பொருள் உற்பத்தியில் தற்சார்பு… நான்கு சுழற்சிகளை முன்வைத்த வாதங்கள்!
பாஸ்கர் செல்வராஜ் Arguments presented four cycles
அரசு முதலாளித்துவத்தின் அடிப்படையிலான சிலிக்கான் சுழற்சியானது துருப்பிடிக்காத இரும்புப் பொருள் உற்பத்தியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது சிலிக்கான் பொருள் உற்பத்திக்கு மட்டுமல்ல; அதன் இயக்கத்துக்குமான சூரிய மின்னாற்றல் இணைத்து இயக்குவதற்கான இணையம் என அனைத்துக்கும் அடிப்படையானதாக மாறி மாபெரும் புரட்சிகர மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது.
இரும்பு உற்பத்தியின் பரவலாக்கம் உலகம் முழுக்க நிலவுடைமையை வீழ்த்தி முதலாளித்துவத்தை ஏற்படுத்தியதைப்போல சிலிக்கான் உற்பத்தி பரவலாக்கம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களை வீழ்த்தி சோசலிச அரசுகளைத் தோற்றுவிக்கும்.
எஃகு, இயந்திரத் தொழில்நுட்பப் பரவலாக்கத்தைத் தடுத்த முதலாளித்துவ பிரிட்டன் ஏகாதிபத்தியமாக மாறி உலகப்போரில் வீழ்ந்ததைப்போல ஏகாதிபத்திய அமெரிக்கா எண்ணெய், சிலிக்கான் தொழில்நுட்பப் பரவலாக்கத்தைத் தடுத்து, ஆதிக்கத்தைக் காக்க போரிட்டு வருகிறது. இப்போர்களின் இறுதியில் அது வீழ்வது உறுதியானது.
உலகிலும் இந்தியாவிலும் அரசின் ஆதரவுடன் தனிநபர்கள் சிலிக்கான் உற்பத்தியைக் கைப்பற்றி தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவிலும் ரஷ்யாவிலும் தனிநபர்களின் ஆதரவுடன் அரசு தொழில்நுட்பத்தை அடைந்து சமூகமயமாகி வருகிறது.
பார்ப்பனிய ஆதிக்கத்துக்கான வடக்கு முன்னதைத் தேர்ந்தெடுத்து வீழ்ச்சிக்கான பிற்போக்கு பாத்திரத்தை ஏற்கிறது. விடுதலைக்கான தெற்கு பின்னதைத் தேர்ந்தெடுத்து சோசலிச முற்போக்கு பாத்திரத்தை ஏற்பதே வெற்றிக்கானது.
சிலிக்கானில் ஏகாதிபத்தியம் கொண்டிருக்கும் ஏகபோகத்தைத் தனிநபர்களால் உடைக்க முடியாது. மக்களின் ஆதரவுடன் அரச முதலாளித்துவமே அதனைச் சாதிக்க முடியும். ஆகவே, அரசே நேரடியாக சிமென்ட், இரும்பு, எண்ணெய் உற்பத்தியில் முன்பு ஈடுபட்டதைப்போல இப்போதும் சிலிக்கான் சீவல்கள், சில்லுகள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.
நம்மிடம் சிலிக்கான் வடிவமைப்பு, அதனை இயக்கும் மென்பொருளை உருவாக்கும் திறனுள்ளவர்கள் இருக்கிறார்கள். சிலிக்கான் உற்பத்தி அதற்கான மூலதன, பொறியியலாக்க பொருள்களை உற்பத்தி செய்யும் திறன் இல்லை. இவற்றில் லாப நோக்கின்றி அரசு ஈடுபட்டு நம்மவர்கள் துய்த்தறியும் வாய்ப்பை ஏற்படுத்துவதே இப்போதைய தேவை.
ஒன்றியம் மலிவான சீன சூரிய மின்னாற்றல் தகடுகளை வேண்டப்பட்டவர் இறக்குமதி செய்து இவ்வுற்பத்தியில் ஏகபோகம் பெறவும், எடுத்த எடுப்பில் லாபம் தரும் 28 நானோமீட்டர் சில்லுகள் உற்பத்தியை குஜராத் பனியாக்கள் பெறவும் அவசரம் காட்டுகிறது. மாறாக சிலிக்கான் சீவல்களின் உற்பத்தியைக் கைப்பற்றி இயந்திரமயமாக்கி, உற்பத்தியைப் பெருக்கி, தரத்தைக் கூட்டி, விலையைக் குறைக்க வேண்டியது இப்போதைய தேவையாக இருக்கிறது.
கணினி, திறன் குறைவான அலைபேசிகள் உள்ளிட்டவற்றின் இயக்கத்துக்கான 28 நானோமீட்டர் மற்றும் அதற்கும் குறைவான சிறிய சில்லுகளின் பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவு. ஆனால், லாபம் அதிகம். இவற்றைவிட அளவில் பெரிய சில்லுகள்தான் பெரும்பாலான மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் பயன்பாடு அதிகம் என்றாலும் லாபம் குறைவு.
அதோடு அளவில் சிறிய சில்லுகளைக் கொண்டுதான் சில்லுகளின் திறனைக் கூட்ட வேண்டும் என்றில்லை. அளவில் பெரிய சில்லுகளை அடுக்கும் முறை மற்றும் இச்சாதனங்களுக்கு இடையிலான செய்திகளைப் பரிமாறும் முறைகளை மேம்படுத்தியும் இவற்றின் திறனைக் கூட்ட முடியும்.
ஆகவே, தற்சார்பை எட்ட முனையும் நாம் முதலில் எளிதான முதிர்நிலை மைக்ரோ அல்லது 90, 60, 40 நானோமீட்டர் சில்லுகளுக்கான உற்பத்தி மையங்களை ஏற்படுத்தி நம்மவர்கள் அதில் கற்றுத் தேர்ந்து, இவற்றை நமது தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்து அடுக்கி, சோதித்து இயக்கித் தன்வயமாக்கி (Indigenizationof design, Packaging, Testing and Functions) திறனைப் பெருக்கி அடுத்தடுத்த நிலைகளை நோக்கி முன்னேறுவது மெதுவாக இருந்தாலும் நீடித்து நிலைத்திருக்கும்.
மரபு – மரபுசாரா கலப்பு எரிபொருள் சுழற்சி Arguments presented four cycles
இரும்பில் உருவாகி எண்ணெயில் இயங்கும் உற்பத்தி சுழற்சியில் எண்ணெய் வளம் கொண்ட சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் அதன் விலையையும் அதன்மூலம் அவர்களின் நாணய மதிப்பையும் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்று, ஏகாதிபத்திய சுரண்டலைக் குறைத்து ஒப்பீட்டளவில் முன்னேறினார்கள்.
அது நம்மிடம் இல்லாததால் ஏகாதிபத்தியம் எண்ணெய் விலையைத் திரித்து, நமது நாணய மதிப்பைக் குறைத்து பொருளின் விலையைக் கூட்டி நம் உழைப்பின் பலனைச் சுரண்டியது. போதாக்குறைக்கு பார்ப்பனியம் எண்ணெய் இறக்குமதி, சுத்திகரிப்பு, வழங்கலைக் கைப்பற்றி இவ்விருவரும் சேர்ந்து கொண்டு நமது உழைப்பைச் சுரண்டியதால் சமூக மாற்றமின்றி பின்தங்கி இருக்கிறோம்.
மாறும் உலகச் சூழலைப் பயன்படுத்தி ரூபாயில் எரிபொருள் வாங்கி, பார்ப்பனியம் மேலும் கொழித்து வருகிறதே ஒழிய, நம்மீதான சுரண்டல் குறைந்தபாடில்லை. எனவே, இந்தச் சுரண்டலில் இருந்து நிரந்தரமாக விடுபட எரிபொருளில் நாம் தற்சார்பை எட்டுவது அவசியமானது.
தற்போது நிலையான பொருள்கள் நிலக்கரியில் உருவாகும் மின்சாரத்திலும் இயங்கும் நிலையற்ற பொருள்கள் எண்ணெயிலும் இயங்குகின்றன. ஓரிடத்தில் எரிபொருளைப் பெருமளவில் எரித்து உற்பத்தியாகும் மின்சாரத்தை சூரியன், காற்று, நீரை எரிபொருளாக்கி எல்லா இடத்திலும் உற்பத்தி செய்வதாக மாற்றம் காண்கிறது.
எண்ணெயை இருப்பாகக் கொண்டு ஆங்காங்கே நிரப்பிக் கொண்டு நடக்கும் நிலையற்ற பொருள்களின் இயக்கம் மின்னாற்றலை மின்கலத்தில் சேமித்துக் கொண்டு ஆங்காங்கே உற்பத்தியாகும் மின்சாரத்தை நிரப்பிக் கொள்வதாக மாற்றப்படுகிறது.
மாற்று மின்சார உருவாக்கத்தை ஓரளவு தமிழகம் உள்வாங்கினாலும் பொருள் இயக்கத்துக்கு லித்திய மின்கலத்தை முழுமையாக அனுமதித்து மீண்டும் இதற்கான உலோகங்களுக்கு மற்றவரைச் சார்ந்திருக்கும் சூழலை நோக்கிச் செல்கிறது. அதோடு மரபுசாரா மின்சாரத்தைப் பொருள் இயக்கத்துடன் இணைப்பதில் தெளிவான பார்வையின்றி சுணங்குகிறது.
அகழ்ந்து சுத்திகரித்துப் பயன்படுத்தும் எண்ணெயைவிட அதிக ஆற்றலும் பூமியில் இருந்து நேரடியாகப் பிரித்தெடுத்து அப்படியே பயன்படுத்தும் எரிவாயுவை வண்டிகளில் நேரடியாக நிரப்பி தமிழகம் தற்போது பயன்படுத்துகிறது. இது பாதுகாப்பு குறைவானது. மேலும் புவி வெப்பமடைதலை அதிகரிக்கும் இந்த விலைமதிப்புமிக்க மீத்தேனை நிரப்பும்போதெல்லாம் கசியவிடும் இம்முயற்சி சரியானதும் அல்ல.
லித்திய மின்கலத்துக்கு மாற்றாக இருசக்கர வண்டிகளுக்கான எங்கும் கிடைக்கும் சோடிய மின்கலத்தை கோவையில் இயங்கும் நிறுவனம் ஒன்று உற்பத்தி செய்யப் போவதாக செய்தி வெளியானது. அதற்கு மின்கலம் அளவில் சிறியதாகவும் தரத்தில் உயர்வாகவும் இருக்க வேண்டும்.
இவ்வளவு செலவு செய்து உருவாகும் மின்கலங்கள் பயன்பாட்டு அளவில் குறைவாக இருப்பதால் விலை கூடுதலாக இருக்கும். முற்றுமுழுதான மாற்று உற்பத்தி சங்கிலியையும் உள்கட்டமைப்பையும் கோரும் இந்த வணிக முயற்சியில் நாம் வெற்றி பெறுவது கடினம்.
மாறாக பயணிகள் போக்குவரத்துக்குப் பாதுகாப்பான லித்திய மின்கலங்கள், சரக்குப் போக்குவரத்துக்கு நீரிய (Hydrogen) எரிபொருள், மின்சார சேமிப்புக்கு சோடியம் அல்லது அலுமினிய சேமக்கலங்கள் என்பதாக நாம் பயணத்தைத் தொடங்கலாம்.
சமையலுக்கும், உரங்கள் மற்றும் நீரிய உற்பத்திக்கும் எனப் பெருமளவில் தேவைப்படும் எரிவாயுவை முதலில் பெருமளவு இறக்குமதி செய்து அதனை வழங்கும் கட்டமைப்பைக் கைப்பற்றுவதன் வாயிலாக அப்பொருளின் விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்று ஒன்றியத்தின் எண்ணெய் ஆதிக்கத்தில் இருந்து நம்மை விடுவித்து பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தி அவர்களின் சுரண்டலைக் குறைக்கலாம்.
மரபான எரிபொருளான மீத்தேன் இறக்குமதியில் இருந்து உரம், நீரிய தயாரிப்புக்கு மரபுசாரா மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்பதாகத் தொடங்கி பின்பு மீத்தேனையும் ஹைட்ரஜனையும் தாவர, விலங்கு பொருள்களைக் கொண்டும், கடல்நீரை மின்னாற்பகுத்தலின் வழியாகவும் மரபுசாரா வழிகளில் பெற்று, எரிபொருள் தற்சார்பை எட்டுவதை நோக்கி நகரலாம்.
மரபுசாரா மின்சாரத்தின் நிலையற்ற தன்மையை லித்தியம் அல்லாத மின்கலங்களில் மின்சாரத்தைத் தேக்கி எதிர்கொள்ளும் வழிமுறையைக் கைகொண்டு அதன் தேவைக்கு மின்கல உற்பத்தியைப் பெருக்கி எந்திரமயமாக்கி விலையைக் குறைத்து, அளவைக் கூட்டி அந்தப் பட்டறிவின் மூலம் தரத்தைக் கூட்டி, வண்டிகளின் இயக்கத்துக்கு மாறுவது வேகமானதாகவும் எளிதானதாகவும் இருக்கும்.
இப்படிக் கலவையான மரபு மற்றும் மரபுசாரா எரிபொருள் உற்பத்தி இயக்கத்தில் தொடங்கி அதன் வளர்ச்சியின் போக்கில் முழுதான மரபுசாரா எரிபொருளில் உருவாகி ஹைட்ரஜனிலும் மின்கலங்களிலும் இயங்கும் பொருள்கள் என்பதான தற்சார்பை எட்டும் இலக்கை அடைவது நடைமுறை சாத்தியமானதாக இருக்கும்.
இந்த எண்ணெயில் இருந்து மாற்று எரிபொருள், அதற்கான வண்டிகள், அவற்றைப் பயன்படுத்திய பொருள் உற்பத்தி முயற்சியில் நாம் எந்த அளவு தற்சார்பை எட்டுகிறோமோ அந்த அளவு நாம் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதும் அதனைத் தெரிவிக்கும் நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் அரசியல் அதிகாரத்தை அடைவதும், அதன் வழியான சமூக மாற்றத்தை எட்டுவதும் இருக்கும்.
எஞ்சிய இரு சுழற்சிக்கான வாதங்களை அடுத்த கட்டுரையில் காணலாம்…
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவின் தற்சார்பு சமூக மாற்ற விடுதலை – என்ன செய்ய வேண்டும்?- பகுதி 2
உக்ரைன் – பாலஸ்தீனப் போர்கள்..நொறுங்கும் அமெரிக்க ஆதிக்கம்..இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 1
உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு – பகுதி 1
இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்! – பகுதி 2
இந்தியாவின் மீதான உக்ரைனிய – பாலஸ்தீனப் போர்களின் தாக்கம்! – பகுதி 3
Arguments presented four cycles