பஞ்சுமிட்டாய்… பானிபூரி… நஞ்சாகும் உணவுகள் – மக்களே உஷார்!

Published On:

| By Kavi

மனிதன் பாரம்பரிய உணவு வகைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட இந்த காலக்கட்டத்தில் உணவே மருந்து என்பது மாறி உணவே நச்சு என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

தற்போதெல்லாம் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலி, ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் பலி, பஞ்சுமிட்டாயில் கேன்சர் பாதிப்பு கொண்ட ரசாயனம் என இதுபோன்ற செய்திகள் தான் அதிகம் வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது பானி பூரி இணைந்திருக்கிறது. பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தை கலந்து விற்கப்படுவதாக கூறி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு…

முந்தைய காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றும் என கேள்விபட்ட புற்று நோய் பாதிப்பு இப்போதெல்லாம் அதிகம் பரவி வருகிறது.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு என்பது சுகாதார சவாலாக மாறி வருகிறது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்தியாவில் 2022இல் 1,461,427 ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு 2023இல் 1,496,972 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை 2025ல் 15.7 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் (10.6%), மார்பகம் (10.5%), உணவுக்குழாய் (5.8%), வாய் (5.7%), வயிறு (5.2%),  போன்ற  புற்றுநோய்களால் தான் இந்தியாவில் அதிக பேர் பாதிக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

2022 ஆம் ஆண்டில் 52,706ஆக இருந்த வயிற்று புற்றுநோய் எண்ணிக்கை 2023ல் 54,023 அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் ரசாயனம் கலந்த உணவுகள் மூலம் புற்றுநோய் பாதிப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிகம் பேர் விரும்பி உண்ணும் பானி பூரியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் சாயத்தை கலந்து விற்பனை செய்த தகவல் என்பது உணவு பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தொடங்கியது…

கர்நாடகாவில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறித்து வந்த தகவலைத் தொடர்ந்து, அம்மாநில உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

சாலையோர கடைகள், உணவகங்கள், ஸ்நாக்ஸ் கடைகளில் நடத்திய ஆய்வில் பானிபூரி, காளான், மசாலா என 260 உணவு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இதில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 18 மாதிரிகள் மனிதர்கள் உண்ணுவதற்கு தகுதியற்றவை என்பது தெரியவந்துள்ளது.

இந்த உணவுகளில் பிரில்லியண்ட் ப்ளூ, சன்செட் யெல்லோ, டார்ட்ராசைன் ஆகிய கெமிக்கல்ஸ் கலந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பொருட்களை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, இதய நோய் மற்றும் ஆட்டோஇம்யூன் கோளாறுகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரில்லியண்ட் ப்ளூ

இந்த வகை ரசாயணம் ப்ளூ FCF, FD&C Blue No. 1 அல்லது E133 என்றும் அறியப்படுகிறது. இது பெரும்பாலும் உணவு மற்றும் அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை சாயமாகும். இதை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது குழந்தைகளுக்கு தோல் ஒவ்வாமை, செரிமானப் பிரச்சினைகள் ஆகிய உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

சன்செட் யெல்லோ
இந்த வகை சாயம் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது தோல் வெடிப்பு மற்றும் அரிப்பு, ஒவ்வாமை, அதிக அளவுகளில் செரிமான பிரச்சினை ஆகியவற்றை ஏற்படுத்தும் என்கிறார்கள் உணவு பாதுகாப்புத் துறை தரப்பில்.

டார்ட்ராசைன் ஏற்படுத்தும் அபாயம்…

 

டார்ட்ராசைன் என்பது பெட்ரோலியப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை மஞ்சள் சாயமாகும். இது யெல்லோ 5 என அறியப்படுகிறது. டார்ட்ராசைன் உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் சேர்க்கப்படுகிறது.

இந்த சாயம் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ரத்த வெள்ளை அணுக்களை பாதிக்கிறது. அதோடு டியூமர் மற்றும் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்று மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

மக்களை, குழந்தைகளை ஈர்க்கும் வகையில்  வண்ண வண்ணமாக கண்ணாடி பெட்டிகளில் வைக்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களில் கலக்கப்படும் டார்ட்ராசைன் ரசாயனத்தால் ஆஸ்துமா மற்றும் தோல் வெடிப்பு போன்ற பிற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த ரசாயனத்தை எலிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்ததில் மார்பக புற்றுநோய் வளர்ச்சி இருப்பது தெரியவந்ததாக அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் தெரிவித்துள்ளது.

இந்த ரசாயனங்கள் எவற்றில் கலக்கப்படுகின்றன?

பானிபூரி மட்டுமின்றி தினசரி மக்கள் உண்ணும் பல உணவுகளில் இவை கலக்கப்படுகின்றன.

குளிரூட்டப்பட்ட உணவுகள், பிரட் ரோல்ஸ், கேக் கலவைகள், ப்ரோஷன் பைஸ், பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ், ஐஸ்கிரீம்கள், ஷெர்பெட், மிட்டாய், சுவையான பான கலவைகள் என ஏராளமான உணவுகளில் இது கலக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவு வகையில் மட்டுமா?

  • அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள்
  • ஷாம்பூ போன்ற முடி பராமரிப்புப் பொருட்கள்,
  • சோப்பு, கிரீம்கள் மற்றும் லோஷன்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் இந்த டார்ட்ராசைன் சாயம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் தொடரும் ரெய்டு


இதுபோன்று உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்ற சாயம் கலந்த உணவுகள் விற்கப்படுவது கர்நாடகாவில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தினந்தோறும் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரீனா, கோவை, நாமக்கல், கரூர், தேனி, ஆண்டிபட்டி, ராமநாதபுரம் என சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த மற்றும் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருக்கின்ற பானிபூரி,மசாலா பூரி, ரசம் போன்றவற்றை பினாயில் ஊற்றி அழித்து வருகின்றனர்.

நேற்று கரூர் – கோவை சாலையில் உள்ள வட மாநில தொழிலாளர் ஒருவர் விற்பனை செய்யும் சாலையோர பானிபூரி கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மண்ணெண்ணெய் நிரப்பும் கேனில் பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் ரசத்தை ஊற்றி சுகாதாரமற்ற முறையில் எடுத்து வந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள் அதை பினாயில் ஊற்றி அழித்தனர்.

குறிப்பாக பானிபூரி விற்பனை செய்யும் போது வாயில் பாக்கு போட்டுக்கொண்டிருந்த வடமாநில வியாபாரியை அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர்.

எச்சரிக்கை

இந்நிலையில் சாலையோர உணவகங்களில் பானிபூரி சாப்பிடும்போது கவனம் தேவை என எச்சரிக்கும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், “சுகாதாரமாக தயாரிக்கப்படும் பானிபூரிகளை உண்ணலாம். கடைக்காரர்கள் கண்டிப்பாக கையில் க்ளவுஸ் அணிந்திருக்க வேண்டும். க்ளவுஸ் அணியாமல் ரசத்தில் பூரியை மூழ்கி எடுத்து கொடுக்கும் கடைகளில் சாப்பிட வேண்டாம்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுகள் சாப்பிடும் போது அதன் லேபிள்களை சரிபார்த்த பிறகு சாப்பிட வேண்டும். மக்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதிக கலர் சேர்க்கப்பட்ட மற்றும் சரியான முறையில் பராமரிக்கப்படாத, சுகாதாரமான மற்றும் தரமான முறையில் தயாரிக்கப்படாத பானிபூரி விற்பனை செய்யும் கடைகள், சில்லி சிக்கன் கடைகள், துரித உணவு கடைகள், சாட் பொருட்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள் குறித்து 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்” ” என்று அறிவுறுத்துகின்றனர்.

வசீகரத் தன்மைக்காக ரசாயனம் பூசப்பட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து இயற்கை முறையான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவதை நாம் தடுக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விக்கிரவாண்டி : வாக்குச்சாவடியில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து!

விக்கிரவாண்டி தேர்தல்: 1 மணி நிலவரம்… 50.95% வாக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment