தேசப்பற்று, தீவிரவாதி: ‘அமரன்’ பேசும் அரசியல்!

சினிமா சிறப்புக் கட்டுரை

அ. குமரேசன்

சமூகம், வரலாறு, அரசியல் சார்ந்த நாவல்கள், ஆய்வுத் தொகுப்புகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களில், விவரிக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் பற்றி விமர்சிக்கப்படுவது போலவே, அவற்றில் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் நிலவரங்கள் குறித்த விமர்சனங்களும் எழுகின்றன.  படைப்புரிமைக்குச் சமமானதுதான் விமர்சன உரிமை. ஆகவே அத்தகைய விமர்சனங்கள் வருவதைத் தடுத்துவிட முடியாது.

சொல்லப்படுவது என்ன  என்பதில் வெளிப்படையாக உள்ள அரசியல் போலவே, சொல்லாமல் விடப்படுவது எது என்பதிலும் நுட்பமான அரசியல் இருக்கிறது. ஆயினும், என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா, உண்மையைத் திரித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விமர்சிப்பதே  எனது அணுகுமுறை.

அமர அரசியல்

தற்போது திரையரங்குகளுக்கு வந்து பெரிய அளவுக்குக் கவனம் பெற்றுள்ள ‘அமரன்’ திரைப்படம் பற்றிய விமர்சனங்களைப் பார்க்கிறபோது, தமிழ் சினிமா சித்தரித்து வந்திருக்கிற, தேச பக்தர்கள், தீவிரவாதிகள் பற்றிய அரசியல் பற்றிய சிந்தனை விரிகிறது.

உண்மையாக வாழ்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘அமரன்’ படத்தைப் பற்றி வந்த எதிர் விமர்சனங்களில், அவரது சாதி அடையாளத்தை மறைத்தது ஏன் என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினார்கள்.

தமிழ் சினிமா எப்போதுமே அந்தச் சாதியினரைக் கதாநாயகர்களாகச் சித்தரிப்பதைப் புறக்கணித்து வந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு நாளேட்டில் அது ஒரு கட்டுரையாகவே வந்தது. கட்டுரையாளரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்தான். இப்படி எல்லாப் பிரச்சினைகளிலும் எல்லாத் தரப்பினரின் கருத்துச் சுதந்திரமும் மதிக்கப்படுமானால் ஆரோக்கியமாக இருக்கும்.

படத்தின்  வெற்றிக் கூட்டத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி இந்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரே அதை விரும்பவில்லை, தமிழர் என்றும் இந்தியர் என்றும் அடையாளப்படுத்துவதைத்தான் முகுந்த்தே விரும்பினார் என்று பெற்றோர் தெரிவித்தார்கள் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

இதற்கு முன் ‘சூரரைப் போற்று’ படம் வந்த நேரத்திலும், எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயண அனுபவம் கிடைக்கச் செய்தவரது வாழ்க்கையின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் அவரது சாதி அடையாளம் மறைக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களிலுமே, நாயகர்கள் வேறு ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவும் காட்டப்படவில்லை என்பதை இந்த விமர்சகர்கள் மறைத்துவிட்டார்கள்.

நாட்டிற்குப் பங்களிக்கிற நாயகர்களை எந்தவொரு சாதி வில்லையையும் மாட்டாமல் சித்தரிப்பதையே தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள். அந்த நல்லிணக்க மாண்பிற்கு ‘அமரன்’ படம் உண்மையாக இருக்கிறது என்றால் அது பாராட்டத்தக்கதுதான்.

அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை நாயகப் பாத்திரங்களாக வைத்த படங்கள் வந்திருக்கின்றன. எனது நினைவு சரியாக இருக்குமானால், ‘வியட்நாம் வீடு’, ‘கௌரவம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ரோஜா’, ‘அந்நியன்’ உள்ளிட்ட அத்தகைய பல படங்கள் வந்து வெற்றியும் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சாதியினர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்த மக்களும் ஆதரித்ததால்தான் அந்தப் படங்கள் வெற்றி பெற்றன என்று சொல்லத் தேவையில்லை.

 வீரமும் தியாகமும்

மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினருடைய விருப்பத்திற்கும், தமிழக மக்களுடைய நல்லிணக்க வரலாற்றுக்கும் உண்மையாக இருந்தது போல், காஷ்மீர் மக்களுக்கும் ‘அமரன்’ உண்மையாக இருக்க வேண்டாமா? இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் வழக்குரைஞரும் எழுத்தாளருமான மு. ஆனந்தன்.

“அமரன் திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம் துயரமானது. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவரது மரணம் மட்டுமல்ல ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகமும் போற்றுதலுக்குரியது” என்று அந்த விமர்சனம் முகுந்த் வரதாராஜன்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதிலிருந்தே தொடங்குகிறது.

“ஆனால், ராணுவ வீரர்களின் மரணத்தை வைத்து தேச வெறியைக் கிளப்பி  இழிவான அரசியல் செய்யப்படுவது போன்றுதான் இந்தப் படமும் செய்திருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு செல்வது போலவும் அழச் செய்வது போலவும் முகுந்த்தின் மரணத்திற்குப் பிறகான காட்சிகளைத் திட்டமிட்டு அமைத்துள்ளார்கள். அந்த மரணத்தை வைத்து சினிமாவை மார்க்கெட்டிங் செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது,” என்கிறார் ஆனந்தன். இத்தகைய விமர்சனங்கள் சரிதானா என்று உரசிப் பார்ப்பதற்காகவேனும் படத்தைப் பார்த்தாக வேண்டும்.

திரைக்கதையைப் பாதுகாப்புத் துறை, முகுந்த்தின் பெற்றோர், அவரது ராணுவ நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பிலும் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகுதான் படம் தயாரிக்கப்பட்டது என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மூத்த நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால், ராணுவத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப்வாணி தரப்பிலோ, காஷ்மீர் மக்கள் தரப்பிலோ கருத்துக் கேட்கப்படவில்லை. குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது மக்கள் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து எதிர்ப்பதாகக் காட்டப்படுகிறது.

அப்படிக் கல் வீசப்பட்டது உண்மைதான் என்றாலும், குற்றவாளிக்காகக் கல் வீசியவர்கள் குறைவு. பொதுவாகக் கடந்த காலத்தில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அந்த மக்கள் கல் வீசுவதை 2008ல் ஒரு போராட்ட வடிவமாகக் கையில் எடுத்தார்கள் என்று விமர்சகர் குறிப்பிடுகிறார்.

ஒரு முகுந்த் மக்களுக்கு உதவிய நல்லவராக இருந்திருக்கலாம், ஆனால், நடவடிக்கைக்காக அங்கே சென்றவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் கிடையாது. விசாரணைக்காகச் சிறுவர்களையும் தூக்கிச் சென்றது, பாலியல் வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள் போன்ற வன்முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து அரசியலாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதன் வலியைத் தாங்க இயலாதவர்களாகவும்  தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்த மக்கள் கற்களைக் கையில் எடுத்தார்கள் என்றும் விமர்சகர் சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்திருக்கிறார்.

 புதிய தணிக்கை

இப்படிப்பட்ட ராணுவ வன்கொடுமைகள் தொடர்பாக உலக பொதுமன்னிப்பு நிறுவனத்தின் அறிக்கை உட்பட பல ஆவணங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆயினும் அம்மாதிரியான தகவல்களை வைத்துக்கொண்டு எளிதாகப் படம் எடுத்துவிட முடியாது. இதைப் பற்றிக் கூறுகிற ஆனந்தன், ஒன்றிய ஆட்சிக்கு மோடி தலைமையில் பாஜக வந்த பிறகு, ராணுவம் தொடர்பான படங்களுக்குத் தணிக்கை வாரியத்தின் அனுமதி மட்டும் போதாது, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியும் வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2022 பிப்ரவரி 11 அன்று, பெரொஸ் வருண் காந்தி கேட்டிருந்த ஒரு கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் அளித்த பதிலில், “பாதுகாப்பு தொடர்பான உள்ளடக்கங்களுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்குவதில் உள்ள அடிப்படைக் கோட்பாடு என்னவெனில், ஆயுதப் படையினருக்கோ அரசாங்கத்திற்கோ நாட்டிற்கோ மரியாதைக் குறைவு ஏற்படுத்தப்படாமல் இருப்பதையும், தகவல்கள் உண்மையாக இருப்பதையும், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  வகையில் ரகசியத் தகவல்கள் பொதுவெளிக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதுதான்,” என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இந்தப் பதில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கட்டுப்பாடுகள் சரி  என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விமர்சனப்பூர்வமாகவும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் மக்களின் துயரங்கள் பற்றியும் படமெடுக்க முனைவோருக்கு இந்த ஆணை தகர்க்க முடியாத முட்டுச் சுவராக இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை தொடர்பான திரைப்படங்களுக்கும் என்ஓசி கெடுபிடி கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும்? காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைக் காட்டிய ‘விசாரணை’, ‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் திரைக்கு வந்திருக்க முடியுமா? மக்களுக்கும் படைப்புக்கும் உண்மையாக இருக்க விரும்பும் படைப்பாளிகள் இப்படிப்பட்ட ஆணைகளுக்கு உடன்பட்டுப் போவதை விட, திரையரங்கில் பாப்கார்ன் விற்றாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று போய்விடுவார்கள்.

தேசப்பற்று

ராணுவ வீரர், காவல் அதிகாரி போன்ற தனி மனிதர்களின் வீரம், தியாகம் ஆகியவற்றின் மீது மரியாதையை ஏற்படுத்துகிற கலையாக்கங்கள் வரவேற்கத்தக்கவை.  ஆனால், அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் சந்தை விற்பனைச் சரக்காக்குவது தடையின்றி நடந்து வந்திருக்கிறது.

அத்துடன், முன்னுக்கு வருகிற சமூகப் பிரச்சினைகளையும் கூட விற்பனைப் பொருளாக்குகிற வேலையையும் சினிமாவினர் எப்போதுமே செய்துவந்திருக்கிறார்கள். மாற்றத்திற்கான உண்மை அக்கறையுடன் அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் படமாக்கங்கள் அரிதாகவே வருகின்றன.

அதிலும், (உண்மைக் கதையோ கற்பனைக் கதையோ  எதுவானாலும்) படத்தின் நாயகப் பாத்திரம் ராணுவ வீரன் அல்லது காவல்துறை அதிகாரி, எதிர்நிலைப் பாத்திரம் தீவிரவாதி என்றால் முழுக்க முழுக்க அவனை ஈவிரக்கமற்ற ஒரு சதிகாரன் போலவே காட்டுவதை முந்தைய முன்னணி  நட்சத்திரங்கள் நடித்த படங்களும் செய்து வந்திருக்கின்றன.

அவன் தரப்பு நியாயம் எதுவும் பெயரளவும் பேசப்படுவதில்லை. எந்தப் பின்னணியில் அவன் தீவிரவாதிகளின் பக்கம் இணைந்தான் என்பதும் விளக்கப்படுவதில்லை. ஒருவேளை நாயகப் பாத்திரமே தீவிரவாதி என்றால் இவை சொல்லப்படலாம். ஆனால், அப்படியொரு நாயகப் பாத்திரத்துடன் படம் பண்ணுவதற்கு யார் துணிவார்?

எந்தவொரு குற்றச் செயல் தொடர்பாகவும் கைது செய்யப்படுகிறவர்களை, அவர்கள் குற்றவாளிகள்  என்று அரசாங்கம்  சொல்லிவிட்டது என்பதற்காக நீதிமன்றம் ஏற்பதில்லை. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பையும் கேட்டுவிட்டுத்தான் தீர்ப்புக்குப் போகிறது, போக வேண்டும். (நீதிக் கோட்பாட்டின்படி சொல்கிறேன். பணபலமோ அதிகாரத் தொடர்போ ஆள்வலிமையோ இல்லாத அப்பாவிகள் பலர் தங்கள் தரப்பை வலுவாக முன்வைக்க முடியாமல் குற்றவாளிகளாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது தனிக்கதை.)

ஆனால், நம்மூர் சினிமாக்கள், எதிர்க் கதாபாத்திரங்களுக்குத்  தீவிரவாதி அங்கியை மாட்டிவிட்டால் அவர்கள் தரப்பிலோ, போராடும் மக்கள் தரப்பிலோ நியாயம் இருப்பதாக ஒப்புக்குக்கூட காட்டுவதில்லை. அவர்கள் தேசத்தின் எதிரிகளாகவே, அடக்குமுறைக்கு உரியவர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். நியாயங்கள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்றாவது சொல்ல வேண்டும், அந்தக் குறைந்தபட்ச நடுநிலை கூட கடைப்பிடிக்கப்படுவதில்லை.

குழந்தைகளின் ஓவியத்தில்

இந்தப் பாரம்பரியம் விசுவாசமாகப் பின்பற்றப்படுவதன் விளைவு என்ன? உண்மை நிகழ்வு ஒன்றை சாட்சிக்கு அழைக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன், சென்னை லயோலா கல்லூரியின் ஊடகக் கலைத்துறை மாணவர்களுக்கு இதழியல் தொடர்பாகப் பயிற்சியளிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஒருநாள் மாணவர்கள்  ஒரு பெரிய பையில் வைத்திருந்த ஓவியத் தாள்களை எடுத்து மேசையில் வைத்தார்கள். சென்னையின் சில அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் சேர்ந்த 100 குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அவை.

அந்த ஓவியங்கள் அனைத்திலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, தாடி வைத்திருந்த, மீசை இல்லாத, குல்லா அணிந்த, நீண்ட கறுப்பு அங்கியுடன் கையில் துப்பாக்கி பிடித்திருந்த உருவம் வரையப்பட்டிருந்தது. “தீவிரவாதியின் படம் வரைக” என்று கேட்கப்பட்டபோது அத்தனை பேரும் இவ்வாறு வரைந்திருக்கிறார்கள் என்று மாணவர்கள் தெரிவித்தார்கள். அந்த உருவம் யாரைப் பிரதிபலிக்கிறது என்று எவரும் புரிந்துகொள்ளலாம். அந்த 100 குழந்தைகளில் ஒரு சிறுபான்மை சமயம் சார்ந்த குடும்பங்களின் பிள்ளைகளும் இருந்தார்கள். இப்படியொரு பிம்பத்தை அவர்களின் மனங்களில் பதிய வைத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கிருப்பதை மறுக்க முடியுமா?

தேசப்பற்று என்றால் அது ராணுவ வீரர் அல்லது காவல்துறை அதிகாரியின் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை யார் செய்தது? பருவநிலை சவால்களை எதிர்கொண்டு வயலில் இறங்கும் வேளாண் பணியில், போராடுகிற வேறு தொழிலாளர்களுக்காகத் தமது ஒரு நாள் ஊதியத்தை இழந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தோழமைப் பணியில், மயக்கும் மதவெறிப் பிரச்சாரங்களைப் புறக்கணித்து ஒற்றுமையைப் பேணும் நல்லிணக்கப் பணியில், சாதி ஆணவத்துக்கு எதிராகத் தோள் சேரும் சமூகநீதிப் பணியில், மாணவர்களுக்காகப் பொழுதை அர்ப்பணிக்கும் ஆசிரியப் பணியில்,

தொற்று வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் நோயாளிகளைத் தொட்டுத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் செவிலியப் பணியில், தாக்குதல்களுக்கு அஞ்சாமல் உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகப் பணியில், கடும் மழையிலும் மின்சாரம் கிடைக்கச் செய்யும் மின் பணியில், வெள்ளச் சாலையிலும் பேருந்தை இயக்கும் போக்குவரத்துப் பணியில், பேச்சும் இணையமும் துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் தொலைத்தொடர்புப் பணியில், பில் போட வேண்டாமென்றால் வரி தள்ளுபடி என்று சொல்வதைத் தள்ளிவிட்டு பில் போட்டே பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர் பணியில்…. இன்னும் நாட்டின் ரத்த ஓட்டமாக இருக்கும் அத்தனை பணிகளிலும் துடிப்பது தேசப்பற்றுதான்.

ராணுவ வீரர்களோடும் காவல்துறையினரோடும் நில்லாமல் இப்படிப்பட்ட பணிகளையும் பாருங்கள் சினிமாவினரே, வெற்றிப் படங்களுக்கான அருமையான கதைகள் கிடைக்கும்.

இல்லையேல், மனித உரிமை முழக்கங்கள் படப்பிடிப்புக் கூடங்களிலும் உரக்க ஒலிப்பதை நாடு கேட்கிற நாள் வரத்தான் செய்யும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புத்தக வெளியீடு: விஜய்யுடன் கூட்டணியா? – திருமா விளக்கம்!

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் டூ அமெரிக்க அதிபர்… யார் இந்த டிரம்ப்?

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *