கங்கையின் தூய்மை: அறிவியல் கூறுவது என்ன?

Published On:

| By Minnambalam Desk

Cleanliness of the Ganga

பிரணய் லால்

1896ஆம் ஆண்டில், எர்னஸ்ட் ஹாங்கின் என்ற பிரிட்டிஷ் பாக்டீரியாலஜிஸ்ட் கங்கைக் கரையில் நின்று, உள்ளூர்வாசிகள் களிமண் பானைகளில் தண்ணீரை நிரப்புவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். தனது கண்காணிப்பின் கீழ் பயங்கரமான காலரா பரவல் ஏற்படாது என்று அவர் நம்பினார். Cleanliness of the Ganga

அதைத் தடுக்கும் முயற்சியில், ஹாங்கின் அசாதாரணமான ஒன்றைக் கண்டுபிடித்தார். ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் சில மணிநேரங்களுக்குள் நோய்க்கிருமியைக் கொல்லும் என்று தோன்றியது. கங்கை நீர் சேர்க்காத கிணறுகளில் பாக்டீரியா செழித்தது.

இதனால் ஆர்வம் கொண்ட ஹாங்கின், காலராவைத் தடுக்கும் வகையில் கங்கை நீரில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, தண்ணீரை வடிகட்டிச் சூடாக்குவதற்கான சோதனைகளை மேற்கொண்டார். கண்ணுக்குத் தெரியாத உயிரியல் அம்சம் ஒன்று அதில் செயல்படுவதாக அவர் அனுமானித்தார். 

ஹாங்கின் கண்டுபிடிப்பை நிரூபிக்க 30 ஆண்டுகள் ஆயின. ஹாங்கின் சந்தேகித்ததை 21ஆம் நூற்றாண்டில்தான் நவீன ஆராய்ச்சிக் கருவிகள் உறுதிப்படுத்தின.

எனினும் கங்கை நதி தன்னுடைய சுய-சுத்திகரிப்புப் பண்புகளை நிரந்தரமாகத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்னும் கருத்து அறிவியல் கண்ணோட்டத்திற்குப் பொருந்தாதது. கங்கை நதியின் சுத்திகரிப்புப் பண்புகள் குறித்துப் பல சான்றுகள் குவிந்தாலும், இந்தக் கருத்து வெறும் நம்பிக்கைதான் என்றே கருதப்படுகிறது. இது அறிவியலின்படியான தரவு அல்ல; நம்பிக்கைகளின்பாற்பட்டது என்றே அறிவியல் உலகம் கருதுகிறது. 

Cleanliness of the Ganga

ஹரித்வார் முதல் வாராணசி வரை சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில், கங்கை நதியில் பாக்டீரியோபேஜ்களின் பரவலைச் சமீபத்திய ஆய்வுகள் வரைபடமாக்கியுள்ளன. இந்த ஆய்வுகள், நீரினால் பரவும் நோய்களின் பொதுவான நோய்க்கிருமிகளைக் குறிவைத்து வழக்கத்திற்கு மாறாக அதிக செறிவுள்ள பேஜ்களைக் கண்டறிந்துள்ளன. சில விஞ்ஞானிகள் கொடிய, ஆண்டிபயாடிக்-எதிர்ப்பு பாக்டீரியாவின் வீரியத்தைத் தணிக்கும் பாக்டீரியோபேஜ்களைக்கூடக் கண்டறிந்துள்ளனர். ஆனால் பாக்டீரியோபேஜ்கள் அதன் இரையான பாக்டீரியா ஏராளமாகக் காணப்படுவதால் மட்டுமே உள்ளன. அவை இல்லாமல் அவை இருக்காது. எளிமையாகச் சொன்னால், பாக்டீரியாவைக் கொல்லும் வைரஸ்கள் இருப்பது பாக்டீரியா மாசுபாட்டின் அறிகுறியாகும். இது நதியின் ஆற்றலின் அடையாளம் அல்ல.

பாக்டீரியோபேஜ்களின் இருப்பு கங்கை பற்றிய கதையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. நதியின் பாக்டீரியா எதிர்ப்பு நீரின் ரகசியம் அதன் தனித்துவமான புவி வேதியியல் பண்புகளில் உள்ளது. இமயமலையின் சரிவுகளிலும், கங்கையின் நீரிலும் அதன் துணை நதிகளின் நீரிலும் கண்ணுக்குத் தெரியாத செயல்முறை ஒன்று வெளிப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற ஹரோல்ட் யூரே என்பவர் இதை முதலில் வெளிப்படுத்தினார். அவர் ஒரு எளிய சமன்பாட்டை முன்மொழிந்தார்: CO2 கால்சியம் தாங்கும் சிலிகேட் பாறைகளுடன் வினைபுரிந்து, சுண்ணாம்புக் கல்லை உருவாக்கி, சிலிகேட்டுகளை வெளியிடுகிறது. இந்த எதிர்வினை, புவியியல் காலத்தில் நடந்து, பூமியின் தட்பவெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் காரணியாகச் செயல்படுகிறது, காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை இழுத்து கடல் வண்டல்களில் சேர்க்கிறது. ஆழமான கார்பன் புதைப்பு என்று அழைக்கப்படும் இந்தப் பொறி, கார்பன் வளிமண்டலத்திற்குத் திரும்புவதைத் தடுக்கிறது. வளிமண்டல CO2வையும் புவி வெப்பமடைதலையும் ஒழுங்குபடுத்த உதவுகிறது.

இந்தச் செயல்முறை இமயமலையைத் தவிர வேறு எங்கும் அதிகமாகக் காணப்படவில்லை, அங்கு இளைய, வேகமாக அரிக்கப்படும் பாறைகளின் மேற்புறங்கள் வேதியியல் வானிலைக்கு ஏற்ற மேற்பரப்பை வழங்குகின்றன. வளிமண்டலத்தில் உள்ள CO2 காரணமாகச் சற்று அமிலத்தன்மை கொண்ட மழை, மலையின் பக்கவாட்டுகளைத் துடைத்து, கங்கை நதியில் வண்டல்களைக் கழுவி, இறுதியில் வங்காள விரிகுடாவின் ஆழமான படுகைகளுக்குச் செல்கிறது. அங்கு, கார்பன் கனிமமயமாக்கப்பட்டு நீண்ட காலச் சேமிப்பாகக் குடியேறுகிறது. இது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உலக வெப்பநிலையை ஒழுங்குபடுத்திவரும் மெல்ல இயங்கும் மாபெரும் சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

கோட்பாட்டளவில், இது சமன்செய்யும் ஆற்றலாக இருக்க வேண்டும். வங்காளப் படுகையில் புதைக்கப்பட்ட கரிம கார்பனின் அளவு மட்டும் கடல் வண்டல்களை அடையும் நிலப்பரப்பு கரிம கார்பனில் 20 சதவீதம்வரை உள்ளது. ஆனால் இந்தச் செயல்முறைக்குச் சில இடையூறுகள் உள்ளன. காலநிலை விஞ்ஞானிகள் சிலர், மாசுபாடு, காடழிப்பு, கட்டற்ற நகரமயமாக்கல், பெரிய, சிறிய அணைகள் ஆகியவை ஹரோல்ட் யூரே குறிப்பிட்ட கார்பன் எதிர்வினையில் தலையிடும்போது என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

நிலையானதாகத் தோற்றமளிக்கும் கங்கை நதியின் நிலப்பரப்பு உண்மையில் மிகவும் சிக்கலானது. இமயமலையின் உயரங்களிலிருந்து கீழே கொண்டுசெல்லப்படும் பாறைகளும் வண்டல்களும் அதன் வேதியியலை வரையறுக்கின்றன. மலைப்பகுதிகளில் கால்சியம், மெக்னீசியம், பைகார்பனேட் ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இது கார்பனேட் வானிலையைச் சுட்டிக்காட்டுகிறது. 

நதி தன்னை தானே சுத்தம் செய்து கொள்கிறதா? Cleanliness of the Ganga

ஒவ்வொரு நதியின் களிமண்ணும் வண்டல்களும் தனித்துவமானவை. அவை சிலிகேட் நிறைந்த பல்வேறு தாதுக்களை உள்ளடக்குகின்றன. இந்த தாதுக்கள் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கின்றன, அவற்றைக் கொல்கின்றன அல்லது அவற்றின் இனப்பெருக்கத்தைக் குறைக்கின்றன. நதி, அதன் போக்கில், வெவ்வேறு சிலிகேட் செறிவுகளை வைக்கிறது: செறிவு அதிகமாக இருந்தால், பாக்டீரியா எண்ணிக்கை குறைகிறது.

2024ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கையில், கங்கையின் கரைந்த சிலிக்கான் (DSi), சிலிக்கான் ஐசோடோப்புகள் ஆகியவை ஆற்றில் குவிகின்றன, ஆனால் நதி கீழ்நோக்கிச் சமவெளிகளில் பாயும்போது அவற்றின் ஆற்றல் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

உயர்ந்த இடங்களில், சில சிலிகேட்டுகள் மட்டுமே இரும்பு ஆக்சைடுகள், கார்பனேட்டுகளுடன் பிணைக்கப்படுகின்றன. கங்கை நதி யமுனையையும் கோமதியையும் சந்திக்கும்போது ​​மற்ற பாறைகளிலிருந்தும் ஆற்று மணலிலிருந்தும் அதிக சிலிக்கான் சேர்க்கப்படுகிறது. கோமதி ஆறு கங்கையைச் சந்திக்கும் இடத்தில், சிலிகேட் செறிவு அதன் அதிகபட்ச வரம்பை அடைகிறது.

ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதால், வேளாண், தொழில்துறை மாசுபாடு அதிகரித்து, பெரும்பாலான சிலிகேட்டுகள் பிணைக்கப்படுகின்றன. சிலிகேட்டுகள் கங்கையின் நடுப்பகுதியை அடையும் நேரத்தில், அவை முழுமையாகத் தனிமைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவை பாக்டீரியா அல்லது கழிவுநீர் போன்ற கரிம மூலக்கூறுகளுடன் பிணைக்கப்படுகின்றன. தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலத்தில் இது நடந்திருக்காது. நகரங்களும் தொழிற்சாலைகளும் வளர்ந்ததால், கங்கையின் சிலிகேட் ஆற்றல் குறைந்துவிட்டது. CO2ஐத்தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக அது இப்போது மனிதக் கழிவுகளுடன் இணைகிறது.

Cleanliness of the Ganga

ஆகவே, கங்கை ஆறு ஒருகாலத்தில் இருந்தபடி தன்னைத் தானே சுத்திகரிப்புச் செய்துகொள்ளும் ஆற்றலைத் தற்போது கொண்டிருக்கவில்லை. அதன் சிலிகேட் நிறைந்த நீர், அதன் எண்ணற்ற பாக்டீரியோபேஜ்கள், மனிதக் கழிவுகளால் மறைந்துவருகின்றன. நதியை மீட்டெடுப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது பொது சுகாதார அடிப்படையில் மட்டும் முக்கியமானதல்ல. தட்பவெப்பநிலையைச் சமன்செய்யும் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் இது முக்கியம். 

பிரணய் லால் உயிர்வேதியியலாளர், இயற்கை வரலாற்று எழுத்தாளர். அவர் ‘இண்டிகா: எ டீப் நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் தி இந்தியன் சப்கண்டின்’, ‘இன்விசிபிள் எம்பயர்: தி நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் வைரஸ்ஸ்’ ஆகிய இதழ்களின் ஆசிரியர். அவரது எக்ஸ் தளத்தின் முகவரி: @pranaylal.  Cleanliness of the Ganga

நன்றி: தி ப்ரிண்ட்

தமிழில்: தேவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share