–முனைவர் டி. ரவிக்குமார் Are secularism and socialism parts of the Constitution?
“அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை இந்திய மதிப்பீடுகளுக்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ ‘சோசலிசம்’ ஆகியவை ஏன் சேர்க்கப்பட்டன?” என்று பாஜகவின் மேனாள் பொதுச்செயலாளர் கோவிந்தாச்சார்யா 2017 இல் ஒரு பேட்டியில் கேட்டார் ( National Herald , 02.10.2017). இன்றைய பாஜகவினரும் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பொருத்தமான பதிலைத் தீர்ப்பாகக் கொடுத்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட ‘சோஷலிஸ்ட்’ ‘செக்யூலர்’ ஆகிய சொற்களை நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியும், பாஜக ஆதரவு வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயாவும் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்திருக்கிறது (26.11.2024) . ‘மனுதாரர்களின் வாதங்களில் உள்ள குறைபாடுகள், பலவீனங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன என்பதால் இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவையில்லை’ என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
‘சோஷலிஸ்ட்’ ‘செக்யூலர்’ ஆகிய சொற்களை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த வழக்கில் பல காரணங்கள் அதற்காகக் குறிப்பிடப்பட்டன. “ 1976 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சட்டத் திருத்தம் 26.11.1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் பொய் என ஆக்குகிறது. ‘செக்யூலர் ‘ என்ற சொல் அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டது.
அதுபோல ‘சோஷலிஸ்ட்’ என்ற சொல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை இதுதான் எனக் கட்டுப்பாடு விதிப்பது போல் உள்ளது. இது மக்களுடைய விருப்பத்துக்கு மாறானதாக இருக்கிறது” .
“ அதுமட்டுமின்றி, அரசமைப்புச் சட்டத்தின் 42 ஆவது திருத்தம், நாடு அவசர நிலையில் இருந்த போது 2.11.1976 அன்று மேற்கொள்ளப்பட்டதாகும். நாடாளுமன்றத்தின் சாதாரண ஆயுட்காலம் 18.3.1976 இல் முடிந்துவிட்டது எனவே இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு மக்களின் ஒப்புதல் இருந்ததாகச் சொல்ல முடியாது. அந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் செல்லாது” என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘செக்யூலர்’ ‘சோஷலிஸ்ட்’ ‘இண்டெக்ரிட்டி’ ஆகிய சொற்கள் அரசமைப்புச் (42 ஆவது திருத்தம்) சட்டம், 1976 இன் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 368 ஆவது உறுப்பு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது ; இந்த, ‘திருத்தும் அதிகாரம்’ முகப்புரைக்கும் பொருந்தும். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறாமல் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படலாம்” எனக் கூறியுள்ள நீதிபதிகள், 1976 இல் செய்யப்பட்டத் திருத்தம் 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் தன்மையை பின் தேதிக்குச் சென்று மாற்றுவதுபோல் உள்ளது என்ற மனுதாரர்களின் வாதத்தை நிராகரித்துள்ளனர்.
“ இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அனைத்துத் திருத்தங்களுமே செல்லாது என அர்த்தமாகிவிடும். அரசமைப்புச் சட்டத்தின் 368 ஆவது உறுப்பின் கீழ் திருத்தம் செய்வதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரம் மறுக்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளனர்.
“ ‘ சோசலிஸ்ட்’ மற்றும் ‘செக்யூலர்’ என்ற வார்த்தைகளை முகப்புரையில் சேர்க்க அரசியல் நிர்ணய சபை ஒப்புக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். ‘செக்யூலர்’ என்ற வார்த்தை துல்லியமற்றதென 1949 ஆம் ஆண்டில் கருதப்பட்டது, சில அறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ‘மதத்திற்கு எதிரானது என அதை விளக்கினர் “ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு உயிருள்ள ஆவணம், சட்டப்பிரிவு 368 இன் படி அதில் திருத்தம் செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினர்.
“ சோஷலிஸ்ட் என்ற சொல்லை, இந்தியச் சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அரசமைப்புச் சட்டமோ அதன் முகப்புரையோ குறிப்பிட்ட ஒரு பொருளாதாரக் கொள்கையை வலியுறுத்த வில்லை. சோஷலிஸ்ட் என்ற சொல் அரசு ஒரு மக்கள் நல அரசாக செயல்படுவதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது, அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்க உறுதியளிக்கிறது, என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இந்தியச் சூழலில் சோஷலிசம் என்பதற்கு சமூக, பொருளாதார நீதியை அனைவருக்கும் வழங்குவது. அதில் எந்த ஒரு குடிமகனும் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதே பொருள். தனியார் தொழில் செய்ய அது எந்த ஒரு தடையையும் விதிக்கவில்லை. உண்மையில் பார்த்தால், தனி நபர்கள் எந்த ஒரு தொழிலையும் மேற்கொள்வதற்கான உரிமை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது” என நீதிபதிகள் விளக்கியுள்ளனர்.
“ 1978 ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 44 ஆவது திருத்தம் மீது நாடாளுமன்ற அவைகளில் நடைபெற்ற விவாதங்களின் போது, அவசர நிலைக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சேர்க்கப்பட்ட ‘சோஷலிஸ்ட்’ மற்றும் ‘செக்யூலர்’ ஆகிய சொற்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ‘செக்யூலர்’ என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பது எனவும் ‘சோஷலிஸ்ட்’ என்பது சமூக அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் அனைத்து விதமான சுரண்டல்களையும் ஒழிப்பது எனவும் அப்போது விளக்கமளிக்கப்பட்டது” என நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
“ 42 ஆது சட்டத் திருத்தம் செய்யப்பட்டு 44 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடுப்பதன் நோக்கம் என்ன?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘சோஷலிஸ்ட்’ ‘செக்யூலர்’ என்ற சொற்கள் அரசமைப்புச் சட்ட முகப்புரையின் அங்கம் ஆகிவிட்டன என்று தெளிவுபடக் கூறியுள்ளனர்.
பேருபாரி வழக்கில் (1960), உச்ச நீதிமன்றம் முகப்புரை ( preamble) அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கம் அல்ல, எனவே எந்தவொரு முக்கிய அதிகாரத்திற்கும் ஆதாரமாக அது இல்லை என்று கருத்து தெரிவித்தது. ஆனால், கேசவானந்த பாரதி வழக்கில் (1973), உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்தத் தீர்ப்பின் கருத்தை மாற்றி, “முகப்புரையும் அரசமைப்புச் சட்டத்தின் அங்கம்தான்.
முகப்புரையின் வெளிச்சத்தில்தான் அரசமைப்புச் சட்டத்தைப் படித்து விளக்க வேண்டும்” என்று கூறியது. அரசமைப்புச் சட்டத்தின் வேறு எந்த உறுப்பையும்போல, முகப்புரையும் நாடாளுமன்றத்தின் திருத்தும் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அது தெளிவுபடுத்தியது. கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இப்படி வழக்கு தொடுக்கப்படுவது சங்கப் பரிவாரங்களின் தீய நோக்கத்தையே புலப்படுத்துகிறது.
இந்தத் தீர்ப்போடு பாஜகவினரும் சங்கப் பரிவாரங்களும் ‘சோஷலிஸ்ட்’ ‘செக்யூலர்’ என்ற சொற்களை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலிருந்து நீக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட மாட்டார்கள். நீதிமன்ற வழியில் தற்போது தோற்றிருக்கும் அவர்கள் அடுத்து நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி அதை சாதிக்கப் பார்ப்பார்கள். அவர்களது முயற்சியை முறியடிப்பதற்கு நீதிமன்றமும், நாடாளுமன்றமும் சரியாக இருக்க வேண்டுமென்றால் மக்கள் மன்றம் அரசியல் விழிப்போடு இருக்க வேண்டும். அதுவொன்றே அரசமைப்புச் சட்டத்தையும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாதுகாக்கும்.
கட்டுரையாளர் குறிப்பு:
முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பேரறிஞர் அண்ணாவின் பேசப்படாத சாதனை!
கள்ளுக் கடைகளைத் திறக்கச் சொல்வது நீதி ஆகுமா ?
பாபு ஜகஜீவன்ராமும் நீதிபதி சந்துரு கமிஷன் பரிந்துரையும்!
மருத்துவக் கல்வியும் நீட் தேர்வு எனும் மோசடியும்!
ஆக்சிஜன் வசதி இல்லாத ஆம்புலன்ஸ்: வழியிலேயே மரணமடைந்த கர்ப்பிணி!
ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: காபி அறுவடை தாமதம்… கவலையில் விவசாயிகள்!
பியூட்டி டிப்ஸ்: இயற்கை அழகு தரும் காய்கறி ஃபேஷியல்!