நா.மணி
பள்ளி மேலாண்மைக் குழுக்களால் என்ன செய்ய முடியும்?
அரசுப் பள்ளிகளின் தரத்தையும், மாணவர் சேர்க்கையையும், ஒருசேர உயர்த்தும் வலிமை பெற்றது, ‘பள்ளி மேலாண்மை குழுக்கள்’. இருக்கும் வளங்களை செம்மையாக பயன்படுத்தவும், இல்லாத வளங்களை தேடி சேர்த்து, பள்ளிகளை வலிமை மிக்கதாக மாற்றவும், மேலாண்மைக் குழுக்களால் முடியும்.
பள்ளியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதில் விவாதிக்கப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் எடுக்கும் முடிவுகள் அடிப்படையிலேயே, பள்ளியின் வளர்ச்சி செயலாக்கம் பெறும். இத்தகைய தனித்தன்மை பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு மட்டுமே உள்ளது. பள்ளி நிர்வாகத்திலும், பள்ளியின் நிதி நிர்வாகத்திலும் வெளிப்படை தன்மையை உயர்த்த பள்ளி மேலாண்மைக் குழுக்களே உற்ற துணை புரியும்.
பள்ளிக்கும் சமூகத்திற்குமான பாலம்:
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது, பெற்றோரும் ஆசிரியரும் தொடர்ந்து சந்திக்க இருக்கின்றனர். திட்டமிடுதல், உரையாடல், முடிவெடுத்தல், செயலாக்கம் செய்தல் என்ற தொடர் பயணத்தின் சக பயணியாக இருவரும் மாற்றம் அடைகின்றனர்.
இதன் விளைவாக, “இது எங்கள் பள்ளி” “இது என் பள்ளி” என்ற பற்றுணர்வு ஒவ்வொருத்தருக்கும் உருவாகிறது. இந்தப் பற்று, பெற்றோர் ஆசிரியர் கூட்டுச் செயல்பாடு என்ற நேர்கோட்டில் இருவரையும் பயணிக்க உதவுகிறது. பெற்றோர் பள்ளி மேலாண்மை குழுவில் சிறப்பாக பங்கேற்ற போது, அந்தப் பள்ளி அமைந்துள்ள பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பங்கேற்பாக மாறுகிறது.
பெற்றோரை ஆற்றுப்படுத்துதல்:
பெற்றோரை ஆற்றுப்படுத்தி, உற்சாகமூட்டி, நம்பிக்கையூட்டி, பள்ளி நிர்வாகத்தில் பங்கேற்க செய்வது, பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களை ஆற்றல் படுத்துவதற்கு சமமானது. இதன் காரணமாக, குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும், என்பதை பல்வேறு கோணங்களில் சிந்திக்கின்றனர்.
இந்த சிந்தனைகள், தொடர் செயல்பாடாக மாறி, பள்ளி வளர்ச்சிக்கு வழி காட்டும். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி தானாகவே உயரும். பள்ளி மேலாண்மை குழுக்கள் தொடர்ந்து இயங்கினால், பள்ளிகள் உள்ளூர் சமூகத்தில் நம்பிக்கையைப் பெறும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும். புரிந்துணர்வு மேம்படும். பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்து தரும் பலத்தை தரும்.
பள்ளி மேலாண்மைக் குழுவின் பலம்
பள்ளிக் கல்வி மேம்பட, பல்வேறு சட்ட திட்டங்கள் இருக்கலாம். விதிமுறைகள் இருக்கலாம். அரசின் உத்தரவுகள் இருக்கலாம். அவை நடைமுறை ஆக்கம் செய்யப்பட வேண்டும் எனில் பள்ளி மேலாண்மை குழுக்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ஒரு பள்ளியில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாத எளிய பிரச்சினை, நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் பிரச்சினை. சிக்கல் நிறைந்த செயல்பாடுகள். எல்லாவற்றுக்கும் பள்ளி மேலாண்மை குழுவின் சீரிய செயல்பாடுகள் வழியாக தீர்வுகளை எட்ட முடியும். அதற்கான உரையாடலை முன்னெடுக்க முடியும். கல்வியின் தரத்தையும் , பள்ளியின் சேர்க்கை விகிதத்தையும் அதிகரிக்க முடியும்.
ஆசிரியர்களின் உறுதுணை
தான் பணியாற்றி வரும் பள்ளியில் புதுமைகளை புகுத்த, அந்தப் பள்ளியை காப்பாற்ற, அதில் படிக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, அவர்களை ஆற்றல் படுத்த, முன்னேற்றம் அடையச் செய்ய, தங்களின் சக்தி முழுவதையும் திரட்டியும், சில நேரங்களில் அதனை மீறியும் பள்ளிக்காக பாடுபட்டு வரும் ஆசிரியர்கள் உண்டு. அவர்களுக்கு கைகொடுக்கும் பேராயுதம் பள்ளி மேலாண்மை குழுக்கள். பள்ளி கல்வி வளர்ச்சியில் தவிர்க்க இயலாத சக்தியாக வளர்த்து விடப்பட வேண்டிய பள்ளி மேலாண்மை குழுக்கள், மிக நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது.
பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறு கட்டுமானம்
2022 ஆம் ஆண்டு முதல் கட்டுமானம் செய்யப்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மறு கட்டுமானம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த மறு கட்டுமான பணிகளை, கல்வித்துறை செவ்வனே செய்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரை, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டுமானத்தில் என்னென்ன பணிகளை ஆற்ற முடியும்? அல்லது ஆற்ற வேண்டும், என்பதற்கான வரையறையை பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கையாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்கள்
பள்ளி மேலாண்மை குழுவில், தேர்வு செய்யப்படும் 24 பேரில் ஒருவராக முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதே பள்ளியில் படித்து, தங்கள் குழந்தைகளையும் அதே பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் மூன்று பேர். குறைந்த பட்சம் இரண்டு பேர். அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களில் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினராக பங்கு பெறலாம்.
நாம் படித்த பள்ளியை பார்க்கும் போதும், நினைக்கும் போதும், நமக்குள் ஒரு பெருமிதம் இழையோடும். இதமான காற்று மனதிற்குள் வீசும். நமக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், நமக்கு சொல்லி கொடுத்த பாடங்கள், அவர்களது பண்பு நலன்கள், அவர்கள் நம்மை நடத்திய விதம், நாம் அவர்கள் மீது வைத்திருந்த அன்பு, மரியாதை, நம் நண்பர்கள், நாம் அப்போது செய்த செயல்பாடுகள், என மனதிற்குள் ஓர் குடையாக விரிந்து கொண்டே இருக்கும்.
சில கசக்கும் உணர்வுகளும் கூட இருக்கலாம். இன்று நாம் படித்த பள்ளி இருக்கும் நிலைமை. அதில் பயிலும் மாணவர்களின் நிலை. அம்மாணவர்களின் தேவைகள், இப்படி பலவற்றையும் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே இருப்போம். என்றோ அப்பள்ளியில் படித்தோம். இன்று இப்போது அப்பள்ளியை கடந்து செல்கிறோம். இன்று வரை நாம் படித்த பள்ளியை பார்க்கக் கூட முடியவில்லை. இப்படி சிலருக்கு இருக்கலாம். அது தனி.
பள்ளி மேலாண்மைக் குழுவில் எப்படி பங்கேற்பது?
எங்கு படித்தோமோ, அங்கேயே வாழ்கிறோம். தினமும் பள்ளியை கடந்து செல்கிறோம். தினமும் பள்ளியின் செயல்பாடுகளையும், படிக்கும் மாணவர்களையும் கடந்து செல்கிறோம். கண் முன்னே காண்கிறோம் . கடந்து போகிறோம் . அந்த மாணவர்கள் முன்னேற்றத்திற்கும் பள்ளியின் முன்னேற்றத்திற்கும் நம்மால் ஏதாவது செய்ய முடியாதா என்று ஆதங்கப்பட்டு இருக்கலாம்.
“முன்னாள் மாணவர்கள்” என்ற அந்தஸ்தில், பள்ளி மேலாண்மை குழுவில் பங்கேற்க அரிய வாய்ப்பை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியிருக்கிறது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயன்படுத்திக் கொண்டு, பள்ளி மேலாண்மை குழுவில் பங்கு பெற்றால், நாம் படித்த பள்ளியும் நம் பள்ளியில் இப்போது படித்து வரும் மாணவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்குள் உருவான கனவுகளுக்கு வடிவம் கொடுக்கலாம்.
நமக்கு கல்வி கண் கொடுத்த நம் பள்ளி என்னும் கோவிலை சுத்தம் செய்யவும், உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், அலங்கரிக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், கோயிலைப் ( பள்ளியை) பயன்படுத்த வருவோரின் கொண்டாட்டங்களை கூட்டவும், நம்மால் இயன்ற பணிகளை செய்ய முடியும். அதற்குத் தான் முன்னாள் மாணவர்களை பள்ளிக் கல்வித் துறை இணைத்துள்ளது.
ஒரு முன்னாள் மாணவர் அல்லது ஒருசில முன்னாள் மாணவர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவில் செய்யும் பணி, எடுத்துக் கொடுக்கும் யுக்திகள், திட்டமிடுதலில் காட்டும் ஈடுபாடு, தனித்துவமானது. அந்த தனித்துவத்தை நீங்கள் காண்பிக்க, பள்ளி மேலாண்மை குழுவில் இணைதல் ஓர் அரிய வாய்ப்பு .
பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டுமான தேதிகள்
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 50 விழுக்காடு தொடக்கப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டுமான கூட்டங்கள் 10/8/2024 ஆம் தேதி அன்றும், மீதம் இருக்கும் 50 விழுக்காடு பள்ளிகளின் மறு கட்டுமான நாள் 17/8/2024 அன்றும் நடைபெற உள்ளது. நடுநிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டுமானம் 31/8/2024 அன்றும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 24/8/2024 அன்றும் நடைபெற உள்ளது.
நீங்கள் படித்த பள்ளிக்கு உடனே சென்று உங்களை தலைமை ஆசிரியரிடம் அறிமுகம் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே பள்ளியோடு தொடர்பில் இருந்தால் மிகவும் நல்லது. பள்ளி மேலாண்மைக் குழுவில் இணைய என்னென்ன விதிமுறைகள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் படித்த பள்ளியின் மீது, நீங்கள் கொண்டுள்ள அக்கறை, உங்கள் பள்ளி வளர்ச்சியின் மீது உங்களுக்குள்ள ஒரு கனவு நனவாக்க பெற நீங்கள் பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே அது சாத்தியம். பள்ளி மேலாண்மை குழு வழியாக உங்கள் பள்ளிக்கு பங்களிப்பு செய்ய முடியும். இது ஓர் அரிய வாய்ப்பு. இதனைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கட்டுரையாளர் குறிப்புgovt bus time will protect tribal studies
நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசுப் பேருந்தின் நேர மாற்றம்… பழங்குடிகள் படிப்பை பாதுகாக்குமா அரசு?
டாப் 10 நியூஸ்: நீதிபதிகள் பதவியேற்பு முதல் நீட் வழக்கு விசாரணை வரை!
பியூட்டி டிப்ஸ்: பளபளக்கும் முகத்துக்கு ஹோம்மேட் க்ளென்ஸர் இதோ!
கிச்சன் கீர்த்தனா : மைசூர் ரசம்
ஆடியவே தள்ளுபடி பண்ணியாச்சி : அப்டேட் குமாரு