22வது பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றின் முதல் போட்டிகளை அனைத்து அணிகளும் சந்தித்து முடித்துள்ளன.
இந்நிலையில் ஆரம்பமே அமோகம் என்பது போல் பெரிய அணிகளின் அபாரமான வெற்றிகளும், கத்துக்குட்டி அணிகளிடம் மரண அடிவாங்கிய தோல்விகளும் என பல்வேறு எதிர்பாரா சம்பவங்கள் இதுவரை அரங்கேறியுள்ளன.
அதிலும் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் மனுவேல் நியூயரின் ஜெர்மனி அணிகளின் தோல்வி பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
அர்ஜென்டினாவைப் போன்றே நடப்பு பிஃபா உலகக்கோப்பையில் லீக் சுற்றின் முதல் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக ஜெர்மனியின் தோல்வி கால்பந்து ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சவுதியை பின்பற்றிய ஜப்பான்
கடந்த 23ம் தேதி கலிபா சர்வதேச மைதானத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பெற்ற ஜெர்மனி- ஜப்பான் அணிகள் மோதின.
4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி மீது எதிர்பார்ப்புகள் எழுந்தது இயல்பு. ஆனால் நினைத்ததற்கு மாறாக ஜப்பான் அணியின் ஆட்டம் அரங்கை அதிரவைத்தது என்பதே உண்மை.
இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் கடுமையாக போராடினாலும் அர்ஜென்டினாவின் ஆட்டத்தை உரித்து வைத்தது போல் தான் ஜெர்மனி – ஜப்பான் இடையிலான ஆட்டம் அமைந்தது.

ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் இல்கே கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதில் கோல் திருப்ப ஜப்பான் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
2ம் பாதியில் ஜப்பானின் எழுச்சி!
தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் ரிஸ்து டோன், 83 வது நிமிடத்தில் டகுமா ஆசானோ அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து மிரட்டினர்.
இது ஜெர்மனி அணியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், பதிலடி கொடுக்க முயன்ற அந்த அணியின் முழுமுயற்சியும் தோல்வியில் முடித்தது.
இதனால் ஆட்ட நேர முடிவில் 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஜப்பான்.

இந்நிலையில் ஜெர்மனி அணி எங்கெல்லாம் ஜப்பான் அணியிடம் பின்வாங்கி தனது தோல்வியை உறுதி செய்தது என்று இங்கு பார்க்கலாம்.
1.முன்கள வீரர்களின் சொதப்பல்
ஜெர்மனியின் முன்கள வீரர்களின் ஆட்டம் ஜப்பானுக்கெதிரான ஆட்டத்தில் முற்றிலுமாக சொதப்பியது.
அதிலும் ஹாவர்ஸின் ஆட்டம் அவர் இன்னும் தனது பார்முக்கு திரும்பவே இல்லை என்பதை சுட்டிகாட்டியது. மேலும் தொய்வான ஆட்டம் உடல்ரீதியாக அவர் வலுவாக இல்லை என்பதையும் காண்பித்தது.
மேலும் மரியோ கோட்ஸ் மற்றும் மிரோஸ்லாவ் க்ளோஸ் ஆகியோரும் நடுகளத்தில் அச்சுறுத்தலான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினர். மேலும் இதுவரை ஒரே ஒரு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நிக்லாஸ் ஃபுல்க்ரக் அனுபவமின்மையும் ஜெர்மனியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

2.கோல்கீப்பர் கோண்டாவின் திறமை
ஜெர்மனி அணியின் வெற்றிக்கு பெரிய முட்டுகட்டையாக இருந்தது ஜப்பான் அணியின் 33 வயதான கோல்கீப்பர் ஷுய்ச்சி கோண்டா தான்.
25 முறை கோலை நோக்கி பந்தை ஜெர்மனி வீரர்கள் அடித்தபோதும் தனது அபாரமான வேகத்தால் அனைத்தையும் தடுத்தார். அதேவேளையில் ஜப்பான் அணியினர் 10 முறை மட்டுமே பந்தை கோல்போஸ்ட் நோக்கி தள்ளினர். எனினும் அதில் 2 கோல்களாக மாறி அவர்களின் வெற்றியை உறுதி செய்தது.
3.தவறான நேரத்தில் வீரர்கள் மாற்றம்
இரண்டாம் பாதியில் அதிகரித்த ஜப்பானின் அச்சுறுத்தலுக்கு ஜெர்மனி பயிற்சியாளர் ஹன்சி ஃபிளிக் பதிலடி கொடுக்க தவறிவிட்டார் என்றும் சொல்லலாம்.
ஜப்பான் 75வது நிமிடத்தில் கோல் அடித்து 1-1 என்று சமநிலை அடைவதற்கு முன்பாகவே முல்லர், எல்கே ஆகியோரை களத்திற்கு வெளியே கொண்டு வந்தார்.
பின்னர் முசியலா மற்றும் க்னாப்ரி ஆகியோரை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றி சீட்டில் உட்காரவைத்தார்.
ஜெர்மனியின் முன்கள வீரர்கள் வெளியேறியதை அடுத்து, ஜப்பான் இன்னும் பெரிய தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதற்கு பலனாக 8 நிமிடங்களில் அடுத்தடுத்து 2வது கோல் அடித்து ஜெர்மனியின் வெற்றியை பறித்தது ஜப்பான்.
4.லெராய் சானேவின் காயம்
அணியின் முன்னணி வீரர் லெராய் சானே முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தில் இல்லாதது ஜெர்மனிக்கு பெரும் பாதகமாக அமைந்தது.
சிறந்த நடுகள ஆட்டக்காரரான சானே இல்லாததின் தாக்கம் 2ம் பாதியில் ஜப்பான் 2 கோல்களுடன் முன்னணியில் இருந்தபோது வெளிப்படையாகவே தெரிந்தது.
ஏனெனில் முசியலா,க்னாப்ரி, முல்லர் மற்றும் சானே ஆகியோரின் அதிரடியான ஆட்டத் திறனை ஏற்கெனவே ஜெர்மனி கிளப் அணியான பேயர்ன் முனிச்சில் பலர் பார்த்திருக்க கூடும்.
கடந்த 19 ஆட்டங்களில் சானே மட்டும் 10 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5.மறைந்துபோன ஆக்ரோசம்
2014ம் ஆண்டு உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி அணி. ஆனால் அதன்பிறகு எந்த போட்டியிலும் சோபிக்காத அந்த அணி தனது ஆக்ரோசம் கலந்த ஆதிக்கத்தை எதிரணிகளுக்கு கடத்துவதில் தவறி வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகளுக்கு எதிராக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு நடைபெற்ற யூரோ தொடரிலும் ஜெர்மனி ஏமாற்றமளித்தது.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வடக்கு மாசிடோனியா அணியிடம் வீழ்ந்த ஜெர்மனி, நேஷன்ஸ் லீக்கில் தங்களது சொந்த மண்ணில் ஹங்கேரி அணியிடம் வீழ்ந்தது.
2014ம் ஆண்டு அசுர பலம் வாய்ந்த அணியாக இல்லாமல் ஆணவம், ஆக்ரோசம் உறுதிப்பாடு இல்லாத பலவீனமான அணியாகவே ஜப்பான் அணியிடம் வீழ்ந்த ஜெர்மனி தெரிந்தது.
அதேவேளையில் பழைய பன்னீர்செல்வமாக ஜெர்மனி தனது முழு பலத்துடன் களம் கண்டால் அசைக்க முடியாத அணியாக மாறிவிடும்.

சக்திமிக்க ஸ்பெயினை சந்திக்கும் ஜெர்மனி?
ஜப்பானிடம் கண்ட படுதோல்வியை தொடர்ந்து தனது குரூப்பில் இடம்பெற்றுள்ள ஸ்பெயினை வரும் 28ம் தேதியும், கோஸ்டாரிகாவை டிசம்பர் 2ஆம் தேதி எதிர்கொள்கிறது.
ஆனால் குழு ஈ இலிருந்து மூன்று அணிகள் ஆறு புள்ளிகளில் முடிவடையும் ஒரு சாத்தியமான சூழ்நிலை உள்ளது.
அதனால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற கோல் வித்தியாசம் முக்கிய பங்கு வகிக்கும்.
இதன் பொருள் ஜெர்மனி தனது தகுதி வாய்ப்பை அதிகரிக்க அடுத்த 2 ஆட்டங்களான அசுர பலம் கொண்டதாக கருதப்படும் ஸ்பெயின் மற்றும் கோஸ்டாரிகாவை பெரும் கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இவற்றுடன் மேற்குறிப்பிட்ட தனது அணியின் தவறுகளை சரிசெய்ய வேண்டும்.
இல்லையெனில் நாக் அவுட் சுற்றுடன் கத்தார் உலகக்கோப்பையில் இருந்து நடை கட்டவேண்டிய நிலைமை ஜெர்மனிக்கு ஏற்படும் என்பதே நிதர்சனம்.
கிறிஸ்டோபர் ஜெமா
FIFA Worldcup 2022 : ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சியூட்டும் கத்துக்குட்டி அணிகள் – 1