நவம்பர் 26: அரசமைப்புச் சட்ட நாள்- பிசாசுகளை விரட்ட கோயிலை எரிப்பதா? 

அரசியல் சிறப்புக் கட்டுரை

முனைவர் டி. ரவிக்குமார்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டு இன்று ( 26.11.2024) தொடங்குகிறது. உலக நாடுகளிலுள்ள அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகவும் விரிவான சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் தான்.

பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, நமது நாட்டுக்கு ஏற்ற ஜனநாயக அமைப்பை நிறுவும் விதமாக அதை அம்பேத்கர் உருவாக்கினார். நம் நாட்டின் குடிமக்களுக்கு நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நமது அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ளது. அதன் முகப்புரையிலேயே (Preamble) அவை கூறப்பட்டுள்ளன.

1950 ஆம் ஆண்டிலிருந்தே பலருடைய தாக்குதலின் இலக்காக அரசமைப்புச் சட்டம் இருந்து வருகிறது . மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்த போது அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த ஆட்சியில் 24 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் எதையும் பெறாமலேயே, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது பற்றிய அறிவிப்பை குடியரசுத் தலைவரின் உரை மூலமாக அன்றைய பாஜக அரசு அறிவித்தது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிப்ரவரி 2000த்தில் அதற்கென ஒரு தேசிய கமிஷனும் அமைக்கப்பட்டது. முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, பராசரன், முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா உள்ளிட்ட பத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

அந்தக் ‘கமிஷனின் நோக்கம் அரசமைப்புச் சட்டத்தை சீராய்வு செய்வது தானே தவிர புதிதாக எழுதுவதல்ல’ என்று அப்போது பாஜக அரசு அறிவித்தது. ஆனால் அதைக் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. குடியரசு தினப் பொன்விழாவில் உரையாற்றியபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும் பாஜக அரசின் முயற்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் நாளை ”அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு நாளாகக்” கடைபிடிக்குமாறு அறிவித்த காங்கிரஸ் கட்சி அதற்காக நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியது. இந்தியாவெங்கும் தலித் இயக்கங்களும் களமிறங்கின. இந்த எதிர்ப்புகளின் காரணமாக வெங்கடாசலய்யா கமிஷனின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன.

அப்போது, தமிழக சட்டப்பேரவையிலும் அதுபற்றிய விவாதங்கள் எழுந்தன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்களும்; விசிக உறுப்பினராக அங்கே  இடம்பெற்றிருந்த நானும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும் ஒன்றிய அரசின் முயற்சி குறித்துக் கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்துப் பேசிய அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் ”சிறுபான்மையினர் உரிமைகளுக்கோ, மதச்சார்பின்மைக்கோ, மாநிலங்களின் உரிமைகளுக்கோ அரசமைப்புச் சட்ட மறுஆய்வு கமிஷனால் ஆபத்து வந்தால் அதைத் திமுக எதிர்க்கும்” என்று தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் அவசியமானத் திருத்தங்களைச் செய்துகொள்வதற்கு நாடாளுமன்றத்துக்கு அம்பேத்கர் அதிகாரம் அளித்துள்ளார்.

“இந்த அரசியல் சாசனம் தவறற்றது என்றோ, இறுதியானது என்றோ இந்த சபை முத்திரை குத்தவில்லை. கனடா நாட்டிலுள்ளது போல மக்களுக்கு அரசியல் சாசனத்தைத் திருத்தும் உரிமை வழங்கப்படாமலிருக்கவில்லை. ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவிலுள்ளது போல அரசியல் சாசனத்தைத் திருத்த விசேட நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு மிகவும் எளிதான நடைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடு இன்றுள்ள நிலையில் அரசியல் சாசனத்தைத் திருத்த நாம் உருவாக்கியுள்ள எளிதான நடைமுறையை, இந்த உலகிலுள்ள வேறு எந்த அரசியல் நிர்ணய சபையாவது கொண்டுவந்துள்ளது என்று நிரூபிக்க முடியுமா? அரசியல் சாசனத்தை விமர்சிக்கும் எந்த நபருக்கும் நான் சவால் விடுகிறேன்” என அரசியல் நிர்ணய சபையில் அவர் உரையாற்றும்போது குறிப்பிட்டார். அவர் கூறியதற்கேற்ப நமது அரசமைப்புச் சட்டத்தில் 100 க்கும் மேற்பட்டத் திருத்தங்கள் ( amendments ) செய்யப்பட்டுள்ளன.

நமது அரசமைப்புச் சட்டமானது மிகவும் நெகிழ்ச்சித் தன்மை (flexibility) கொண்டது. அதனால் தான் கடந்த 75 ஆண்டுகளாக அதில் செய்யப்பட்டத் திருத்தங்களை அது ஏற்றுக் கொண்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை நமது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது ”நெகிழ்ந்து கொடுப்பதாக இருப்பது தான் இதன் சிறப்பு” என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். ”இது செயல்படக்கூடியது, இது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது, அமைதிக் காலத்திலும் சரி, யுத்த  காலத்திலும் சரி இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திக் கட்டிக்காப்பாற்றும் ஆற்றல் கொண்டது” என அரசமைப்புச் சட்டத்தை அவர் வர்ணித்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ள அறிஞர் கிரான்வில் ஆஸ்டின் (The Indian Constitution: Corner stone of a Nation) தனது நூலில் கூறியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருந்தும்:

”இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களையும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் அதற்கான அமைப்புகளையும் அதில் ஏற்படுத்தியுள்ளனர். ஒருமைப்பாடு, சமூகப்புரட்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் அதன் பிரிக்க முடியாத அங்கங்களாகும். இந்த மூன்றையும் தனித்தனியே அடைந்து விட முடியாது” என்று கிரான்வில் ஆஸ்டின் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்தியாவின் பெரும்பான்மை மக்களாக இருக்கும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மதச் சிறுபான்மையினர் முதலானவர்களின் உரிமைகள் இன்று ஓரளவு காப்பாற்றப்படுவதற்கும், இந்த நாடு இன்றும் மதச்சார்பின்மையைத் தனது கொள்கையாகக் கொண்டிருப்பதற்கும் நமது அரசமைப்புச் சட்டம் தான் காரணம். அதுமட்டுமின்றி இந்தியா ஒரே நாடாக நீடிப்பதற்கும்கூட அரசமைப்புச் சட்டமே காரணம்.

அரசமைப்புச் சட்டம் என்பது எந்தத் திருத்தமும் செய்யப்படக் கூடாதப் ‘புனித நூல்’ அல்ல. ஆனால் அதை எரித்துத் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமா? அதுவும் சனாதனவாதிகளின் பேராபத்துச் சூழ்ந்துள்ள இன்றைய நிலையில் அரசமைப்புச் சட்டத்தை எரிப்பதைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதுதானா? என நாம் சிந்திக்க வேண்டும்.

’அரசமைப்புச் சட்டத்தை எரிப்பேன்’ என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே என அதற்கு மறுப்புச் சொல்லக்கூடும்.

1953 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது மொழி அடிப்படையில் ஆந்திர மாநிலம்  அமைப்பது பற்றிய மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசும்போதுதான் அவ்வாறு குறிப்பிட்டார். அங்கே பெரும்பான்மையினரின் ஒடுக்குமுறையிலிருந்து எஸ்சி மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைப் பாதுகாக்க அன்றைய உள்துறை அமைச்சர் கே.என். கட்ஜு எதுவும் செய்யவில்லையெனக் கடுமையாக விமர்சித்தார்.

“பெரும்பான்மையினர் தவறு செய்துவிடுவார்கள் என்று அஞ்சும் சிறுபான்மைச் சமூகங்களின் அச்ச உணர்வுகளை அகற்றுவதன் மூலம்தான் பிரிட்டிஷ் பாராளுமன்றம் செயல்படுகிறது. அரசியல் சட்டத்தை நான்தான் உருவாக்கினேன் என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை எரிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்று சொல்ல நான் தயாராக இருக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. இது யாருக்கும் பயன்படுவதாக இல்லை. ஆனால், அது எதுவாக இருந்தாலும், நம் மக்கள் அதைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள விரும்பினால், இந்த நாட்டில் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள், சிறுபான்மையினர் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

‘ஐயோ, முடியாது,  உங்களை அங்கீகரிப்பதென்பது ஜனநாயகத்துக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்று சிறுபான்மையினரை அவர்களால் புறக்கணிக்க முடியாது. சிறுபான்மையினரைக் காயப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு வரும் என்று நான் இங்கே  சொல்ல விரும்புகிறேன்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார் .

அம்பேத்கர் அப்படிப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலங்களவையில் பல உறுப்பினர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள்.

அந்த விமர்சனங்களுக்கெல்லாம்  19.03.1955 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.  “கடந்தமுறை நான் பேசும் போது அரசியல் சாசனத்தை எரிப்பேன் என்று கூறியதாக இங்கே என் நண்பர் ஒருவர் கூறுகிறார்.  ஆமாம், ஆனால் அன்று அவசரத்தில் நான் அதற்கான காரணத்தை அப்போது விளக்கிக் கூறவில்லை.  இப்போது என் நண்பர் எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளார், நான் அப்படிச் சொன்னதற்கானக் காரணத்தை இப்போது விளக்க விரும்புகிறேன்.

அந்தக் காரணம் இதுதான்: ஒரு கடவுள் வந்து குடியேறுவதற்காக ஒரு கோயிலைக் கட்டினோம், ஆனால் கடவுளை அங்கே குடியேற்றுவதற்கு முன்பே அந்தக் கோயிலைப் பிசாசு கைப்பற்றிக்கொண்டால், கோயிலை அழிக்காமல் வேறு என்ன செய்ய முடியும்?  அதை அசுரர்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை.  அதை தேவர்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்றுதான் எண்ணினோம்.  அதனால்தான் நான் அதை எரிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன்” என அம்பேத்கர் கூறினார்.

“மொழிவாரி மாநிலங்களில் எஸ்சி மக்கள், சிறுபான்மை மொழிபேசுவோர் உள்ளிட்ட  சிறுபான்மையினருக்கு உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதைப்பற்றி உள்துறை அமைச்சர் இப்போதாவது பரிசீலிப்பாரா?” என்று தனது உரையில் அவர் கேட்டார்.

1953 இல் இருந்ததைவிட மோசமான நிலை இன்று உள்ளது. அம்பேத்கர் அப்போது வெளிப்படுத்திய அச்சம் இன்று மேலும் அதிகமாகி இருக்கிறது. திருத்தங்கள் ( amendments)  வழியாக நாடாளுமன்றத்தின் மூலமாகவும், விளக்கமளிக்கிறோம் ( interpretations) என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தின் மூலமாகவும் அரசமைப்புச் சட்டம் நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது.

அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல அரசமைப்புச் சட்டம் என்ற கோயிலுக்குள் அவர் காலத்தில் இருந்ததைவிட அதிக எண்ணிக்கையிலான பிசாசுகள் குடியேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதற்கானத் தீர்வு, அரசமைப்புச் சட்டம் என்ற கோயிலை எரிப்பதல்ல, மாறாக அதில் குடியேற்றப்பட்டிருக்கும் ‘பிசாசுகளை’ விரட்டுவதுதான் .

(நவம்பர் 26: அரசமைப்புச் சட்ட 75 ஆவது ஆண்டு)

கட்டுரையாளர் குறிப்பு:

முனைவர் டி.ரவிக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

திருப்பெரும்புதூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை… டி.ஆர்.பாலுவுக்கு உறுதியளித்த மத்திய அமைச்சர்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? – விஜய்க்கு கீதா ஜீவன் பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *