Performance of Erode Koothupattarai students

ஈரோடு கூத்துப்பட்டறையின் ஆத்ம தரிசனம்!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

நா.மணி

2019 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று, “ஈரோடு நாடகக் கொட்டகை” உருவெடுத்தது. ஏன் அந்த நாளில் அது உருவெடுத்தது. அது கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அய்யாவின் முதல் நினைவு நாள். அதனை உருவாக்கியதில் முன்னணி பாத்திரம் முத்துசாமி அய்யாவின் மாணவர்களில் ஒருவரான சதீஷ்.

ஈரோடு நாடகக் கொட்டகையின் துவக்க நாட்களில்….

நாடகக்கலையை உயிராய் பாவிக்கும் அந்த இளைஞர்கள், தாங்கள் உயிராய் நேசிக்கும் அந்தக் கலையின் மீது உணர்வுள்ள நெஞ்சங்களை தேடித்தேடி அலைந்தார்கள். தாங்கள் உருவாக்கிய, ஈரோடு நாடகக் கொட்டகையில், நாடக அரங்கேற்றத்தை தீர்மானித்து விட்டு, சாலை ஓரத்தில் நிற்பவர்களை வருந்தி அழைத்தார்கள். நல்ல நாடகம். நல்ல கதை. நன்றாக நடிப்போம். வந்து பாருங்கள் எனக் கூவி கூவி தங்கள் நாடகத்தை காண அழைத்தார்கள். காணும் படி செய்தார்கள்.

அரங்கத்தில் எத்தனை பேர் இருந்தாலும் 100 விழுக்காடு நேர்த்தியோடு நாடகத்தை படைத்தார்கள். இன்றோ, நாடகக் கொட்டகையில் தொடர்பில் உள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் 700. ஒரு காட்சிக்கு சராசரியாக 60 முதல் 70 பேர் வரை வந்து விடுகிறார்கள் 200 காட்சிகளை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள்.

10 பெரிய நாடகங்களை அரங்கேற்றம் செய்துள்ளார்கள். மாவட்டத்தில் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தொடர்புகள் உருவாகி இருக்கிறது. மாணவர்களை அழைத்து வந்து, ஈரோடு நாடகக் கொட்டகையின் நாடக அரங்கு நாடக ஆக்கத்தை பார்வையிட செய்கிறார்கள்.

இப்போது ஈரோடு நாடகக் கொட்டகை

கொட்டகையின் மாத வாடகை பத்தாயிரம் ரூபாய். மின்சார கட்டணம், இதர குறைந்த பட்ச செலவுகள் என, மாதா மாதம், சமாளிப்பதற்குள், போதும், போதும் என்று ஆகிவிடும். தங்களின் நாடக வேட்கையை, பெரும் பரிசோதனைக்கு உள்ளாக்கும்.

இப்பொழுது சிக்கல்கள் இன்றி இவற்றை செலுத்தி விடுகின்றனர். இந்த இளைஞர்கள் தங்களுக்கென்று ஒரு ஊதியத்தை பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. தங்கள் நாடகக் கலை உணர்வை மேலும் மேலும் பட்டை தீட்டிக் கொள்வது. தங்களைப் போன்ற இளைஞர்களை வளர்த்தெடுப்பது.

நாடகக் கலையின் மீது நம்பிக்கையை உருவாக்குவது. தங்களைப் போன்ற நாடகக்கலையின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு கலைப் பசியாற்றுவது. ஒட்டு மொத்தமாக நாடகக் கலையின் மீது உள்ளுணர்வு ஊட்டுதல். நாடகக் கலைக்காக இப்படி அற்பணிப்பு உணர்வோடு பாடுபட்டு வரும் இந்த இளைஞர்கள் யார் ?

நாடகக் கனவின் துவக்கம்

ஈரோடு நாடகக் கொட்டகையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சதீஷ். வடலூரை பூர்வீகமாகக் கொண்டவர். மும்பையில் பிறந்து, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வடலூரில் உள்ள செவந்த்டே ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். கல்லூரி கல்வி கற்க ஈரோடு சித்தோட்டில் உள்ள, ஶ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி வந்தார். சதீசுக்கு சிறு வயது முதலே இசை ஆர்வம் அதிகம்.

தொடக்கப்பள்ளி முடித்து, திருவண்ணாமலையில் படிக்கும் போது ,கீதம் இன்னிசை குழுவில் இணைந்து, பாட்டுப் பாடுதல், டிரம்ஸ் வாசித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். ஈரோடு வந்து, கல்லூரியில், அடி எடுத்து வைத்த போதே, கல்லூரியின் செயலர் தனது செயல்பாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்திருக்கிறார். ஒத்துழைப்பு நல்கி இருக்கிறார்.

அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், இவரது குழுவினருக்கு, அரசு திட்டங்கள் வழியாக ஏராளமான கலை வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கி உள்ளார். சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கடம்பூர், குன்றி, அணில் நத்தம் போன்ற மலைப்பகுதிகளில் நாடகங்களை அரங்கேற்றி உள்ளனர். குழந்தை திருமணம், குழந்தைகள் உரிமை, குழந்தைகள் தொழிலாளிகள் ஒழிப்பு, குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் துஷ்பிரயோகம், வாக்காளர் விழிப்புணர்வு இப்படி பல விஷயங்களில், நாடகங்களை உருவாக்கவும், நிகழ்த்தி காட்டவும், வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார்.

கூத்துப் பட்டறையில் நிலை கொள்ளுதல்

கல்லூரி படிப்பு முடியப் போகிறது என்று தெரிந்தவுடன், தான் நேசிக்கும் நாடக கலையை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ வேண்டும் என்று எண்ணம் வலுவாக நெஞ்சில் குடியேறி விடுகிறது சதீசுக்கு. இதனை நோக்கி பயணிக்க தயாராகிறார். ஆயத்தமாகிறார். தனது எதிர்காலத்திற்கான தேடலின் போது தான், கூத்துப்பட்டறை ந.முத்துசாமியின் பங்களிப்பு படைப்புகள் ஆக்கங்கள் குறித்து அறிய தொடங்குகிறார். அவரது கூத்துப்பட்டறையில் தன்னை செதுக்கிக் கொள்ள முடிவெடுக்கிறார்.

கூத்துப்பட்டறையில் மூன்று மாத வகுப்பு ஒன்று. அதற்குக் கட்டணம் ரூபாய் 45,000. அதனை செலுத்தி, அதில் சேர்ந்து படிக்க பயிற்சி பெற தொடங்கினார். அந்தப் பயிற்சி பட்டறையின் முழு பொறுப்பாளர் ந.முத்துசாமி அவர்களின் மகன் நடேஷ் முத்துசாமி. ந.முத்துசாமி அவர்களிடம் முழுநேர மாணவராக சேர வேண்டுமென்ற தனது ஆவலை தெரிவிக்கிறார் சதீஷ். “அதெல்லாம் முடியாதுப்பா. சாத்தியமில்லை” என்று ஒற்றை வரியில் முடித்து விடுகிறார் நடேஷ் முத்துசாமி. சில நாட்கள் கழித்து, “சரி எங்களோடு இணைந்து செயல்படு” என்று அவரை மனதார ஏற்றுக்கொண்டார்கள்.

ந.முத்துசாமியுடன் அருகமை நாட்கள்

ந.முத்துசாமி எழுதவும் செயல்படவும் முடியாது தளர்ந்து விட்ட நிலையில், கடைசி ஓராண்டு காலம், கூடவே இருக்கும் அற்புத வாய்ப்பை சதீஷ் பெற்றார். ந.முத்துசாமியால்  எழுத முடியாத சூழல் . அவர், சொல்ல, சொல்ல, எழுதுதல். அவருக்கு உதவியாக இருத்தல் ஆகிய பணிகள் தான் பெற்ற பேறு என்கிறார் சதீஷ். இப்போது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக சதீஷ் மதிக்கப்பட்டார். இத்தகைய சதீஷை, வளர்த்தெடுக்க நடேஷ் முத்துசாமி நல்ல பல முயற்சிகளை மேற்கொண்டார்.

அவரது தந்தை ந.முத்துசாமி, முதல் முதலாக எழுதி, இயக்கிய, நாடகமான “காலங்காலமாக” என்ற நாடகம் எட்டு கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. அந்த எட்டு கதாபாத்திரங்களையும், சதீஷ் ஒருவரே ஏற்று நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். சதீஷ் அவர்களும் முழுமையான பயிற்சி பெற்று, எட்டு கதாபாத்திரங்களையும் மாறி, மாறி அவரே நடிக்கிறார்.

இந்த நடிப்பு பயிற்சி, சதீஷின் முழு திறனையும் வெளிக்கொண்டு வருவதற்கு கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இது தவிர , கூத்துப்பட்டறையில் இருந்த மூன்று ஆண்டுகளும் தான் யார் என்பதை அறிந்து கொள்ள அவருக்கு பல அரிய வாய்ப்புகள் கிடைத்தது.

உள்ளார்ந்த திறன்களையும் ஊட்டி வளர்த்தல்

“நம்மோடு இந்தக் கூத்துப்பட்டறையில் தானே இருக்கிறார். இந்த திறன்களை வளர்த்துக் கொள்ள ஊக்குவித்தால் மட்டும் போதும்” என்று ந.முத்துசாமி ஐயா கருதவில்லை. சதீஷிடம் உள்ளார்ந்து இருந்த, இதர திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதற்காக அடையாறு இசைக்கல்லூரியில் சேர்ந்து இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சதீஷை தூண்டினார் முத்துசாமி. அங்கு சென்று மிருதங்கம் கற்றுக்கொள்ள தொடங்கினார். சதீஷ் ஒரு நாள் தவறாமல் வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதில் முத்துசாமி குறியாக இருப்பார்.

ந.முத்துசாமி அவர்களின் வேலைகளின் நிமித்தம் கூட ஒரு நாள் இசை கல்லூரிக்கு செல்லாமல் இருப்பதை ஐயா விரும்பமாட்டார். “ஏய்யா இன்னிக்கு போகல” என்று அன்பாக கடிந்து கொள்வார். ந.முத்துசாமி அவர்களின் துணைவியார்,(குஞ்சலி) என்றழைக்கப்படும் அவையாம்பாள் அவர்கள் சதீஷிடம் மிகுந்த அன்புடன் பழகுவார். குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொள்வார். அப்படி அவர் பழகிய காலத்தில், ஆரம்பத்தில், கூத்துப் பட்டறையை உருவாக்கி, அதனை நடத்த ந.முத்துசாமி ஐயா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை அவ்வப்போது எடுத்துரைப்பார். இது ந.முத்துசாமி அய்யாவை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அங்கீகாரத்தின் துவக்கம்

இதே காலகட்டத்தில், சென்னையில் உள்ள ‘அலையன்ஸ் பிரான்சிஸ்’ என்ற அமைப்பு, வருடா வருடம், நடத்தும் “ஷார்ட் அண்ட் ஸ்வீட்” (short and sweet)என்ற நிகழ்வுக்காக, “சொல்ல முடியாத வலிகள்” என்ற தலைப்பில், ஒரு நாடகத்தை சதீஷின் சீனியர்கள் பிரசன்னா ராம்குமார் மற்றும் பாஸ்கர் அவர்களின் ஊக்குவிப்பில் எழுதினார் சதீஷ். அதனை ந.முத்துசாமி அய்யாவிடம் காட்டி இருக்கிறார். “நல்லா இருக்குயா. சின்ன சின்ன வார்த்தைகளை செலக்ட் பண்ணி, செரிவாக மாற்றி விடு. மிகப் பிரமாதமாக வந்துவிடும்” என்று கூறி இருக்கிறார்.

நடேஷ் முத்துசாமி ஆர்ட்டிஸ்ட்டுகளை நன்கு நடிக்க வைத்து விடு போதும் என்றிருக்கிறார். எல்லாவற்றையும் உள்வாங்கி அந்த நாடகத்தை செதுக்கி, சதீஷ் அதனை அரங்கேற்றம் செய்தார். அந்த ஆண்டிற்கான “சிறந்த கதை” என்பதற்கான விருது சதீஷுக்கு கிடைத்தது. இவ்வாறு நாடகம் தன்னை மெருகேற்றிக்கொண்டு வந்தது. அத்தோடு, நாளும் சதீஷை மெருகேற்றி வந்தார் நடேஷ் முத்துசாமி. அப்போதுதான், ந.முத்துசாமி மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 24 10 2018 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

ந.முத்துசாமியின் கனவை மெய்ப்பிக்க

இந்த நிலையில், தானும் ஒரு நாடக குழுவை உருவாக்கி,பயிற்சி பட்டறை நிறுவனராகவும், இருந்து ந.முத்துசாமி அய்யா விட்டுச் சென்ற பதாகையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகிறார் சதீஷ். தனக்கான இடம், நாடகக் கலை இயக்கங்களை தொடங்க இடங்களை தேடுகிறார். தான் நாடக கலையில் நுழைந்த முகத்துவாரம் ஈரோடு. எனவே, அந்த  ஈரோட்டு மண்ணிலேயே தன் பணிகளை தொடக்க திட்டமிடுகிறார். இன்று, “ஈரோடு நாடகக் கொட்டகை” ஒளியாகவும், தனது எதிர்கால லட்சியங்களுக்கும், கனவுகளுக்கும் வடிவம் கொடுத்துக்கொண்டு இருக்க அவரால் முடிகிறது என்று நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார்.

தோழமையுடன் வளர்த்தெடுப்பு

நாடகக் கொட்டகையில் வாடகை சுமையால், தனது சக கலைஞர்களுக்கு ஊதியம் என்று ஒன்றும் வரையறுத்து கொடுக்க முடியாவிட்டாலும், அவர்களது சில்லறை செலவினங்கள், போக்குவரத்து செலவு, போன்றவற்றை தற்போது எளிதாக ஈடு செய்ய முடிகிறது என்கிறார் சதீஷ். தனது பயிற்சி பட்டறையில் பயிற்சி பெறும் கலைஞர்களுக்கு, வாய்ப்புகளை உருவாக்கி அனுப்பி வைக்கவும் செய்கிறார். வாய்ப்புகள் வரும்போது வாழ்த்தி வழி அனுப்பி வைக்கிறார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய “கூஸ் முனுசாமி” என்ற இணைய வழி திரைப்படத்தில் இரண்டு பேர் இவரது ஈரோடு நாடகக் கொட்டகை சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். “கூழாங்கல்” படத்தின் இணை இயக்குனர் தற்போது இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இதர நாடக பள்ளிகளில் நல்ல சம்பளத்துடன் கூடிய வாய்ப்புகள் வந்தாலும் அதற்கும் மனமுவந்து தனது சக நண்பர்களை அனுப்பி வைக்கிறார்.

தொலைநோக்குப் பார்வை

கல்லூரி காலங்களில் உடன் படித்த நண்பர்கள், தனது நாடக நடிப்பு ஆர்வத்தை தெரிந்தவர்கள், தற்போது தான் ஒரு நாடகக் கொட்டகை நடத்தி வருவதை அறிந்தவர்கள், “நீ எப்படா சினிமாவுல வருவ” என்று தான் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு ஒரு நியாயமான காரணமும் இருக்கிறது. சதீஷின் குருநாதர் ந.முத்துசாமியிடம் கூத்துப்பட்டறையில் பயின்ற, விஜய் சேதுபதி, விமல், பசுபதி, கலைராணி, விதார்த், குரு சோமசுந்தரம் போன்றவர்களை பார்க்கும்போது, “நம் நண்பனும் இவ்வாறு வரவேண்டும்” என்று ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், சதீஷ் அவர்களின் லட்சியம் வேறாக இருக்கிறது. வேறு தளத்திற்கு விரிவடைகிறது

“நமது நாடகக் கொட்டகைக்கு ஒருவர் நாடகம் பார்க்க வருகிறார் எனில், அவர், இதனை ஒரு பொழுதுபோக்காக நினைத்து வரக்கூடாது. நம் மூலம் உருவாகும் கலாரசனை, அனுபவம் புதுமையானதாக இருக்க வேண்டும். வேறு ஒரு தளத்திற்கு பார்வையாளர்களை எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். எங்கள் நாடகம் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இருந்து விட்டால், எங்கள் உழைப்புக்கு பலன் இல்லை” என்கிறார்.

நாடகம், நடிப்பின் படைப்பால் ஈர்க்கப்பட்டு வரும் இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கலைத்துறையினருக்கு, குறிப்பாக, நாடகக்கலையின் மீது ஆர்வம் கொண்டு வருபவர்களிடம், படைப்பாற்றல் இருக்கிறது. அதனை வளர்த்தெடுத்துக் கொள்ளவும் செய்கிறார்கள். ஒரு படைப்பை உருவாக்கும் போது, அந்த கலையின் தன்மை, அந்தக் கலைஞனுக்கு தன்னம்பிக்கை உணர்வை அதிகரிக்கிறது. தன்னால் கூச்சமின்றி ஒரு விஷயத்தை சிவில் சமூகத்தின் மத்தியில் தைரியமாக எடுத்து வைக்க முடிகிறது. இத்தகைய திறன்களை ஐந்து ஆறு ஆண்டுகளில் வளர்த்துக் கொள்ளும் இந்த இளைஞர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுகிறது?

குறிப்பாக, அவர்களது பெற்றோர்கள் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள். இதில் பெரும் கவலை கொள்கிறார்கள். அதனால் நாடகக்கலையின் மீது ஈர்ப்புடன் வரும் இசை கலைஞர்கள், இளைஞர்களின் பெற்றோர்கள் பலர் இதனை ஊக்குவிப்பது இல்லை. தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகளுக்கு ஒருவர் ஐந்து முதல் ஆறு வருடங்கள் படிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதன் வழியாக அவர் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமர்ந்து விடுகிறார்.

அதே ஐந்து முதல் ஆறாண்டுகள் நாடகத் துறையில் முதலீடு செய்யும் ஓர் இளைஞனின் எதிர்காலம் என்னவாக இருக்கிறது? என்று எதார்த்தமாக நாம் எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. இதற்கு இந்த சமூகமும் அரசும் பதில் கூற கடமைப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் கிடைக்காத போது, ஒரு கலையின் மீது முழுமையான பிடிப்புள்ள ஒரு கலைஞன் எதிர்காலம் தடுமாற்றத்திற்கு உள்ளாகிறது. மாறிப் போய் விடுகிறது. வளர்த்தெடுக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

பள்ளிகளில் இசை ஆசிரியர்கள், விளையாட்டு ஆசிரியர்கள் போல நாடக ஆசிரியர்களும் ஏன் நியமிக்க கூடாது என்ற வேண்டுகோளை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நாடகக் கலையை பாடமாக வைக்கப்படும் காலம் வரும்போது, நாடகத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை பிறந்து விடும். இந்தக் கலை, மேலும் மேலும் வளத்தெடுக்கப்படும். நாடகக் கலையின் உணர்வு வளர்த்தெடுக்கப்படுவது ஆரோக்கியமான கலை வளர்ப்பு. ஆரோக்கியமான சமூக வளர்ப்புக்கும் வித்திடுகிறது.

எளிமையும் உன்னதமும்

தற்போது தீபன், பிரபாகரன், சக்தி, பிரனேஷ், ஹேமநாதன், ஸ்ரீஹரி, சந்துரு, சாமுவேல் ஆகியோர் தொடர்ந்து சதீஷ் உடன் இணைந்தும் செயல்பட்டு வருகிறார்கள். ஈரோடு டீசல் செட் பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்துள்ள ஈரோடு நாடகக் கொட்டகை ஒரு உயரமான, ஓடு வாய்ந்த அரங்கில் தற்போது செயல்பட்டு வருகிறது. அது அரிசி ஆலை ஆகவோ தறிக் கூடாரமாகவோ முன்பு இருந்திருக்க வேண்டும். அதில் நுழையும் எவர் ஒருவரையும் ஆச்சரியம் தொற்றிக் கொள்ளும். அரங்கில் நடக்கும் நாடகம் தாண்டி, ஒவ்வொரு காட்சி படிமத்தையும் ரசிக்கும் படி தூண்டும். பார்த்த இடமெல்லாம் கலை நயமாக, கலை நேர்த்தியோடு காட்சி அளிக்கிறது.

ஈரோட்டில் இருக்கும் உணர்வே அற்றுப் போய் விடுகிறது. ஈரோட்டில் அரங்கங்களுடைய கூடிய உணவு விடுதிகள் நிறைய இருக்கின்றன. 30 பேர் மட்டுமே கொள்ளளவு உடைய, அரங்கம் ஒன்றுக்கு, நாள் வாடகை 30 ஆயிரம் வசூலிக்கும் அரங்குகள் உள்ளன. இதில் யாது ஒன்றிலும் ஈரோடு நாடகக் கொட்டகை போல கலை நேர்த்தியான அம்சங்களுடன் கூடிய அரங்கு இல்லை என்பதை மிகவும் சத்தமிட்டு நம்மால் சொல்ல இயலும். இப்போது 700 பேர் வரை நன்கறிந்த ஈரோடு நாடக கொட்டகை, 7000 பேர் என நகர்ந்து, ஈரோடு நகரத்தின் பெரும்பகுதி மக்கள் அறிந்த இடமாக, ஈரோடு நாடகக் கொட்டகை வளரும் என்ற நம்பிக்கையில் சதீஷ் இயங்கி வருகிறார்.

“ஈரோடு நாடகக் கொட்டகை” மக்களிடம் உள்ள, நுண்ணிய கலை உணர்வை, மலிவான நுகர்வு கலாச்சாரத்திற்கு தீனி போடுவதாக இல்லாமல், மானுடம் வளர்க்கும் மிகச்சிறந்த நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்ற ஆசையில், அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருகிறார் சதீஷ்.

கூத்துக் கலையின் கூர்மை

இவ்வளவு சிறப்புகள் பொருந்திய சதீஷ், சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். என்னை அலைபேசியில் அழைத்து, “உங்களைப் பார்க்க வேண்டும்” என்று கூறினார். ஒரு நாடகம் உங்கள் கல்லூரியில் வந்து செய்கிறோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார். அந்த இளைஞர் அவ்வாறு பார்த்துவிட்டு சொல்வதற்கு சில மாதங்கள் எடுத்துக் கொண்டோம். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பை வழங்கியது, கல்லூரியின் முத்தமிழ் விழாவில்.

“நாங்கள் நடத்தப் போவது கூத்து. அதற்கு ஒலிபெருக்கி தேவையில்லை. பயன்படுத்த மாட்டோம்” என்றார். எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. கல்லூரி மாணவர்கள் முன்பு ஒலிபெருக்கி இன்றி எடுபடுமா என்று அஞ்சினர் ஆசிரியர்கள். சதீஷ் குழுவினரின் நடிப்பின் ஆற்றல், உடல் நாடக மொழி எல்லாம் சேர்ந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓசையின்றி அமைதியாக கேட்டு ரசித்து, எங்கு எப்படி ரசனையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப வெளிப்படுத்தினர். சதீஷின் கூத்து நாடகம் ஆகியவற்றின் மீது எங்கள் ஆசிரியர்களுக்கு இருந்த நம்பிக்கையின்மை அடியோடு தகர்ந்தது.

எதேச்சையாக ஒரு நாள் சதீஷிடம் கேட்டேன். “என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?” என்றேன். ஏதேனும் ஒரு கல்லூரியில் முதலில் அறிமுகம் வேண்டும். யாரிடம் கேட்கலாம் என்று கல்லூரி மாணவர்களிடையே கேட்டபோது ஈரோடு ஆர்ட்ஸ் மணி சாரிடம் பேசுங்கள் என்றனர்” என்றார். பின்னர் தான் தெரிந்தது எங்கள் கல்லூரியில் நடத்திய நாடகம் தான் கல்வி நிறுவனங்களில் முதல் நிகழ்வு என்று. ஆனால் இப்போது “ஈரோடு நாடகக் கொட்டகையும்” ஈரோடு மாணவர்களுக்கு ஒரு பள்ளியாக மாறிவருகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

Article about Performance of Erode Koothupattarai students It is becoming a school for students by Professor N Mani
நா.மணி, பேராசிரியர் மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர், பொருளாதாரத்துறை, கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புத்தகங்களை பரிசளிக்க ஆசிரியர்கள் கை ஓங்குவது எப்போது?

உலகப் புத்தக தின‌ நினைவு அலைகள்!

சூரியின் உழைப்பு அசாதாரணமானது : புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன்

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்குமா?

வேலைவாய்ப்பு : மதுரை எய்ம்ஸ்-ல் பணி!

விமர்சனம் : மகாராஜா!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *