சத்குரு
‘உயிரே உயிரே!’ என்று உருகும் காதலர்களும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம்பும் மனிதர்களும் அதீத கற்பனை உணர்ச்சியில் சிக்கி, ஒருகட்டத்தில் துன்பத்திற்கு உள்ளாவதை பார்க்கிறோம். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஒருவர் எதார்த்த உண்மைகளைப் புரிந்துகொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த பதிவு!
உயிருக்கு என்று ஒரு துணை தேவையும் இல்லை. அப்படி ஒரு துணையும் அதற்கு இல்லை.
எல்லோருக்குமே தங்களுக்கென்று நூற்றுக்கு நூறு பொருத்தமான உயிர்த்துணை ஒருவர் பிறந்திருக்கிறார் என்றும், கடவுளே அவரை நமக்காகப் பிரத்தியேகமாய் படைத்து சொர்க்கத்திலேயே அந்த ஏற்பாட்டைச் செய்து அனுப்பியிருக்கிறார் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.
இவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். உயிர் எவரோடும் எதனோடும் இணைந்திருப்பது இல்லை. உயிருக்கு என்று ஒரு துணையும் தேவையில்லை. உயிர் என்று சொல்கிறபோது முழுமையானதும் எல்லையற்றதும் ஆன ஒன்று பற்றி நாம் குறிப்பிடுகிறோம். எல்லைக்கு உட்பட்டது எதுவோ அதற்குத்தான் துணை வேண்டும். எல்லையில்லாத ஒன்றுக்குத் துணை தேவையில்லை.
எதார்த்தமாக இருப்பதன் சிறப்பம்சம் என்ன என்று சொன்னால் நாளை குறுகிய எல்லைகள் உங்களை எதிர்கொள்ளும்போது அவற்றைக் கையாளும் முதிர்ச்சியை நீங்கள் பெறுவீர்கள்.
நமக்கு ஏன் ஒரு துணை தேவை?
மனிதர்களுக்கு எதற்காக துணை தேவை? அவற்றுக்கு உடல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம். இதனைப் பாலியல் என்கிறோம். அதுவும் மிக அழகான அம்சம்தான். மனம் சார்ந்த காரணங்களை முன்வைத்து ஒரு துணையைத் தேடுகிறோம். இதனை உடனிருத்தல் என்கிறோம். அதுவும் அழகானதுதான். உணர்ச்சிகளை முன்வைத்த தேடலை அன்பு காதல் என்கிறோம். காலங்காலமாய் மிக அழகான அனுபவமாக இது வர்ணிக்கப்படுகிறது. இவை எல்லாமே வாழ்வை அழகாக்கக் கூடியவைதான். ஆனால் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருந்தால் இத்தகைய ஏற்பாடுகளால் ஒரு பதட்டம் உருவாவதை நீங்கள் மறுக்க முடியாது.
ஓர் உறவுமுறை செயல்படுவதில் இருக்கக்கூடிய குறுகிய எல்லைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்வது நல்லது. அப்போதுதான் அவற்றை இயற்கையாகக் கையாள உங்களுக்கு வழி தெரியும். ஆனால் உயிர்த்துணை என்று சொல்வதும் அந்த உறவு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாய் நம்புவதும் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வழி செய்வதோடு, வீண்பிரம்மைகளை உருவாக்கும்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை
அப்படியானால் திருமணத்தில் ஏதும் தவறு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. திருமணம்தான் வாழ்வில் எல்லாமே என்று நீங்கள் எண்ணாமல் இருந்தால் போதும். அது மிகவும் இனிமையான அனுபவமாக இருக்கும். இருப்பதிலேயே மிகவும் அற்புதமான மனிதரை நீங்கள் மணந்திருந்தாலும்கூட, உங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான கற்பனைகள் நிறைய இருந்தால் அது திருமண வாழ்வை பாதிக்கும். ஏனென்றால், எல்லா நேரங்களிலும் நீங்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது. நீங்கள் புத்திசாலித்தனமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ விரும்பினால் திருமணம் என்பது மனித ஏற்பாடுதானே தவிர, தெய்வீகத்தின் உருவாக்கம் அல்ல என்பதை உணரமுடியும்.
அன்பு என்பது நீங்கள் செய்யும் செயலைப் பொறுத்ததல்ல, நீங்கள் இருக்கும் தன்மையை பொறுத்தது.
சில கர்மவினையின் கட்டமைப்புகள் சில மனிதர்களை உங்களை நோக்கி ஈர்க்கும் என்பது உண்மைதான். அதற்காக அவையே ஆகச்சிறந்த உறவுகளாக இருக்கும் என்று இல்லை. இந்த உறவுகளின் வெற்றி என்பது மனமுதிர்ச்சியுடனும் புத்திசாலித்தனமாகவும் அந்த உறவுகளை அணுகுவதில் இருக்கிறது.
நான் காதலைப் பற்றி எதிர் மறையாகச் சொல்லவில்லை. உண்மையில் மனிதர்களுக்குச் சாத்தியப்படக் கூடிய மிக உயர்ந்த தன்மைகளில் அதுவும் ஒன்று. பல கலாச்சாரங்களில் காதல் மூடி வைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. சிலர் அதை சொர்க்கத்திற்கு ஏற்றுமதி செய்ய முயன்றதுண்டு.
ஆனால் காதல் என்பது இந்த பூமியைச் சார்ந்தது. முழுக்க முழுக்க மனிதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏன் நிராகரிக்க வேண்டும்?
அன்புக்கு ஒரு பொருள் தேவையில்லை. நீங்கள் நேசிக்கிற மனிதர் தூலமாக உங்கள் அருகில் இல்லை என்றாலும் அவரை உங்களால் நேசிக்க முடிகிறது. அவர் உயிரோடு இல்லை என்றாலும் அவரை உங்களால் நேசிக்க முடிகிறது. அப்படி என்றால் உங்களைச் சுற்றி இருக்கக்கூடிய மனிதர்களைப் பயன்படுத்தி உங்கள் அன்பை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள், அவ்வளவுதான்.
எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்கிற புத்தியின் இயல்பில் போதிய விழிப்புணர்வை நீங்கள் கொண்டு வந்தால் நீங்கள் அன்பு எனும் தன்மையில் மட்டுமே இருக்க முடியும்.
அன்பு என்பது உயிர் தனக்காக ஏங்குவது. இது எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவும், எல்லை இல்லாததாகவும் அமைய வேண்டும். அன்பு எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொள்கிற போதுதான் நீங்கள் எல்லையின்மையைத் தொடுகிறீர்கள். அப்போதுதான் உயிருக்கென்று ஒரு துணையும் தேவை இல்லை. அப்படி ஒரு துணையும் அதற்கு இல்லை என்கிற எளிய உண்மையை நீங்கள் உணர்வீர்கள்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி!
விஜயகாந்துக்கு நடிகர் சங்க அஞ்சலி கூட்டம்: பிரேமலதா நேரில் வராத பின்னணி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சேமியா முட்டை அடை