பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக ஃபாஸ்டேக் முறையை தேசிய நெடுஞ்சாலை துறை கொண்டு வந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் RFID – ரேடியோ அலைவரிசை மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் சில வாகன உரிமையாளர்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை தங்களது வாகனங்களின் விண்டுஷீட்டில் ஒட்டுவதில்லை. கையில் வைத்துக்கொண்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் மூலம் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.
இதனால் ஃபாஸ்டேக் முறை கொண்டு வந்ததற்கான பலனே இல்லாமல் போகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு புகார்கள் பறந்தன.
இந்த நிலையில்தான் விண்டுஷீட்டில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று அறிவித்திருக்கிறது.
அந்த வகையில் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாகனத்தில் பாஸ்டேக் ஒட்டாமல் தொடர்ச்சியாக சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
அதுபோன்று கையில் பாஸ்டேக் வைத்திருந்தால் மின்னணு முறையில் டோல் கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படாது.
பாஸ்டேக் வழங்கும் வங்கிகளும் அந்த ஸ்டிக்கரை வழங்கும்போதே வாகனத்தில் ஒட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இரட்டிப்பு சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்க வாகனத்தில் கட்டாயம் பாஸ்டேக் ஒட்ட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்வா? டெண்டர் கோரிய தமிழக அரசு!
“ஸ்டாலின் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சி”: மின் கட்டண உயர்வு – அன்புமணி போராட்டம்!