சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் சேர, சோழ, பாண்டிய தமிழ் மன்னர்களின் வரலாறு குறித்த ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் பிற்கால சோழ மன்னர்களின் வாழ்க்கையை தனது கற்பனை கலந்து கூறியுள்ளார். அதிலும் அவரது நூலின் கதாநாயகனான ராஜாராஜ சோழன் மற்றும் அவரது அண்ணன் ஆதித்த கரிகாலனின் வாழ்க்கையை அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுத்து கூறியிருந்தார்.
ஆனால் அதன்பிறகான சோழ மன்னர்களை பற்றி பல்வேறு நூல்களின் வழியே தான் தெரிய வேண்டியுள்ளது. அந்த வகையில் காமினி தண்டபாணியின் ‘ராஜராஜ சோழன்: அரசர்களின் அரசன்’ என்ற நூலின் ஒரு பகுதியின் மூலம் ராஜராஜ சோழனுக்கு பிறகு சுமார் 36 ஆண்டுகள் சோழப்பேரரசை ஆண்ட ராஜாதிராஜனை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
பேரரசாக விளங்கிய சோழம்!
சோழ மன்னர்கள் என்றால் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது.
எனினும் அவருக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்த ராஜேந்திர சோழன், ராஜாதிராஜ சோழன், இரண்டாம் ராஜேந்திர சோழன் போன்றோரும் தங்களது சோழகுல மன்னர்கள் வீரத்தையும், தங்களது தேசத்தையும் காத்து வந்தனர்.
அருண்மொழிவர்மன் என்ற ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் கி.பி. 1012 முதல் 1044 வரை ஆட்சி செய்தார்.
இவரது ஆட்சியானது, தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீசுகர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளையும்,
தென் கிழக்கு ஆசியா நாடுகளான இலங்கை, மாலத்தீவு, கடாரம், மலேயா (சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.
கங்கைகொண்ட சோழபுரம் கண்டசோழன்!
எனினும் இராஜேந்திரனின் இவ்வளவு பெரிய வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அவரது மூத்த மகன் ராஜாதிராஜன் இருந்தார் என்பதே உண்மை. ஏனெனில் ராஜேந்திரன் ஆட்சி பொறுப்பேற்ற 6 ஆண்டுகளிலேயே அதாவது கி.பி.1018ம் ஆண்டி ராஜாதி ராஜன் யுவராஜாவாக நியமிக்கப்பட்டார்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தந்தைக்கு உதவியாக போர்களிலும், ஆட்சியிலும் உதவி புரிந்தார். பின்னர் ராஜேந்திரன் இறந்ததும், ராஜாதிராஜா சோழ மன்னராக அடியெடுத்து வைத்தார்.
இதன் மூலம் ராஜேந்திரன் காலத்தில் புதிய தலைநகராக தோற்றுவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் மன்னனாக முடிசூட்டிக்கொண்ட முதல் சோழ மன்னன் என்ற பெயரை பெற்றார்.
இடைஞ்சல் கொடுத்த சாளுக்கியர்கள்!
தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் உருவான பரந்த சோழ பேரரசை ஆட்சி செய்தாலும், அவரது வீரம் நிறைந்த போர் வாழ்க்கை காரணமாக ராஜாவை விட தளபதியாகவே வாழ்ந்தார்.
இவரது பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சி ஏற்பட்டது. ராஜாதிராஜ சோழன் சேர, பாண்டிய நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி தனது பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டார்.
எனினும், வடக்கில் மேலைச் சாளுக்கியர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கிய மன்னன் முதலாம் அஹவமல்ல சோமேஸ்வரா என்பவரின் படைகளுடன் போரிட வேண்டியிருந்தது. இவரது காலத்தில் சோழ – சாளுக்கிய படைகளுக்கு இடையே ஏற்பட்ட போர்கள் கடுமையாக இருந்தன.
அவமானப்படுத்திய ராஜாதிராஜன்!
ஒருமுறை சோழர்களுக்கு எதிரான செய்தியுடன் உயர் பதவியில் இருந்த சாளுக்கிய அதிகாரி ஒருவர் அனுப்பப்பட்டார். அவருடன் சாளுக்கிய படையைச் சேர்ந்த இருவரும் சென்றனர்.
அவர்களுக்கு பாடம்புகட்ட நினைத்த ராஜாதிராஜா, ஒருவருக்கு பின் தலையில் இருந்த 5 முடிகள் மட்டும் விடப்பட்டு தலையை மொட்டையடிக்கவும், மற்றொருவருக்கு பெண் வேடம் அணியவும் உத்தரவிட்டார்.
மேலும் மொட்டையடிக்கப்பட்டவரை சோமேஸ்வரா என்றும், பெண் வேடம் அணிந்தவரை ராணி சோமேஸ்வரா என்றும் அழைத்த ராஜாதிராஜா தனது அவையில் கூடியிருந்த அனைவரையும் அவ்வாறு அழைக்க கூறி, சாளுக்கியர்களை அவமானப்படுத்தினார்.
புறமுதுகிட்டு ஓடிய சாளுக்கியர்கள்!
இதனை தொடர்ந்து கி.பி 1045ல் தனது எதிரியான சோமஸ்வரன் தலைமையிலான சாளுக்கிய படையினரை கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள தன்னாடா என்ற இடத்தில் நடந்த போரில் புறமுதுகிட்டு ஓட செய்தார் ராஜாதிராஜா.
சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றினார் ராஜாதிராஜ சோழன், அந்த பழமைமையான நகரத்தை முற்றிலுமாக அழித்தார். மேலும் அங்கிருந்த மதிப்புமிக்க பொக்கிஷங்களையும் கைப்பற்றி சோழப்புரத்திற்கு கொண்டு வந்து குவித்தார்.
இருப்பினும் முற்றிலும் தங்களது பலத்தை இழந்துவிடாத சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரா, துங்கபத்திரா ஒட்டிய பிரதேசங்களில் சோழர்களுக்கு எதிராக படையை திரட்டி வந்தார்.
ராஜாதிராஜனின் போர் வியூகம்!
இந்நிலையில் தான் கி.பி.1054ம் ஆண்டு கொப்பம் என்ற இடத்தில் துங்கபத்ரா நதிக்கு அருகில் (நவீன கர்நாடகாவில்) சோழ – சாளுக்கிய போர் மூண்டது. முந்தைய போரில் அடிபட்ட சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரா, தனது தோல்விக்கு பழிவாங்கி, இழந்த ராஜ்ஜியத்தை கைப்பற்ற வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார்.
அதேவேளையில் சோமேஸ்வரனை முற்றிலுமாக அழித்தொழிக்க, ராஜாதிராஜ சோழன் தனது தலைமையில் ஒரு படையும், தனது சகோதரர் இரண்டாம் ராஜேந்திரன் தலைமையில் ஒரு படையும் கொண்டு போர் வியூகம் அமைத்தார்.
சோழர் மற்றும் சாளுக்கியப் படைகளுக்கு இடையே கடுமையாகவும், எங்கும் பெரும் ரத்தக்களரியாகவும் போர் நடைபெற்றது. ஆரம்பத்தில் ராஜாதிராஜாவுக்கு சாதகமாக போர் அமைந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கட்டத்தில், யானையின் மீது அமர்ந்து போர் புரிந்த ராஜாதி ராஜ சோழன், எதிரிகளின் சரமாரியான அம்பினால் தாக்கப்பட்டு, போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். இதன்மூலம் ‘யானையின் முதுகில் இறந்த மன்னன்’ என்ற பெயரினை பெற்றார்.
பழிவாங்கிய இரண்டாம் ராஜேந்திரன்!
ராஜாதி ராஜன் மரணத்தால் கதிகலங்கிய சோழ வீரர்கள், பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில்தான், அப்போது திடீரென வந்த இரண்டாம் ராஜேந்திரன் தலைமையிலான சோழப்படை சாளுக்கியர்கள் மீது திடீர் தாக்குதலைத் தொடுத்தார்.
இதனை எதிர்பார்க்காமல், ராஜாதிராஜனை கொன்ற நிலையில் வெற்றிக்களிப்பில் இருந்த சாளுக்கிய படைக்கு பேரிடியாக இருந்தது. சளைக்காமல் தீரமுடன் போராடிய இரண்டாம் ராஜாதிராஜன், எதிரிகளுக்கு உயிர்பயம் காட்டினார்.
இதில் மீண்டும் நிலைகுலைந்த சாளுக்கியப் படை சரணடைந்தது. அவர்களின் மன்னன் முதலாம் சோமேஸ்வரன் ஓடிப்போனான். பேரழிவுகரமான தோல்வியின் பிடியில் இருந்து வெற்றியை தனதாக்கிய இரண்டாம் ராஜேந்திரனுக்கு இது ஒரு அற்புதமான வெற்றியாகும்.
இந்த வெற்றியைத் தான் சோழ மன்னர்களைப் புகழ்ந்துரைக்கும் 12 ஆம் நூற்றாண்டின் போர்க் கவிதையான கலிங்கத்துப்பரணி, ’கொப்பத்தில் தனது கடுமையான சண்டை மற்றும் வெற்றியின் மூலம், இரண்டாம் ராஜேந்திரன் உலகைக் காப்பாற்றினார்’ என்று குறிப்பிடும் அளவிற்கு சென்றது.
மற்றொரு போர்க் கவிதையான விக்ரம சோலா உலா என்ற நூல், ஒருபடி மேலே போய், ஒற்றை யானையின் உதவியுடன், அவர் கொப்பத்தில் எதிரியின் ஆயிரம் யானைகளைப் பிடித்தான் இரண்டாம் ராஜேந்திரன்’ என்று அறிவித்தது.
இந்த மூலம் போர்க்களத்தில் வீரத்தை காட்டி, சோழதேசத்திற்கு வெற்றியை பரிசளித்த இரண்டாம் ராஜேந்திரன் அடுத்த சோழப் பேரரசராக முடிசூட்டப்பட்டார்.
(நன்றி – Scroll.in)
கிறிஸ்டோபர் ஜெமா
தலித் கிறிஸ்தவர்-தலித் முஸ்லிம்: ஒதுக்க நினைக்கிறதா மத்திய அரசு?
அவங்கதான் ஜெயிப்பாங்க: சாகித் அப்ரிடி
சிறப்பான கட்டுறை. ராஜாதிராஜனை பற்றிய அரிய தகவல்களக்கு நன்றி.