வனத் துறை பள்ளிகளின் அவலமும், நேரடியாக கல்வித் துறையின் கீழ் வருவதன் பயன்களும்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

நா.மணி, வே. சிவசங்கர்

திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 15 பள்ளிகள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் வேலூரிலும் கோவையிலும் ஒரு பள்ளி உள்ளது. மொத்தம் உள்ள பள்ளிகள் 17. மாணவர்கள் எண்ணிக்கை 3500. இவை வனத்துறை பள்ளிகள்.

இந்தப் பள்ளிகளில் மொத்தமாக அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 150. அதில் 60 இடங்கள் காலியாக உள்ளன. ஏன் 40 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளன?

வனத்துறையின் ஆசிரியர் தேர்வு தனி. அவர்களுக்கு இதில் கவனம் செலுத்த நேரம் இல்லை. அதுவும் ஆசிரியர் தேர்வு நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்புத் தேர்வு அல்லது பெற்றோர் ஆசிரியர் திட்டத்தில் பணியமர்த்துதல் கூட வனத்துறை பள்ளிகளில் நடைபெறவில்லை.

திருவண்ணாமலையிலும் திருப்பத்தூரிலும் தலா ஒரேயொரு மேல்நிலைப் பள்ளி இத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதில், தலைமை ஆசிரியர், மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இயற்பியல் பாடம் உட்பட்ட பல பொறுப்புகள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

2010 முதலே பல பணியிடங்கள் காலியாக உள்ளன. வெகுசில பள்ளிகள், இப்படி வனத்துறையின் கீழ் இயங்கி வருவதே பலருக்குத் தெரியாது. வனத் துறை பள்ளிகள் என்றபோதும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதென்னவோ பழங்குடியினர் நலத்துறை தான்.

பள்ளி நிர்வாகம் மட்டுமே வனத்துறையினரிடம். பள்ளிக்குத் தேவையான எந்தவொரு நிதியும் வனத்துறையிலிருந்து கொடுக்கப் படுவதில்லை. பள்ளிக் கட்டிடங்கள் பழங்குடியினர் நலத்துறை அல்லது நபார்டு வங்கி நிதி உதவியோடு கட்டித் தரப்படுகிறது.

வனத்துறை பள்ளிகளிலும், அத்தோடு இணைந்த  விடுதிகளிலும், கழிப்பறை வசதிகள் இல்லை. குளியலறை வசதியில்லை.  காப்பாளர்கள் இல்லை. சமையலர்கள் முழுமையாக இல்லை. விடுதிகள் தனியாருக்கு குத்தகைக்கு  விடப்படுகிறது. அரசு நல விடுதிகளில் குத்தகைக்கு விடும் முறை அமலாக்கம் செய்யப்பட்டு தோல்வியடைந்து கைவிடப்பட்ட முறை  வனத்துறை பள்ளிகளில் இன்னும் அமலில் இருக்கிறது.

இதர அரசுப் பள்ளிகளைப் போல், ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்த இயலாது. மாணவர்களின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மிக மிகக் காலதாமதமாகவே பள்ளிகளுக்கு வந்து சேர்கிறது.

முப்பதாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியில் இன்று 200 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் கழிப்பறை வசதி இல்லை. 15 பழங்குடிகள் கிராமங்கள் உள்ளன. அதனை ஓட்டியுள்ள பள்ளியை தரம் உயர்த்தினால், பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் அதிகரிக்கும். இடை விலகல் தவிர்க்கப்படும்.

மலைப்பகுதிகளில் இடவசதி இருந்தும் விளையாட்டு மைதானங்கள் இல்லை. இந்த வகைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எனப் பதவி உயர்வு இல்லை. அதே வகைப் பள்ளியில் உள்ள பதவி உயர்வு பணி மேம்பாடு வழங்கப்படுவதில்லை. இதனால் நல்ல தரமான ஆசிரியர்கள் வனத்துறை பள்ளிகளுக்கு வர விரும்புவதில்லை.

இவ்வளவு பிரச்சினைகளும், வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமே. ஏன் இத்தனை அவலங்கள்? வனத்துறையின் பள்ளிக்கு ஒரு தேவை எனில், முதலில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கோரிக்கையை வனசரகருக்கு அனுப்பி வைப்பார்.

அந்த மாவட்ட வன அலுவலர், வனபாதுகாவலர், முதன்மை வனத்துறை தலைவர், வனத்துறையின் செயலாளர், பழங்குடியினர் துறையின் இயக்குநர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் என எட்டுப் பேர் வழியாக பள்ளிக் கல்வித் துறைக்குச் சென்று சேரும்.

மேலும் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஒரு கடிதம் எட்டு படிநிலைகள் தாண்டி பள்ளிக்கு வந்து சேர வேண்டும். சாக்பீஸ் வாங்குவது என்றாலும் இந்த முறையே கையாளப் பட வேண்டும். இது ஒரு முக்கிய சிக்கல். இதுவன்றி, வனத்துறைக்கு இது கூடுதல் சுமை. இதற்கென நிதி ஒதுக்கீடும் இல்லை. இதற்கான நிர்வாகத் திறன்கள், பயிற்சி, ஏதும் வனத்துறைக்கு இல்லை. வனத்துறைக்கு தேர்வு எழுதி வரும் போது குறைந்த பட்ச கல்வித் தகுதிக்காக படித்தார்களோ அத்தோடு சரி.

இதனைத் தாண்டிய கல்வி நிர்வாக அனுபவம் இல்லை. அவர்களின் பிரதான பணியும் இதுவல்ல. இதன்காரணமாக தற்போது படிக்கும் பழங்குடி மாணவர்கள் கல்வித் தரம் கேள்விக்குறி ஆவதோடு, ஆசிரியர்கள் அவலமும் பெருத்த அவலமே. கல்வி கற்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே தரமான கல்வி கிடைத்து விடாது. கற்றல் சூழல், கற்றல் கற்பித்தலுக்கான அடிப்படை வசதிகள், நிர்வாக ஏற்பாடுகள் ஆகியவையும் அவசியம்.

அவை இல்லாமையால் தற்போது படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல, இதற்கு முன்னரும் போதுமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாறாவிட்டால் இந்தக் குறிப்பிட்ட மலைப் பகுதி பள்ளி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் நாடு எங்கும் 308 பழங்குடியினர் நலப் பள்ளிகளை பழங்குடியினர் நலத்துறை நடத்தி வருகின்றனர். இதன் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் வருவாய் துறையினர், வனத்துறையினரை காட்டிலும் கல்வி நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள். இருந்த போதிலும் பழங்குடிகள் நலப் பள்ளிகளின் நிர்வாகம் சரியில்லை.

பள்ளிக் கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பழங்குடி பள்ளிகளை கொண்டு வர வேண்டும் என கல்வி செயல்பாட்டாளர்கள் பழங்குடியினர் நலச் சங்கங்கள் கோரி வருகின்றனர். அவ்வாறு இருக்கும் போது வனத்துறை பள்ளிகளை அரசுப் பள்ளிகளோடு இணைக்க வேண்டும் என்பது எளிதில் விளங்கும்.

வனத்துறை பள்ளிகளை பள்ளிக் கல்வியில் கீழ் கொண்டு வருதல் ஒருவகையில் வனத்துறையில் பணியாற்றுவோருக்கும் வனத்துறைக்கும் நல்லதே.

Benefits of Forest Department School

பழங்குடி மாணவர்களின் தொடக்கக் கல்வி விகிதம் அதிகரித்து வந்தாலும், அவர்கள் நடுநிலைப் பள்ளியை நோக்கி நர்வதும் அடுத்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் விகிதமும் குறைந்து வருகிறது.

அதாவது நடுநிலை உயர் நிலைப் பள்ளி இடை விலகல் பழங்குடி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அந்தந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளும் உயர் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

அதற்கு பெருந்தடையாக வனத்துறை நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. 37,387 பள்ளிகள், 52.75 லட்சம் மாணவர்கள் என அரசுப் பள்ளி முறை ஒரு பெரும் கட்டமைப்பு. அதில் அதே பணிகள் 17 பள்ளிகளில், அதுவும் கல்விக்கு தொடர்பே இல்லாத ஒரு துறையின் நிர்வாகத்தின் கீழ் எவ்வளவு சீரழிவை உருவாக்குகிறது என எண்ணிப் பார்க்க வேண்டும்.

அத்தோடு நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் வெள்ளையர்கள் இரண்டு மாவட்டங்களில் சிறிய கற்றல் கற்பித்தல் ஏற்பாட்டை, இன்று ஒரு தனித் துறையாக நிர்வாகம் செய்வது எந்த வகையிலும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு நன்மை செய்யாது.

வனத் துறையை, தனக்குத் தொடர்பு இல்லாத முன்னுரிமை தர இயலாத பணியைச் செய்யும் படி கூறினால் அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் வனத் துறை உறவு என்னவாக இருக்கும் என்று சொல்ல வேண்டுமா?

Benefits of Forest Department School

வானவில் மன்றங்கள், நூலக முன்னெடுப்புகள், நூல் வாசிப்பு முயற்சிகள், பண்பாட்டு விழாக்கள் என தற்போது தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை, படைப்பாற்றலோடு கூடிய கல்வியை வழங்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வனத் துறை பள்ளிகளை நேரிடையாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களின் தரமான கல்விக்கும் ஆசிரியர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் இவற்றின் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக அமையும்.

கட்டுரையாளர்கள்:

Benefits of Forest Department School

நா.மணி ஈரோடு கலை அறிவியல் கல்லூரி.

Benefits of Forest Department School

வே. சிவசங்கர் புதுவை பல்கலைக்கழகம்.

தேர்தலைப் புறக்கணிப்போம்: பழங்குடி இருளர்களின் முடிவுக்கு காரணம் என்ன?

உக்ரைனில் ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர்!  

+1
0
+1
0
+1
1
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “வனத் துறை பள்ளிகளின் அவலமும், நேரடியாக கல்வித் துறையின் கீழ் வருவதன் பயன்களும்!

  1. மிக,காலத்துக்கு வேண்டிய, தெளிவான கட்டுரை. நல்லது சொல்கிறார்கள். கேட்க வேண்டியவர்கள் கேட்பார்கள் என உறுதியாக நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published.