ஜி.குப்புசாமி
மின்னம்பலத்தில் இளையராஜா குறித்துக் கட்டுரை எழுதிய ஜி.குப்புசாமி அந்தக் கட்டுரையின் நிமித்தமாக இளையராஜாவைச் சந்தித்த அனுபவத்தின் பதிவு
ஜூன் 1, 2018 அன்று அலுவலகத்தில் மிகவும் அடக்க முடியாத கோபத்தில் இருந்தேன். அதற்கு முன்தினம் அலுவலகக் கூட்டத்தில் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தவர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. என் பொறுமையை அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று புரிந்து, மிகக் கடுமையாக வெடித்துத் தீர்த்தேன். அடுத்த நாள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருந்தேன். நான் வாய்ச்சொல் வீரன் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். எல்லோரும் அடுத்த நாள் வந்துவிட்டார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினை. “அக்கவுண்ட் டேலி ஆகலை சார்.”
அவர்களைக் கன்னாபின்னாவென்று கத்தித் தீர்த்துவிட்டு ஒவ்வொருவராகத் தமது கணக்குகளை எடுத்துவரச் சொன்னேன். சில கணக்குகளில் எளிமையான தவறுகள். பல கணக்குகள் பிரம்மனுக்கே தலையைச் சுற்றவைக்கும்படியான குழப்பங்கள். அவற்றில் ஆழ்ந்திருந்தபோது, நண்பர் அரவிந்தனிடமிருந்து கைபேசியில் அழைப்பு. அவர் அப்போது மின்னம்பலம் இணைய இதழின் ஆசிரியராக இருந்தார். சுற்றி வளைக்காமல் எப்போதும்போல நேரடியாக வெடிகுண்டை வீசினார்: “ஜீக்கே, உங்க தெய்வத்துக்கு நாளைக்கு 74ஆவது பிறந்தநாள் தெரியுமில்லையா? அதனால் உடனே ஒரு கட்டுரை எழுதி, மூணு மணிக்குள்ள எனக்கு அனுப்புறீங்க.”
நான் அதிர்ந்து, “இப்போ நான் ஆஃபீஸ்ல இருக்கேன் . . . வேலை அதிகமா இருக்கு இப்போ முடியாது திங்கட்கிழமை அனுப்புகிறேன் . . .” என் எந்த சமாதானத்தையும் அரவிந்தன் காதுகொடுத்தே கேட்கவில்லை. “இளையராஜாவைப் பற்றி எழுத உங்களுக்கு நாள் நட்சத்திரம் வேணுமா? அப்படியே சரசரன்னு உங்க பி.ஏ. கிட்ட டிக்டேட் செய்து அனுப்பிடுங்க,” என்றவரிடம், எனக்கு பி.ஏ., செகரெட்டரியெல்லாம் கிடையாது என்று சொல்வதைக் கேட்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார். பத்து நிமிடங்கள் கழித்து மனதை உருக்கும்படி ஒரு மெசேஜும் அனுப்பினார். உங்களைவிட ராஜாவைப் பற்றி யாரால எழுத முடியும்? நான் யார்கிட்ட கேட்பேன்? சிரமம் பார்க்காமல், எனக்காக, உங்கள் இதய தெய்வம் ராஜாவுக்காக . . . இத்யாதி.
அடுத்த நான்கு மணிநேரங்களை என்னால் மீண்டும் வாழ முடியுமா என்று தெரியவில்லை. அலுவலக அறிக்கைகளின் அழுத்தம், கணக்குகளின் குழப்பம் . . . அந்தக் கணக்குகளில் உள்ள தவறுகளைக் களைந்துகொண்டே இடைப்பட்ட நேரத்தில் என்ன எழுதுவது என்று வெற்றாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணக்கில் காசாக்கப் படாத வங்கிக் காசோலைகளின் மதிப்பைக் கூட்டிக்கொண்டிருந்தபோது, மனதின் ஓரத்தில் ஒரு வரி பளிச்சிட்டது. உடனே உடம்பெங்கும் மின்சாரம் பாய, அந்தக் கணக்கை நேர்செய்துவிட்டு, மேசை இழுப்பறையிலிருந்து ஒரு காகிதத்தை உருவினேன். உன்மத்தம் பிடித்ததைப்போல என் வசமில்லாமல் கை எழுதத் தொடங்கியது.
இன்னொரு பணியாளர் தன்னுடைய தப்புக்கணக்கோடு என் முன்னால் நிற்கிறார். அதை வாங்கிப் பார்க்கும்போதே அவர் செய்த பிழை கண்ணில் தெரிகிறது. அதைச் சரிசெய்து அனுப்பிவிட்டதும், என் கை மீண்டும் படுவேகமாக எழுதத் தொடங்குகிறது.
அடுத்தவர் வந்து நிற்கிறார். இந்தக் கணக்கு மகா குழப்பமாக இருக்கிறது. அதை மொத்தமாக அடித்துவிட்டு, நானே அந்த வரவு செலவுப் பட்டியலைப் பிரித்து எழுதுகிறேன். பன்னிரெண்டு மாதங்களுக்கும் வங்கிக் கணக்கோடு ஒத்திசைவிக்கிறேன். அவர் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துவிட்டு அறையை விட்டுப் போவதற்குள் என் கை அந்தக் காகிதத்தில் இரண்டு வரிகளை எழுதிவிட்டிருக்கிறது.
தொடர்ந்து கணக்குச் சிக்கல்களோடு வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவற்றை பிழைநீக்கித் தந்துகொண்டே எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.
அலுவலக உதவியாளர் மெதுவாக எட்டிப் பார்த்து “சாப்பிடலிங்களா?” என்று கேட்கிறார். மணி 2.30. அலுவலகம் காலியாக இருக்கிறது. சாப்பிடச் சென்றவர்கள் திரும்பும்போது கை கட்டுரையை எழுதி முடித்துவிட்டிருந்தது.
**
நான்கு மணிக்கு அரவிந்தன் அழைக்கிறார். “ஏங்க, கவிஞர்கள்தான் பொய் சொல்வாங்கன்னு நெனச்சிட்டிருந்தேன். மொழிபெயர்ப்பாளர்கள்கூட இவ்வளவு அபாண்டமா பொய் சொல்வாங்கன்னு நினைக்கல” என்றார். “ஏற்கெனவே எழுதிவெச்சிருந்த கட்டுரையை இப்போதான் எழுதினதா சொல்றீங்க. அதுவும் ஆஃபீஸ்ல உட்கார்ந்து எழுதி அனுப்பியதா சொல்றீங்க . . . . சரி சரி . . . நடத்துங்க. கட்டுரை ரொம்ப நல்லா வந்திருக்கு. தேங்க்ஸ்” என்றார். உண்மையைச் சொன்னால் அவர் கேட்பதாக இல்லை.
**
அவ்வளவு அவசரமாகக் கேட்ட கட்டுரை ஜூன் மூன்றாம் தேதிதான் (ராஜாவின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள்) மின்னம்பலத்தில் வெளியானது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அலுவலக சகா ஒருவரின் பணி ஓய்வு விழாவில் இருந்தேன். தொலைபேசி அழைத்தது:
“வணக்கம் சார். உங்க இளையராஜா கட்டுரை படிச்சேன்.”
“அப்படிங்களா? நன்றி. சொல்லுங்க. உங்க பேரு?”
“முருகன். புதுக்கோட்டைங்க.”
“சொல்லுங்க.”
“. . . ”
“முருகன், சொல்லுங்க . . .”
“. . . ” (விசும்பல் ஒலி)
“முருகன் . . . என்ன ஆச்சு? சொல்லுங்க . . .”
“சார்… உங்க கட்டுரைல எழுதியிருந்தீங்களே . . .”
“ம் . . .”
“அது நாந்தாங்க.”
“அப்படிங்களா? சொல்லுங்க.”
அதன் பிறகு அவர் திணறித்திணறிச் சொன்னதன் தொகுப்பு:
“எனக்கு ரெண்டு வயசாகி இருந்தப்போ அப்பா போயிட்டாருங்க. நாலரை வயசில அம்மா வேலைக்கு போயிருந்தப்போ ஆக்ஸிடென்ட்ல போயிட்டாங்க அத்தை, பெரியப்பா, தாத்தா வீடுன்னு நாலஞ்சு வீட்ல வளர்ந்தேங்க. எந்த வீட்லயும் அவங்களோட சேர்ந்து என்னை படுக்க வைக்க மாட்டாங்க. தனியாத்தான் படுப்பேன். ஸ்டோர் ரூம், திண்ணை, சமையல் ரூம், மொட்டை மாடி . . . அம்மாப்பா இல்லாத பசங்க தனியா படுத்து தூங்கறதைப் பத்தி யோசிச்சுப் பாருங்க . . .
“ஆனா நான் தனியாவே இருந்ததில்லீங்க. டிரான்சிஸ்டர் ஒண்ணு வச்சிருப்பேங்க. ராஜா என்னைத் தனியா இருக்க விட்டதேயில்லீங்க. சிலோன் ரேடியோல ராஜா சார் எனக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் தூங்கவெப்பாருங்க. நான் அழுதா உடனே அவருக்கு எப்படியோ தெரிஞ்சிடும். உடனே எனக்கு பொருத்தமா ஆறுதலா ஏதோவொரு பாட்டைத் தருவாருங்க. மடியில போட்டு கண்ணைத் தொடச்சிவிடுவார்னு எழுதியிருந்தீங்களே . . . அது எனக்குத்தாங்க. அவருதான் என்னைக் கைவிடாம தூக்கி நிறுத்தியிருக்காருங்க.”
அவர் பேசி முடித்து, கைபேசியை அணைத்த பின்பும், நின்றிருந்த இடத்திலிருந்து என்னால் வெகுநேரத்துக்கு அசைய முடியவில்லை.
**

அடுத்த வெள்ளிக்கிழமை குங்குமம் இதழில் பணிபுரியும் நண்பர் நா. கதிர்வேலன் அழைத்துக் கட்டுரை குறித்துச் சிலாகித்தார். ராஜாவை அவர் குங்குமம் இதழுக்காகப் பேட்டி எடுத்திருப்பதாகவும், அந்த இதழை அவரிடம் காட்டுவதற்காக ராஜாவை சந்திக்கச் சென்றுகொண்டிருப்பதாகவும் சொன்னார். உங்க மின்னம்பலம் கட்டுரையைப் பற்றி அவரிடம் சொல்லப்போகிறேன் என்றார். ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் அவரிடமிருந்து அவசர அழைப்பு. “ரெண்டு வருஷங்களுக்கு முன்னால தமிழ் இந்து தீபாவளி மலர்ல ராஜாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தீங்களே, அதை உடனே அனுப்புங்க” என்றார். எதற்கு என்று கேட்டதற்கு “உடனே அனுப்புங்க, சொல்றேன்” என்றார். ஏதோ புரிகிற மாதிரி இருந்தது. ஆனாலும் வீணாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ என்றும் தோன்றியது. மிக மெதுவாகக் கழிந்த அரை மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் கதிர் அழைத்தார். உணர்ச்சிவசப்படாத ஒரு சகஜமான தொனியில், “ஜீக்கே, உங்க கட்டுரைகளை ராஜா படிச்சார். உங்களப் பத்தி கேட்டார். சொன்னேன். வர்ற ஞாயித்துக்கிழமை நீங்க ஃப்ரீயா இருந்தா காலைல பதினோரு மணிக்கு பிரசாத் ஸ்டூடியோவில அவரை வந்து சந்திக்க முடியுமான்னு கேட்டார். வர்ரீங்களா?” என்றார்.
அவர் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில் கதவை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்ததால் கீழே விழாமல் தப்பித்தேன்.
**
ஜூன் 10, ஞாயிறன்று மனைவி நர்மதாவுடன் அதிகாலை மூன்று மணிப் பேருந்தில் கிளம்பினேன். பிரசாத் ஸ்டூடியோவை அடைந்தபோது மணி பத்து. கதிர்வேலன் ஏற்கெனவே வந்து நின்றிருந்தார். அவரோடு பத்துக்கும் மேற்பட்ட குங்குமம் அலுவலக ஊழியர்களும் ராஜாவைப் பார்ப்பதற்கு வந்திருந்தார்கள். கதிர்வேலனின் ஏழு வயது மகளும் இருந்தார். என் தங்கையும் வந்து சேர்ந்துகொண்டார். கதிரிடம் “என்னை மட்டும்தானே வரச்சொன்னார்? இவ்வளவு பேர் இருக்கோமே, பரவாயில்லையா” என்று கேட்டேன். “நான் சாரோட நண்பர்கிட்ட சொல்லியிருக்கேன். பாத்துக்கலாம், கவலைப்படாதீங்க” என்றார்.
அந்தச் சிறிய வரவேற்பறையில் பதினோரு மணிக்காகக் காத்திருந்தோம். கார்த்திக் ராஜா காரில் வந்து இறங்கினார். காத்திருந்த எங்களைப் பார்த்து ஒரு சென்டிமீட்டர் புன்னகைத்துவிட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார். நான் ராஜாவுக்கு அன்பளிப்பதற்காகக் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் கையெழுத்திடுவதற்காக பேனாவைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கும்போது என் கை நடுங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். நூல்களின் முதல் பக்கங்களில் எழுதும்போது என் கையெழுத்து வினோதமாகக் கோணல்மாணலாகச் சென்றது. அரை மணிநேரத்தில் ஆறாவது முறையாகத் தண்ணீர் குடித்ததும் பாட்டில் காலியானது.
சரியாகப் பதினோரு மணிக்குக் கதவு திறந்து உதவியாளர் வெளிப்பட்டு, “வாங்க” என்று உள்ளே அழைத்தார். அது ராஜாவின் அறையாக இருக்குமென்று நினைத்திருந்தேன். இல்லை. அது மிகப்பெரிய, விஸ்தாரமான ஹால். அடுத்த நொடியே உறைத்தது. ரெகார்டிங் தியேட்டர்! ராஜாவின் பாடல்கள் எல்லாம் ஜனித்த புனிதஸ்தலம்! நூற்றுக்கணக்கான நாற்காலிகள் ஒன்றின் மேல் ஒன்றாகச் சுவரோரம் அடுக்கப்பட்டிருந்தன. தரை முழுக்க ஏராளமான பாம்புகளைப்போலத் தடிமனாக கருப்பு ஒயர்கள். ஹாலின் இடதுபுறத்தில் வரிசையாகக் கண்ணாடி அறைகள். கூடத்தின் முடிவில் இருந்த அறையைத் திறந்தார்கள். அறையின் உள்ளேயிருந்த அதிவெண்மை ஒளி சற்று ஸ்தம்பிக்கவைத்தது. மிக மெதுவாக உள்ளே நுழைந்தேன். இளையராஜா! இதுவரை தூரத்திலிருந்துகூடப் பார்த்திராத உருவம்.
கதிர்வேலன் அறிமுகப்படுத்தினார். இரு கை கூப்பி வணங்கினேன். பதிலுக்குப் புன்னகையுடன் வணங்கியவர், “உங்க கட்டுரைகளைப் படிச்சேன். நல்லா எழுதியிருக்கீங்க. ரொம்பப் பொருத்தமான வார்த்தைத் தேர்வுகள்,” என்று என் கண்களை நேராகப் பார்த்தார். நன்றி சொல்ல முயன்றேன். இதுவரை எப்போதும் நிகழ்ந்திராத வினோதமாக நா அசையவில்லை. என்னை உற்றுப் பார்த்தபடியே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்: “நான் வழக்கமா என்னைப் பற்றி வருகிற எதையும் படிப்பதில்லை. அன்னிக்கு என்னவோ இந்தத் தம்பி உங்களைப் பற்றிச் சொல்லி, ரொம்ப நுட்பமா எழுதியிருக்கார்னு ரெண்டு மூணு வரிகளைப் படிச்சுக் காட்டினார். அப்புறம் நானே வாங்கி முழுசா படிச்சுப் பாத்தேன். அதனாலதான் உங்களைப் பாக்கணும்னு சொன்னேன்,” என்றார். இப்போதும் என்னால் எதுவும் பேச முடியவில்லை. ராஜா நகர்ந்து வந்து என்னெதிரே நேராக நின்றுகொண்டு என் முகத்தையும், வார்த்தைகள் எதுவும் வராமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டு நிற்பதையும் மெல்லிய புன்னகையோடு உற்றுப் பார்க்கத் தொடங்கினார். சுற்றிலும் நின்றிருந்தவர்கள் மௌனமாக என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை மட்டும் உணர்ந்தேன். சட்டென்று அந்த இடத்திலிருந்து அப்படியே காற்றில் கரைந்துவிடலாமாவென்றிருந்தது. ராஜா சட்டென்று வலது கையை உயர்த்தி என் தோளைத் தொட்டிழுத்து என்னை இலேசாக அணைத்துக்கொண்டார். அடுத்த நொடி கட்டுக்கடங்காமல் உடைந்து பெருகினேன்.
ராஜாவின் குரலை மட்டும் உணர்ந்தேன். “இதுதான் . . . இதுதான் உண்மையான வெளிப்பாடு என்பது. எனக்கு வார்த்தைகளில் நம்பிக்கை கிடையாது.”
ஒரு யுகம்போலக் கழிந்த சில நொடிகள் கழித்து “வாங்க, இப்படி வந்து உட்காருங்க,” என்றார். அவர் உட்காரும் இருக்கையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோபாக்களில் அவருக்குப் பக்கத்தில் இருந்தவொன்றில் வைத்திருந்த புத்தககங்களை நகர்த்தி வைக்கச்சொன்னார். உதவியாளர் அவற்றை எடுத்துக்கொண்டு சென்றதும் எல்லோரையும் பொதுவாகப் பார்த்து, “எழுதச் சொன்னா எழுதிடுவார்போல; பேசத்தான் மாட்டேங்கிறாரு,” என்று சிரிப்போடு சொன்னார். எல்லோரும் சிரிக்க, கொஞ்சம் இலகுவானேன். “சொல்லுங்க, நீங்க எங்கே இருக்கீங்க?” என்று கேட்டார். ஊரைச் சொல்லிவிட்டு, “நான் திருவண்ணாமலையில்தான் வேலை பார்க்கிறேன். நீங்கள் அவ்வப்போது ரமணாஸ்ரமம், கோயிலுக்கு வரும்போது எனக்குத் தகவல் வந்துடும். எஸ்கேபி கருணா பலமுறை எனக்கு போன் செய்து உங்கத் தலைவர் வந்திருக்கார், அவரைத்தான் பார்க்கப்போகிறேன், வர்ரீங்களா என்று கூப்பிடுவார். நீங்க வருவது அமைதியா ஒரு நாளைக் கழிக்க. உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பலைன்னு சொல்லிடுவேன்” என்றேன். மிகவும் நன்றி என்பதுபோல ஏதோ உதடுகள் அசையக் கையெடுத்துக் கும்பிட்டுச் சிரித்தார்.

சுற்றியிருந்தவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னார். குங்குமம் அலுவலப் பணியாளர்களிடம் சற்றுக் கடுமையாக, “இவரைப் பாக்கணும்னுதான் வரச்சொல்லியிருந்தேன். இப்போ நீங்க பேட்டி அது இதுன்னு கேள்விங்க கேட்கக் கூடாது,” என்றார். அவர்கள் எல்லோரும் அவரைப் பார்ப்பதற்கு மட்டுமே வந்திருப்பதாகச் சொன்னதும் நிம்மதியாகத் தலையசைத்தார்.
பிறகு எல்லோருமே இயல்பாக ராஜாவின் இசை தங்களைப் பாதித்த விதங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, அவர் எதுவும் குறுக்கிடாமல் முகத்தில் சலனமின்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். மனைவி நர்மதா, ‘கற்பூர முல்லை’ படத்தில் மாயாவினோதினி என்ற பாத்திரத்தில் நடிக்கும் அமலா இடம்பெறும் காட்சியொன்றில் மாயாவினோதினி ராகத்திலேயே பின்னணி அமைத்திருப்பதைப் பற்றியும், ‘உன்னால் முடியும் தம்பி’யில் சீதாவின் பாத்திரப் பெயரான லலிதா ராகத்திலேயே இதழில் கதை எழுதும் நேரமிது பாடலை உருவாக்கியிருப்பதைப் பற்றியும் இசை விமர்சகர் லலிதாராம் குறிப்பிட்டு எழுதியிருப்பதைப் பற்றிக் கருத்து கேட்டபோது, ‘எனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது’ என்பதைப்போல உதட்டைப் பிதுக்கிக் கைகளை உயர்த்தி இல்லை என்று காட்டினார்.
ஒவ்வொருவரும் ராஜாவின் பாடல்களில் தமக்கு மிகவும் பிடித்தமான பாடல்களைப் பற்றியும், பிரபலமாகாத அற்புதமான பாடல்களைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு கட்டத்தில் நான், “சில பாடல்கள் நமக்கு மிகவும் அன்னியோன்யமான பாடலாகத் தோன்றிவிடும். எவ்வளவு காலமானாலும் அந்தப் பாடல்தான் நமக்கே நமக்கான பாடல் என்றும், வேறு யாராவது அந்தப் பாடலை சிலாகித்துப் பேசுவதைக் கேட்டால் ‘இது எனக்கே எனக்காக ராஜா உருவாக்கித்தந்த பாட்டு, மற்றவர்கள் ஏன் இதைப் பற்றிப் பேச வேண்டும்,’ என்று அசட்டுத்தனமாக ஒரு பொறாமைகூட ஒரு நொடி தோன்றும்,” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இவ்வளவு நேரம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ராஜா, குறுக்கிட்டு, “அதைப்போல உங்களுக்கு இருக்கும் பாட்டு எது?” என்று என்னிடம் கேட்டார். சற்றுத் திடுக்கிட்டாலும் உடனே சுதாரித்துக்கொண்டு, “உறவெனும் புதிய வானில்” என்றேன். சட்டென்று புரியாமல், “எந்தப் பாட்டு?” என்று திரும்பவும் கேட்டார். “நெஞ்சத்தைக் கிள்ளாதே’வில் இடம்பெற்ற உறவெனும் புதிய வானில்,” என்றேன். எதுவும் பேசாமல் இலேசாகத் தலையாட்டிக்கொண்டார்.
பிறகு அவருடைய பின்னணி இசை பற்றி எல்லோரும் பேசத் தொடங்கினோம். ‘மௌன ராக’த்தில் அந்த ‘நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி மேல படுவது மாதிரி இருக்கு’ காட்சியின்போது வரும் பின்னணி இசை, ‘இதயத்தைத் திருடாதே’வில் நாகார்ஜுனா மரணத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்ற பாடத்தை கிரிஜாவிடம் கற்றுக்கொண்டு சந்தோஷமாக மலைச் சரிவில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து ஓடத் தொடங்கும்போது வருகின்ற ‘நத்திங் பட் விண்ட்’ தொகுப்பின் ‘மொஸார்ட் ஐ லவ் யூ’ வயலின், ‘நிழல்கள்’ படத்தில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் தனியாக ஒதுக்கிவைத்த வாத்திய இசை, ‘முள்ளும் மலரும்’ படத்தின் அந்த அபாரமான மேளத் துடிப்பு என்று பேசிக்கொண்டிருந்ததில் பன்னிரெண்டு மணி ஆகிவிட்டது ராஜா இருக்கையிலிருந்து எழுந்தபோது புரிந்தது.
எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின், என்னிடம் வந்து, நான் பேசும்போது வாத்திய இசையை மாடர்ன் ஆர்ட்டோடு ஒப்பிட்டு ஜெயகாந்தன் ‘பாரீசுக்குப் போ’ நாவலில் எழுதியிருந்ததைக் குறிப்பிட்டது தொடர்பாக ராஜா தனது கருத்தைச் சொன்னார். “மாடர்னா, புதுசா இருந்தாத்தானே எதுவுமே ஆர்ட்டாகும்?” என்றார். ‘அப்ஸ்ட்ராக்ட்’ ஓவியத்தைத்தான் முன்பு மாடர்ன் ஆர்ட் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்றதும் ஒப்புக்கொண்டார். என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் ஒன்று உண்டு, சொல்லட்டுமா என்று கேட்டேன். சொல்லுங்க, என்றார். “உங்களோட ஆரம்பகாலப் பாடல்களில் வீணையை அதிகமாகப் பயன்படுத்துவீங்க, அப்புறம் வீணை உங்கள் பாடல்களில் குறைந்துவிட்டதே,” என்றேன். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ராஜா பெருங்குரலெடுத்துச் சிரித்தபடியே, “படங்களே குறைஞ்சிடுச்சு, இவர் வீணை குறைஞ்சிடுச்சுங்கறார்!” என்றார். இதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் சங்கடத்தோடு நகர்ந்தேன்.
விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்ததும் அந்தக் கண்ணாடி அறைகளை அருகில் சென்று பார்த்தேன். எத்தனையோ பாடகர்கள் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்குச் சாட்சியாக இருந்த அந்த அறைகள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓய்வில் இருந்தன.

அரங்கிலிருந்து வெளியே வந்ததும் கதிர்வேலன், “உங்களுக்கு மறக்க முடியாத ஒரு மணிநேரமா இருந்திருக்கும் இல்லையா? இந்த அனுபவத்தை உடனே எழுதுங்க சார்,” என்றார். உடனே எழுத முடியாமல் நான்கு வருடங்கள் கழித்து நூல் வடிவம் பெறும்போதுதான் எழுத முடிந்திருக்கிறது.
இளையராஜாவைச் சந்தித்துப் பேச வேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கானோரின் நிறைவேறாத ஆசை. ஆனால் இளையராஜாவே என் எழுத்தைப் படித்துவிட்டு அழைப்பார் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இந்த அசாத்தியமான சந்திப்பை நிஜமாக்கிய நண்பர் நா. கதிர்வேலனுக்கு என் இதயம் கனிந்த நன்றி. கடுமையான வேலைநேரத்திலும் ராஜாவைப் பற்றி எழுதச் சொன்னால் எழுதித் தந்துவிடுவேன் என்று நம்பி, என் கையை முறுக்கி எழுதவைத்த நண்பர் அரவிந்தனுக்கும் பிரசுரித்த மின்னம்பலம் இணைய இதழுக்கும் விசேஷமாக நன்றி தெரிவிக்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிந்தைய ஒவ்வொரு தசாப்தத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக இந்து தமிழ் தீபாவளி மலரில் கட்டுரைகள் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். எழுபதுகளின் பிற்பகுதியில் புயலென அமைந்த இளையராஜாவின் இசையைப் பற்றி என்னைக் கட்டுரை எழுதவைத்த அந்நாளிதழின் உதவி ஆசிரியர், நண்பர் சந்திரமோகனுக்கும் கட்டுரையைப் பிரசுரித்த இந்து தமிழ் நாளிதழுக்கும் என் நன்றி. இளையராஜாவின் எண்பதாம் வருடக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எனது இளையராஜா கட்டுரைகளை மட்டும் சிறு நூலாக வெளியிடும் காலச்சுவடு கண்ணனுக்கும் ‘காலச்சுவடு’ பதிப்பகத்துக்கும் மனமார்ந்த வந்தனங்கள்.
*
(ஜி. குப்புசாமி எழுதி, காலச்சுவடு வெளியீடாகக் கோவைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படவிருக்கும் ‘காலத்தை இசைத்த கலைஞன்’ நூலின் முன்னுரை. கட்டுரையாளர் குப்புசாமி பிரபல மொழிபெயர்ப்பாளர்.)