சிசிடிவி கேமரா: காவல் நிலையங்களைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்!

சிறப்புக் கட்டுரை

ச.மோகன்

சனநாயக அரசியலின் மைல் கல்லாய் சில நீதிமன்றத் தீர்ப்புகள் அவ்வப்போது வெளியாகின்றன. அவை சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை எப்போதும் வலுப்பெறச் செய்கின்றன.

எடுத்துகாட்டாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் “சிசிடிவி கேமரா” பொருத்தப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2.12.2020 இல் வழங்கிய தீர்ப்பு  வரலாற்று சிறப்பு மிக்கதாகும். 

இந்தத் தீர்ப்பு இப்போது தான் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு 15.9.2022 அன்று தஞ்சாவூர் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் “கேமராக்கள் கண்காணிப்பு மையத்தை” திறந்து வைத்துப் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்ற சேதியைத் தெரிவித்தார். ஆனால் அதன் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.

எனவே இதன் பின்னணியைப் பின்னோக்கிப் பார்த்து அதன் செயலாக்கம் நடைமுறையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வரிகள் மூலம் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் தேவை ஆகும்.

cctv camera in police station supreme court verdict

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு கூற்றின் பின்னணியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. 2018ஆம் ஆண்டு பரம்வீர்சிங் சைனி எதிர் பல்ஜித் சிங் மற்றும்  பலர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகிங்டன் எப்.நாரிமன், கே.எம்.ஜோசப், அனிருதா போஸ் அடங்கிய அமர்வு 2.12.2020 அன்று பிறப்பித்த உத்தரவில்,

“இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள காவல் நிலையங்கள், மத்திய புலனாய்வுத் துறை (CBI), தேசிய புலனாய்வு முகமை (NIA) (iii) அமலாக்க இயக்குனரகம் (ED) (iv) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) (v) வருவாய் புலனாய்வுத் துறை (DRI)  (vi) தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) ஆகிய அரசு  அலுவலகங்களில் 27.1.2021க்குள் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

cctv camera in police station supreme court verdict

இதனடிப்படையில் இப்போது தான் தமிழ்நாட்டில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது இங்கே நினைவு கூரத்தக்கது. ஆனால் சி.சி.டி.வி கேமராக்கள் எங்கெல்லாம் இருக்க வேண்டும்,

அவற்றின் உபகரணங்கள், அதற்கான மேற்பார்வை, பராமரிப்பு, பாதுகாப்பு, தொடர் கண்காணிப்பு ஆகியன பற்றி உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றை சற்று விரிவாகக் காண்போம்.

சி.சி.டி.வி எங்கெல்லாம் இருக்க வேண்டும்? 

சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பில் இருந்து காவல்நிலையத்தின்  எந்தப் பகுதியும் விடுபடாமல் இருக்க வேண்டும்.

காவல்நிலையத்தின்  நுழைவாயில்,  புறவாயில், கைதி அறை, அனைத்து நடைபாதைகள், காத்திருக்கும் பகுதி, வரவேற்புப் பகுதி, அனைத்துத் தாழ்வாரங்கள், காவல் ஆய்வாளர் அறை, சார்பு-ஆய்வாளர் அறை, கைதி அறைக்கு வெளியே உள்ள பகுதிகள், காவல்நிலைய கூடம், காவல் நிலைய வளாகத்தின் முன் பகுதி உள்ளிட்ட  கழிப்பறை நீங்கலாக அனைத்துப் பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் இருக்க வேண்டும். 

தரமான சி.சி.டி.வி கேமரா

cctv camera in police station supreme court verdict

காவல் நிலையங்களில்  பொருத்தப்படும் சி.சி.டி.வி கேமரா, தொழில் நுட்பத் திறன் மிகுந்ததாக இருக்க வேண்டும். இரவிலும் காட்சிகளைத் தெளிவாகப் பதிவு செய்யும் திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.

தெளிவான  ஒலி-ஒளிப்பதிவுகளை உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம் ஆகும். மின்சார செயலிழப்பு ஏற்படும்போது மாற்று ஏற்பாடு இருக்க வேண்டும். பதினெட்டு மாதங்களுக்குப் பதிவுகளைச் சேமித்து வைத்திருக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் மொத்த இருப்பை  டிஜிட்டல் அல்லது வலைத்தள ஒளிக்காட்சிகளாகப் பதிவு செய்யக்கூடியதாக இருக்க  வேண்டும். 

விளம்பரப் பலகை:

ஒவ்வொரு காவல் நிலைய நுழைவாயிலில் இக்காவல் நிலையம் சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பில் உள்ளது என்ற வாசகம் அடங்கிய விளம்பரப் பலகை மாநில மொழியில் இருக்க வேண்டும்.

அதில்  மனித உரிமை மீறலால் பாதிப்புற்றவர்கள், பொதுமக்கள் அதன் பதிவுகளை முறையாக எழுதி பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இத்துடன் மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய / மாநில மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகள் நீதிமன்றம் அல்லது காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது ஒரு குற்றத்தை விசாரணை செய்யும்  அதிகாரம் பெற்ற பிற அதிகார அமைப்பு ஆகியவற்றிடம்  புகார் அளிக்க ஒருவருக்கு  உரிமை உண்டு என்பதை அதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். 

கண்காணிப்பு

மேற்கூறப்பெற்றவை எல்லாம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒன்றிய/மாநில/மாவட்ட அளவில் மேற்பார்வைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேற்பார்வைக்குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் விவரமும் கூறப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

1.மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவில்  (State Level Oversight Committee-SLOC) இடம் பெறுவோர்

(i) செயலாளர் / கூடுதல் செயலாளர், உள்துறை

(ii) செயலாளர் / கூடுதல் செயலாளர், நிதித்துறை;

(iii)  காவல்துறை  தலைமை இயக்குநர்(DGP) /காவல்துறை தலைவர்(IG)  

(iv) மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் / உறுப்பினர்.

2.மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவில் (District Level Oversight Committee- DLOC) இடம் பெறுவோர்

(i) உட்கோட்ட ஆணையாளர் / உட்கோட்டங்களின் ஆணையாளர் / பிராந்திய ஆணையாளர் / மாவட்ட உட்கோட்ட வருவாய் ஆணையாளர்  (எந்த பெயரில் அழைத்தாலும்)

(ii) மாவட்ட நீதிபதி 

(iii) மாவட்ட  காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும்

(iv) மாவட்டத்திற்குட்பட்ட  ஒரு நகராட்சியின் மேயர் / கிராமப்புறங்களில் உள்ள மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்.

உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள  வழிமுறைகள் நடைமுறைப்படுத்துவதைப் பார்வையிட வேண்டியது  மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவின் (SLOC)  கடமையாகும் இத்துடன் கீழ்க்கண்ட கடப்பாடுகளை உள்ளடக்கியதாகும்: 

அ) சி.சி.டி.வி கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவற்றை  வாங்குதல், விநியோகித்தல், நிறுவுதல்; 

ஆ) அதற்கான வரவு-செலவு ஒதுக்கீட்டைப் பெறுதல்

இ) சி.சி.டி.வி கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவற்றின்  பராமரிப்பு,தொடர் பராமரிப்பைக்   கண்காணித்தல்

ஈ) ஆய்வுகளை மேற்கொள்ளல், மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவில்  (DLOC) இருந்து பெறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்தல் 

உ) மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவில்  (DLOC )இருந்து மாதாந்திர அறிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தல், இத்துடன்  பழுதான உபகரணங்கள் போன்ற  பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்தல்.

அதேபோன்று , மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவிற்குக் (DLOC) கீழ்க்கண்ட  கடமைகள் உள்ளன :

அ) சி.சி.டி.வி கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவற்றின்  மேற்பார்வை, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியன. 

ஆ) சி.சி.டி.வி கேமரா, அதன் உபகரணங்கள்  ஆகியவற்றின் பராமரிப்பு, தொடர் கண்காணிப்பு ஆகியன.

இ) சி.சி.டி.வி கேமரா மற்றும் அதன் உபகரணங்களின் செயல்பாடு, பராமரிப்பு ஆகியவைக் குறித்துக் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியுடன் (SHO) இணைந்து செயலாற்றுதல்.

உ) சி.சி.டி.வி  கேமரா அதன் உபகரணங்கள் ஆகியவற்றின்  செயல்பாடு குறித்து மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு  (SLOC ) மாதாந்திர அறிக்கை அனுப்புதல்.

ஊ) மனித உரிமை மீறல்கள் நடந்து  அவை தெரிவிக்கப்படாமல் இருப்பதை அறிய,  காவல்நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில்  பதிவான காட்சிகளை ஆய்வு செய்தல்.    

இவை யாவற்றுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமல் நடைமுறைப்படுத்த  முடியாது என்பது வெளிப்படை. மாநிலங்களின், யூனியன் பிரதேசங்களின் நிதித் துறைகளால் இவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று  உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி.கேமராக்களின் இயக்கம், பராமரிப்பு, பதிவாகுதல் ஆகியவை சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரியின் கடமையும், பொறுப்பும் ஆகும். சி.சி.டி.வி. கேமராக்களின் உபகரணங்கள் அல்லது  செயல்படுவதில் ஏதேனும் பழுது  இருந்தால் உடனடியாக மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு(SLOC ) புகாரளிக்க வேண்டியது காவல் நிலைய பொறுப்பு அதிகாரியின்(SHO) கடமையும், பொறுப்பும் ஆகும்.

ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தில் சி.சி.டி.வி கேமரா செயல்படவில்லை என்றால், அக்காலகட்டத்தில் அந்த காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கைது / விசாரணைகள் குறித்து மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு   (DLOC )சம்பந்தப்பட்ட  காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்து, அதன் பதிவை மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு   (DLOC ) அனுப்ப வேண்டும்.

 ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தின் சி.சி.டி.வி. கேமராவின்  செயலிழப்பு அல்லது செயல்படவில்லை என்று புகாரளித்திருந்தால், மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு (DLOC )  உடனடியாக மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவிடம்(SLOC )  பழுது நீக்கவும், புதிய  சி.சி.டி.வி. கேமரா வாங்கவும் வேண்டுகோள் விடுக்க வேண்டும், அதை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். 

ஒவ்வொரு மாநிலத்தின், யூனியன் பிரதேசத்தின் காவல்துறை தலைமை இயக்குநர்/ காவல்துறை தலைவர் ஆகியோர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நிறுவப்பட்ட  சி.சி.டி.வி. கேமராவின் இயக்கம், பழுதானவற்றை சரி செய்தல் ஆகியன குறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

காவல்  நிலையத்தில்  செயல்படாத அனைத்து சி.சி.டி.வி கேமராக்களின் செயல்பாட்டை மீட்டெடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவும். சி.சி.டி.வி கேமராக்களின் பராமரிப்பு, பதிவுகளின் விவரம், பழுது நீக்குதல் ஆகியவற்றிற்குக் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியையே  பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

பாமரனும் எதிர்நோக்குவது

cctv camera in police station supreme court verdict

இந்திய அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின் கீழ் இந்திய குடிமகன்  ஒவ்வொருவர்க்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் தொடர்ச்சியாய் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் உள்ளன.

நாகரிகச் சமூகத்தின் அவலங்களாய்த் தொடரும் காவல் சித்திரவதை, காவல் வன்முறை, காவல் மரணம் ஆகியவற்றை மட்டுப்படுத்தும் சமூக நோக்கில், தொலைநோக்குப் பார்வையில் உச்ச நீதிமன்றம்  இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழ் நாட்டில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்களுக்கு என்றும் நிலைத்திடும் நன்றியை உரித்தாக்குவோம். அதே நேரத்தில் இதை முழுமையாக, முறையாகக் கண்காணித்து நடைமுறைப்படுத்தினால் அவரை வரலாறு மெச்சும். 

டாப் 10 செய்திகள்..! இதை மிஸ் பண்ணாதீங்க..!

“என்னை வாழ வைத்தது சினிமா தான்” – கமல்ஹாசன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *