள்களும் செல்லப்பிள்ளைகளாக இருப்பது வழக்கம்.

அதனால்தான் அப்பாக்களுக்கு மகள்கள் எப்போதுமே தேவதைகளாகத் தெரிவதுடன், அவர்களுடைய உறவு, உலகில் பிரிக்கவே முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. இதைவைத்து, ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் அப்பாவின் முன்பு’ என்று சொன்னால் மிகையாகாது.

மகள் ஆசைப்படுவதை நிறைவேற்றும் தந்தை, அவருடைய கனவை நிறைவேற்றத் துடிக்கும் மகள் என இருவருக்கும் இடையே உள்ள ஒருவிதமான அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

லாலு பிரசாத்துக்கு உதவிய மகள்!

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைக் கைதியான அவர், தற்போது மருத்துவச் சிகிச்சைக்காக ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

லாலு பிரசாத் யாதவுக்கு, சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை (kidney transplant) செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், அவருடைய இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா, தன் தந்தைக்கு சிறுநீரகம் (kidney) அளித்து ஆச்சர்யம் அளித்தார். இந்தியாவில் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பல விதிகள் உள்ளன.

Daughters protecting fathers Kerala girl wins legal battle
லாலுவுடன் மகள் ரோகினி ஆச்சார்யா

உறவினர்கள் தானம் அளிக்கவில்லை என்றால் பிறருடைய உடலுறுப்பு தானங்களைப் பெறுவதற்கு, அரசாங்கத்தில் பதிவு செய்து பல காலம் காத்துக்கிடக்க வேண்டும். இதற்கு இன்னொரு உதாரணம், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணத்தைச் சொல்லலாம்.

கடுமையான நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சைபெற்று வந்த வித்யாசாகருக்கு உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற நிலையில், அதற்காகப் பதிவுசெய்யப்பட்டது.

நுரையீரல் தானம் எப்படியும் கிடைத்துவிடும் என்று காத்திருந்த நேரத்தில்தான், மாற்று உறுப்புகள் எளிதில் கிடைக்காமல் அவர் மரணமடைந்தார். இந்த நிகழ்வு மீனா குடும்பத்தினரை மட்டுமல்ல, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகை மீனா உடல் உறுப்பு தானம்

”உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். அன்று என் கணவருக்குத் தேவையான உடல் உறுப்புகள் தானமாகக் கிடைத்திருந்தால், என் வாழ்க்கையே மாறியிருக்கும்.

உயிரைக் காப்பாற்றுவதைவிட பெரிய நன்மை எதுவும் இல்லை” என உருக்கமானப் பதிவை வெளியிட்ட மீனா, உடல் உறுப்பு தினமான கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

உடல் உறுப்பு தானத்துக்கு பதிவு செய்தும், அது கிடைக்காமல் மரணம் எய்தும் பட்டியல்களில் நடிகை மீனாவின் கணவர் மட்டுமல்ல… இன்னும் எத்தனையோ பேர் இடம்பிடிக்கிறார்கள். அவர்கள் பிரபலமாக இல்லாததால்தான் அது வெளியில் தெரிவதில்லை.

அதேநேரத்தில், இப்படி உடல் உறுப்பு தானத்துக்காகக் காத்திருந்து நாட்களைக் கடத்துவதைத் தவிர, உறவினர்களே உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர். ஆனால், சிலருக்கு நோயாளி உடலுடன் அது பொருந்திப் போவதில்லை.

அதனால்தான் இன்றைய சூழ்நிலையில் தன்னைப் பெற்றெடுத்து வளர்த்த தந்தைக்காக சில மகன்களும், மகள்களுமே உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர்.

Daughters protecting fathers Kerala girl wins legal battle
கணவர் வித்யாசாகருடன் நடிகை மீனா

அந்த வகையில்தான் லாலு பிரசாத் யாதவ்வுக்கு அவருடைய இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா சிறுநீரகம் அளித்தார். தன் அப்பாவுக்கு சிறுநீரகம் தந்தது குறித்து ரோகினி,

’எனக்கு எல்லாம் என் அப்பாதான். அவருடைய நலனில் பங்களிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. எனது தந்தைக்கு ஒரு சதைப்பகுதியைக் கொடுப்பதைத் தவிர வேறொன்றுமில்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

அவர் அளித்த சிறுநீரகம் மூலம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி லாலுவுக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இருவரும் நலமாக இருக்கின்றனர்.

உடல் உறுப்பு தானத்தில் பெண்களின் பங்களிப்பு

ரோகினி ஆச்சார்யா மட்டுமல்ல, உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் பெண்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இந்தியாவில் 78 சதவிகித பெண்கள், தங்களுடைய குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவுகளுக்கும் உறுப்பு தானம் வழங்குவதாக தேசிய உறுப்பு – திசு மாற்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் International Journal of Organ Donation and Transplantation வெளியிட்ட கட்டுரை ஒன்றில், 2019ஆம் ஆண்டு மட்டும் 8,613 சிறுநீரகங்கள் இந்தியாவில் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 65 சதவிகிதம், அதாவது, 5,633 சிறுநீரக தானங்கள் பெண்களால் கொடுக்கப்பட்டவை.

அதேபோல் ஒட்டுமொத்தமாக 1,993 கல்லீரல்கள் தானம் வழங்கப்பட்டதில் 54 சதவிகிதம், அதாவது 1,084 கல்லீரல் தானங்கள் பெண்களால் வழங்கப்பட்டவை. 2019ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக உறுப்பு தானம் செய்த 10,608 பேரில் 6,717 பேர் பெண்கள். 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது.

அதன்படி 2020ஆம் ஆண்டில் உடல் உறுப்புகள் தானம் செய்த 6,461 பேரில் 4,184 பேர் பெண்கள். மற்றொருபுறம் உடல் உறுப்புகளை தானமாக பெற்றுக்கொள்வோரில் வெறும் 27 சதவிகிதம் மட்டுமே பெண்கள்.

இந்தியாவில் 73 சதவிகித உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் ஆண்களுக்கு செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படும் அந்த அறிக்கையில், ’அமெரிக்காவில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவோரில் 63 சதவிகிதம் பெண்களுடையது’ என அது மேலும் தெரிவித்துள்ளது.

Daughters protecting fathers Kerala girl wins legal battle
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாதிரி படங்கள்

தந்தை லாலுவிற்கு சிறுநீரகம் கொடுத்த ரோகினி ஆச்சார்யாவைப்போல், கேரளத்தில் 17 வயது சிறுமி ஒருவரும் தன் தந்தைக்காக கல்லீரல் தானத்தைக் கொடுக்க முன்வந்திருக்கிறார்.

கேரளத்தின் திருச்சூர் மாவட்ட கோலாழியில் வசித்து வருபவர் பிஜி பிரதீஷ். 48 வயதான இவருக்கு மனைவி மற்றும் 17 வயது நிரம்பிய மகள் தேவானந்தா ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஜி பிரதீஷை பரிசோதித்த மருத்துவர்கள், ’அவர் முற்றிலும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் கல்லீரல் அறுவைச்சிகிச்சை செய்யாவிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து’ என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கல்லீரல் தானம் குறித்து வெளியில் விசாரித்தனர்.

அதோடு மருத்துவமனை நிர்வாகமும் விசாரித்தது. ஆனால் கல்லீரல் தானமாகக் கிடைக்கவில்லை. அப்படி ஒன்று இரண்டு கிடைத்ததும், அவருக்குப் பொருந்திப் போகவில்லை. அதேநேரத்தில், அவருடைய 17 வயது மகளின் கல்லீரல் பொருந்திப் போனதையடுத்து, தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்காக தானம் வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், சிறுமியின் தானத்தை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், இந்தியாவில் மனித உறுப்பு மற்றும் திசு மாற்றுச் சட்டம் 1994இன்படி கல்லீரல் தானம் தரும் ஒருவர், 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும் என்பதால் சிறுமியின் தானத்தை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீதிமன்றத்தில் முறையிட்ட கேரள சிறுமி

இருப்பினும், தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த மகள் தேவானந்தா, உடல் உறுப்பு தானம் சட்டத்தில் இருந்து விலக்கு கோரி, கேரளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”எனது தந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. நான் கல்லீரல் தானத்தைச் செய்ய தயாராக உள்ளேன்.

எனக்கு உறுப்பு தானம் செய்வதில் மருத்துவத் தடைகள் எதுவும் இல்லை. இருப்பினும் உறுப்பு மற்றும் திசு மாற்று விதிகள் 2014 விதி 18இன்படி தானம் செய்பவரின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு தற்போது 17 வயதுதான் ஆகிறது.

நான் எனது தந்தைக்கு எனது கல்லீரலை தானம் செய்ய தயாராக இருக்கிறேன். எனவே எனது தந்தையின் உயிர் மீது கவனம்கொண்டு 2014 விதி 18இல் வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கடந்த நவம்பர் 17ஆம் தேதி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர்.ஷாஜி ஆஜராகி வாதாடினர். வாதங்களை கேட்ட நீதிபதி, ’இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறையில் அறிவுறுத்தல்களைப் பெற்று அதன் விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

Daughters protecting fathers Kerala girl wins legal battle
கேரள உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 21) நீதிபதி வி.ஜி.அருண் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு அவரது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

சிறுமியைப் பாராட்டிய நீதிமன்றம்

அத்துடன், தேவானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த நீதிபதி வி.ஜி.அருண், ’அவரைப் போன்ற குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தேவானந்தா நடத்திய இடைவிடாத போராட்டம் இறுதியாக வெற்றியடைந்துள்ளது என்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சிறுமியின் போராட்டத்தை நீதிமன்றம் பாராட்டுகிறது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

தேவானந்தா தனது முடிவின் விளைவுகளைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பதாகவும், நன்கொடையாளர் 18 வயதை 5 மாதங்களில் அடைவார் என்பதால், மாற்று அறுவைச்சிகிச்சையை அனுமதிக்கும் மனுவை நிராகரிக்க வேண்டாம் என்று மேலும் ஒரு மனுவை அவர் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாவின் உயிரை காப்பாற்றுவதற்காக சிறுமி நடத்திய சட்டப் போராட்டம், அனைவரின் கண்களிலும் நீரைக் கசியவைத்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

சிவாஜி குடும்ப சொத்துப் பிரச்சினை: சமரசம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்

நிலத்துக்கு உரிய இழப்பீடு: ஆட்சியர் அலுவலகங்களில் தொடரும் ஜப்தி நடவடிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *