மஹூவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு நடப்பது ஏன்? வெகுண்டு எழுந்த எதிர்கட்சிகள்…தேர்தல் நேரத்தில் என்ன நடக்கிறது?

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கும் கேள்விகளுக்கும் பெயர் பெற்றவர் மேற்கு வங்காள எம்.பி மஹூவா மொய்த்ரா. மேற்கு வங்க மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க அவரது விவாதங்கள் பேசு பொருளாவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு பணம் வாங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பாராளுமன்ற நெறிமுறைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதானிக்கு எதிராக கேள்விகளை எழுப்பியதால் தான் என்னை தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள் என்று அறிவித்தார் மஹூவா மொய்த்ரா. தற்போது மீண்டும் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டிலும், அவருடன் தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக மத்திய புலனாய்வு அமைப்பினரால் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தொடர் குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நேரத்தில், மஹூவா மொய்த்ரா மீது நடக்கும் இந்த ரெய்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு என்ன?

முதலில் மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுக்கு வருவோம். மஹூவா மொய்த்ராவின் முன்னாள் துணைவரும் வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தெகாத்ராய் மொய்த்ராவின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பிரபல தொழிலதிபரும் மொய்த்ராவின் நண்பருமான தர்ஷன் ஹிராநந்தனி அவரது வர்த்தக போட்டியாளரான அதானிக்கு எதிரான கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்புவதற்காக மொய்த்ராவுக்கு பணமும், அன்பளிப்புகளும் அளித்தார் என்பதே அந்த குற்றச்சாட்டு. அவற்றை வாங்கிக் கொண்டு ஹிராநந்தனியின் தனிப்பட்ட வர்த்தக அஜெண்டாவிற்காக இந்த கேள்விகளை மஹூவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் எழுப்பினார் என்பது அவர் வைத்த குற்றச்சாட்டு.

பாராளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமான கேள்விகளை எம்.பிக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டலில் லாகின் செய்து எழுப்ப முடியும். அந்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் விவரங்களை மஹூவா மொய்த்ரா ஹிராநந்தனிக்கு கொடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தை பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பாராளுமன்றத்தின் சபாநாயகருக்குக் கொண்டு சென்றார். பாராளுமன்ற போர்டலின் பாஸ்வேர்டை வெளியில் உள்ள ஒருவருக்கு பகிர்ந்ததன் மூலம் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் மஹூவா மொய்த்ரா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதானியை நோக்கி கேள்விகள் எழுப்பியதற்காக பாஜக அரசால் தான் குறிவைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு வைத்தார்.

விசாரணைக் குழுவில் நடந்தது என்ன?

மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு பாராளுமன்ற நெறிமுறைக் குழுவினால் (ethics committee) விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த நெறிமுறைக் குழுவில் விசாரணை என்ற பெயரில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையில் கேள்விகளைக் கேட்டதாக மஹூவா மொய்த்ரா பதிவு செய்தார்.

நெறிமுறைக் குழுவின் தலைவராக இருந்த பாஜக எம்.பி வினோத் சொங்கார் விசாரணையின் போது மொய்த்ராவிடம் ஹிராநந்தனி குறித்து கேட்கும்போது, ”அவரை உங்கள் நெருங்கிய நண்பர் என்று சொல்கிறீர்கள். நெருக்கம் என்றால் எவ்வளவு நெருக்கமானவர்?” என்று கேட்டதுடன், அவரது மனைவியின் பெயரைக் குறிப்பிட்டு, “இது அவரின் மனைவிக்கு தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ”நள்ளிரவு நேரங்களில் நீங்கள் யாருடன் பேசுவீர்கள்? எத்தனை முறை பேசுவீர்கள்?”, ”கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் எங்கெல்லாம் பயணித்திருக்கிறீர்கள்? எந்த ஹோட்டல்களில் யாருடன் தங்கியிருக்கிறீர்கள்?” என்றெல்லாம் மொய்த்ராவிடம் கேட்டிருக்கிறார். இதைக் கண்டித்து எதிர்கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மொய்த்ரா தரும் விளக்கம்

அதானிக்கு எதிரான கேள்விகளை எழுப்புவதை நிறுத்துமாறு, தன்னிடம் இரண்டு எம்.பிக்கள் மூலமாக மூன்று முறை அதானி பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்ததாகவும், அதனை தான் மறுத்ததாகவும் மொய்த்ரா தெரிவித்துள்ளார். அதானி மூலம் இங்கு நடக்கும் பல்லாயிரம் கோடி ஊழல்களை மறைப்பதற்காகத் தான், மஹூவா மொய்த்ராவுக்கு யார் லிப்ஸ்டிக் வாங்கிக் கொடுத்தார்கள், அவர் பயணிக்கும் கார் யாருடையது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் மஹூவா மொய்த்ரா.

லாகின் விவரங்களை எதற்காக ஹிரநந்தனிக்கு அளித்தீர்கள் என்று தி இந்து நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”ஹிராநந்தனி என்னுடைய நண்பர். நான் கேள்விகளை அனுப்பினால் அதை டைப் செய்து அப்லோட் செய்வதற்கு அவரது அலுவலகத்தில் ஒரு செக்ரட்ரியைத் தருமாறு கேட்டிருந்தேன். இதுபோன்று பல எம்.பிக்களின் அலுவலகங்களில் உதவியாளர்களை வைத்து கேள்விகளை அப்லோட் செய்வது வழக்கமாக நடைபெறும் விசயம் தான். நான் பாராளுமன்றத்திற்கு 61 கேள்விகளை அனுப்பியுள்ளேன். அதில் 9 கேள்விகள்தான் அதானி சார்ந்தவை. நான் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல என்னுடைய சமூக வலைதள பதிவுகள், பேச்சுகள், காணொளிகள் என பலவற்றிலும் அதானியை அம்பலப்படுத்தியுள்ளேன். பாராளுமன்ற கேள்விகள் மூலம் அப்படி என்ன ரகசிய தகவல்களை வாங்கிவிட முடியும். இவை எல்லாமே தகவல் அறியும் உரிமை சட்டத்திலேயே கிடைக்கக் கூடிய பதில்கள் தான்” என்று குறிப்பிட்டார்.

மேலும், ”இந்த பாஸ்வேர்டை பகிர்வது குறித்து எந்த விதியும் இங்கு இல்லை. இந்த கேள்விகளை கேட்பதற்கு யாராவது எனக்கு பணம் கொடுப்பது உண்மையானால் அதனை நானே அந்த கேள்விகளை உள்ளே வைத்து சப்மிட் கொடுக்க முடியும். முதலில் நான் எனது இமெயில் பாஸ்வேர்டை யாருக்கும் பகிரவில்லை. எனவே என் பெயரில் யாரும் இமெயில் அனுப்ப முடியாது. NIC போர்டல் பாஸ்வேர்ட் தான் நான் கொடுத்திருந்தது. அதில் கேள்விகளை பதிவேற்றுவது மட்டும்தான் செய்ய முடியும். இந்த லாகினைப் பொறுத்தவரை பெரும்பாலான எம்.பிக்கள் OTP பெறுவதற்கு அவர்களது மொபைல் எண்ணையே கொடுத்து வைப்பதில்லை. ஆனால் நான் என்னுடைய மொபைல் எண்ணைத்தான் கொடுத்திருக்கிறேன். எனவே இதனை தேசிய பாதுகாப்பு சம்மந்தமான பிரச்சினையாக காட்ட முயல்வதெல்லாம் ஒரு நகைச்சுவையே” என்று தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ரா

நெறிமுறைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மஹூவா மொய்த்ரா பாராளுமன்றத்திலிருந்து டிசம்பர் 8, 2023 அன்று தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரத்தில் நடந்தது கட்டப்பஞ்சாயத்து என்று மஹூவா மொய்த்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்பிறகும் அவர் மீதான நடவடிக்கைகள் நிற்கவில்லை.

அமலாக்கத்துறையின் சம்மன்

அடுத்ததாக அமலாக்கத்துறை மஹூவா மொய்த்ரா விவகாரத்திற்குள் வந்தது. வெளிநாட்டு பண பரிவர்த்தனைகள் தொடர்பாக முறைகேடு நடந்திருப்பதாக பிப்ரவரி 19, 2024 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.

சிபிஐ பதிந்த வழக்கு

கேள்விகளைக் கேட்பதற்காக பணம் பெற்றதாக அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மார்ச் 20, 2024 அன்று லோக்பால் உத்தரவிட்டது. அந்த உத்தரவு வந்த இரண்டு தினத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த சி.பி.ஐ, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் இந்த சோதனையில் இறங்கியிருக்கிறது.

தொடர்ச்சியாக விசாரணை வளையத்திற்குள் எதிர்கட்சிகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மத்திய புலனாய்வு அமைப்பினரால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மஹூவா மொய்த்ரா மீது தற்போது ரெய்டு நடத்தப்பட்டிருப்பது பல சர்ச்சைகளை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனை எதிர்த்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் நாடு முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

  • டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல் சந்திரசேகர ராவின் மகள் கவிதா மார்ச் 15, 2024 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

  • இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜனவரி 31, 2024 அன்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

 

  • 2004 – 2009 வரையிலான காலத்தில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, நிலங்களைப் பெற்றுக் கொண்டு வேலை வழங்கியதாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. அதில் லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் இருவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

  • மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமாகிய அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உள்ளாகி வருகிறார்.

 

  • சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவின் முக்கிய தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் அவரது சகோதரரும் அமலாக்கத்துறை விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

 

  • ஹரியானா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான புபிந்தர் சிங் ஹூடா மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 

  • தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உள்ளானார். அடுத்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அமலாக்கத்துறையின் பட்டியலில் இருக்கிறார்.

 

  • 2G தொடர்பான வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலையானதை எதிர்த்து சி.பி.ஐ பதிவு செய்த மேல்முறையீடு தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டிருக்கிறது.

 

  • பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது.

 

  • இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மேற்கொண்ட ஆய்வில் அமலாக்கத்துறையின் 95% வழக்குகள் எதிர்கட்சியினர் மீதே பதியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரத்தில் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் அரசியல் கருவியாக பாஜகவால் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டினை எதிர்கட்சிகள் கடுமையாக எழுப்பி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடந்தவை மட்டுமல்லாமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது, மஹூவா மொய்த்ரா வீட்டில் ரெய்டு நடப்பது போன்றவை பல அதிர்ச்சிகளை அரசியல் சூழலில் எழுப்பியிருக்கின்றன. மத்தியப் புலனாய்வு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அதனை எதிர்த்து மார்ச் 31 ஆம் தேதி டெல்லியில் மிகப்பெரிய பேரணியை இந்தியா கூட்டணி அறிவித்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியைத் தாண்டி விசாரணை அமைப்புகளும் குற்றச்சாட்டுக்கு உள்ளாவது இந்த தேர்தலில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜயபாஸ்கர் வழக்கு: குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு அமலாக்கத்துறை மனு!

கெஜ்ரிவால் வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவிற்கு 30 கோடி கொடுத்தது அம்பலம்!

அமலாக்கத்துறை கைது: கெஜ்ரிவால் ரியாக்‌ஷன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *