ஸ்ரீராம் சர்மா
திராவிட சித்தாந்தத்தை அரசியல்படுத்தி தமிழ் மண்ணை புரட்டிப் போட்ட கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற அரசியல் மேதை பேரறிஞர் அண்ணா !
அப்பேற்பட்ட பேரறிஞரைக் குறித்து, “அண்ணா என்பவர் ஒரு குழந்தை” என அவரிடமே சொன்னவர் எனது தந்தையார் கே.ஆர். வேணுகோபால் சர்மா. அது, நெகிழ்ச்சியும் – சுவாரசியமும் கூடியதொரு வரலாறு.
பேரறிஞர் அண்ணா – கே.ஆர்.வேணுகோபால் சர்மா இருவரின் நட்பு ஆழமானது மட்டுமல்ல ஆத்மார்த்தமானது! இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம் என்பதால் அன்னியோன்னியமாக பழகிக் கொள்வார்கள் எனவும் வேணுகோபால் சர்மாவுக்கு “ஓவியப் பெருந்தகை” எனும் பட்டத்தை அளித்தவர் அண்ணா அவர்கள்தான் எனவும் பதிந்திருக்கிறார் அன்று வேணுகோபாலரிடம் உதவியாளராக இருந்த திரு விகடம் சஞ்சீவி.
காமாட்சிப்பட்டி கிராமத்தில் பிறந்த வேணுகோபால சர்மா – சமஸ்தானத்து வாழ்வில் தான் கொண்ட பொருளையெல்லாம் – மூன்று திரைப்படம் எடுத்து இழந்தும் கூட, எவரையும் குற்றம் சொல்லாமல் இன்முகத்தோடு வளைய வந்தவிதம் கண்டு அவர் மேல் பேரன்பும் மரியாதையும் கொண்டவர் அண்ணா..
இருவரும் பெரும் படிப்பாளிகள் என்பதால், அன்றைய சென்னை HIGGINBOTHEM’S ல் இருந்து தருவித்து படிக்கும் ஆங்கில க்ளாஸிக்குகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதுண்டு. வேணுகோபாலரை காஞ்சீபுரத்துக்கு பலமுறை அழைத்து மரியாதை செய்திருக்கிறார் அண்ணா.
சேலத்தில் ராஜாஜி – மகாத்மா காந்தி சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் வழி கண்ட வேணுகோபால் சர்மா அன்றைய முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கு நல்ல நண்பராக இருந்தாலும், அண்ணாவிடம்தான் அவர் ஆத்மார்த்தமான நட்பு கொண்டிருந்தார் எனப் பதிகிறார் விகடம் சஞ்சீவி.
ஒருமுறை அண்ணாவின் குடும்ப நிகழ்வு ஒன்றினுக்காக அவரது அழைப்பின் பேரில் காஞ்சீவரம் சென்றிருக்கிறார் வேணுகோபால சர்மா. அப்போது க்ரூப் ஃபோட்டோ ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது !
புகைப்படம் எடுக்கப்படுவதற்கு முன் திரும்பிப் பார்த்த அண்ணா…
“ஓவியப் பெருந்தகையே… என் கெழுதகை நண்பராகிய உங்களை இப்படி வெறுந்தோளோடு நிற்க வைத்தால் இந்த பொல்லாத உலகம் என்னையல்லவா குறை பேசும் ?” எனக் கண்ணடித்தபடியே கேட்டவர்…
சட்டென்று தனது தோளில் இருந்த கருப்புத் துண்டை வேணுகோபால் சர்மா அவர்களின் தோளில் போட்டு விட்டு – வேறு ஒரு கருப்புத் துண்டைக் கொண்டு வரச் சொல்லி அணிந்து கொண்டு…
”ஆகட்டும்..இப்போது புகைப்படம் எடுங்கள்…” என குழந்தையை மடியில் இருத்திக் கொண்டு அமர்ந்து விட்டார். ( அந்த அரிய புகைப்படம் இங்கே )
பிறகு ஒரு நாள் சென்னையில் வேணுகோபாலரை சந்தித்தபோது, வார்த்தை ஜாலங்களுக்கு பேர் போன அண்ணா புன்னைகையோடு சிலேடையாக கேட்டாராம் !
”ஐயா வேணுகோபாலரே, உங்களிடம் ஒப்படைத்த என்னுடைய அழகான கறுப்புத் துண்டை ‘கசங்காமல்’ பார்த்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அப்படித்தானே ?”
வேணுகோபாலர் பணிந்து சொன்னாராம்..
”ஆம், அண்ணா ! உங்கள் தோளில் இருந்த துண்டல்லவா அது ? அதை தூசி கூட படாமல் பத்திரமாய் எடுத்து ட்ரங்குப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கிறேன் !”
குபுக்கென்று ரசித்து சிரித்த அண்ணா…
“துண்டை எடுத்து விடலாம்… ஆனால், உங்கள் உள்ளத்தில் இருக்கும் என்னை யாரால் எடுக்க முடியும்..?” என்று கேட்க…
“அது, உங்களால் கூட முடியாது அண்ணா..?” என்றாராம் வேணுகோபால் சர்மா.
நாகரீகமாய் நலம்பாடிக் கொண்ட பெருங்காலம் அது !
வேணுகோபாலரிடம் அண்ணாவுக்கு இணையாக பேரன்பு செலுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவர் ஒருமுறை “ஓவியப் பெருந்தகையே, அண்ணாவை நீங்கள் உயிரோவியமாக வரைய வேண்டும். அதன் பிரதிகளை எதிர்வரும் திமுக மாநாட்டில் வைத்து கட்சி நிதிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். செய்து தருவீர்களா ?” என்று கேட்க….
“இப்படி நீங்கள் கேட்கலாமா கலைஞரே ? உங்கள் எண்ணத்தை நான் மறுப்பேனா ?” என நெகிழ்ந்து சொன்ன வேணுகோபாலர்,
தன்னிடம் உள்ள கேமிராவை எடுத்துக் கொண்டு ஓவியத்துக்கான மாதிரிக்காக அண்ணா அவர்களை பல கோணங்களில் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
கடைசியாக வேணுகோபாலர் சொல்லியிருக்கிறார்…
“அண்ணா, நிறையப் படம் எடுத்தாகிவிட்டது. நீங்களும் வெளியூர் செல்ல நேரமாகிவிட்டது. ஒரே ஒரு புகைப்படம் மட்டும் நீங்கள் புன்னகைப்பதுபோல எடுக்கப் போகிறேன்…”
கூச்சம் மேலிட சட்டென்று அண்ணா சொன்னாராம்…
“இல்லை, அது சரி வராதுங்க….“
“ஏன் அண்ணா ?”
“இல்லை விட்டு விடுங்கள். வேறுவிதமாக எடுத்துக் கொள்ளுங்களேன்…”
“ஏன் அண்ணா, என்ன தயக்கம் உங்களுக்கு ?”
“இல்லைங்க, நான் சிரித்தால் அழகாக இருக்காதுங்க சர்மா…”
“யார் சொன்னது அப்படி..? புன்னகைதான் உங்களுக்கு அழகு…”
“எனக்கு நம்பிக்கையில்லை…அது நன்றாக வராது,விட்டுவிடுங்கள்…”
“அண்ணா, உங்களை நான் சிரிக்க சொல்லப் போவதில்லை “
“பிறகு ?”
“சிரிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள் போதும். அது, அற்புதமான புன்னகையாக வரும் பாருங்கள்…“
“அப்படியா..சொல்கின்றீர்கள்..? சரி. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்..அப்படியே செய்கிறேன்” என்ற அண்ணா, அற்புதமான தோற்றம் ஒன்றைத் தர, அதனை அப்படியே புகைப்படமாக தன் காமிராவில் பதிய வைத்துக் கொண்டார் வேணுகோபால் சர்மா.
அதனை மாதிரியாக கொண்டு வேணுகோபால் சர்மா அவர்கள் தீட்டிய அந்த பேரழகான ஓவியத்தின் பிரதிகள் கலைஞரின் ஏற்பாட்டால் அன்றைய திமுக மாநாட்டில் வைக்கப்பட –
“திருவள்ளுவரை வரைந்தவர் அண்ணாவை வரைந்திருக்கிறார்” என எங்கும் பேசப்பட – அண்ணாவின் அந்த ஓவியம் மளமளவென விற்பனையாக – அச்சுவிலை போக அதன் மொத்த இலாபமும் கட்சி நிதியில் சேர்க்கப்பட்டது.
புகழ்பெற்ற அண்ணா அவர்களின் அந்த ஓவியம் Winsor and Newton permanent watercolor கொண்டு வரையப்பட்டது. அந்த உயிரோவியத்தின் ஒரிஜினலையும், அன்று முரசொலியில் வெளியிடப்பட்ட அது குறித்த விளம்பரத்தையும் பத்திரமாக காப்பாற்றி வைத்திருக்கிறேன்.
பின்னொரு நாள் லக்ஷ்மி லாட்ஜ் சந்திப்பில் வேணுகோபாலரிடம் அந்த ஓவியத்தைப் பற்றி அண்ணா கேட்டாராம்.
“வேணுகோபாலரே, சிரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் போதும். அது முகத்தில் அப்படியே தெரிந்து விடும் என்றீர்களே. எப்படி அப்படி கணித்தீர்கள் ?”
வேணுகோபாலர் மெல்ல விளக்கியிருக்கிறார்…
“அண்ணா. மனித மூளை விசித்திரமானது ! பொதுவாக சிரிக்க வேண்டும் என மனம் நினைக்கும் கணத்தில் அறிவு குறுக்கிட்டுவிடும் !
ஏன் சிரிக்க வேண்டும் ? எதற்காக சிரிக்க வேண்டும் ? எவ்வளவு சிரிக்க வேண்டும் ? அந்த சிரிப்பால் வரும் லாப நட்டம் என்ன ? என்றெல்லாம் கேள்வி கேட்டு மனதுக்கும் முகத்துக்கும் இடையே அரசியல் நடத்தும் ! மூளையின் அந்த குழம்பிய நிலையினையே மனித முகம் கொண்டு கூட்டிக் காட்டும். அதனால்தான் பெரும்பாலான புன்னகைகளில் வசீகரம் இருப்பதில்லை.
ஆனால், உங்கள் மனம் ஒரு முடிவெடுத்தபின் அதில் அறிவு குறுக்கிடுவதில்லை என்பதை நான் அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். அதனால்தான் அப்படியானதொரு புன்னகை உங்கள் முகத்தில் படர்ந்து வந்தது.
கொண்ட மனதை பிஞ்சு முகத்தில் பிரதிபலிக்கும் தன்மை குழந்தைகளுக்கே உரியது. என்பார்கள். அப்படிப் பார்த்தால்…
“அண்ணா நீங்கள் ஒரு குழந்தை…”
நிறைந்த பதிலால் நெகிழ்ந்த அண்ணா சர்மாவை கட்டி அணைத்துக் கொண்டாராம்.
அண்ணாவுக்கும் வேணுகோபால் சர்மாவுக்கும் இடைப்பட்ட அன்பு அதிசயமானதும் ஆச்சரியங்கள் நிறைந்ததுமாக இருந்தது என நெக்குருகிறார் அதற்கு வாழும் சாட்சியாக இன்றளவும் நம்மிடையே இருக்கும் புகழ்பெற்ற ஓவியர் திரு. மாருதி அவர்கள்.
இன்று புனேவில் தன் அருமை மகளோடு தங்கியிருக்கும் ஓவியர் மாருதி சார், அலைபேசியில் என்னோடு உரையாடுகையில், அன்று லக்ஷ்மி லாட்ஜில் அருகிலிருந்து அவர் கண்ட அந்தக் காட்சியை – அண்ணாவின் அந்த எளிமையை சொல்லிச் சொல்லி நெகிழ்கிறார்.
ஆம், அந்த நாளில், மயிலாப்பூர் லஷ்மி லாட்ஜின் ஒரு அறையை வேணுகோபால் சர்மா அலுவலகமாக பயன்படுத்திக் கொண்டிருந்தாராம். மற்றொரு அறையில் தங்கியிருந்தவர் ஓவியர் திரு மாருதி.
ஒருநாள் நண்பகலில், தன் நண்பர் வேணுகோபாலரைத் தேடி அந்த லாட்ஜுக்கே வந்து விட்டாராம் அறிஞர் அண்ணா.
பதறிப் போன வேணுகோபாலர்…
“அண்ணா, சொல்லி அனுப்பியிருந்தால் நான் வந்து தங்களை சந்தித்திருப்பேனே… விடுதி வரைக்கும் தாங்கள் வரவேண்டுமா ? ” என்று வருத்தப்பட…
அவரை அரவணைத்துக் கொண்ட அண்ணா…
“இல்லை, இல்லை, உங்களைப் போன்ற உன்னதமான கலைஞர்கள் இந்த மண்ணின் மாபெரும் சொத்து. நான் வந்து உங்களை சந்திப்பதுதான் முறை…“ என்றாராம்.
அறிஞர் அண்ணாவின் அந்தத் தகவு இந்திய அரசியலாளர்களுக்கு ஓர் பாடம் !
ஆம், அன்றைய ஆட்சியாளர்களின் பகட்டான அணுகுமுறைக்கு முற்றிலும் எதிரானது – கற்றறிந்த அண்ணாவின் எளிய அணுகுமுறை.
உடை – உணவு – மனம் – குணம் என சகலவற்றிலும் அறிஞர் அண்ணாவிடமிருந்து வெளிப்பட்ட அந்த எளிமையாம் தன்மைதான் தமிழுலகத்தை தன்வயப்படுத்தியது.
அண்ணா மறைந்தபோது – ஒன்றரைக் கோடி மக்கள் வீதிகளெங்கும் கூடியடைந்து – ‘ஐயகோ, எங்கள் அண்ணா’ என மாரடித்தபடி வழியனுப்ப – கோமகனைக் காண மானுடக் கூட்டம் திரண்ட விதம் கண்டு ஆகாசங்கள் திகைத்தொடுங்க…
திராவிட அண்ணலது அஞ்சலிக்கான அந்த ஊர்வலக் காட்சி உலக வரலாற்றின் ஆச்சரியங்களில் ஒன்றாக இன்றளவும் பேசப்படுகிறது !
அண்ணா மறைந்த சேதி கேட்டலறிய வேணுகோபால் சர்மா பெருந்துக்கத்தில் ஆழ்ந்தார். அழுதழுது இடதுகண் நரம்பு பாதிப்படைந்து சிகிச்சைக்குப் பிறகே மீண்டார் என்கிறது அந்த நாளைய அவரது டைரி குறிப்புகள். ( அனைத்து டைரிகளும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன )
1986 ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த எனது தந்தையாரிடம் ஆல் இண்டியா ரேடியோ சார்பில் – மறைந்த பத்திரிகையாளர் ஞானி பேட்டி எடுக்க வந்தார். சிறுவனான நான் அன்று அருகில் இருந்தேன்.
அண்ணாவைப் பற்றிக் கேள்விகள் எழுந்தன.
திருவள்ளுவரைக் காண இல்லம் நோக்கி அண்ணா வந்தவிதம் பற்றி சொல்லிக் கொண்டே வந்த தந்தையார் – காஞ்சீவரத்தில் அண்ணா போர்த்திய அந்தக் கருப்புத் துண்டைப் பற்றி மெல்ல சொல்லத் துவங்கினார்.
அது குறித்து எனக்குத் தெரியும் என்பதால் ஓடிப் போய் ட்ரங்குப் பெட்டியைத் திறந்து அந்தத் துண்டை எடுத்து வந்து காட்டினேன்.
அதைக் கண்ட மாத்திரத்தில் ஏதோ பேசத் துவங்கிய அவரது முகம் திடுக்கென விம்மி இழுக்க, கண்கள் கலங்க, இடது பக்க சுவற்றைப் பார்த்து புரண்டு படுத்தவரின் இளகிய முதுகுப்புறம் அதிர்வதும் அமைவதுமாய் குலுங்கிக் கொண்டேயிருந்தது. திரும்பி நோக்கும் மனமற்றவராய் அவரது முதுகு மேலும் குலுங்கியபடியே இருக்க…
ஓவியப்பெருந்தகையின் உணர்வுக்கு மரியாதை செய்யும் விதமாக ஞானி எழுந்து கொள்ள – அவர் பின்னே மௌனமாக வெளியேறிச் சென்றது ஆல் இண்டியா ரேடியோ குழு.
பாசமும் – நேசமும் – பேரன்புமாக மாமனிதர்கள் குழைந்து வாழ்ந்த பெருங்காலம் அது !
கலையும் – கலாச்சாரமுமாக ஆட்சியாளர்களும் அறிஞர்களும் இழைந்து வாழ்ந்த அருங்காலம் அது !
இந்த மண்ணில் திராவிடக் கொள்கை என்ன சாதித்தது என்றால் அன்பு சாதித்தது என்பேன்.
ஆம்,
கே.ஆர். வேணுகோபால் சர்மா 1989 ல் இப்பூவுலகை நீத்தபோது – அவருடைய இறுதிப் பயணத்தில் – அந்த முரட்டு மூங்கில் பாடையில் – அவரது தலையை சற்றே உயரப்படுத்த முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது அண்ணா கொடுத்த அந்தக் கருப்புத் துண்டுதான்.
திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் ஓவியப் பெருந்தகையின் பூத உடல் தகன மேடை ஏறும் வரை உடனிருந்து வழியனுப்பி வைத்தது அண்ணாவின் அந்த தோள் துண்டுதான் !
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !?
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
(சென்ற ஆண்டு நம் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு)
கலைஞர் மகளிர் உரிமை தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்!
அண்ணா பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!
இது படம் என்றால் நம்பவா முடிகிறது..
அந்த காலம் பொற்காலம் தானோ!
சிறப்பான கட்டுரை..
👌