அமாவாசையும் பௌர்ணமியும் யார் யாருக்கு உகந்தது?

சிறப்புக் கட்டுரை

சத்குரு

ஒவ்வொரு நாளும் நீங்கள் பௌர்ணமியின் குளிர்ச்சியாகவே இருக்கமுடியாது என்பதில்லை. இருக்க முடியும். சூரியன் மீதும் சந்திரன் மீதும் உங்களுக்கு ஆளுமை இருக்குமானால், கடுமையான சூரிய ஒளியிலும், நீங்கள் பௌர்ணமியின் குளிர்ச்சி போன்று இருக்க முடியும்.

இது சாத்தியமானதே. நீங்கள் சில குறிப்பிட்ட கிரியைகளைச் செய்து வந்தால், சூரியவெப்பத்திலும் குளுமையை உணர முடியும். இத்தகைய ஆளுமையும் கட்டுப்பாடும் உங்களுக்குக் கைவருமானால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பௌர்ணமியின் குளிர்ச்சியை அனுபவிக்க முடியும், ஒவ்வொரு நாளும் பௌர்ணமியாக இருக்க நீங்கள் முடிவெடுக்க முடியும்.

அல்லது நீங்கள் ஒவ்வொரு நாளும் அமாவாசையாக இருக்கவும் தேர்ந்தெடுக்கலாம். அல்லது எதையும் தேர்ந்தெடுக்காமலும் இருக்கலாம். இயற்கையாக எது நிகழ்ந்தாலும் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் அப்படியே அனுபவிக்கலாம்.

பௌர்ணமி என்பதை ஒரு ஆற்றல்மிக்க இருப்பு (presence) என்றும், அமாவாசை என்பதை இருப்பின்மை (absence) என்றும் கூறலாம். தர்க்கரீதியாக சிந்திக்கும் மனம், ‘இருப்பதை’ சக்தி மிக்கது என்றும் ‘இல்லாத நிலையை’ ஒன்றுமில்லை என்றும் நினைக்கலாம்.

ஆனால் இது அப்படி அல்ல. எப்படி ஒளி என்பதற்கு ஒரு சக்தி இருக்கிறதோ அதே போல் ஒளியின்மை அல்லது இருள் என்பதற்கும் தனி சக்தி உண்டு. உண்மையில் இருட்டுக்கு ஒளியை விட அதிக சக்தி உண்டு.

அப்படித்தானே? இரவு என்பது பகல் என்பதைவிட சக்தி மிக்கது, ஏனென்றால் இருட்டு என்பது ஒளியற்ற நிலை. இருட்டு இருக்கிறது என்று சொல்வது தவறாகும். ஒளி இல்லை அவ்வளவுதான். அதாவது ‘இருக்கும்’ நிலையைவிட ‘இல்லாத’ அந்த நிலை மிகவும் சக்தி வாய்ந்தது. அப்படி இங்கும் நடக்கலாம்.

கௌதம புத்தர் தன் உடலுடன் இருக்கும்போது செய்ததை விட உடலை நீத்த பிறகு பல மடங்கு செய்ய முடிந்தது. ஆகவேதான் உடலைத் துறத்தல் என்பது மகாசமாதி என்றும் மகாபரிநிர்வாணா என்றும் சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம், இல்லாமை என்பது இருப்பது என்பதை விடப் பெரியது. நீங்கள் உங்கள் உடலைத் துறக்கும்போது, உங்கள் இருப்பு அற்புதமானதாக ஆகிறது. உங்கள் விழிப்புணர்விலும் கூட, நீங்கள் தியானநிலைக்கு சென்றுவிட்டீர்கள் என்னும்போது, உங்கள் இருப்பு இல்லாமல் போய்விடுகிறது. அப்படி நீங்கள் இல்லாமல் ஆகும்போது உங்கள் இருப்பு அபாரமானதாக இருக்கும்.

உங்கள் இருப்பைக் காட்ட நீங்கள் முயற்சிக்கும்போது, உங்கள் இருத்தலே நடைபெறாது. ஒரு ஆளுமைக்கு இருத்தல் என்பதே கிடையாது. ஆனால் நீங்கள் இல்லாமல் போகும்போது, உங்கள் இருப்பு அபாரமானதாக இருக்கும். அமாவாசையும் அதே போன்றதுதான். படிப்படியாக சந்திரன் மறைந்தது. அப்போது அந்த இல்லாமை என்பது ஒரு குறிப்பிட்ட சக்தியை உருவாக்கியது. ஆகையால்தான் அமாவாசை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கடுமையாக உழைப்பவனாகவும், முரட்டுத்தனமாகவும் கோபாவேசமாகவும் இருக்கும் ஒரு மனிதனுக்கு அமாவாசை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். அமைதியாகவும் மென்மையாகவும் இருக்கும் மனிதனுக்கு பௌர்ணமி என்பது முக்கிய அம்சமாகும். இரண்டிற்கும் தனித்தனியே சக்தி உண்டு.

குணங்கள் என்று பார்த்தால், பௌர்ணமிக்கு அன்பு என்றால் அமாவாசைக்கு முரட்டுத்தனம் எனலாம். நாம் இரண்டையும் பயன்படுத்தலாம். இரண்டும் சக்தியை உடையது. அமாவாசையில் நாம் செய்யும் செயல்முறைகளும் பௌர்ணமியில் நாம் செய்யும் செயல்முறைகளும் மிகவும் வெவ்வேறானது.

தன்னுடைய ஞானோதயத்திற்கு கௌதமர் பௌர்ணமியைத் தேர்ந்தெடுத்தார். ஆன்மீகப் பாதையில் நடக்க முயற்சி செய்யும் ஒவ்வொரு மனிதனுக்கும் பௌர்ணமி ஒரு முக்கியமான நாள்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நிகழ்வு ஒன்று நடந்தது. அதன் பிறகு இந்த உலகம் முழுவதும் மாறி விட்டது. அமைதியான வழியில் கௌதமர் இந்த உலகத்தை முற்றிலும் மாற்றினார். மனிதனின் ஆன்மீக தேடுதலில் அவர் ஒரு மாறுபட்ட தரத்தைக் கொடுத்தார்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அந்த மனிதரின் அவதரிப்பு ஆன்மீகம் குறித்து தேடுவோர்களிடம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொடுத்தது. ஆன்மீகப் பாதையில் செல்ல நினைக்கும் எந்த ஒரு மனிதனும் கௌதமரை ஒதுக்க முடியாது.

கௌதமர் பௌர்ணமி அன்று ஞானம் பெற்றார். முயற்சியற்ற எளிதான பாதையில் செல்ல பௌர்ணமிதான் சிறந்த நாள். சம்யமா (ஒரு வகை தியானப் பயிற்சி) என்னும் பயிற்சியைச் செய்வதற்கு பௌர்ணமி மிகவும் உகந்தது. ஆனால், கடினமான சாதனா எனப்படும் மந்திரம், ஜபம் போன்றவற்றைச் செய்வதற்கு அமாவாசையே சிறந்த நாள்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

டிவி, வீடியோ கேம்ஸுக்கு குழந்தைகள் அடிமையாகாமல் இருக்க வேண்டுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *