பாலியல் வன்கொடுமைகளின் வேர்கள் வெகு தொலைவில் இருக்கின்றன!

Published On:

| By Aara

நா.மணி

அது ஓர் பெருங்கதை. பெருங்கதையின் நாயகன் அவதார புருஷனாக சித்தரிப்பு உண்டு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட கதை. கதை என்று வந்து விட்டால் அதில் எத்தனை விழுக்காடு உண்மை. எத்தனை விழுக்காடு பொய், புதுமைப்பித்தன் கூறியது போல ஒட்டப் புழுகியதா என்று யாருக்குத் தெரியும்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதனை எழுதி மாய்ந்து விட்ட அந்த மனிதருக்கே வெளிச்சம்.  அந்த கதை மாந்தரின் கதை நமக்கு இப்போது எதற்கு? அந்தக் கதையில் பெண்களின் மீதான வன்கொடுமைக்கு எதிரான ஆணித்தரமாக குறிப்புகள்.  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையின் ஆழம் தெரியும்.

கெட்டிதட்டிப் போன கற்பிதம்!

பெருங்கதையின் நாயகன் அவதார புருஷன் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவன்‌.  அவன் ஓர் வனத்தில் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை வந்த போது அவனை ஓர் பெண் அடைய முயற்சி செய்கிறாள். அவன் அதற்கு சம்மதம் தெரிவிக்காத போது, அவனை அவள் ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சி செய்கிறாள். நாயகன் தன்னை தற்காத்துக் கொள்ள, அந்தப் பெண்ணின் மார்பகங்களையும் மூக்கையும் முடியையும் அறுத்து எறிந்து விடுகிறார்.

மார்பகங்களும் மூக்கும் முடியுமே ஒரு மங்கைக்கு அழகு சேர்க்கும், ஆண்களை ஈர்க்கும் பாகங்கள் என்ற கற்பிதம் அப்போதே கெட்டி தட்டிப் போயிருந்தது. அதனை அழிக்கும் ஓர் செயலாக நாயகன் அப்பெண்ணின் மார்பகங்களையும் மூக்கையும் முடியையும் சிதைத்து விடுகிறான்.

ஆணாதிக்கம் கெட்டி தட்டிப் போயுள்ள நம் சமூக அமைப்பில் இன்னொன்றையும் திட்டமிட்டு வளர்த்தெடுத்து இருக்கிறோம். அது, பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடிக்கிறது என்றாலும், முதலில் ஆண் தான் அந்த விருப்பத்தை முன் மொழிய வேண்டும். இதில் அப்போதும் இப்போதும் விதிவிலக்கு உண்டு. ஆனால் பெருங்கதையில் நாம் கூறும் சம்பவம் அந்த பொது விதிக்குள் வரவில்லை. அதற்கு எதிராக உள்ளது. பெண் அழைத்ததாகவும் ஆண் நிராகரித்ததாகவும் கதை வருணனை வருகிறது.

இது எதன் வெளிப்பாடு?

அன்று முதல் இன்று வரை, ஆண் பெண் விருப்பங்களை பகிர்ந்து கொள்வதில் உள்ள பொது விதிக்கு விலக்காக கதைகளில் நாயகனுக்கு அரிதாரம் பூச நாயகியோ அல்லது நாயகனை அடைய முயற்சி செய்யும் இதர பெண்களோ தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் தொடர்ந்து அதனை ரசித்துக் கொண்டே இருக்கிறோம்.  

இப்போது மீண்டும் பெருங்கதைக்கு வருவோம். அந்தப் பெண் நாயகனை அடைய முயற்சி செய்தால், “ச்சீ.. போ”  என்று ஒரு சீறு சீறினால் அவள் அருகில் கூட அண்டப் போவது இல்லை. ஒரு வேளை அடைந்தே தீர வேண்டும். அல்லது நாயகனை ஆக்கிரமிப்பு செய்து கொள்ள வேண்டும் என்ற ஓர் வெறி இருக்கிறது அதன் அடிப்படையிலேயே அப்படி நடந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  ச்சீ போ என்பதை கண்டு கொள்ளவில்லை என்று நாமே கற்பனை செய்து கொள்வோம்.  

இப்போது கதையின் நாயகன் ஓர் எளிய பலப்பிரயோகம் மூலம்  அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம். ஏன் ஒரு பெருங்கதை நாயகன் ஒரு சாமானிய பெண்ணின் மார்பகங்களையும் மூக்கையும் முடியையும் கொய்து எறிந்து, அங்ககீனம் செய்ய வேண்டும்? இது எதன் வெளிப்பாடு?  

ஆணாதிக்கத்தின் உச்ச நிலை!

கொஞ்சம் இந்த சம்பவத்தை திறனாய்வுக்கு உட்படுத்தினால்,  இதில் ஓர் உள்ளார்ந்த பொருள் இருப்பதை உணர முடியும். இயல்பாக பெண்,  ஆணை அடைய வேண்டும் என்று அழைப்பதில்லை. அது இங்கும் நிகழ்ந்திருக்க அதிக  வாய்ப்பு இல்லை.

ஒரு நாயகன் விரும்பி அழைத்து அந்தப் பெண் ஏற்காத நிலையில், “தான் அடைய முடியாததை வேறு யாரும் அடையக் கூடாது. அனுபவிக்க கூடாது” என்ற ஆணின் அகங்காரம் ஆத்திரம் தலையெடுத்து ஆடியதன் விளைவாக அந்தப் பெண்ணின்  உறுப்புகள் கொய்து எறியப்பட்டு இருக்கலாம்.  கதாநாயகனை உயர்வு நவிற்சியாக காட்ட இத்தகைய கொடுமைகள் திரித்தும் மறைத்தும் கூறப்பட்டுள்ளது என்று பல கதைகளில் பல விவாதங்களாக தொடர்வதை நாம் பார்க்கிறோம்.‌

பெருங்கதையின் நாயக பிம்பத்தை உயர்த்திக் காட்ட நிகழ்ந்ததா? எது உண்மை? எது பொய்? எது புனைவு? அப்போதே கண்டறிய வழியில்லை. எனவே இப்போதும் அதனைக் கண்டறிய முடியாது. ஆனால் அதிலிருந்து ஒரு உண்மையை நாம் கிரகித்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்.  

ஆண்கள் விரும்பி அடைய முடியாத பெண்கள் அல்லது ஓர் ஆணை அதீதமாக நேசித்த ஓர் பெண்ணின் அங்கங்கள் ஊனப்படுத்தப்பட்டது. சிதைக்கப்பட்டது.  உயிருடன் இருக்கும் பெண்ணின் உறுப்புகள் கதற கதற அறுத்து எறியப்பட்டுள்ளது‌. அறுத்து எரிந்தவர்கள் அதனை கௌரவமான செயலாக கூறிக் கொண்டு நெஞ்சம் நிமிர்த்தி நடந்து பெயர் புகழுடன் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

அண்ணா பல்கலை சம்பவமும் பெருங்கதையும்…

உச்சநிலை வெறிபிடித்த ஆணாதிக்க சமூகத்தை நாம் புரிந்து கொள்ள இக்கதை பயன்படுகிறது. அத்தோடு தான் காதலித்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வில்லை என்று ஆத்திரத்தில் ஆசிட் வீசுதல், வெட்டி வீழ்த்தி படுகொலை செய்வது போன்ற செயல்களுக்கு இரண்டாயிரம் வருட தொடர்பு இருக்கிறது. இரண்டாயிரம் வருடத்திற்கு மேலும் தொடரும் அவலம் என்பதை புரிந்து கொள்ள முடியும். அண்ணா பல்கலைக்கழக சம்பவம் உட்பட இதன் தொடர்ச்சியே.

பெண்களுக்கு எதிரான நமது வன்கொடுமையின் வேர் மிகவும் ஆழமாக சென்றுள்ளது. அந்த விஷ விருட்சத்தின் நிழலில் நின்றே அந்தப் பிரச்சினைக்கான தீர்வை தேடுகிறோம்.  அல்லது நாம் குறிப்பிட்ட பெருங் கதையின் நாயக அபிமானிகளே தீர்வைத் தருவதாகவும் தொடைகளை தட்டிக் கொண்டு வருகிறார்கள்.  இதுதான் இன்றைய சிக்கல். ஆணின் இந்த ஆக்கிரமிப்பு இத்தனை ஆண்டுகள் எப்படி தொடர்கிறது? அதன் வேர்கள் விழுதுகள் எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து அந்த விஷ விருட்சங்களை கண்டறிந்து அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க ஆத்மார்த்தமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

எந்த விலங்கிடமும் இல்லாததைப் பெற்ற மனித விலங்கு

பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைக்கு அடுத்த ஒரு முக்கிய காரணம், மனிதன் ஓர் சமூக விலங்கு என்று கூறுகிறோம். பல்லுயிரியத்தின் ஒரு துளியாய் இருக்கும் மனிதன் தனது சொல் சிந்தனை வழியாக இந்த உலகின் அனைத்து ஜீவராசிகளையும் வளங்களையும் ஆட்கொள்ளும் சக்தி பெற்று விட்டான்.  இந்த சக்தியே உயிரிப் பன்மைய பேரழிவுக்கும் பருவநிலை மாற்றத்தால் புவிக் கோளத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கும் காரணம் என்பதை அறிகிறோம்.

விலங்கின் நிலையிலிருந்து வேறுபட்டு சொல், சிந்தனை வழியாக சமூக விலங்காக மாறினான் என்பது சரி‌,   ஆனால் மனிதன் என்ற விலங்கு மாத்திரம் அதில் குறிப்பாக ஆண் பால் விலங்கு தனது சக பெண் பாலினத்தை பாலியல் வன்கொடுமைக்கும் பாலியல் வல்லுறவிற்கும் உட்படுத்துவது ஏன்? மற்ற எந்த விலங்கிற்கும் இல்லாத கேடு கெட்ட குணம் எப்படி மனிதன் என்ற விலங்கிற்கு தொற்றியது? இதனையும் கண்டறிந்து களைய வேண்டும்.  இத்தனை விசயங்களை ஆய்ந்து அறியும் விஞ்ஞானிகள் இதனையும் ஆய்ந்து அறிய வேண்டும். இதுவே ஆண் பெண் சமத்துவத்தை நோக்கிய பாதையின் நிரந்தர வழியாக இருக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

பேராசிரியர். மேனாள் தலைவர். தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா! 

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் : இந்தியா சாதனை!

ஆளுநர் பதவி முக்கியம் போல : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share