நா.மணி
ஏ.பாலசுப்ரமணியம் என்றொரு மனிதர் வாழ்ந்தார். பிறப்பால் பிராமணர், செல்வந்தர். ஆனால், அவரது வாழ்க்கை, மார்க்சிய வாழ்க்கை நெறியோடு நிறைவுற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தார். அவர்கள் உணவை உண்டார். அவர்களது இல்லத்தில் படுத்து உறங்கினார். தோல் பதனிடும் தொழிலாளர்கள் உண்ணும் உப்புகறியை உண்டு பழகினார்.
தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வு அழுகி நாற்றம் எடுத்துக் கொண்டு இருந்தது. அதற்கு மருந்திடும் மருத்துவராக தன் வாழ்வை மாற்றி அமைத்துக் கொண்டார்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற, ‘தோல்’ நாவலில், டி. செல்வராஜ், இதனை மிகச் சிறந்த யதார்த்தவாத, அழகியலோடு கதையாக புனைந்திருக்கிறார்.
இத்தகைய மாமனிதர்கள் திண்டுக்கலில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இவர் மட்டுமல்ல, இவர் போன்ற பல மனிதர்கள் சாதியை மறுதலித்து மக்களுக்காக வாழ்ந்தார்கள். வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் பலரும் அறிய மாட்டார்கள்.
கங்கை நீரால் பழங்குடியின் கால்களை கழுவிய முதல்வர்!
மத்தியப் பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகான். சமீபத்தில், ஓர் பழங்குடி சமூகத்தை சார்ந்தவரின் கால்களை கங்கை நீர் கொண்டு கழுவினார். கங்கை நீரில் குளிப்பாட்டி, அவரைப் புனிதமாக்கினார். இது உலகம் தழுவிய செய்தியாகிவிட்டது. பாதிப்புக்கு உள்ளானவரை, ‘இழி பிறவி’ என்று சுட்டும் வகையில், ஒரு குறியீடாக தான், அவர் மீது சிறுநீர் கழிக்கிறார் அந்த நபர். அவர் மீதான இழிவும், கண்ணீரும், தனது செயல்பாட்டால் காணமல் போய்விட்டதாக சிவராஜ் சிங் சவுகான் நம்மை கருதத் தூண்டுகிறார். ஏன் அந்த பழங்குடியின மனிதரின் கால்களை கங்கை நீர் கொண்டு கழுவினார் ஒரு மாநில முதல்வர்?
பிரவேஷ் சுக்லா என்பவர் ரவாத் என்னும் பழங்குடி ஒருவரின் தலையில் சிறுநீர் கழிக்கிறார். அதனை அவரது நண்பர் தீப் நாராயண் சாகு காணொளி ஆக்கி பொது வெளியில் பரவ விடுகிறார். பொது வெளியில் பரவலாகிறது அந்தக் காணொளி சக மனிதர் மீது சிறுநீர் கழித்து மகிழ்ந்த பிரவேஷ் சுக்லா, கேதர்நாத் சுக்லா என்கிற பாஜக சட்ட மன்ற உறுப்பினரின் நெருங்கிய கூட்டாளி. தனது கட்சிக்காரர் செய்த குற்றத்தை தன் குற்றமாக கருதி இதனை செய்யவில்லை சவுகான். தனது கட்சிக்காரர் பாவத்தை கழுவவும் இந்தக் காரியத்தை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்யவில்லை.
இந்தியாவிலேயே பழங்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் மாநிலம் மத்திய பிரதேசம். மொத்த மக்கள் தொகையில் 21 விழுக்காடு மக்கள் பழங்குடிகள். மொத்தமுள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளில் 48 தொகுதிகள் பழங்குடிகளுக்கானது. எட்டு நாடாளுமன்ற தொகுதிகள் பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகள். 47 வகையான பழங்குடிகள் வாழ்கிறார்கள். 52 மாவட்டங்களில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
தேர்தல் யுக்தி!
கடந்த சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மையான பழங்குடி தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. அப்போது வெற்றி பெற்று, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த கமல் நாத்தை, எவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் வீழ்த்தி, முதல்வரானார் என்பது எல்லோருக்கும் தெரியும். 2023 ஆம் ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. வெற்றியை தீர்மானிக்கும் பழங்குடி மக்கள் ஒருவரின் தலையில் தன் கட்சிக்காரர் ஒருவரே சிறுநீர் கழித்து விட்டார். இது தான் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. இதனைப் போக்கவே மேற்படி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவருக்கு கங்கை நீர் கொண்டு புனித நீராட்டு.
இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க, பழங்குடிகள் வாக்குகளை கவர, பல்வேறு வேலைகளை செய்து வருகிறார் சிவராஜ் சிங் சவுகான். மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு ரயில் நிலையங்களுக்கு பழங்குடி மக்கள் தலைவர்கள் இருவரின் பெயர்களை ( டான்யா பில் & ராணி கமலாபதி) சூட்டி இருக்கிறார். வனவாசி கல்யான் ஆசிரமம் என்ற பாஜகவின் பழங்குடிகள் பிரிவு தொடர்ந்து பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்து வருகிறது.
எல்லாவற்றையும் தனது கட்சிக்காரர், சிறுநீரைக் கழித்து போக்கி விட்டாரே என அதிர்ந்து போனார் சிவராஜ் சிங் சவுகான். இதனை சரி செய்யும் உத்தியாக, கங்கை நீர் கொண்டு கால்களையும், அந்தப் பாவமும் ( குற்றம் அல்ல) கழுவ முனைந்து உள்ளார் அவர். இதன் வழியாக, தேர்தல் ஆதாயம் முழுமையாக கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். பழங்குடிகள் தனக்கு பாவ மன்னிப்பு கொடுத்து விடுவார்கள் என்று கருதுகிறார்.
அதன் வெளிப்பாடாக, “என் மீது சிறுநீர் கழித்த மனிதர் சுக்லா, மனம் திருந்தி விட்டார். தவறை உணர்ந்து கொண்டார். எனவே அவருக்கு தண்டனை ஏதும் வேண்டாம்” என்று பாதிக்கப்பட்டவரே மிகவும் வருந்தி கூற வைத்து விட்டார் சிவராஜ் சிங் சவுகான்.
ஒருவேளை பாதிக்கப்பட்டவர் குற்றவாளியை மன்னிக்காமல் இருந்திருந்தால் என்ன நடக்கும்? “ஏன்டா முதலமைச்சரே உன் கால்களை கழுவி விட்டு விட்டார். பிறகு வேறென்ன வேண்டும் உனக்கு?” என முதல்வரின் கட்சிக்காரர்களே பாயலாம். குற்றவாளி, சமூக அரசியல் பொருளாதார ஆதிக்க சாதியை சார்ந்தவர். இப்போதும் கூட பாதிக்கப்பட்டவர், “மன்னித்து விட்டேன். அவர்மீது வழக்கு ஏதும் வேண்டாம். தண்டனை வேண்டாம்” என்று கூறாவிட்டால், ஊருக்குள் தொடர்ந்து அவரது உறவினர்கள், ஊர்க்காரர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். பலர் மீது சிறுநீர் கழிப்போம் என்று மிரட்டலாம்.
எனவே, அந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர், தன்னை அவமானம் செய்தவரை மன்னித்து விட்டேன் என்று கூறியதில் வியப்பு ஏதும் இல்லை. தன்னையும், தன்னை சார்ந்தவர்களின் எதிர்காலம், வாழ்வாதாரம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்ததன் விளைவு அல்லது அச்சமே குற்றவாளிக்கு கருணை காட்டுவதாக கூற வைக்கிறது.
ஐந்தில் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய பிரதேச பழங்குடிகள் நிலை இதுவென்றால் இதர பட்டியல் இன பழங்குடி மக்கள் நிலைமையை சொல்லவா வேண்டும்?
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கிய ஒரு சம்பவத்திற்கு ஒரு மலிவான ஒரு தீர்வை தருகிறார் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். தேசிய பாதுகாப்பு சட்டம், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப் பிரிவுகளில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அந்த இழிவான செயலை, தீண்டாமை வன்கொடுமையை தவறு என்று கருதவில்லை. குற்றவாளி உங்கள் கட்சிக்காரர் தானே என்று அவரிடம் கேட்ட போது, “குற்றவாளிகள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.
இந்திய தனித்துவமா?
“மனிதனை மனிதன் சமமாக மதிக்காத, தீண்டாமை வன்கொடுமையை இன்றும் கடைபிடிக்கும், அதன் அடிப்படையில் குற்றங்கள் புரியும், கட்சி உறுப்பினர்கள் எங்கள் கட்சிக்கு வேண்டாம்” என்று அவர் கூறவில்லை. வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலும், அதற்கான தேர்தல் அரசியலும், கால்களை கழுவ வைத்திருக்கிறது.
பட்டியல் இன, பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் என்றாலே, கழிவுகளை அவர்கள் மீது ஏன் அள்ளி ஊற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்? அதுவே உட்சபட்ச இழிவு என ஏன் கருதுகின்றனர்? உணவு உட்கொள்ளுவதும், தண்ணீர் குடிப்பதும், உயிர் வாழ எவ்வளவு அத்தியாவசியமோ, அதற்கு சற்றும் குறையாத அவசியமும் முக்கியத்துவமும் உடையது, அவை சத்துகளாக மாறிய பின்னர், அதனை வெளியேற்றுதல். உணவு உண்ணாமல் சில நாட்கள் வாழ்ந்து விடலாம்.
உணவும், நீரும், மலமாகவும், சிறுநீராகாவும் மாறி விடுகிறது. அதனை வெளியேற்றாமல் எவ்வளவு நேரம் ஒருவரால் தாக்குபிடிக்க முடியும்? உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சத்துக்கள் கழிவாக மாறிய பிறகு, அதனை ஏன் இவ்வளவு கேவலமாக, அசிங்கமாக கருதுகிறோம். மனிதக் கழிவை மிகக் கேவலமாக கருதுவது, இந்திய சமூகத்தில் மட்டுமே. இது ஒருவகையில் இந்திய தனித்துவம். இதனை இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு கூறு என்றும் கூறலாம். இந்தக் கலாச்சாரம், இந்தியாவோடு மட்டுமே எப்படி தொற்றிக் கொள்ள முடிந்தது? இந்தியாவில் நிலவும் தனித்துவமான சாதி அமைப்புமுறை. உடல் உழைப்பு அற்றவர்கள் மேல் சாதி. உடல் உழைப்பாளிகள் கீழ் சாதி. அதனினும் கீழ் சாதி மனிதக் கழிவை அகற்றுவோர். ‘தீண்டப்படாத சாதி’ என்று கழிவுகளை அகற்றுவோரை வரையறை செய்கிறது சாதியம்.
நம் உடல் ஆரோக்கியத்திற்காவும், உயிர் வாழவும் உண்கிறோம். அதே காரணத்திற்காக கழிவை அகற்ற வேண்டியிருக்கிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை இது. ஆனால், நம் கழிவை சுத்தம் செய்யும் மக்களை, நாம் ஆரோக்கியமாக இருக்க காரணமானவர்களை, நாமே ‘சுத்தம் இல்லாதவர்கள். அசுத்தமானவர்கள்’ என்கிறோம். அது எப்படி? இந்த மேல், கீழ் அடிப்படையில் மனிதர்களை மதிக்க வேண்டும் என்று சாதி அடிப்படையில் கற்றுத் கொடுத்திருக்கிறோம்.
ஒருவரை இழிபடுத்த வேண்டும் என்றால் மலத்தை அள்ளி வாயில் திணிக்கிறோம். சிறுநீரை குடிக்கும் படி உதைக்கிறோம். செருப்பு மாலை அணிவிக்கிறோம். செருப்பு தைப்பவர்கள் கீழ் சாதி என்பதை ஒட்டியே செருப்பு மாலையும் கீழானதாக கருத்தப்படுகிறது. அதுவும் கூட மேல் சாதியினர் ஒருவரை இழி செய்ய, அவர் வாயில் மலத்தை திணிப்பதில்லை. சிறுநீரை குடிக்கும் படி அடித்து உதைப்பது இல்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக இதனை பரிசீலனை செய்வோம். மலத்தை யார் கையால் தொட மறுக்கிறார்களோ? அவர்கள் தான் அதனை சேகரித்து வந்து அடுத்தவர் வாயில் திணிக்கிறார்கள். சிறுநீரை பிடித்து வந்து மற்றொருவர் வாயில் ஊற்றுகிறார்கள்.
வேங்கைவயலும் மத்திய பிரதேசமும்
ஒருவேளை இவர்கள் சுத்தம் செய்வதை நிறுத்தினால் என்னவாகும்? எல்லோரும் எப்பொழுதேனும் இதனை ஒரு கணப் பொழுதேனும் சிந்தித்து இருக்கலாம். “இதைச் செய்யாவிட்டால் இவர்களுக்கு வாழ்வில்லை” என்ற மமதையே, நம் ஆரோக்கியம் பேணுபவர்களை, நாமே இழிவு படுத்துகிறோம். இதுதான் நேற்று வேங்கைவயலில் நடந்தது. அதற்கு கொஞ்சம் முன்னர் திண்னியத்தில் நடந்தேறியது. மத்திய பிரதேசத்தில் சித்தி மாவட்டத்தில் ரவாத்திற்கும் அதுவே நடந்துள்ளது. இன்னும் பல பகுதிகளில் பன்னெடுங்காலமாக நடந்து கொண்டுள்ளது.
உடல் உழைப்பை இழிவு எனக் கருதியமையால் தான், ஒவ்வொரு உடல் உழைப்பு தொழிலாளியும் அந்த தொழிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக போராடுகிறார். அதனை ஒரு விடுதலையாக கருதுகிறார். உடல் உழைப்புக்கு ஆள் கிடைக்காமை, கூலி உயர்வு, உற்பத்தியே செய்ய இயலாமை, உற்பத்தி குறைவு, உற்பத்தி திறன் குறைவு எனப் பல பொருளாதார இழப்புகள் தொடர்ந்து நடக்கிறது. இது, பிறப்பால் ஏற்றத் தாழ்வு பார்க்கும் சிந்தனை ஊனத்தின் விளைவு என்று, இனமும் நினைக்கவில்லை. சாதிகள் ஆயிரம் கற்பிக்கிறோம். உடலியியல் ரீதியாக, ஒரேயொரு சாதிய வேறுபாட்டைக் கூட நம்மால் கூட நிரூபிக்க முடிந்திருக்கிறதா? சாதி அடிப்படையில் இழிவுகளைக் கற்பிக்கிறோம் என்று சென்று செயல்படுவது, தங்களைத் தாங்களே இழிவு படுத்திக் கொள்ளும் செயல்களில் ஒருபகுதி.
டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு தொடங்கி, அதிநவீன டிஎன்ஏ அறிவியல் வரை சாதி இல்லை. இல்லவே இல்லை என்று அடித்து கூறுகிறது. இதனை பாடமாக படிக்கும் குழந்தைகள், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விஞ்ஞானிகள் என பலரையும் இந்த சாதி பிடித்து ஆட்டும் மர்மம் இன்னும் பிடிபட வில்லை. இதனையெல்லாம் சரி செய்யும் ஆற்றல் அரசியல் சாசன விழுமியங்களுக்கு உண்டு. இல்லையெனில் உருவாக்கும் ஆற்றலும் உண்டு.
ஆனால், அரசியல் சாசனத்தை ஆழ்மனதில் நிறுத்தி நடவடிக்கை எடுக்கும் திறன் ஆட்சியாளர்களிடம் இல்லை. அரசியல் அமைப்பு சாசனத்தை விரும்பாத, சாதி மத மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புவோர் அரசியல் சாசனத்தின் பெயரில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அரசியல் பிரவேசம் செய்வதும் அதீத ஆபத்துக்களில் ஒன்று. எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றையும் சாதிக்க ஜனநாயகத்தால் இயலும் நம்பிக்கை தான் மனித குலத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு
நா.மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு. சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட ஆங்கில நூல்களின் ஆசிரியர்.
தேஜகூ கூட்டத்திற்கு அழைப்பு இல்லாதது ஏன்? – பிரேமலதா விளக்கம்
மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!
பாஜக vs காங்கிரஸ் : போட்டா போட்டி போராட்டம்!
Excellent article. We should punish them. Author Dr. Mani written thoroughly with recent data. I feel ashamed being an Indian.