பேரா. ஆர். சீனிவாசன்,& பேரா. விஜய் சேது துரை
24/08/24 ஆங்கில இந்து நாளிதழில் கட்டுரையை முன் வைத்து….
வருடாவருடம் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஒரு விசயத்தை பரவலாக பேசுகிறோம். அது “இப்பெல்லாம் மார்க்க அள்ளிப் போடறாங்க. யார கேட்டாலும் 80 ,90 ன்னு சொல்லுறாங்க. எழுதற எல்லோரையும் பாஸாக்கி விடறாங்க” இதுதான் அந்தப் பேச்சு.
உண்மையில் அப்படி மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விடுகிறார்களா? நிறைய மாணவர்கள் நிறைய மதிப்பெண் எடுக்கிறார்கள். அல்லது 60 விழுக்காட்டிற்கு மேல் பெரும்பகுதி மாணவர்கள் தேர்ச்சி அடைகிறார்கள். என்ன காரணம்?
“இன்றைய தலைமுறையினர் கல்வித் தரம் குறைகிறது. ஆனால் மதிப்பெண் மாத்திரம் அதிகரித்துள்ளது” என்ற பொத்தாம் பொதுவான விமர்சனத்தில் பொருள் உண்டா? நிறைய பேர் தேர்ச்சி, நிறைய மதிப்பெண் பெறுதல் என்பது பற்றி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கல்வி நலனில் அக்கறை உள்ளவர்கள், கல்வித் துறை கண்டுகொள்ள வேண்டுமா? வேண்டாமா? அதுபற்றி கருத்தூன்றி ஏதேனும் காரியம் ஆற்ற அவசியம் இருக்கிறதா? என்ற கேள்விகளை முன் வைத்தால் நிச்சயம் அதற்கான கட்டுப்பாடு இருக்கிறது. இதில் கல்வித்துறையின் நம்பகத்தன்மை இருக்கிறது.
மாணவர்களின் எதிர்காலத்தை, உயர்கல்வியை வேலைவாய்ப்பை பாதிக்கும் ஓர் அம்சம். தற்போது உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளின் ஆதிக்கம் மிகுந்த காலம். இது பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களை, தரத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது என்கிறார்கள். ஆனால் இந்தத் தேர்வுகளை வைத்து பள்ளிப் பொதுத் தேர்வுகளின் தரத்தை தீர்மானிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இவை எந்த ஒரு வாரியத்தின் பாடத்திட்டம் சார்ந்து நடத்தப்படவில்லை என்றாலும், தரத்தை பரிசோதிக்க நடத்தப்படும் தேர்வுகள் அல்ல இவை.
உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கையில் போட்டி போடுவோரை கழித்து கட்டுவதற்கான தேர்வு முறை. அறுதிப் பெரும்பான்மை மாணவர்கள் தனி வகுப்பு பயிற்சிகள் மூலம் வெற்றி பெறுகிறார்கள். எனவே நிச்சயமாக உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளைக் கொண்டு பள்ளிக் கல்வி தரத்தை மதிப்பிட்டு விகிதத்தை தீர்மானிக்க இயலாது.
பத்தாம் வகுப்பு வரை, NCERT மூலம் நடத்தப்படும் தேசிய கற்றல் அடைவு ஆய்வு ( NAS) மட்டுமே ஓர் அளவீடாக தற்போதைக்கு இருக்கிறது. இது அறிவியல் பூர்வமான மதிப்பீட்டு முறையே என்றாலும், மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விடுகிறார்கள், நிறைய பேர் ஒரே மதிப்பெண் எடுக்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற மேற்படி ஆய்வு முடிவுகள் போதுமானதல்ல.
பள்ளிக் கல்வியில் இது ஓர் முக்கியமான பிரச்சினை. அதுவும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் ஆதிக்கம் செலுத்தும் சூழலில் இந்தப் பிரச்சினை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதற்கு மாற்று என்ன? தீர்வு என்ன?:
வினாத்தாள் தயாரிப்பு தொடங்கி, தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை முழுமையான வெளிப்படைத் தன்மை வேண்டும். இந்த வெளிப்படைத் தன்மை என்பதில், சந்தேகத்திற்குரிய கேள்விகள், கடினமான கேள்விகள் உள்பட, மதிப்பீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதற்கு முன்கூட்டியே ஓர் கையேடு வழங்கப்பட வேண்டும்.
கேள்வித்தாள் வடிவமைப்பு முறைகள், அதற்கு எதிர்பார்க்கப்படும் விடைகள் ஆகியவை மாணவர்கள் கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டு அதில் தரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
கற்றல் அடைவுகளை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள்? மதிப்பெண்கள் எப்படி வழங்குகிறார்கள் என்பதையும் முன்கூட்டியே அச்சிட்டு தர வேண்டும். மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அதற்கு சில உதாரணங்களை தர வேண்டும் என்பது இவர்களின் ஆலோசனை.
ஆசிரியர்கள் வினாத்தாள்களை தயார் செய்யும் போது அதன் முழுமையான நம்பிக்கையுடன் தயார் செய்ய வேண்டும். வினாத்தாள் தயாரிப்பு தொடங்கி தேர்வு முடிவுகள் வரை எல்லாம் ஓர் வரைமுறைகள் கொண்டு வர விதிகளை உருவாக்கிட வேண்டும். வினாத்தாள் அச்சடித்தல் முதல் விடைத்தாள் சேகரிப்பு வரை சுய சரிபார்ப்புடன் கூடிய வகையில் இந்த வரன்முறை இருக்க வேண்டும். விடைத்தாள் திருத்தத்தில் மதிப்பெண் வழங்குவதில் தவறுகள் என்பது நிகழவே கூடாது.
விடைத்தாள்களை நகல் எடுத்தல். ஆன்லைன் மதிப்பீடுகளாக மாற்றி நம்பகத்தன்மையை அதிகரிக்கலாம். குறைந்த கட்டணத்தில் விடைத்தாள்களை பார்க்கவும் மறு மதிப்பீடு செய்யவுமான வழிகளை உறுதி செய்ய வேண்டும். நம்பகத்தன்மையும் வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்க அதிகரிக்க மறுமதிப்பீட்டிற்கான தேவை தானாகவே குறைந்துவிடும். கடினமான கேள்விகள். தவறான கேள்விகள். தொடர்பில்லாத கேள்விகளை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள்? என்ன மதிப்பெண் வழங்குகிறார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மை அதிகம் தேவை.
தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் போது வாரியம், அது நிறைவேற்றிய தீர்மானங்களையும் வெளியிட வேண்டும். மதிப்பெண் சான்றிதழில் கூட இரு பகுதிகள் இருக்கலாம். முதல் பகுதி மதிப்பெண்களைத் தாங்கியதாகவும் இரண்டாம் பகுதி, ஒவ்வொரு பாடத்திற்கு மதிப்பீடு எப்படி தரப்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் இருக்க வேண்டும் என்கின்றனர். இவையெல்லாம் முற்றிலும் புதிய தனித்துவமான பரிந்துரைகள்.
தேர்வு முறையில் பங்கேற்போர் பொறுப்பும் கடமையும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்ப தணிக்கை முறை வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் இருந்து இப்பிரச்சினையை தீர்க்க என்ன செய்யலாம் என்பதற்கு தமிழ் நாடு திட்டக் குழு உறுப்பினர் பேரா. ஆர். சீனிவாசன் அவர்களும் பிட்ஸ் பிலானி பேராசிரியர் இராஜ சேது துரை அவர்களும் 24/08/24 தி இந்து ஆங்கில நாளிதழில் ஓர் திட்டத்தை முன் வைத்து உள்ளார்கள்.
முதலில் இதன் மீதான பரவலான பார்வை விழ வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் நல்ல விவாதத்திற்கு உட்படுத்திட வேண்டும். அதனை தீர்வுக்கான திட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டும். இது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமை. கல்வித் துறையும் இதில் சீரிய கவனம் செலுத்த வேண்டும்.
நாடு முழுவதும் 42 வகையான வாரியங்கள், பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்துகின்றன. 2023 ஆண்டில், பத்தாம் வகுப்பில் 1.85 கோடி மாணவர்களும் பன்னிரெண்டாம் வகுப்பில் 1.55 கோடி மாணவர்களும் ஆக சுமார் 3.5 கோடி மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினை. இது ஓராண்டில் மாத்திரம். ஒவ்வொரு ஆண்டும் இதற்கு முன்பும் பின்பும் எத்தனை கோடி மாணவர்களின் எதிர்காலம்! இதனை கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையில் நாம் அக்கறை செலுத்த வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்புgovt bus time will protect tribal studies
நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
படித்த பள்ளிக்கு பங்களிப்பு செய்ய ஓர் அரிய வாய்ப்பு!
அரசுப் பேருந்தின் நேர மாற்றம்… பழங்குடிகள் படிப்பை பாதுகாக்குமா அரசு?
பிரதமர், முதல்வரைப் பாராட்டிய மனைவி : விவாகரத்து செய்த கணவன்!
ஹெல்த் டிப்ஸ்: பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அளவு தாண்ட வேண்டாம்!
பியூட்டி டிப்ஸ்: கண்களுக்கு தினமும் காஜல் பயன்படுத்துபவரா நீங்கள்?