ஒன்றிய பார்ப்பனிய சுரண்டலைத் தடுப்பதற்கான முதல்படி? பகுதி 16

சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

நாம் சாதியச் சமூகமாகத் தொடர்வதற்குக் காரணம் இங்கே உழைத்து உருவாக்கப்படும் செல்வமனைத்தையும் உலக முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளும் உள்ளூர் பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியவாதிகளும் உறிஞ்சிக் கொள்வதுதான். இப்படி உறிஞ்சுவதற்கான முக்கிய கருவியாக இருப்பது பணம்.

சுரண்டல் பொறிமுறை

நமது பண மதிப்பைச் சரித்து அதன் தரத்தைக் குறைத்து உலக ஏகாதிபத்தியவாதிகள் செல்வத்தை உறிஞ்சுவதைத் தடுக்க தற்காலிகமாக ரசிய-சீனப் போட்டியாளர்களை அனுமதித்து டாலர் பிரதிநிதித்துவப்படுத்தும் எண்ணெய், மின்னணு இணையப் பொருட்களின் விலைகளை வீழச்செய்வதும் நீண்டகால நோக்கில் எரிபொருள் மற்றும் மின்னணு உற்பத்தித் தொழில்நுட்பங்களில் சுயசார்பை எட்டி இருதரப்பையும் சார்ந்திருக்கும் நிலையை இல்லாமல் ஆக்குவதும்தான் தீர்வு.

இப்படி ரூபாய் மதிப்பைச் சரிப்பதைத் தடுத்து மக்களின் வருமானத்தையும் வாங்கும்திறனையும் கூட்டுவதுதான் ஒன்றியத்தின் பணியாக இருக்கவேண்டும். மாறாக மதிப்பிழக்கும் ரூபாயை சுற்றோட்டத்தில் மேலும் அதிகரித்து தொழிலாளர்களின் வருவாயையும், நடுத்தரவர்க்க சேமிப்பையும் வெட்டிச் சுருக்கி வாங்கும் திறனற்றவர்களாக்குகிறது. இதன் பலன்களை முதலாளிகள் தின்று கொழிக்கிறார்கள்.

போதாக்குறைக்கு குஜராத்தி பனியாக்களுக்கு கொடுத்த கடனை வாராக்கடனாக அறிவித்தும், அவர்களுக்கு வரிச்சலுகை அளித்தும், அவர்களது பங்குகளில் முதலீடு செய்தும் பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருக்கும் மக்களின் ரூபாயைத் திண்ணக் கொடுக்கிறது. இதனால் ஏற்படும் இழப்பை மக்கள் வாங்கும் எண்ணெய்யின் விலையைக் கூட்டியும் வரியை உயர்த்தியும் தனது வரிவருமானத்தைக் கூட்டிக்கொள்கிறது.

கடன் கொடுத்து போண்டியாகும் வங்கிகள் பணம் எடுக்க, பரிமாற்ற, குறைந்தபட்ச வைப்பற்ற கணக்குகளுக்கு கட்டணம் விதித்தும், மக்கள் வாங்கும் கடன்களுக்கான வட்டிவிகித்தை உயர்த்தியும் அவர்களின் சேமிப்புகளுக்கு குறைவான வட்டி கொடுத்தும் இழப்பை சரிசெய்து இலாபத்தைக் கூட்டிக் கொள்கின்றன. அந்தப் பக்கம் அள்ளிக் கொடுத்துவிட்டு இந்தப் பக்கம் சுரண்டுகிறார்கள்.

உடைக்கவேண்டிய ஒன்றிய நிறுவனங்கள்     

இப்படி ஏய்த்துப் பிழைப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பது ஒன்றியத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரம். இந்த அரசியல் அதிகாரத்தின் பொருளாதார மையமும் முதுகெலும்புமாக இருப்பது பொதுத்துறை நிறுவனங்கள்.

ஒரு குறிப்பிட்ட மாநில முதலாளிகள் ஒன்றியத்தைக் கைப்பற்றி இந்நிறுவனங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன்மூலம் ஒட்டுமொத்த மாநிலங்களையும் அடக்கி ஆளுகிறார்கள். இந்த ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்வு இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த அரசியல் பொருளாதார ஓர்மையை உடைப்பதுதான். அது இப்போதிருக்கும் இந்திய ஒன்றிய கட்டமைப்பில் (union) இருந்து இந்தியக் கூட்டமைப்பாக (federal) மாறும்போதுதான் சாத்தியம்.

இந்தத் தலைகீழ் மாற்றத்தைச் சாதிக்கும் புரட்சிகர சமூக, அரசியல் சூழல் இப்போது இல்லை. ஆனால், அதற்காகக் காத்திருப்பதோ அதுவரை அவர்களைக் கைகாட்டி குற்றம்சொல்லி புலம்பிக்கொண்டு நாம் வாளாவிருக்கவோ முடியாது. அப்படியான மாற்றத்திற்கான சூழலை உருவாக்குவதும் அதனை நோக்கி நகர்வதும்தான் நாம் இப்போது செய்யவேண்டிய பணி.

பணத்தின் வழியிலான உற்பத்தி சுழற்சி

பணவுருவாக்கம் தங்கம் மற்றும் டாலர், யூரோ, யுயன் முதலிய அந்நிய பணத்தை ஆதாரமாகக் கொண்டோ, அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாகவோ உருவாக்கப்படுகிறது. இது சந்தையில் தொழிலாளர்கள் ஏற்கனவே உழைத்து உருவாக்கிய பொருட்களையோ அல்லது புதிதாகத் தொழிலாளர்களின் உழைப்பை வாங்கவோ பயன்படுத்தப்பட்டு உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறது.

தொழிலாளர்கள் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்களது மதிப்புமிக்க உழைப்பை சந்தையில் விற்று பொருட்களை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாகும் பொருட்கள் சந்தைக்கு வந்து தொழிலாளர்கள் ஊதியமாகப் பெற்றப் பணத்தைக் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படிப் பணத்தினால் தொழிலாளர்களைக் கொண்டு உருவாக்கப்படும் செல்வம் முதலாளிகளுக்கு இலாபமாக, அரசுக்கு வரியாக, தொழிலாளர்களின் ஊதியமாக மாறுகிறது. இதில் தொழிலாளர்களின் திறனையும், உழைக்கும் அளவையும், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் சுரண்டப்படும் சமூகச் சூழலையும் பொறுத்து அவர்களின் வருவாய் வேறுபடுகிறது. அந்தப் பணம் மற்ற பொருட்செல்வமாகவும், வங்கியில் வைப்பாகவும், நீண்டகால சேமிப்பாகவும், காப்பீடாகவும், வருங்கால வைப்புநிதியாகவும் மாறுகிறது. இந்தப் பணத்தை மூலதனமாக மாற்றி மீண்டும் ஒரு உற்பத்தி சுழற்சி ஏற்படுத்தப்படுகிறது. அது உருவாக்கும் பொருட்செல்வம் மீண்டும் (நியாயமற்ற முறையில்) பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அதிகாரமற்ற மாநில நிர்வாகம்      

இப்படி உற்பத்திக்கான பணத்தை உருவாக்கி நிர்வகிக்கும் மையமாக அரச கருவூலங்களும், மத்திய வங்கியும், மற்ற வங்கிகளும் செயல்படுகின்றன. உற்பத்திக்கான முக்கிய இடுபொருட்களான இரும்பு, எரிபொருள் உள்ளிட்டவற்றை இந்தப் பணமின்றி வாங்கமுடியாத சூழலும் இந்தப் பணத்தில்தான் அரசுக்கான வரியை செலுத்தி அதன் சேவையைப் பெறமுடியும் என்ற கட்டாயமும் நம்மை இந்தப் பணத்தை ஏற்கச் செய்கின்றன.

இரும்பு, எரிபொருள், சிமெண்ட் உள்ளிட்ட உற்பத்திக்கான அத்தியாவசிய சரக்குகளையும் பணத்தை உருவாக்கி நிர்வகிக்கும் வங்கி, காப்பீடு உள்ளிட்ட மூலதன நிதிநிறுவனங்களையும், வரிவிதிக்கும் அரசியல் அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்ட அவர்கள் நம்மைப் பணத்தை உருவாக்கி உற்பத்தி சூழற்சியை ஏற்படுத்தும் அரசியல் ஆற்றலற்ற வெற்று நிர்வாகிகளாக மாற்றி நம் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நிதிக்கு அவர்களிடம் கையேந்த வைத்திருக்கிறார்கள்.

நம் கைகளில் கட்டப்பட்டிருக்கும் இந்த அடிமைச்சங்கிலியை உடைக்கும் முதல்படி பணத்தை உருவாக்கி நிர்வகிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்தி அந்த அதிகாரத்தை நம் கையில் எடுத்துக் கொள்வதாகவே இருக்கமுடியும். அடுத்து இதன் மதிப்பைத் திரித்தும் நீர்த்தும் நமது உழைப்பை உறிஞ்சுவதைத் தடுக்க இந்த ரூபாயின் மதிப்பைத் தீர்மானிக்கும் கூட்டரசியல் அதிகாரத்தில் நமக்கான பங்கைப் பெறுவதை நோக்கி நகர்வதாக இருக்கவேண்டும்.

பார்ப்பனிய சமூக ஏகாதிபத்திய ரூபாய் சுரண்டலைத் தடுக்க: முதல்படியாக பணத்தை உருவாக்கி நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கையில் எடுப்பது; நீண்டகால நோக்கில் இந்தப் பணத்தின் மதிப்பைத் தீர்மானிக்கும் அரசியல் அதிகாரப் பங்கைப் பெறுவது.

ஏகாதிபத்திய சுரண்டல்முறை

பணத்தைப் பெருக்கி வட்டிவிகிதத்தைக் குறைத்து மதிப்பைத் திரித்து நீர்க்க வைத்து விலையையும் வரியையும் உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறையை ஏதோ ஒன்றியம் கண்டறிந்ததாகவோ இப்படி இந்தியாவில் மட்டும்தான் நடப்பதாகவோ நினைக்கக்கூடாது. இது உலகமய ஏகாதிபத்தியவாதிகள் கண்டறிந்தது. முதலில் டாலரை அச்சிட்டு குறைந்த வட்டிவிகிதத்தை நிர்ணயித்து உலகம் முழுக்க பங்குச்சந்தை முதலீடுகளாக ஏற்றுமதி செய்து ஒரு உற்பத்தி சுழற்சியை ஏற்படுத்துவார்கள்.

அது எண்ணெய், தொழில்நுட்பங்களுக்கான தேவையைக் கூட்டும். அவற்றின் விலைகளை உயர்த்தி முதல்சுற்றில் இலாபம் பார்ப்பார்கள். உற்பத்தி பெருகி பொருளாதாரம் வளரும்போது அமெரிக்க வங்கி வட்டிவிகிதத்தைக் கூட்டும். மற்ற நாடுகளில் இருந்து டாலர் வெளியேறி பங்குச்சந்தையும் அவற்றின் நாணய மதிப்பும் வீழும்.

குறைந்த மதிப்பு கொண்ட டாலரில் கடன்வாங்கிய நாடுகளும் நிறுவனங்களும் இப்போது அதிக மதிப்புகொண்ட டாலரில் கடனை செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படும். டாலர் கையிருப்பைக் கொண்டும் மூலதன வெளியேற்றத்தைத் தடுத்தும் அதனை உலக நாடுகள் சமாளித்தால் அவர்களின் பங்குச்சந்தையில் இருந்து பெருமளவில் ஒரே நேரத்தில் வெளியேறியும் நிதிய திரிபுத்தகவல் தாக்குதலைத் தொடுத்தும் செயற்கையாக பங்குச்சந்தையை விழவைப்பார்கள். பின்பு மலிவான விலையில் திவாலாகும் மதிப்புமிக்க நிறுவனங்களை வாங்கி சந்தையைக் கைப்பற்றி தங்களது முற்றுருரிமையை நிலைநாட்டுவார்கள்.

சீனா-ரசிய நாடுகளின் எதிர்ப்பு

இப்படி டாலரை உற்பத்தி செய்து சரக்குகளின் விலையையும் நாணயங்களின் மதிப்பையும் மாற்றி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறைக்கு அச்சாணியாக விளங்கி வந்தது உற்பத்திக்கான எரிபொருளிலும் தொழில்நுட்பங்களிலும் அவர்கள் கொண்டிருந்த முற்றோருமை. உற்பத்தி தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு அவற்றை மென்மேலும் வளர்த்தெடுத்த சீனா அந்த முற்றோருமையை உடைத்தது.

ரசியா, ஈரான், வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு எரிபொருள் வர்த்தகத்தில் நிலவிய டாலர் முற்றோருமையையும் உடைத்தது. இரண்டையும் பிரதிநிதித்தவப்படுத்திய டாலரைத் தவிர்த்து சொந்த நாணயங்களில் வர்த்தகத்தைத் தொடங்கியது. இந்த டாலர்மைய உடைப்பைத் தடுக்க வெனிசுவேலா, ஈரான், ரசிய நாடுகளின் நாணய மதிப்பைத் தகர்ப்பது, அவர்களின் மீது பொருளாதாரத்தடை விதிப்பது, உலக பணப்பரிமாற்றக் கட்டமைப்பில் இருந்து துண்டித்துத் தனிமைப்படுதுவது என நிதியத் தாக்குதலைத் தொடுத்தது அமெரிக்கா. சிரியா, உக்ரைன் நாடுகளின் வழியாக இவர்களின் மீது பதிலிப்போர்களை ஏவிவிட்டது.

ஐரோப்பாவுக்குச் செல்லும் எரிவாயுக் குழாய்களை வெடிவைத்துத் தகர்த்து பொருளாதாரத் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது. ரசியாவிடம் இருந்து ஐரோப்பிய எரிவாயு சந்தையைப் பறித்தும், சீனாவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டும், தொழில்நுட்ப ஏற்றுமதிக்குத் தடைவிதித்தும் இந்நாடுகளை வழிக்குக் கொண்டுவரப்பார்த்தது.

சீனா-ரசிய நாடுகளின் போராட்ட உத்தி

போர்களில் இந்நாடுகள் பதிலடி கொடுத்து புறமுதுகிட ஓடவைக்கும் அதேசமயம் தங்களின் டாலர் கையிருப்பைக் கைவிடுவது, வர்த்தகத்தில் டாலரை முற்றிலுமாக நீக்குவது என பொருளாதார பதிலடி கொடுத்தார்கள். சில்லுகள் உற்பத்தி தொழில்நுட்பத்தில் பாய்ச்சலை நிகழ்த்தியும், இணையப் பொருட்கள் இயங்க புதிய மென்பொருள் கட்டமைப்பை ஏற்படுத்தியும் சீனா அமெரிக்க தொழில்நுட்ப சார்பை உடைத்து வருகிறது.

முன்பு 2008 பொருளாதார நெருக்கடியின்போது பல இலட்சம் கோடி டாலர்களை அமெரிக்கா வெளியிட்டு உலகம் முழுக்க ஏற்றுமதி செய்தபோது எண்ணெய் விலை 120 டாலர்கள் வரை உயர்ந்து உலகம் முழுக்க விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அதனால் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அப்போது இவர்களுக்கு ஒத்துழைத்து பலாயிரம் கோடி டாலர் அமெரிக்கக் கடன்பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு பொருட்களை ஏற்றுமதி செய்தது சீனா.

முன்புபோலவே கோரோனா காலத்திலும் பல இலட்சம் கோடி டாலர்களை அமெரிக்கா வெளியிட்டது. காங்கிரசைப் போலவே பாஜக அந்தப்பணம் பங்குச்சந்தையில் நுழைய அனுமதித்தது. ஆனால் இம்முறை இந்த டாலர்கள் சீனா பங்குகளை வாங்க தடைகளை ஏற்படுத்தியது சீனா. ஏற்கனவே கையில் வைத்திருந்த கடன்பத்திரங்களை சந்தையில் விற்று கையிருப்பைக் குறைத்தது. நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் யுயனின் அளவைக் கூட்டியது.

அமெரிக்கா வெளியிட்ட டாலருக்கு மற்ற நாடுகள் சரக்குகளை கொடுக்காததாலும் அப்படி வாங்கிய டாலரை வைப்பாக வைக்காததாலும் சந்தையில் பொருட்களின் அளவைவிட பணத்தின் அளவுகூடி பணவீக்கம் கண்டது. அமெரிக்கா மற்றும் டாலருக்கு பங்குச்சந்தையை திறந்துவிட்ட நாடுகளில் எல்லாம் விலைவாசி உயர்வு. அனுமதிக்காத சீனாவில் விலைவாசி வீழ்ச்சி. இப்போது வேறுவழியின்றி அமெரிக்க மத்தியவங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தி வெளியிட்ட பணத்தை உள்ளிழுக்க வேண்டிய சூழல். அந்தப் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு அதற்கு இணையாக பணத்தை வெளியிட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளும் அதே பாதையில். ஆனால் சீனா இதற்கு மாறாக வட்டிவிகிதத்தைக் குறைத்து சந்தையில் பெருகிக் கிடக்கும் பொருட்களுக்கு இணையாக பணத்தை அதிகரிக்கிறது.

இதிலிருந்து நாம் கற்கும்

பாடம் 1. பொருளாதார சூழற்சியின் தொடக்கம் சரக்கு; பணமல்ல. இந்த சுழற்சி சரக்கு-பணம்-சரக்கு என்பது; பணம்-சரக்கு-பணம் அல்ல.

2. சரக்கை வைத்திருக்கும் ரசியா அதனை அடிப்படையாகக் கொண்டு பணத்தை உருவாக்கி தன்மீதான பொருளாதார தாக்குதலை முறியடித்திருக்கிறது. டாலருக்கு சரக்கைத் தரமறுத்து பதிலடி கொடுத்து தனது சுயசார்பை இறையாண்மையை மீட்டிருக்கிறது.

3. சீனா டாலருக்கான தேவையைக் குறைத்தும் தேவைக்கும் அதிகமான டாலர் கையிருப்பைக் கைவிட்டும் அமெரிக்கா மிகையாக டாலர் உற்பத்தி செய்து அதன் மதிப்பை நீர்க்கச் செய்வதை தடுத்திருப்பதோடு மேலும் டாலரை உற்பத்தி செய்து செலவு செய்ய வழியின்றி அவர்களின் கைகளை கட்டிப்போட்டிருக்கிறது. இப்போது புதிதாக பணத்தை வெளியிட வேண்டும் என்றால் சீனாவின் ஒத்துழைப்பின்றி சாத்தியமில்லை என்னும் நிலையில் அமெரிக்கப் பெரும்பணக்காரர்களும் உயரதிகாரிகளும் சாரைசாரையாக சீனாவுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.

நாடுகளுக்கு இடையிலான உற்பத்தி சார்பு தவிர்க்க இயலாதது. முற்றுமுழுதான தொழில்நுட்ப சுயசார்பு எந்த நாட்டுக்கும் சாத்தியமில்லாததும்கூட. ஆதலால் டாலருடனான உறவைத் தூண்டிக்காத அதேசமயம் அதன் தேவைக்கேற்ற அனுமதியை சீனா அனுமதிப்பதன் மூலம் டாலர் ஆதிக்கத்தை எதிர்த்தும் நாடுகளுக்கு இடையில் இணையான சார்பையும் கோருகிறது.

நமக்கான பாதை

ரசியா தானாக விரும்பி டாலர், ஈரோவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவில்லை. மாறாக இவர்கள் அப்படியான தெரிவை நோக்கி அந்நாட்டைத் தள்ளியிருக்கிறார்கள். ஆகவே ஏகாதிபத்தியங்கள் பணத்தின் மதிப்பைத் திரித்தும் நீர்க்கவும் செய்து நம் உழைப்பை உறிஞ்சுவதைத் தடுக்க உற்பத்திக்குத் தேவையான அளவு அந்நிய மூலதனதை அனுமதித்து ஊகபேரத்தில் ஈடுபடும் மிகைமூலதன நுழைவைத் தடுக்கும் சீனாவின் உத்தியே நமக்கு உவப்பானது.

பணத்தை மிகையாக உருவாக்கி ரூபாயை நீர்க்கச் செய்து நாம் உருவாக்கும் செல்வத்தை உறிஞ்சும் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து இணையாக இருவருக்கும் பொதுவான பணக்கொள்கையை வகுக்க அவர்களை நம்மிடம் பேச்சுவார்த்தைக்கு வரவைக்க வேண்டுமானால் சீனாவைப்போல நாமும் மிகையாக ரூபாயை உருவாக்க முடியாமல் அவர்களின் கைகளைக் கட்ட வேண்டும். பணத்தை உருவாக்கி நிர்வகிக்கும் அதிகாரத்தை நம் கையில் எடுக்கவேண்டும்.

அதற்கு முதலில் தமிழகம் தனக்கான வலுவான வங்கி, காப்பீட்டுக் கட்டமைப்பையும் மின்னணு பணப்பரிமாற்றப் பரிவர்த்தனை கட்டமைப்பையும் ஏற்படுத்திக்கொண்டு வங்கி, காப்பீட்டுத் துறைகளில் கால்பதிக்க வேண்டும். படிப்படியாக அரசு ஊழியர் ஊதியங்கள், வரிவருவாய், நலத்திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் என அனைத்து தமிழ்நாட்டரச பணப்பரிவர்த்தனைகளும் இந்தக் கட்டமைப்புகளில் மட்டுமே இயங்குமாறு செய்யவேண்டும்.

மற்ற வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக இவற்றை வளர்த்தெடுத்து இந்தச் சந்தையின் குறிப்பிட்ட பகுதியைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொள்ளவேண்டும். இங்கே உருவாகும் மூலதனம் ஒன்றிய நிறுவனங்களின் வழியாக மீண்டும் அவர்களிடம் சென்று குவியும் அந்தச் சுழற்சியில் இடையீடு செய்து மடைமாற்ற வேண்டும். தமிழகத்தினுள் நுழையும் பணம் மீண்டும் சேமிப்பு, காப்பீடு வழியாக வெளியேறாமல் செய்து அவர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அதேவேளை உள்ளூர் பொருளாதார சூழற்சிக்குத் தேவையான பணத்தை நாமே உருவாக்கிக் கொள்ளும் நிலையை எட்டவேண்டும்.

இப்படி மாநிலங்களின் கைகளை அவர்கள் கட்டுவதற்குப் பதிலாக மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களின் கைகளை கூட்டாக இணைந்து கட்டிப்போட மற்ற மாநிலங்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கவேண்டும்.

2024 தேர்தல் வழங்கும் வாய்ப்பு

வரைமுறையின்றி நமது பங்குச்சந்தையில் டாலரை அனுமதித்த ஒன்றியம் அமெரிக்க மத்திய வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்திபோது பங்குச்சந்தையில் இருந்து டாலர் வெளியேறி டாலர் கையிருப்பு குறைவதைத் தடுக்கவும் ரூபாய் வீழ்வதை காக்கவும் ரசியாவிடம் இருந்து ரூபாயில் எண்ணெய் வாங்கி சாமர்த்தியமாக சமாளித்தது.

அது பார்ப்பனியத்துக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான முரணாக வெடித்தது. அவர்கள் அதானி பங்குகளின் மீதான நிதியத் தாக்குதலையும் மோடியின் மீதான அரசியல் தாக்குதலையும் தொடுத்தார்கள்.

இவர்கள் பொதுத்துறை நிதிநிறுவனங்களில் உள்ள ரூபாயைக் கொட்டி அதானி பங்குகளை காத்துக்கொண்டு அமெரிக்காவின் இராணுவ நகர்வுகளுக்கு ஒத்துழைத்து அரசியல் சமரசம் செய்துகொண்டு சமாளிக்கிறார்கள். 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸை அமரவைக்கும் பட்சத்தில் அதானிக்கான அரசியல் ஆதரவு உடையும். அது அவரது பேரரசை ஆட்டம் காணவைக்கும். அதில் முதலிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து ஆட்டம் காணும்.

அப்போது அரசு அதனைக் கைப்பற்றி இந்த இழப்பை சரிசெய்யவேண்டும். ஆனால் ஆங்கிலேயர் காலம்தொட்டு அந்நியர்களுக்கு சேவகம் செய்துவரும் காங்கிரஸ் இதனை செய்யும் என நாம் எதிர்பார்க்கவியலாது. இந்நிலையில் ஏகாதிபத்தியவாதிகள் எளிதாக அவரது சொத்துக்களை கைப்பற்றுவார்கள். அது அவர்கள் இந்திய உள்கட்டமைப்புகளை கைப்பற்றி தங்களது முற்றோருமையை நிலைநாட்ட உதவுவதோடு ரூபாய்மைய பொதுத்துறை நிறுவனங்களையும் பலகீனப்படுத்தி தங்களது டாலர் ஆதிக்கத்தை வலுப்படுத்துவார்கள்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய். இது எல்லாம் நடந்தாலும் நடக்காமல் போனாலும் அவர்கள் இருவரும் நமது மக்களின் செல்வத்தை விழுங்கி ஏப்பம் விடுவதைத் தடுக்க இந்த முரணான சூழலைப் பயன்படுத்தி மூலதனத்தின் மீதான நமது அதிகாரத்தை நிலைநாட்டுவதை நாம் இலக்காகக் கொள்ளவேண்டும். அதற்கான வேலைகளில் இன்றே ஈடுபடுவது காலத்தின் தேவை. இப்படி வங்கி, காப்பீடு, பணபரிமாற்றக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி மூலதனத்தைக் கைப்பற்றினாலும் எந்த அடித்தளத்தைக் கொண்டு நாம் பணத்தை உருவாக்குவது? அப்படி உருவாக்கும் பணத்தைக் கொண்டு எந்தப் பொருட்களை உற்பத்தி செய்வது? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாஸ்கர் செல்வராஜ்
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

வடவர்களைத் தலையில் வைத்திருக்கும் தமிழகம்!- பகுதி 15 

ரூபாய்மைய வர்த்தகத்தின் முக்கியத்துவம் என்ன? பகுதி 14

மீண்டும் கிழக்கையும் மேற்கையும் இணைக்குமா தமிழகம்?: பகுதி 13 எதில் தன்னாட்சியும் தற்சார்பும் வேண்டும்?: பகுதி 12

சாதி எப்போது ஒழியும்? பகுதி 11

சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? – பகுதி 10

எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா-  பகுதி 9

சிறப்புக் கட்டுரை: உலகை மாற்றிக்கொண்டிருக்கும் உக்ரைன் போர் பகுதி 8

சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7

சிறப்புக் கட்டுரை: இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6

சிறப்புக் கட்டுரை: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5

சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4

சிறப்புக் கட்டுரை: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3

சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2

சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?  

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *