எண்ணித் துணிக கருமம் !
ஸ்ரீராம் சர்மா
திராவிட சித்தாந்தத்தை மொத்தமாக ஒழிப்பேன் பார் என வரிந்து கட்டி நிற்பவர்தான் என்றாலும், இப்படியானதோர் தகதகப் புறப்பாடு இதுகாறும் அந்த கூடாரத்திலிருந்து எழுந்ததேயில்லை என்னும் வகையில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நம் கவனம் ஈர்க்கிறார்.
என்னதான் சொன்னாலும் அவர் தேசியக் கட்சியொன்றின் மாநிலத் தலைவர். அவருக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு எளிய எழுத்தாளனாகிய எனக்கு நீட்டமில்லைதான் எனினும் அன்பு கொண்டு சொல்கிறேன்.
இனியேனும் அவர் மக்களுக்கான அரசியலுக்குள் வந்தாக வேண்டும். அப்படியெனில் இதுகாறும் அவர் வரவே இல்லையா எனில் ஆம் அதுதான் உண்மை அவரை வழிமொழிவோருக்கு இது கசக்கக் கூடும். வேறு வழியில்லை. காரணங்களை அடுக்குகிறேன். சரியெனில் ஏற்கலாம்.
அன்றந்த நாளில் மீடியாக்களைக் கூட்டி வைத்த அண்ணாமலை என்ன சொன்னார் ?
“என் கைக் கடிகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு பதில் சொல்லவே இந்தக் கூட்டத்தை கூட்டினேன்” என்றார். அது முதல் கோணல்.
ஆம், மக்கள் பிரச்சினையை முன் வைத்து மெல்ல மெல்ல சூடு பிடித்திருக்க வேண்டிய அவரது அன்றைய அரசியல் பேச்சு, அவரது சொந்த பிரச்சினைக்கானது என அவரே சொல்லி விட ஆரம்பமே நசநசத்துப் போனது.
அடுத்தும் சறுக்கினார்.
என் சொந்த ஊரிலிருந்து மாறி வந்து இன்று நான் சென்னையில் இருக்கிறேன். நான் என் சொந்த ஊருக்கு சென்றுதான் ஆக வேண்டும். இது என் சொந்த ஊர் இல்லை என்றார். மொத்த தமிழகத்துக்கும் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் அவர் இப்படிப் பேசினால் எங்கிருந்து வந்துவிழும் ஓட்டு ?
பேரறிஞர் அண்ணாவுக்கான சொந்த ஊர் காஞ்சீவரம். கலைஞரின் சொந்த ஊர் திருவாரூர். ஆனால் என்றுமே அவர்கள் அதனை தனிப்பட்டுக் கொண்டாடியதில்லை. தமிழ்நாடு மொத்தமும் என்பாற்பட்டது என்பதல்லவா உண்மையான தலைவருக்கான அழகு !?
என் சொந்த ஊர் அங்குதான் இருக்கிறது என்றால் மற்ற மற்ற ஊர்க்காரர்கள் உங்களை அன்னியராக எண்ணிவிட மாட்டார்களா ? இப்படியே சருகறுத்துக் கொண்டிருந்தால் குளிர்காய்வதெப்போ ?
தனது கை கடிகாரத்துக்கான பில் என்று ஒன்றைக் காண்பித்தார். அதனை முதலில் வாங்கியவர் கோவையை சேர்ந்த சேரலாதன் என்றும் – அதன் மேல் ஆசைப்பட்டு அவரிடமிருந்து வாங்கிக் கொண்டேன் என்றும் சொன்னார்.
அடுத்தவர் உடைமையின் மீது ஆசைப்படுபவர், காணும் பொருள் மீது கண் வைப்பவர் அதிகாரத்துக்கு வந்தால் என்னவாகும் என மக்களின் மனதில் கேள்வி எழுந்துவிடாதா? மெத்தப் படித்தவர் இப்படிச் சறுக்கிச் செயல்பட்டது ஆச்சரியமளித்தது. படிப்பு என்பது எல்லாவற்றையும் கொடுத்துவிடாது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
பிபிடி ஒன்றை உருவாக்கி அதை எல்.ஈ.டி. திரையில் வெளியிடும் அளவுக்கு – மீடியாக்களை கூட்டி தயார் செய்தவர் தனது சொந்த அலுவலகத்திலேயே கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் பரிதாபத்தைக் காண முடிந்தது. 2021 ல் மாமழை பொழிந்து தமிழகத்தை பயமுறுத்தியதொரு நாளில் கணுக்கால் அளவு தண்ணீரில் ஒரு போட்டை விட்டு அதில் அவரை ஏற்றிவிட்டவர் எவரோ அவரேதான் அங்குமிருந்தார்.
அது அவசரக் கூட்டம் அல்ல. நன்கு நான்கு மாதம் பில்டப் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம். அப்படியான கூட்டம் கட்டுப்பாட்டோடு அமைந்திருக்க வேண்டாமா ? பெரிய திரை வைத்து பக்கம் பக்கமாக படித்தும் கூட அவரது அன்றைய நிகழ்வை எந்த மீடியாக்களும் மொத்தமாக நேரலை செய்யவில்லை என குற்றம் சாட்டிப் பயனில்லை.
மக்களை தங்களிடையே இழுத்துப் பிடிக்கும் அவசியம் மீடியாக்களுக்கு அதிகம். அப்படிப்பட்டவர்கள் விஷயம் இருந்தால் விட்டுவிட மாட்டார்கள்.
சொல்லப் போனால் அனைத்து மீடியாக்களும் ஆரம்பத்தில் ஒளிபரப்பத்தான் செய்தார்கள். ஆனால், ஆரம்பத்திலேயே அதற்கு வேட்டு வைத்துக் கொண்டார் அண்ணாமலை.
“இந்த சந்திப்பு நான் கேள்வி கேட்பதற்கானது. என்னிடம் நீங்கள் கேள்வி கேட்க முடியாது. ஒரு வாரம் கழித்து ஹோம் ஹொர்க் செய்து கொண்டு வாருங்கள். பிறகு பார்க்கலாம்…” என்று பட்டவர்த்தனமாக சொல்லிவிட அந்த ஏழாவது நிமிடத்திலேயே கிளம்பும் மூடுக்கு வந்துவிட்டது மீடியா.
ஒரு பிரஸ்மீட் என்றால் இரு தரப்புக்கும் அங்கே இடமிருக்க வேண்டும். சொல்வதைக் கேட்டுக் கொண்டு வழிபார்த்துப் போக அவர்கள் என்ன பால்வாடிக் குழந்தைகளா ?
அண்ணாமலை அவர்களுக்கான கடந்த கால அனுபவங்களை இரண்டு வகைப்படுத்தலாம் . ஒன்று, மேலதிகாரிகள் பேசுவதை அடங்கிக் கேட்பது. மற்றது, தன் கீழ் உள்ளவர்களை அடங்கச் சொல்லி கேட்க வைப்பது. அரசியலில் அது நடக்காது.
வேகமான இந்த உலகில் சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென்றும் நம்பும் படியாகவும் எடுத்துச் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் மொத்த ஜனமும் முகம் திருப்பிக் கொள்ளும்.
பேரறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர், தோழர் ஜீவா போன்றோரின் உரைவீச்சுகளை கேட்க வேண்டும். தங்களது விஷய ஞானத்தால், உணர்வேறிய குரலின் ஏற்ற இறக்கத்தால் நிமிடம் தோறும் அவர்கள் மக்களை வயப்படித்திக் கொண்டேயிருப்பார்கள்.
அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கூடி வந்திருப்பவர்கள் வேலையற்றவர்கள் அல்லர். ஏதோ ஒரு புதிய விஷயத்தை நம்மிடமிருந்து தெரிந்து கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையில்தான் வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு புரியாத ஒன்றை மனம்போன போக்கில் ஆற்றிக் கொண்டிருந்தால் நம்மிடமிருந்தும் நம் கொள்கையிடமிருந்தும் அவர்கள் விலகிவிடக் கூடும் எனக் கருதியே தங்கள் உரைவீச்சுக்களை செம்மைபடுத்தி வழங்கி நின்றார்கள்.
பல பத்தாண்டுக்காலம் மக்களோடு மக்களாக அரசியல் பழகிய அவர்களுக்கு மக்களின் மனப்போக்கு அத்துப்படியாக இருந்தது. அந்த நிலையினை எட்ட வேண்டுமென்றால் அண்ணாமலை இன்னுமின்னும் ஊன்றி உழைத்தாக வேண்டும்.
அவரைச் சுற்றி இருப்பவர்கள் வேண்டுமானால் ஐஐஎம்மில் படித்த மேட்டுக் குடிகளாக இருக்கலாம். அதற்காக அவர்களிடம் பேசும் அதே மொழியில்தான் கிராமத்துப் பாமரனிடத்திலும் பேசுவேன் என்றால் அது எடுபடாது.
கவனியுங்கள்.
அன்றொரு நாள் கடலூருக்கு வந்த காந்தியடிகளிடம் – கடலூர் அஞ்சலை அம்மாள் என்னும் அந்த வீரத்தியாகி தன் நகை நட்டுகளையெல்லாம் கழட்டிக் கொடுத்து ‘வந்தே மாதரம்’ என்று முழங்கி நின்றார். தேசபக்தியை அவர் வெளிக்காட்டிய விதம் அது.
அதே தேசபக்தியை மூன்றரை லட்ச ரூபாய் ரஃபேல் வாட்சை வாங்கிக் கட்டுவதன் வழியாகவே உங்களால் வெளிப்படுத்த முடிகிறது என்கிறீர்கள். இரண்டில் எது மேன்மையானது ? எண்ணிப் பாருங்கள்.
தேசியக் கொடியில் இருக்கும் காவி நிறம் தியாகத்தைத்தானே குறிக்கிறது. காவியை கொடியாகவே பிடித்திருக்கும் ஒருவர் அடுத்தவர் பொருள் மீது ஆசைப்படலாமா என்று மக்கள் கேட்க மாட்டார்களா ?
ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சொல்லிவிட்டு சொத்துப்பட்டியல் என தலைப்பை மாற்றியதும் – கைக்கடிகாரத்தின் சீரியல் நம்பரை மாற்றிச் சொன்னதும் – யார் மீதும் புகார் சொல்லவில்லை என குழப்பியதும் – தேவையற்ற தகவல்களை மன்றத்தில் வைத்த வகையும் எதை காட்டுகிறது ? அக்கரையின்மையையா அல்லது பதட்டத்தையா ?
இதோ எனது வரவு செலவு கணக்கை திறந்த புத்தகமாக உங்கள் முன் வைத்திருக்கிறேன். இப்படி ஒரு அரசியல்வாதியை இந்திய அளவில் உங்களால் காட்ட முடியுமா ? என்று கேட்கிறீர்களே அந்த கேள்விக்குள் பாஜக தலைவர்களும் அடங்குவார்களா எனும் கேள்வி சாமானிய மக்களிடம் தோன்றாதா ? தோன்றினால் அதனை ஆமோதிப்பீர்களா ?
எனது வீட்டு வாடகை , ஊழியர் சம்பளம், கார் டீசல் என சகலவற்றிற்கும் மாதந்தோறும் என் நண்பர்கள் அள்ளித் தருகிறார்கள் என்று நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களே யானால் அதே பதிலை மற்றவர்களும் சொல்லக் கூடுமலவா ?
உங்கள் நண்பர் உங்கள் மேல் உள்ள அன்பினால் 5 லட்சம் தருவார் என்றால் இன்னொருவரின் நண்பர் இன்னும் தாராள மனம் படைத்தவராய் 50 கோடியை தந்துவிட மாட்டாரா ? அப்படிச் சொன்னால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா? அடித்துவிடுவதற்கும் அள்ளிக் கொடுப்பதற்கும் எல்லைதான் ஏது ?
போகட்டும்.
எனது அன்பிற்குரிய அண்ணாமலை அவர்களே, விரைவில் ஒரு நடைபயணம் மேற்கொள்வதாக சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
நீங்கள் அரசியலில் இறங்கிய இந்த இரண்டு வருட காலத்தில் இப்போதுதான் மக்களை மிக நெருக்கமாக சந்திக்கப் போகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நடக்கட்டும். அந்த சந்திப்பு உங்களுக்கு பல உண்மைகளை கற்றுத்தரும் என்று நம்புகிறேன்.
உங்களை சுற்றியிருப்பவர்கள் தங்களின் இருப்பைக் கருதி உங்கள் மேல் ஒரு கதாநாயக பிம்பத்தை கட்டமைத்து வைப்பார்கள். அது எல்லா அரசியல் தலைவர்களுக்கும் நிகழக் கூடியதுதான். அதிலிருந்து தப்பி நிற்பவரே மக்களுக்கான உண்மையான அரசியலை முன்னெடுத்து வெல்ல முடியும்.
ஐபிஎஸ் அதிகாரியாக நீங்கள் இருந்தபோது உங்கள் பின்னால் அரசாங்கம் என்னும் நிறுவனம் ஒன்று இருந்தது. அதன் பின்னணியில் நீங்கள் இட்ட உத்தரவு செல்லுபடியாகியிருக்கும். ஆனால், இன்று நீங்கள் உங்கள் சொந்தப் பொறுப்பில் ஒரு தேசியக் கட்சியில் மாநிலத் தலைமையாக செயலாற்றும் கடமையில் இருக்கிறீர்கள். அவசரப்படாதீர்கள்.
உங்களால் எதிர்க்கப்படுவது திராவிட மக்களரசியலின் ஆணிவேரை அலசிக் கண்டதொரு பெருங்கட்சி என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஊழல் என்பது இந்திய மண்ணெங்கிலும் விரவி நிற்குமொரு கொடும் பிணி என்பதை மறுப்பதற்கில்லை. அதை ஒரு மாநிலத்தின் தலைமேல் மட்டும் சுமத்த முற்படுவீர்களேயானால் அதனை நீங்கள் நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.
திராவிட சித்தாந்தத்தை நீங்கள் வெறுக்கலாம். அது உங்கள் விருப்பம். அதற்காக திராவிடக் கட்சிகளால் இந்த மண் அடைந்த நன்மைகள் அனைத்தையும் கணக்கிலெடுக்காமல் புறக்கணித்துப் பேசுவீர்களேயானால் அதனால் பலனடைந்த மொத்த மக்களும் உங்களுக்கு எதிராகத்தான் நிற்பார்கள்.
இயல்பாக விளையும் மெலிந்த நாணல் ஒன்று புயல் காற்றையும் கடந்து பிழைத்திருக்கும். ஆனால், கட்டமைக்கப்படும் கம்பம் ஒன்று மாடு முட்டக் கூட சரிந்து விடும்.
உங்களுக்கு வயதிருக்கிறது. போக வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. பொறுமையாக ஆய்ந்தமைந்து நகருங்கள். அவசரக்காரருக்கு அண்டாவில் கை நுழையாது என்பார்கள். இத்தனை பிழைகளோடு அந்தக் கூட்டத்தை நீங்கள் நடத்தியிருக்கக் கூடாது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
சிஎஸ்கே போட்டி: டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!
பிராவோ இல்லாம கஷ்டமா இருக்கு! – ஆர்.சி.பி போட்டிக்கு பின் தோனி